ரப்பர்-கடிதம்

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார்.

சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாகப் படிக்க வேண்டிய தருணம் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டாரத் தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்றுப் பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்பப் படித்த பிறகும் கூட பிரான்சிஸ் மனநிலையை என்னால் கணிக்க முடியவில்லை. (கிருஷ்ண பருந்துவில் வர சாமியாரைப்போல).

ஒரு எழுத்தாளனின் முதல் நாவலைப் படிக்க வேண்டும் என்பதால் உங்கள் ரப்பர் நாவலை நான் படித்தேன். மீண்டும் மீண்டும் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்,.

ஏதோ ஒரு வார்த்தையுள் அந்த எழுத்தாளன் ஒளிந்து கொண்டு வாசகனுக்கு ஒரு தீராத விளையாட்டை அவன் நிறுவ வேண்டும் என்பது என் துணிவு.

நான் இனி வரும் காலங்களில் திரும்பப் படிக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த நாவலும், கிருஷ்ண பருந்து நாவலையும் ஒரு சேரப் படிக்க வேண்டும்.

இனி நீங்கள் சொன்னது போலவே கன்னியாகுமரி நாவலைப் படிக்கலாம் போலத் தோன்றுகிறது.

மிக நீண்ட விவாதம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னும் 2 வருடம் படிக்க வேண்டிய புத்தகம் என் கண் முன்னால் ஓடுகிறது. நாம் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயம் ஒரு நாள் கிட்டும். அப்போது ஒரு எளிய வாசகனின் புரிதல் உங்களிடம் வைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார்.

நன்றி,

பிறைசூடி .

அன்புள்ள பிறைசூடி

ரப்பர் என் முதல் நாவல். ஆனாலும் இன்றுவரை என் எழுத்தை இட்டுச்செல்லும் அடிப்படையான தேடல்களும் சஞ்சலங்களும் அழகுகளும் உள்ளன. அது ஆன்மீகமான வினாக்களைக் கேட்டுக்கொள்கிறது. இன்றுவரை என்னை வழிநடத்திச்செல்லும் பைபிளில் இருந்து தொடங்கி முன் செல்கிறது.

அந்த ஆன்மீக தரிசனத்தை வரலாற்றின் ஓட்டத்துடன் பிணைத்துப்பார்க்க முயல்கிறது. வரலாறு என்ற ஒழுக்கை சித்தரிப்பதற்காகவே கதைப்பின்னல் உருவாகி வந்திருக்கிறது. அக்கதைப்பின்னலின் புள்ளிகளே மனிதர்கள்

ஆன்மீகத்தேடலும் வரலாற்றுப்புலமும் ஊடும்பாவுமாக அமைந்தவை என் நாவல்கள் என நான் இன்று உணர்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசடங்கும் அறிவும்
அடுத்த கட்டுரைஇந்திய ஆங்கில இலக்கியம்