அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன்
இளைய தலைமுறை தடை இல்லாத மின்சாரத்தோடு , நோய் வராத பொதுத் தூய்மையோடு, பெண்கள் மீதான வன்முறையற்ற , நெறியான போக்குவரத்து வசதி கொண்ட , விபத்துக்கள் இல்லாத சாலைகளோடு, போதைப் பொருள் சிக்கல் இன்றி, இட ஒதுக்கீடு உரியவருக்குப் போய்ச் சேர வேண்டிய அக்கறையோடு தனக்கு வேண்டிய சமூக அமைப்பினை முன் வைத்தது.
இந்த இளைய தலைமுறைக்குத் தேவை இளைய தலைமுறை சொன்ன இலக்குகளை எப்படி அடைதல் என்ற தெளிவும் , நம்பிக்கையும் , வழி காட்டுதலும் மட்டுமே. இது ஒரு நவீன சமூதாயக் கனவு.பிழையான புரிதல்கள் உண்டு. அது அந்த வயதின் இயல்பு.
கோபியோ, மற்றவர்களோ இளைய தலைமுறை சொன்னது ஏன் தவறு என்று சொல்லவில்லை.
களப்பணியாளர்கள் என்ன வகை சமுதாயம் தேவை என்பதை சொல்லவே இல்லை. நவீன பொருளியல் உலகுக்கு மாற்றாக அவர்கள் வைக்கும் சமுதாயம் என்ன?
நவீன பொருளியல் உலகில் வேலையும், செல்வம் உருவாக்குதலும், பெருக்குதலும் மிக முக்கியம். அதில் அதிக அளவு, நீடித்த காலம் அனைத்து சமூக உறுப்பினர்கள் பங்கு பெறுதல் இளைய தலைமுறை சொன்ன தேவைகளில் உண்டு.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
நான் நடைமுறைக்கல்வியின் போதாமைபற்றியே பேசுகிறேன். நடைமுறைக்கல்வி தேவையில்லை என்று அல்ல
ஜெ
திரு ஜெயமோகன்,
என் பெண் சொல்லி நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். அவள் சிரித்துக்கொண்டே சொன்னது. “அம்மா, ஒரு level playing field வேணாமா? சிக்கிட்டாண்டா எதிரி அப்படிங்கற மாதிரி போட்டுத் தாக்குறீங்களே.”
என் மகளுக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இல்லை. என்ன முயன்றும் என்னால் அதை சரி செய்ய முடியவில்லை. ஆனால் கட்டுரைகள் (nonfiction) படிப்பது கொஞ்சம் வளர்ந்து இருக்கிறது. ஆங் சான் சூ ச்சியின் நேர்காணலை கவனச் சிதறல் இல்லாமல் கேட்க முடிகிறது. சாய்நாத்தின் Nero’s Guests என்ற ஆவணப் படத்தைப் பார்த்து அவளுக்குத் தெரிந்த வரை கருத்து சொல்ல முடிகிறது. பங்கர் ராய் அருணா ராய் பற்றி, அவர்களின் களப்பணி பற்றித் தேடித் தேடி வாசிக்கிறாள். உங்களுடைய கதை அல்லாத கொஞ்சம் கட்டுரைகளை வாசித்து இருக்கிறாள். சிலவற்றின் சுருக்கத்தை நான் சொல்லி இருக்கிறேன். அதே போல் கெவின் கேர் பாலாவின் சில சொல்வனக் கட்டுரைகள். விதர்பா பற்றி ஒரு nodding acquaintance க்கு மேலாக விஷயங்கள் தெரியும்.
நம் கல்வி நிறுவனங்கள் இதை சரிவர செய்யவில்லை என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், படித்த பெற்றோருக்கு இதில் ஓரளவு பங்கு இருக்கிறதா இல்லையா? எங்களுடைய வீடும் சூழலும் குத்துப்பாட்டு, கொஞ்சம் விவேக் காமெடி எல்லாம் இருக்கும் இடம் தான். அதில் என்ன தவறு. அதைத் தாண்டி நம் பிள்ளைகளைப் போகவைக்கப் பெற்றோரின் பங்கு அவசியம்.
உதாரணமாக உங்களுடைய, பாலாவின் கருத்துக்கள், அது சொல்லப்படும் மொழி நடையில் இருக்கும் relevance, நிறைய பேரிடம் இருப்பது இல்லை. அந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் அந்த மாணவர்கள் நெருக்கமாக நினைக்கும்படி உரையாடினார்கள். சொன்ன விஷயங்கள், உடல் மொழி அனைத்திலும் ஒரு alienation, puritanical attitude.
வாசிக்கும் பழக்கமே இல்லாத, மாணவர்களிடம் அன்று அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்கள், ஆர்வமூட்டக்கூடியவயாகவா இருந்தன? “I have my doubts”. எரியும் பனிக்காடு நானும் வாசித்து இருக்கிறேன். அயர்ச்சியுற வைக்கும் நடை. கதையில் சொல்லப்பட்ட விஷயத்துக்காகப் படித்தேன். தன் படிப்பு தவிர வேறு விஷங்கள் பற்றி அவ்வளவாகத் தெரிந்து வைத்திராத மாணவர்களை ஆற்றுப்படுத்துவது இவ்வளவு drab ஆகவா இருக்க வேண்டும். முதலில் நம் பிள்ளைகளிடம் நமக்கு வேண்டியது கொஞ்சம் கருணை.
மங்கை
அன்புள்ள மங்கை
நாம் நம் இளைஞர்களிடம் வாசிப்புப்பழக்கம் இல்லை என வசைபாடுகிறோம். ஆனால் நம்மில் மிகச்சிலரே வாசகர்கள். நான் சுட்டிக்காட்டியது இதைத்தான்
ஜெ
அன்புள்ள ஜெ,
‘அசடுகளும் மகாஅசடுகளும்’ மிக அருமை.தமிழ்ச்சூழலின் வெறுங்கூச்சலுக்கு அந்நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் எனது சந்தேகம் என்னவென்றால் இப்போது உண்மையான கல்வி என்பதற்கான பாடத்திட்டம் என்னவாக இருக்க முடியும்? மெக்காலே கல்விமுறை குமாஸ்தாவுக்கான கல்வி என்பதை நாம் அறிவோம். மரபான குருகுலங்களில் வேதங்கள், ஷன்மதம், ஷட்தரிசனம்,பிரஸ்தானத்ரயம் ஆகியவற்றைக் கற்ற பின்னரே ஒருவரை அடிப்படையாகக் கற்றவர் என்று சொல்வது போல் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு வரையறை செய்வது? உதாரணத்திற்கு நான் தொழில் நுட்பத் துறையில் இருப்பவன். எனது தன்னறத்தை இத்துறையிலேயே கண்டறிகிறேன்.இப்பொழுது வழக்கமான மேலைப் பாடத்திட்டம் போதிப்பது போல் ஒற்றைப்படையான சிந்தனை நோக்கில் சிக்காமல் ஒரு முழுமை தழுவிய சிந்தனை நோக்கை நான் அடைய வேண்டுமானால் அதற்கான அடிப்படைக் கல்வி என்னவாக இருக்க முடியும்? உங்கள் பார்வையில் சிந்திக்கும் தேடலுள்ள இளைஞர்கள், அவர்களின் தேடல் எத்துறையில் இருந்தாலும், அடிப்படையாகக் கற்க வேண்டியது என்ன? ஒரு வழிகாட்டுதலாக உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
நன்றி
இ ஆர் சங்கரன்
அன்புள்ள சங்கரன்
இதைப்பற்றி விரிவாகவே எழுதவேண்டும்
நான் இப்படிச்சொல்வேன் .பெரும்பாலான மாணவர்களுக்குத் தொழிலாகவும் அன்றாட வாழ்க்கையாகவும் மாறக்கூடிய நடைமுறைக்கல்வி அளிக்கப்படவேண்டும்
ஆனால் தனித்திறன் கொண்டவர்களுக்கு அந்தக்கல்வி நிபந்தனையாக அமையக்கூடாது. அவர்கள் மேலே செல்லவும் வெல்லவும் வாய்ப்பளிக்கும் கல்விமுறை தேவை
ஜெ