அன்புள்ள ஜெயமோகன் சார் ,
விஷ்ணுபுரம் படித்துக்கொண்டிருக்கிறேன்.கலை,தத்துவம்,சாகசம்,சிற்பம், இசை என்று சகல பரிமாணங்களிலும் உயர்ந்து நிற்கும் விஷ்ணுபுரத்தில், இயல்பான-ஆத்மார்த்தமான-காதலர்களே இல்லையா?அதை ஏன் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள்?
எம்.எஸ்.ராஜேந்திரன்
திருவண்ணாமலை
அன்புள்ள ராஜேந்திரன்,
விஷ்ணுபுரத்தில் காதல் உள்ளது. எல்லாப் பகுதிகளிலும் குறைந்தது ஒரு தீவிரமான காதலாவது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஷ்ணுபுரம் காலத்தின் கொந்தளிப்பு. ஆகவே அது எதையும் முக்கியப்படுத்தவில்லை. மாபெரும் சிந்தனைமரபுகளே வெறும் கொப்புளங்கள் போல வெடித்து மறைகையில் காதல் என்னவாகும்?
ஆனால் இன்னொரு வினாவும் உள்ளது. நாம் இன்று அறியும் காதல்தான் அந்தக்காலத்தில் இருந்ததா? ஐந்தாம் நூற்றாண்டிலும் பத்தாம் நூற்றாண்டிலும் எல்லாம் ஆணும்பெண்ணும் இன்னும் சகஜமாகப் பழகவும் உறவுகொள்ளவும் வாய்ப்புகள் அன்று அதிகமாக இருந்தன. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதும் சாதாரணமாக இருந்தது. அதெல்லாம் அக்கால இலக்கியம் வழியாக அறியக்கிடைக்கின்றன.
நாம் இன்று காதல் என்று சொல்லும் மனநிலையும் அதற்கான செயல்பாடுகளுமெல்லாம் பதினேழுபதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப்பின்னர் உருவாகி வந்த பண்பாட்டுச்சூழலில் உருவானவை. பதினாறாம் நூற்றாண்டுப்புக்குப்பின் இந்திய சமூகம் மிகபெரும் அரசியல் அராஜநிலையை சந்தித்தது. பேரரசுகள் அழிந்தன. விளைவாகக் குட்டிக்குட்டி அரசர்கள் முளைத்துத் தங்களுக்குள் ஓயாமல் போர்புரிந்தனர். அவர்கள் ஆண்ட நிலப்பகுதிகளில் அவர்கள் செய்வதே நீதி என்ற நிலை உருவானது.மரபான அரசியல் சமூக ஆன்மீக அமைப்புகள் எல்லாம் சிதைந்து செயலிழந்தன. பிரம்மாண்டமான அளவின் மக்கள் இடம்பெயரவும் நேர்ந்தது.
இந்த அராஜகநிலையின் விளைவாகப் பெண் வீட்டுக்குள் பூட்டிவைக்கப்படும் நிலை வந்தது. அவளுக்குக் கல்வியும் நடமாட்ட உரிமையும் சமூக அதிகாரங்களும் முழுமையாக மறுக்கப்பட்டன. குழந்தைமணம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முறையாக இந்தியா முழுக்கப் பரவியது.
ஆகவே இங்கே காதலே இல்லாத நிலை வந்தது. ஆணும்பெண்ணும் சந்திக்கவோ பேசவோ முடியாது. ஏழுவயதுக்குமேல் முதிர்ந்த எந்தப்பெண்ணும் திருமணமானவள் என்ற நிலையில் காதல் எப்படி உருவாகமுடியும்? பெண் இப்படி அடிமையானபோது ஆணுக்கிருந்த பாலியல் இச்சை பரத்தமை மூலம் மட்டுமே தீர்க்கபப்டமுடியும் என்ற நிலை உருவானது. இங்கே தெருவுக்குத்தெரு தாசிக்குடும்பங்கள் உருவாயின.
பிரிட்டிஷ் ஆட்சியில் நவீனக்கல்வி வந்தபோதுதான் பெண் வீட்டைவிட்டு வெளியே வர ஆரம்பித்தாள். குழந்தைமணம் இல்லாமலாகியது. பிரிட்டிஷ் கல்விமூலம்தான் நாம் காதலைப்பற்றி அறிந்தோம். காதலுக்கான ஏக்கம் நம்மிடம் உருவாகியது. காதல் என்றால் எப்படியாவது போராடி ஒரு பெண்ணை சந்தித்துப் பேசி அவள் மீதான விருப்பத்தைத் தெரிவிப்பதும் அவள் சம்மதத்தைப்பெறுவதும் திருமணம் செய்துகொள்வதும் என்ற நிலை வந்தது. இன்றுவரை நாம் கதைகளில் சினிமாக்களில் காணும் காதல் இதுதான்
இந்தக்காதலுக்கும் பழங்கால இந்தியச்சமூகத்தில் உள்ள காதலுக்கும் சம்பந்தமில்லை. அவை இணையான ஆளுமை கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பும் நிலையாகவே இருந்திருக்குமென நான் நினைக்கிறேன். விஷ்ணுபுரத்தின் முதல் இரு பகுதிகளில் ஆண்பெண் உறவு அப்படித்தான் உள்ளது. மூன்றாவது பகுதியில்தான் இன்றைய காதலைப்போன்ற ஒரு ஆண்பெண் உறவு வருகிறது. அது இன்றைய வாசகனுக்குக் காதல் என்று தோன்றலாம். ஆனால் அது வழக்கம்போலத் தோல்வியில் முடிகிறது
ஜெ