கிளி சொன்ன கதை : 4

வக்கீலும் அப்பாவுமாக பேசியபடியே சாப்பிட வந்தார்கள். அம்மா ஊண்முறியை கூட்டி நீளத்தடுக்கு போட்டு இரண்டு நுனியிலைகளை விரித்து பித்தளை வங்கங்கள் வைத்து இடது நுனியில் இருந்து உப்பு வைத்து ஊறுகாய்கள் உப்பேரி இஞ்சிக்கறி நாரங்காக்கறி என்று வரிசையாக வைத்தாள். துவரனும் பிரட்டலும்  அவியலும் வைத்து வல இலைவிரிவில் காச்சில் கூட்டுகறியை வைத்தபின் வியர்வை வழிந்த கழுத்துடன் அனந்தன்னிடம் ”மக்களே அடுப்பில வெறக இழுத்துவிடுடே, என் கண்ணுக்குட்டிதானே?”என்றாள். அனந்தன்ஓடிப்போய் தீயடுப்பில் விறகை இழுத்து விட்டான். பாலும் வெல்லமும் சேர்த்து வைத்த அரிசிப்பாயசம் அதில் களுக் களுக் என்று துள்ளிக் கொண்டிருந்தது. அம்மா உள்ளே வந்து மரவட்டியை மூடியிருந்த அருவட்டியை தூக்கினாள். உள்ளே பொரித்த பப்படங்கள் காய்ந்த தேங்காயென்ணை மணத்துடன் ஒன்றின் மேல் ஒன்று குறைவாகத் தொட்டுக்கொண்டு இருந்தன. அம்மா பப்பட வட்டியையையும் இன்னொருகையில் சீரக வெந்நீர் குண்டானையும் தூக்கிக் கொண்டு சென்றாள்.

அனந்தன் பின்னால் சென்று ”அம்மா நான் உண்ணுதேன்” என்றான். ”சும்மாரு, வீட்டுக்கு விருந்தாடி வந்தா அவ்வொ சாப்பிட்ட பொறவுதான் நாம சாப்பிடணும்” அம்மா மீண்டும் வந்தபோது அனந்தன் ”அப்பம் நான் அவியல் மட்டும் தின்னுதேன்.” என்றான்.”பக்கி மாதிரி பறக்காதே. தருவேண்ணு சொல்லியாச்சுல்ல?சொன்னா சொன்னபேச்சு கேக்கணும்” அனந்தன்னுக்கு வாய் ஊறி என்னவோ செய்தது. அவியலும் சாம்பாரும் பாயசமும் எல்லாம் சேர்ந்த மணம். சத்தியை மணம். கல்யாணவீடுகளில் ஓலைகொண்டு மறைத்த ஆக்குபுரைக்குள் இருந்து பதினிரு மணிவாக்கில் எழும் மணம். அவனுக்கு குஞ்சுவீட்டு கல்யாணம் , சத்ரப்பறம்பு கல்யாணம் ஆகியவை நினைவுக்கு வந்தன. அம்மா மீண்டும் போனதும் அவன் எம்பி நுனிக்காலில் நின்று அவியலில் ஓரமாக கைவைத்தான். அம்மா அதை எதிர்பார்த்திருந்து எட்டிப்பார்த்து புருவத்தை நெளித்து கண்களை உருட்டினாள். அனந்தன் சிரித்தபடி விலகி நின்றான். அம்மா போனதும் கையை முகர்ந்து பார்த்தான். நல்ல மணம். சேனைக்கிழங்கும் சேப்பங்கிழங்கும் நல்ல பச்சையாக , வயலில் தோண்டியெடுத்து மண் உலராமல் கொண்டுவந்து வெட்டி அவியல் வைத்தால்தான் அந்த மணம் வரும் என்று அரிவைப்பு ஆசான் அச்சு அம்மாவன்  கோயிலில் இரவில் கூடி அமர்ந்து கதை பேசும்போது சொன்னார்.

வக்கீல் கால்களை கொட்டுபோல தூக்கி தூக்கி வைத்து வந்தபடி ” எண்ணைக்கு தலையெண்ணி சொத்தவகாசம்ணு வந்துதோ அண்ணைக்கு தெக்கன் திருவாங்கூர் அழிஞ்சுது தங்கப்பா. உன்னாணை ஒரு பேச்சுக்கு சொல்லுததுண்ணு நினைக்காதே. ஆலமரம் மாதிரி நிண்ண தறவாடுகளொக்கே இப்பம் எங்க? குடும்பத்தில பொறந்த நாயர் கொச்சம்ம்மாரெல்லாம் இப்பம் துண்டுபீடிய காதில வச்சுகிட்டு துண்ட தலயில கெட்டிக்கிட்டு பாண்டிநாட்டில சாயக்கட நடத்துகானுக.  பதினெட்டு சாதியும் வந்து அங்க திண்ணு குடிச்சு போகுதுக. வெளங்குமா சொல்லு. ஆ, புழுங்கரிதானே? சம்பாவாடே? மணம்கண்டா தெரியும்…நம்ம வயலில உள்ளதாடே?” என்றபடி அமர்ந்தார் வக்கீல் ”அப்பா செந்தியாண்டவா முருகா!”

”நம்ம குத்தளம் கண்டத்தில போட்ட நெல்லாக்கும். வாசறுமிண்டான். நான் வேற அரி உண்ணுத பதிவு இல்ல… வக்கீல் போறப்பம் ஒரு சாக்கு கொண்டு போகணும் ..” அப்பா நீரை இலை மீது லேசாகத் தெளித்தார். அம்மா குடிநீர் விட்டு பப்படம் வைத்தாள்.

வக்கீல்”ஆமா நான் இப்ப அரியும் சொமந்துகிட்டு போறேன். எளவு, ஓதம் சொமக்குயதுக்கே கழிவில்லடே” கால்களை வசதியாக மடித்தபடி  ”பப்படம் வெளிச்செண்ணையில காச்சினாக்க அதுக்கு மணமே வேற. தமிழ்நாட்டில கடலையெண்ணையில காச்சுகானுக… மயிருமாதிரி இருக்கும்”என்றபடி ஒருபப்படத்தை எடுத்து கடித்தார். அனந்தனைப் பார்த்து ”வா மக்கா…இந்தா” என்றார். அனந்தன் வேண்டாமென்று தலையாட்டினான். ”வாங்கு மக்கா அப்பூப்பன்லா தாறன்”என்றார்.

அப்பா ”வாங்குடா”என்றார். அனந்தன் அதை தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். தின்னவில்லை. அம்மா மெல்ல”பருப்பு போடட்டா?”என்றாள் சோற்றை அருவட்டியிலிருந்து அகப்பையால் மெல்ல நீக்கி இலையில் போட்டபடி.

”வாயு பகவானாக்கும்….செரி போடு. உனக்க கையால உண்ணுதேன் ஒரு குறவும் வராது…” வக்கீல் சோற்றை குழிசெய்தார். அம்மா பருப்புக்கறி போடு நெய் ஊற்றும்போது அவர் வேறு எங்கோ பார்த்தார். அம்மா அவர் முகத்தைப் பார்த்து சற்று பொறுத்துப்பார்த்து ஏமாந்து அவளே நிறுத்திக்கொண்டாள்.

வக்கீல் அழுத்தமாகப் பிசைந்து பெரிய கவளமாக உருட்டி அண்ணாந்து வாயில்போட்டு மென்றபடி ”…. என்னாண்ணு சொன்னா இது குடும்ப சொத்து. தாய்வழிக் குடும்ப சொத்துண்ணாக்க அதுக்கு செல ரீதிகளெல்லாம் உண்டுண்ணு வை. 1935 வரைக்கும் பெண்வழிச் சொத்தவகாசம். உடைய தம்புரான் பத்மநாபதாசன் திருமேனிக்க சட்டம் அது. அதன் பிரகாரம் ஆண்வாரிசுகளுக்கு ஒருபைசாவுக்க அவகாசம் இல்லை. 1951 முதல் ஆளோகரி சொத்தவகாசம். அதன்பிரகாரம் பெண்வாரிசுகளுக்கும் அவுகளுக்க பெண்வாரிசுகளுக்கும் கர்ப்பத்தில இருக்க குட்டிக்குவரை சமபாகம் உண்டு. பின்ன மிச்சமுண்டானா அதேபோல ஓரோ பாகம் ஆண்வாரிசுகளுக்கு. அதாக்கும் இங்கிலீஷ்காரன் சட்டம். சாம்பார் கொள்ளாம் கேட்டியா மக்கா”

அம்மா வெறுப்பு தெரியும் கண்களுடன் கொஞ்சமாக புன்னகை செய்தாள். வக்கீல் ”காயம் கொஞ்சமாட்டு சேக்கணும்…” என்றபடி உருட்டி விழுங்கினார். அவியலையும் கூட்டையும் எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தார் ” நீ என்னடே காட்டுக்கள்ளன மாதிரி உண்ணுதே? நல்ல நாயரு சாம்பாறுக்கு உப்பேரி தொட்டு உண்ணு¡னா? சாம்பாருக்கு அவியலும் கூட்டும் சேக்கணும். ரெசத்துக்கு துவரனும் உப்பேரியும் தொணை. அதேபோல மோருக்கு முளகும் ஊறுகாயும்  பாயசத்துக்கு இஞ்சியும் நாரங்காயும்ணாக்கும் கணக்கு. காரணவன்மாரு எல்லாம் கணக்காட்டு சொல்லி வச்சிட்டுண்டு… ”

வக்கீல் அனந்தனை பார்த்தார். ஒரு உப்பேரியை எடுத்து நீட்டியபடி ”இந்தா மக்கா”என்றார். அனந்தன் பின்னால் நகர்ந்தான். ”வாங்கி தின்னுடே, உனக்கு நான் அப்பூப்பம் முறைவரணும். இந்தா” அனந்தன் வாங்கிக்கொண்டதும் ”பிள்ளையள் பாக்க வச்சு தின்னுத ரீதி நமக்கு செரிவராது. இந்நேற்று முத்தையன்செட்டி வீட்டில இந்தா பாரு இம்பிடுபோல ஒரு வட, காஞ்ச பரிப்புவட, தின்னேன். அவனுக்க மூத்தபய பாத்துக்கிட்டு நிண்ணான். அண்ணைக்கு சாயங்காலம் பிடிச்ச வயித்துப்பொருமலும் ஏம்பக்கமும். ஒண்ணும் சொல்லாண்டாம்… சொத்து குடும்ப சொத்துதானே…”

”குடும்ப சொத்துண்ணா…. நாயம்மாருக்கு குடும்ப சொத்துண்ணு ஏது?எல்லாம் நட்டாலம் தேவஸ்வம் வகைதான். அடங்கக் காணத்துக்கு உடம்படி உண்டு. அது நூறுவருஷம் முன்ன…”

”கேணல் மன்றோக்க காலத்துக்கு பிறவு கரம் கெட்டியிட்டுண்டானா அது குடும்பசொத்தாக்கும். அதாக்கும் கீழ்வழக்கம்.” வக்கீல் இலையை துப்புரவுசெய்து சோற்றுக்காக பார்த்தார்.

அப்பா ” அந்த சொத்தில பதிநாலேக்கர் பொற்றைய முப்பத்திமூணு வருசம் முன்னால இவளுக்க அம்மைக்க மூத்த அண்ணனுக்கு பிரிச்சு குடுத்திருக்காங்க.”

”விலையோ?” என்றார் வக்கீல்

”இல்லை. பாகம் வச்சு குடுத்திருக்காக”

”அப்பம் செல்லாது. பெண்வழி சொத்து பெண்ணுக்குமட்டும்தான். ஆணுக்கு அஞ்சு நயா பைசா இல்லை ,அதாக்கும் சட்டம்”

”அதுக்குப்பிறகு இப்பம் இவளுக்கும் இவளுக்க ரெண்டு  அக்கச்சிமாருக்கும் கல்யாணம் கெட்டி குடுக்கிற நேரத்தில பதினாறேக்கர் வரைக்கும் நஞ்சையும். புஞ்சையுமா வித்திருக்காங்க…”

”ஆராக்கும் வித்தது?”என்றார் வக்கீல். ”ரெசம் கொண்டு வாடீ மக்கா”

”இவளுக்க மூத்த அண்ணாமாரும் அப்பாவும் சேந்து. இவளுக்க அம்மை செத்து இப்பம் இருவத்தெட்டு வருசமாச்சுல்லா?”

”அது செல்லாது. அம்மைக்க சொத்து ஆளோகரி வச்சு பங்குபோட்டுத்தான் விக்கணும். மக்கமாரு இஷ்டத்துக்கு விக்க ஒக்காது” வக்கீல் கைவற்றல்களை நக்கினார். ”அத கணக்கு சொல்லி வாங்கிப்போடலாம். அதில கோளு இருக்கு தங்கப்பா…”

அம்மா குனிந்து வக்கீலுக்கு சோறு வட்டித்தபடி வெறுப்பில் சிவந்த முகத்துடன் தாழ்ந்த குரலில் ”மூணு பெண்வாரிசுகளையும் கெட்டிச்சுகுடுக்கத்தான் வித்தது. அல்லாம அண்ணம்மாரு சுகிக்கியதுக்கு இல்ல”என்றாள்.

அப்பா ” சீ நாயே” என்று எட்டி அம்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ரசச்செம்பு நழுவி கீழே விழ அம்மா அதைப் பிடித்துக் கொண்டாள். அப்பா ”வெட்டி புதைச்சிருவேன் தேவிடிச்சி நாயே ” என்று மீண்டும் ஓங்கினார்.

அம்மா பின்னால் சரிந்து கையூன்றி எழுந்து விலகி அடுக்களை வாசலில் நின்று திடமான குரலில் ” இன்னும் மூணு கண்ணுதெறக்காத்த பிள்ளைய அங்க உண்டு. அதுகளுக்க சொத்தயும் புரயிடத்தையும் இங்க யாரும் பாகம் வச்சு கொண்டுவர மாட்டாங்க….. அதுக்கு யாரும் இங்க வக்கீலையும் குமஸ்தனையும் ஒண்ணும் கொண்டுவரவேண்டாம்”என்றாள்.

”தூ நாயே”என்று அப்பா எழுந்து பாய்ந்து வந்து அம்மாவை ஓங்கி அறைந்தார். அடி அம்மாவின் தலையிலும் கதவிலுமாகப் பட்டது. அம்மா பின்னால் நகர அவர் வெறியுடன் முன்னேறி அவளை கண்மண் தெரியாமல் அடித்தார்.  அடிகள் படீர் படீர் என்று சதையில் பட்டு ஓலித்தன. அம்மா அடிகளைத் தடுக்கவில்லை. கைகளை தூக்கக்கூட இல்லை. உதடுகளை இறுக்கியபடி வெறித்த பார்வையுடன் அப்படியே நின்றாள். அனந்தனுக்கு அவளைப்பார்க்க பயமாக இருந்தது. அம்மாவுக்குப் பதில் அங்கே ஒரு யட்சி வந்து நிற்பதைப்போலிருந்தது.

அப்பா அம்மாவை அடித்து அடித்து என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதி ஒரு புளியமாறு விறகை எடுத்து ” சாவுட்டீ” எப்ன்று கூவியபடி அம்மாவை அடித்தார். அடி தோளில் பட அம்மா சற்று தள்ளாடி ஆனால் சுவரைப்பிடித்தப்டி அப்படியேதான் நின்றாள்.

அப்பா மீண்டும் ஓங்கியவர் சட்டென்று அம்மாவின் கண்களைப்பார்த்து உறைந்து ஓங்கிய கை அப்படியே நிற்க நின்றார்.  ”சண்டாளி நாயே” என்று கூவியபடி அப்படியே பாய்ந்து சோற்று பானையை ஓங்கி அடித்தார். அது உடைந்து அடுப்பின்மீதே சரிந்தது. சாம்பார் அவியல் ரசம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினார். அடுக்களை கல்யாணவீட்டு குப்பைபோல கொளகொளவென்று எல்லாம் கலந்து கிடந்தது. விறகை வீசிவிட்டு மூச்சு வாங்க வேட்டியைப்பற்றியபடி ”அடிச்சு கொண்ணு ஆத்தில போட்டிருவேன்…எதுத்தா பேசுறே நாயே?” என்றார். திரும்பியபோது கால் சாம்பாரில் சற்று வழுக்கியது. கதவைப்பிடித்துக் கொண்டார்.

அப்பா வெளியே போனதும்தான் அனந்தன் அவன் கால்சட்டையில் ஒன்றுக்கடித்திருப்பதை உணர்ந்தான். அம்மா அப்படியே அசையாமல் கோயில்தூணில் சிலை ஒட்டியிருப்பதுபோல கதவில் சாய்ந்து நின்றாள். அம்மாவின் மூக்கில் சிறிது ரத்தம் தெரிந்தது. அப்பா வெளியே சென்று மூச்சிரைத்தபடி இடுப்பில் கைவைத்து நின்றார்.

வக்கீல் இலையில் இருந்தபடி ” பெண்புத்தி பின்புத்தி தங்கப்பா. நாமதானே பொறுமையாட்டு சொல்லி குடுத்து எடுக்கணும். கைநீட்டினது தப்பு , நான் சொல்லிட்டேன். கெர்ப்பிணியை கைநீட்டுதது மகாதப்பு…” அவரே எட்டி அருவட்டியை எடுத்து சோற்றை போட்டுக்கொண்டு அனந்தனிடம் ”மக்களே மோரு இருக்கா பாருடே”என்றார். அனந்தன் அவரையே வாய் திறந்து பார்த்தபடி பிரமித்துப் போய் நின்றான்.

அம்மா உள்ளே போய் மோர்க்கலத்தை எடுத்துவந்து வக்கீல் முன் வைத்தாள். ”உப்பும் எடுத்துக்க மக்கா”என்றார் வக்கீல். அம்மா வாத்துவடிவ உப்பு மரவையைக் கொண்டுவந்து வைத்தாள். அவள் வாய் வீங்கி கீழுதடு சிவந்து தொங்கியது. கன்னத்தில் சிவப்பாக அடித்த வீக்கமும் தடிப்பும்.

வக்கீல் உப்புமரவையை எடுத்து சரித்து உப்புநீரை ஊற்றி மோரைப் பிசைந்தபடி ”மோருக்கு முன்னால ஓலனும் காளனும் சேத்து உண்டாத்தான் மோரு ருசி தெரியும்ணாக்கும் சாஸ்திரம். செரி போட்டு…ஓரோ லபிதமில்ல ” என்றபடி நார்த்தங்காய் கறியை வழித்து நாக்கில் விட்டு சப்பினார். ” செறு மதுரம் உண்டு…. நல்ல முத்தன் நாரங்கா ‘. அப்பா பேசாமல் முன்னறைக்குச் சென்றுவிட்டார்.

வக்கீல் ”அது என்னாண்ணா மக்கா ஆம்பிளைக அடிக்க வாறப்ப கைதொழுது அழுது ஒருவிதம் மாறிக்கிடணும் பாத்துக்க. பெண்ணு அழலேண்ணா ஆம்பிளைக்கு வெறி மூத்திரும். பிறவு நம்ம வரைச்ச வரைக்கு அவனை கொண்டுவரலாமே… பெண்ணு துணிஞ்சாக்க பல வழிகள் இருக்கே ..ஏது…. ஹெஹேஹெ” வக்கீல் மோர்ச்சோற்றை வழித்து வழித்து நக்கினார். நிதானமாக ஒவ்வொரு விரலாக நக்கி விட்டு தண்ணீரை மடக்மடக் என்று குடித்தார். ”எல்லாம் முடிஞ்சு சீரகவெள்ளம். அதுக்க சொகம் வேறதான் மக்கா” இடக்கையை ஊன்றி எழுந்து கொண்டார் ”யப்பா செந்தியாண்டவா முருகா!”என்றார்.

கைகழுவிவிட்டு அவர் வந்து  ஈசிசேரில் மீண்டும் அமர்ந்து கால்களை வசதியாக நீட்டி ”வெத்தில எடுடே தங்கப்பா… டே நீ இரிடே. என்ன மயித்துக்கு நட்டுவச்ச குந்தம் கணக்காட்டு நிக்குதே? இரி. எல்லாம் செரியா வரும் . நான்ல சொல்லுதேன். இரி ” என்றார்.

அப்பா ஈசிசேரில் அமர்ந்து கொண்டார். ”நீ சோறு உண்டு முடிக்கல்லியே… மக்கா வெசாலமே ஏட்டி…”என்றார் வக்கீல்

அம்மா வந்து ஜன்னலுக்கு பின்னால் நின்று ”ம்” என்றாள்.

வக்கீல் ”நீ ஒரு பிடி அரி எடுத்து அடுப்பிலபோட்டு வடிச்சு புளித்தண்ணி காய்ச்சு கேட்டியா… போனதுபோட்டு வீட்டுக்கொரு ஆணுல்லா .அவன் வயறு காஞ்சா நல்லதுக்கில்ல ”

அம்மா பேசாமல் நின்றாள். வக்கீல” என்ன ஒண்ணும் மிண்டாம நிக்குதே?”என்றார். அம்மா ”வைக்குதேன்”என்றாள். வக்கீல்”ஆ, அதாக்கும் குடும்ப ஐஸ்வரியம்ணு சொல்லுகது…. அல்லாம ஓரோ வீடுகளைப்போல  தவி முட்டி பானை ஒடையுத ரீதி இல்ல . போ மக்கா…”

அம்மா பெருமூச்சுடன் விலகிச்சென்றாள். வக்கீல் திரும்பிப்பார்த்து அம்மா போனதை உறுதிசெய்தபின் ”மோணையனாடு இருக்கியே. அப்டி கேறி அடிச்சுப்போடப் பிடாது. அடிபெட்டா பின்ன அவளுக மனசு உறைச்சுப்போடுவாளுக. அடிப்பேன் அடிப்பேண்ணு சொல்லி மிரட்டி வைக்கணும். அடி மனசில விழணும்டே… அதாக்கும் அதுக்க ரீதி.” பாக்கை தோல்சீவியபடி ” நல்ல பழுக்கடைக்கா ”என்றார் ”ஆத்துக்கரைண்னாக்க பாக்கு பச்சைபிடிச்சு கேறிவரும்”

அப்பா ஆதாரத்தை எடுத்துபார்த்தார். வக்கீல் பாக்கை வாயில்போட்டு கடித்து மென்றபடி ” ஒண்ணு சொல்லுகேன் கேட்டுக்க. நாயம்மாரு இண்ணைக்கும் பெண்வாழ்ச்ச உள்ள சாதியாக்கும். பண்டுகாலத்தில இந்த பரசுராமஷேத்ரம் அம்பிடும் பெண்சொத்தாக்கும். அதுக்கு ரேகையுண்டு. பெண்மலையாலம்ணு சொல்லுவழக்கம் உண்டு கேட்டுக்க. ரேகையுள்ள மலையாளத்து மண்ணு மூணாக்கும். பிரம்மஸ்வம் தேவஸ்வம் ராஜஸ்வம். தெய்வத்துக்குள்ளது நம்பூரிக்குள்ளது பின்ன தம்புரானுக்குள்ளது. மிச்சமுள்ள ரேகையில்லாத்த மண்ணெல்லாம் இங்கயுள்ள பெண்ணுக்க சொத்துண்ணாக்கும் வைப்பு. ஆணுக்கு ஒரு பிடி மண்ணில அவகாசம் இல்ல பாத்துக்க. பொண்ணுக்கு ஆணாட்டு இருந்து அவள ரெட்சிச்சு நிக்கணும், அதாக்கும் ஆணுக்கு விதிச்ச விதி.பெண்ணு இருக்க இட்மாக்கும் தறவாடு. ஆணு அங்க வந்து நிண்ணு போறவன். அல்லாம தாலியும் கல்யானமும் ஒண்ணும் இல்ல பாத்துக்க. ஒரு புடவ குடுத்தா ஆச்சு இலெலெண்ணா வாக்கு மதி, சம்பந்தம் ஆயாச்சு… பிள்ளையுண்டானா அது தறவாட்டுவகை. தந்தைண்ணு ஒருத்தனுக்க அவசியமே இல்லை. அதொரு காலம். பின்ன இப்ப கத மாறி சாத்திரம் மாறி பாண்டிநாட்டு ரீதி வந்துபோட்டு. உன்னை மாதிரி சிலர் பெண்ணு கெட்டி எறக்கிவந்து குடியிருத்துதாவ. ஆனா இண்ணைக்கும் நம்ம சட்டமும் ரீதியும் பெண்ணுமூப்பு உள்ளதாக்கும். அத நீ மறக்கப்பிடாது. ஆளோகரி மாதிரி ஒரு சட்டம் இந்த இண்டியா மகாராஜ்யத்தில இல்ல.”

வக்கீல் வெற்றிலையை சுருட்டி கடைவாயில் வைத்து நறுநறுவென்று கடித்து உள்ளே செலுத்தி மென்றார்.”பாத்து நடந்தா உனக்கு கொள்ளாம். உனக்க அம்மைக்க சொத்தில அஞ்சு நயாபைசாக்கு உனக்கு அவகாசமில்லை. கெளவி குடுத்தா உண்டு இல்லெங்கி இல்ல. இவளுக்க சொத்தைக் கேக்கணுமானா இவ சம்மதிக்கணும்டே. உனக்குள்ள சொத்து அம்பிடும் பெண்சொத்தாக்கும்டே. சட்டப்படி அவளாக்கும் சொத்துக்கு ஓணர். உனக்கு ஒரு சாண் குந்தம் மட்டும்தான் சொத்து… அத நீ மறக்கப்பிடாது” வக்கீல் குரலைத் தாழ்த்தி அப்பா அருகே சாய்ந்து ”பல வீடுகளில பெண்ணடிமாரு ரெண்டும் கல்பிச்சு கெட்டினவனை இறக்கிவிடுத கதை இப்பமும் நடக்குது கேட்டுக்க”

அப்பா ”அதுசெரி”என்றார்,லேசாகச் சிரித்தபடி.

”ஏன் ,என்னவாக்கும் சிரி? இப்பம் உனக்க பெண்சாதி எறங்கிப்போடா மயிரேண்ணு சொன்னா என்ன செய்வே? வீடிருக்க பறம்பு அவளுக்குள்ளது. உனக்க நாலேக்கர் வயலும் ஒம்பதேக்கர் பறம்பும் அவளுக்குள்ளது. அவளுக்க அண்ணம்மாரு  குடும்பசொத்தில எளுதிக்குடுத்தது. செரி, உனக்கு சர்க்கார் ஜோலி இருக்கு. அதனால நீ கஞ்சி குடிச்சு கெடப்பே. இல்லேண்ணா?”

அப்பா உற்று பார்த்து பேசாமலிருந்தார்.

”துணிஞ்சு அப்டி சொல்ல்லிப்போட மாட்டாள்ண்ணு நினைக்கே. மக்கா, பெண்ணுக்க மனசிருக்கே அது அம்பிடு எளுப்பத்தில மனசிலாக்குத காரியமில்ல பாத்துக்க. பிள்ளைகளுக்காக பூமிமாதிரி பொறுப்பா. ஒரு முக்கு உண்டு. அந்த முக்கு திரும்பிட்டாண்ணா பின்ன அவள ஆராலும் தடுக்க முடியாது. பிரம்மாவிஷ்ணுசிவன் நினைச்சாலும் செரி.  பெண்ணுக்குள்ள ஒரு வெஷமுண்டு தங்கப்பா, அதை ஒருதுள்ளி குடிச்சவன் பின்ன ஒரு பெண்ணையும் நம்பமாட்டான். நான் குறெ கண்டிட்டுண்டுடே மக்கா” வக்கீல் கொஞ்சநேரம் பேசாமல் வெற்றிலையை மென்றார்.

அப்பா கொஞ்சம் தயங்கி ”அது பின்ன சொல்லுவழி கேக்கல்லேண்ணா…”என்றார்.

”அது நியாயம். ஆம்பிளைண்ணாக்க ஆம்பிளையாட்டு இருக்கணும். நான் சொல்லுதேனே கல்யாணம் கழிஞ்ச பத்து நாளில ஆம்பிளை ஆம்பிளைண்ணு காட்டினா குடும்பம் வெளங்கும். மூக்கணைக் கயித்த விட்டுப்போட்டாண்ணாக்க அம்பிடுதான், பின்ன பிடிச்சா நிக்காது. ஒடையோன் இல்லா வண்டி காளைக்க காலு போக்கில, அதாக்கும். அது நீ செய்தது ஞாயம்.நான் உன்னை குத்தம் சொல்ல மாட்டேன். ஆனா ஒரு கணக்கும் சூச்சுமமும் எல்லாம் வேணும் பாத்துக்க. சொத்தும் வகையும் உனக்க கையில இருக்கனுமிடே. பய்ய பாத்து சொல்லி அத இப்பிடி கைமாத்தி எடுத்திட்டு உனக்க பத்திய விரிச்சணும். அதாக்கும் அதுக்க ரீதி…”

”நான் சர்க்கார் சோலிக்காரன்லா, சொத்து வாங்க ஒக்காதே”

”நீ எனக்க கிட்ட கேளு தங்கப்பா? சும்மா உண்டையும்கோலும் தூக்கிகிட்டு அலையுததுக்காட்டா நான் எ·ப் ஏ படிச்சேன்? இல்ல கேக்கேன். நீ வயலையும் பறம்பையும் வித்து எடம் மாத்தி விலை ஆதாரம் போட்டு வேற வாங்கு. வாங்கும்பம் உனக்க பேரும் அவகாசத்திலெ சேத்துக்க. சொத்துவாங்கிறது அவ. உடைமையவகாசம் உனக்கும் உண்டு. அப்டி மண்னை மாத்திப்போட்டேண்ணா பின்ன நீயாக்கும் ராஜா. ”

”அதுக்கு அவளுக்க அண்ணம்மாரு சம்மதிக்கணுமே…. அதில ரெண்டாமத்தவன் சர்வேயராக்கும்”

”நீ என்னத்துக்கு அவிக கூட ரெம்யமாட்டு இருக்கே? ஒடைச்சு விட்டுடே. அவனுகள நாலு தந்தைக்கு விளி. ஒரு அடி விளட்டு. அம்பிடுதான். ஒரு அடிக்கு நிக்குத சொந்தம்ணு ஒண்ணும் இந்த பூமிமேல இல்லடே தங்கப்பா…இதெல்லாம் எல்லாவனும் செய்யியதுதானே.”

”கோர்ட்டில ஒரு ரிட் பெட்டிஷன் குடுக்கலாம்ணு நினைச்சேன்…”

”கோர்ட்டும் மயிரும். டே உனக்க மக்கமாருகாலத்தில விதி வருமாடே? நீ ஆதாரமெழுத்து அறிஞ்சவன்லா? அந்த சொத்துக்க தாய் ஆதாரத்தில என்ன இருக்குண்ணு உனக்கு தெரியுமா? தாய் ஆதாரம் செம்பிலயோ ஓலையிலயோ இருந்தா பின்ன சோலியே வேண்டாம். திருவனந்தபுரம் போயி பரிசோதன களிஞ்சு ஒப்பும் முத்திரயுமாட்டு சங்கதி கையில வாறதுக்குள்ள திருவட்டார் ஆதிகேசவன் கமந்து கெடந்துபோடுவாரு. பெண்பங்கும் ஆளோகரியும் சில்லற சிக்கல் இல்ல பாத்துக்க. அம்பதுவரிசத்தில மூணு மட்டம் சட்டம் மாறியிருக்கு. விதிநியாயங்களில மேனோம்மாரு கண்டமானிக்கு எழுதிவச்சிருக்கானுக. இப்பம் சொல்லுகேனே செத்துப்போன இவளுக்க அம்மை  பிள்ளையளுக்கு சும்மா ஒரு லெட்டர் எழுதியிருக்காண்ணு வையி. அதில மக்களே எனக்க சொத்த வித்து காரியங்க நந்த்துங்கண்ணு ஒருவரி இருந்தா மக்கமாரு வித்தது செரியாயிப்போடும். அப்டி ஒரு விதி திருவனந்தபுரம் கோர்ட்டில வந்திருக்கு…”

”வித்த சொத்த அவளுக்க அண்ணன்மாரு அவங்க பாகத்துக்கு வச்சுகிடணும். மிச்சத்த பெண்ணடிகளுக்கு பாகம் வைகக்ணும்…”

”அத நீ கெடந்து செலைச்சா ஆச்சா?” வக்கீல் திரும்பி அனந்தனைப்பார்த்தார். ”பய மண்ணு புண்ணாக்குமாதிரில்லா இருக்கான். வல்ல எழுத்தும் படிப்பும் கேறுத லெட்சணம் உண்டா?” என்றார்.

”கொஞ்சம் புறகிலதான். மூத்தவன் படிப்பான்”என்றார் அப்பா ”அப்பம் பின்ன என்ன செய்யியது?”

”நீ இவனுக்கு நம்ம கணியாரிட்ட சொல்லி ஒரு ரெட்சை எழுதி கெட்டிப்போடு, என்னா?” வக்கீல் எச்சிலை படிக்கத்தில் துப்பினார். ”இவ எப்பிடிடே ,மக்கமாரிட்ட நல்ல நிறவுண்டா?”

”பிள்ளைகளிட்ட அருமையாட்டுதான் இருப்பா”

”அங்கயாக்கும் உனக்க பிடி. கண்ணுட்டி கையில இருந்தா பசு எங்க போவும். பிள்ளையள இங்கவிட்டுட்டு அவள அங்க கொண்டுசெண்ணு விடு. சொத்தும் வகையுமா வந்தா வரட்டு இல்லெங்கி அங்க நிக்கட்டு… பாகம் வச்சு கிட்டுதது கிட்டின பிறவு வேணுமானா ஒரு அடிபிடி வச்சிட்டு வந்துபோடு. பின்ன ஒரு ரிட்டயும் போட்டுவிட்டா அது கெடக்கும் குறே காலம். அவனுக ஒண்ணையும் விக்கவோ ஒத்திபாட்டம் விடவோ முடியாது. வந்து காலுபிடிச்சானுகண்ணாக்க இன்னும் ஒரு பாகம் வச்சு உள்ளத வாங்கிப்போடலாம். பின்ன அவளூக்க பேரில உள்ளத அரிச்சு அரிச்சு உனக்க பேரும் சேத்து மாத்தினா நீ ஜெயிச்சே…” வக்கீல் கால்களை தரையில் வைத்தார் ”யப்போ செந்தியாண்டவா….முருகா! நடுவுக்கு ஒரு வேதனைடே மக்கா. தைலத்துக்கு மட்டும் இப்பம் என்ன ஆவுதுண்ணாக்கும் நினைக்கே?” எழுந்து ” நான் ஒரு உறக்கம் போடுகேன். நாலுமணிக்குதானேடே பேச்சிப்பாற பஸ்ஸ¤?”

அப்பா எழுந்து ”வரணும்” என்று அவரை தன் படுக்கையறைக்கு கூட்டிச்சென்றார். அனந்தன் ஒன்றுமே புரியாமல் ஜன்னலைப்பிடித்தபடி நின்றான். அவனுக்கு வக்கீல் அம்மாவைப்பற்றி கெடுதலாக ஏதோ சொல்லியிருக்கிறார் என்று மட்டும் தோன்றியது.

அனந்தன் உள்ளே சென்றான். அம்மா வடக்குபுறத்தில் நெல்லடுப்பில் ஓலைச்சூட்டை எரித்து புத்தன்கலத்தில் சோறு பொங்கிக் கொண்டிருந்தாள். ஜம்பரும் முண்டுமெல்லாம் கரித்தூள்கள். போனமாதம் வேளார் வந்தபோது வாங்கி நெல்லுபுரையில் கமிழ்த்திவைத்த கலங்களில் ஒன்று. அதன் செம்புச்சிவப்பான வயிற்றின் மீது உள் ஈரம் கசிந்து தீபட்டு கரிபிடித்துக் கொண்டிருந்தது. அடுக்களை அப்படியே கிடந்தது, நிறையபேர் சேர்ந்து வாந்தி எடுத்தது போல.

அனந்தன் அம்மா அருகே போய் அமர்ந்து ” கஞ்சியா அம்மா?”என்றான். அம்மா வீங்கிய உதடுகளால் புன்னகை புரிந்தபடி அவன் கால்களை தொட்டு ” என் குட்டனுக்கு நான் நாளைக்கு நல்ல அவியல் வச்சு குடுப்பேன்லா?”என்றாள்.

அனந்தன்”எனக்கு அவியல் வேண்டாம்”என்றான். ”ஏண்டா?”என்றாள் அம்மா. அனந்தன் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்தான். ”ஏன் மக்கா?” அனந்தன் சட்டென்று விசும்பி கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தான். அம்மா பதறி ”டேய் அனந்தா இங்க பாரு…”என்று அவன் தோளைத்தொட்டான். அனந்தனுக்கு அழுகை மேலும் மேலும் வலுத்தது

”அழாதே கேட்டியா? எங்கானும் வந்து பாத்தாருண்ணா அது மதி இங்க பெகளத்துக்கு…”என்று அம்மா அடக்கியகுரலில் சொன்னாள்.”கண்ணத் தொடை….கண்ண தொடை மக்கா” அனந்தன் கண்களை துடைத்தான். பெருமூச்சுகளாக வந்தது

” அய்யே . ஆணாப்பொறந்தவன் அழலாமா? சிரி ..சிரி பாக்கட்டு..”அம்மாவின் கண்கள் கலங்கியிருந்தன. இரு கன்னத்திலும் அடியின் சிவப்புத்தடங்கள். கூந்தலில் கரித்துகள்கள் காற்றில் ஆடின.” எனக்க அனந்தப்பிள்ளைக்கு மீசையில்லா முளைக்கப்போவுது? கப்படா மீசை, காதுவரை மீசை கறுகறுத்த மீசை… மீசைய வச்சுக்கிட்டு அழலாமா?”

அனந்தன் தொட்டுப்பார்த்தான். மீசை உண்மையிலேயே முளைக்கப்போகிறதா என்ன? மேலுதடு கொஞ்சம் நமநமவென்றுதான் இருந்தது.

”கொஞ்சம் இந்த அடுப்ப பாத்துக்கிடுவியா மக்கா? நான் போயி அந்த குப்பய வாரிப்போட்டுட்டு வாறேன்… காய் ஒண்ணுமில்ல. தேங்கா துருவதுக்கும் நேரமில்ல” அனந்தன் தலையாட்டினான்

அம்மா போனதும் அனந்தன் தீயை சூட்டு போட்டு வளர்த்தான். சுரீரென்று உள்ளிருந்து கஞ்சி பொங்கிவந்து சூடான பானையின் விளிம்பில் நின்று நுரைத்து வலைபோல அலைப்புற்றது. தீயை மிதமாக்கினான். சூட்டை லேசாக அசைத்து அரக்கி கரியை உதிர்த்து உள்ளே நீக்கி வைத்தான். தீக் கொழுந்துகள் கரியளடிப்பக்கம் மீது சிவப்பு நாக்குகளாக நின்று சாமியாடின. தீயின் சிவப்பையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். வால்கட்டிபோடப்பட்ட பாம்புக்குட்டிகள் துள்ளி நெளிந்து நெளிந்து எழுவதுபோலிருந்தது. பானையை அப்படியே தூக்கி நெட்டித்தள்ள அவை முயல்வதுபோல, நாக்குகளை பறக்க விட்டு பக்கவாட்டில் வெளியேற முயல்வதுபோல. தீயின் நிறத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். இரவில் நல்ல சிவப்பாக தெரியும் தீ பகலில் மஞ்சளாக தெரிகிறது. தூரத்திலிருந்து பார்த்தால் வெளிச்சமே இல்லாமல் தாமரை இதழ்களையோ வாதாம் மரச்சருகுகளையோ போல இருக்கிறது. தீயைப்பார்த்தால் கண்களை எடுக்க முடிவதில்லை.

அம்மா அடுக்களையிலிருந்து உடைந்த சட்டிகளையும் பானையையும் ஓடுகளாக அள்ளி கடவத்தில் போட்டு எடுத்துக் கொண்டுவந்தாள். ”நான் தூக்குதேன் அம்மா” என்றான் அனந்தன். ”கனமில்ல மக்கா”

மொத்த சோற்றையும் கறிக்குழம்பலையும் பாளைவைத்து அப்படியே ஒதுக்கி அள்ளி மரவாளியில் விட்டாள். அனந்தன் எழுந்து ”நான் ஒதுக்குதேன் அம்மா”என்றான். ”இல்லடா , காலுபடக்கூடாது, அன்னலெச்சுமியில்லா. நீ ஒதுங்கு நான் இப்ப வாரிப்போடுவேன்” என்றாள்.

மேற்குப்புறத்தில் பசு வரும் ஓசைகேட்டது. அண்ணா வந்து கால்களை கழுவியபடி அந்தப்பக்க வாசல்வழியாக வந்தான். அம்மா மெல்ல ”சோறுக்கு கொஞ்சம் வைகும்னு சொல்லுடே மக்கா”என்றாள்.

அனந்தன் ”அண்ணா சோறு இன்னும் வேகல்ல”என்றான் ”ஏன்?”என்றான் அண்ணா கண்களில் கோபத்துடன். ”அப்பா ஒடைச்சிட்டாங்க”என்று அனந்தன் மெல்லியகுரலில் சொன்னான். அண்ணா அடுக்களையைப் பார்த்தான். அம்மா அவனை ஏறிட்டுப்பார்த்துவிட்டு தலை குனிந்தாள். அண்ணா கடுமையான குரலில் ”வேற சோறு வைக்குத ஏற்பாடு உண்டா?”என்றான்.

அம்மா”அடுப்பில வேவுது”என்றாள் அவனைப் பார்க்காமலேயே. அண்ணா ” சட்டுண்ணு வைக்கச்சொல்லுடே. சோலி செஞ்சு செத்து வந்தா ஒருவாய் சோறுக்கு வழியில்ல வீட்டில…”என்றபடி தன் அறைக்குச் சென்றான்.

அனந்தன் அம்மா ஒன்றும் சொல்லாமல் தரையை துடைப்பதைப்பார்த்தான். அடுப்பில் தீ தணிந்திருந்தது. ஓடிப்போய் அதை எரியவைத்தான்.”மதீடே மக்கா. வெந்திருக்கும்.வடிச்சிருதேன்” என்றாள் அம்மா.

”டேய்”என்று அண்ணா கூப்பிடும் குரல் கேட்டு அனந்தன் ஓடிப்போனான். அண்ணா தன் அறையில் தன் சட்டைகளை எடுத்து தட்டுபடிமீது போட்டுக்கொண்டிருந்தான்.” கொண்டுபோயி அலக்குக்குப் போடு. ” அனந்தன் துணிகளை எடுத்தான் .” நீ வல்லதும் தின்னியாடே?”

அனந்தன் இல்லை என்று தலையாட்டிவிட்டு துணிகளைக் கொண்டுவந்து நெல்லுபுரையில் இருந்த பெரிய மூங்கில் கொடியில் போட்டான். வெளுத்தேடத்தி ஸ்னேகலதா நேற்றுதான் வந்துபோனாள். இனிமேல் நாளை மறுநாள் வருவாள். அனந்தனின் நான்கு கால்சட்டைகளும் ஐந்து சட்டைகளும் அலக்குவதற்குப் போட்டிருந்தது.

அண்ணா மீண்டும் ”டேய்”என்றான். அனந்தன் ஓடிப்போனான். தெற்குவாசலை ஒட்டி நின்ற குட்டைச் செந்தெங்கிலிருந்து அண்ணா ஒரு இளநீர் வெட்டி போட்டிருந்தான். அரிவாளால் அதை லேசாக அறுத்துச் சீவி ஓட்டை போட்டு ”இந்தாடா குடி”என்றான்.

அனந்தன் ஆவலுடன் அதை வாங்கி மார்பில் நீர் சொட்ட குடித்தான். உள்ளே விரலைவிட்டுப் பார்த்தான். செந்தெங்கில் பொதுவாகவே நிறைய நீர்மட்டும்தான் இருக்கும். கருக்கு இருக்காது. அவன் தேங்காய்த் தொண்டை தென்னையின் கீழேயே வீசினான். அண்ணா தட்டுபடியில் அதன் விளிம்பு மீது காலைத் தூக்கிவைத்து இடது முழங்கையை கண்களுக்கு மேல் வைத்தபடி படுத்தான். அண்ணா எப்போது படுத்தாலும் இடது கை கண்களுக்கு மேல் இருக்கும். அண்ணாவுக்கு மீசை முளைத்திருக்கிறதா என்று அனந்தன் பார்த்தான். மீசை இல்லை என்றும்பட்டது ஆனால் மேலுதடு கறுப்பாக இருப்பது போலவும் பட்டது.

அருகே சென்று கூர்ந்து பார்த்தான். அண்ணா கையை எடுத்து ”ம்ம்?” என்றான். அனந்தன் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தான். ”போ போயி வெளையாடு”

பறம்புக்குள் வெயிலின் கோணம் மாறிவிட்டிருந்தது. நிழல்கள் எதிர்பக்கமாக சரிந்து நீண்டு விழுந்தன. காற்றே இல்லை. தென்னை ஓலைகளின் நுனிகள் கூட அசைவில்லாமல் நின்றன. புதர்களுக்குள் உக்கில் உப்யுப் என்று குரல் கொடுத்தது. ஒரே ஒரு காகம் மட்டும் எங்கோ கரைந்தது. அதற்கு பதில் குரல் வெகுதூரத்தில் கேட்டது. கருப்பன் வந்து பறம்பில் இறங்கி கதளிவாழையின் மூட்டில்சென்று காலைத்தூக்கி மூத்திரம் தெளித்த பின் வாழைக்கை ஒரு காகம் வந்து அமர்ந்து ஆடியதை தலைதூக்கி அதிக ஆர்வமில்லாமல் பார்த்து வாலை மெல்ல ஆட்டியது.

அனந்தன் தன் மனதில் ஒரு கனம் இருந்துகொண்டே இருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். ஒருமாதிரி குமைச்சலாக எதுவுமே பிடிக்காமல். வேகமாக எங்காவது ஓடினால் அல்லது ஓவென்று கூவினால் நன்றாக இருக்குமோ. அவன் எது வேண்டுமானாலும் செயலாம், அவனை பொட்டன் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அவன் பொட்டனாக இருப்பதனால்தான் இதுமாதிரி நிறைய நினைக்கிறானா? தங்கம்மையின் மூத்தமகன் பொன்னப்பன் பொட்டன்தான். அவனும் இதேபோல நிறைய நினைக்கிறான் போலும். அவன் நினைப்பதெல்லாம் மகிழ்ச்சியான விஷயங்கள், அதுதான் அவனுக்கு எந்நேரமும் சிரிப்பு.

அம்மா அடிக்கடி கேட்பாள் ”என்னடா அப்பிடி எப்பமும் நினைச்சுகிட்டே இருக்கே ?” அனந்தன்னால் அதை விளக்க முடியாது ” நினைப்பு அம்மா”என்று மட்டும் சொன்னான். ” அதுதான் மக்களே என்ன அப்பிடி நினைப்பே… மணிக்கணக்காட்டு தனியா இருந்து என்ன நினைப்பே?” அனந்தன்னுக்கு என்ன நினைக்கிறோம் என்று எவ்வளவு முயன்றபோதும் நினைவுகூர முடியவில்லை. அவன் எதையுமே நினைப்பதில்லை. அவன் வழியாக நினைப்புகள் போகும். நினைப்பு ஓடும்போது அவன் இருப்பதில்லை. அவன் எங்கிருக்கிறான் என்பதே வேறு யாராவது கூப்பிடும் போதுதான் தெரியும்.

அவனுக்கு திடீரென்று எங்காவது போய்விடவேண்டுமென்று எண்ணம் வந்தது. அம்மா அண்ணா அப்பா எல்லாவற்றையும் விட்டுவிட்டு. யாருமே கூட இல்லாமல். அந்த எண்ணம் வரும்போதே அவனுக்கு ஆறுதலாக இருக்கும். உற்சாகமான நினைப்பு அல்ல அது. தொண்டையை லேசாக அடைக்கும் ஒரு துக்கம் அதில் உண்டு. சிலசமயம் கண்கள்கூட நனையும். ஆனால் அத்துடன் ஒருவகையான நிறைவும் ஏற்படும். அப்போது அவனுக்கு ப்ரிதாகத் தோன்றும் அனைத்தும் மிக அற்பமானவையாக ஆகிவிடும். மிக உயரமான உச்சியிலிருந்து கீழே நோக்கி எல்லாவற்றையும் பார்பதுபோல இருக்கும். அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த எடைகள் ம்ல்ல கரைந்து மரையும்

இமைய மலைக்குப் போய்விடவேண்டும் என்றுதான் அனந்தன் நினைப்பது. அனந்தன் அந்த மலையை படமாகக்கூட பார்த்தது இல்லை. அதைப்பற்றி பத்மத்தின் இயற்கைப்பாட நூலில் ஒரு பாடம் இருந்தது. இமைய மலை மிகமிக உயரமான மலை. உலகிலேயே உயரமான மலை. அதில்தான் எவரெஸ்ட் என்ற சிகரம் இருகிறது. அனந்தன்னுக்கு எவரெஸ்ட் என்று சொல்லும்போதே உற்சாகமாக இருக்கும். எவரெஸ்டுக்கு அந்த பெயர் மட்டும்தான் பொருந்தும். எவரெஸ்ட். அதனாலேயே அவனுக்கு எவரெடி பாட்டரியையும் பிடிக்கும். எவரெஸ்ட் மலையில் ஏறும்போது எவரெடி பேட்டர் போட்ட டார்ச் லைட்டையும் கையில் வைத்திருப்பார்கள். கஞ்சன் ஜங்கா கூட நல்லபெயர்தான். சொல்லும்போது இலைத்தாளத்தை ஓங்கி கொட்டியதுபோல இருக்கிறது .தவளகிரி அனந்தன்னுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஜோசியர் தாத்தாவுக்குப் பிடித்தது கைலாசமலைதான். அது பொன்னால் ஆன மலை. காலை ஒளியிலும் அந்தி ஒளியிலும் அது செவ்வொளி விட்டு மற்ற மலைச்சிகரங்களையும் மஞ்சளாக ஆக்கிவிடும். ”எவரெஸ்டிலதான் கேறுவான். கைலாசத்தில கேறிப்போடுவானா வெள்ளக்காரன்? அது சிவனுக்க கொடுமுடியில்லா? தொட ஒக்காது, உருகுத பொன்னாக்கும். பொன்னு….”  அங்கேதான் ரிஷிகள் தவம்செய்கிறார்கள் என்றார் ஜோசியர் தாத்தா. ரிஷிகளுக்கு சாவே இல்லை. முக்தி மட்டும்தான் உண்டு. எங்குபார்த்தாலும் பனி கொட்டிக்கிடக்கும். ரிஷிகள் பனியை சிவலிங்கமாகப் பிடித்து அதை பூஜை செய்வார்கள். மூலாதார நெருப்பை எரித்துக் கொள்வதனால் அவர்களுக்கு குளிரே எடுக்காது. அவர்களின் உடலில் பட்ட பனி உருகி வழியும்.

மூலாதாரம் என்றால் பின்பக்கம் உட்காருமிடத்தில் உள்ளே இருக்கும் ஒன்று என்று ஜோசியர் தாத்தா சொல்லி பெரிய புத்தகத்தில் படம் காட்டினார். ஒரு ரிஷி உட்கார்ந்திருக்க அவருடைய பிருஷ்டத்தில் ஒரு சிறிய தாமரைப்பூ போட்டிருந்தது. சாதாரண மனிதர்களுக்கு அது மொட்டாக இருக்கும் .பத்மாசனத்தில் அமர்ந்து தவம் செய்தால் அந்த மொட்டு பூவாக மலரும். அனந்தன் உட்கார்ந்தபடியே அரக்கி அரக்கி பார்த்தான், உள்ளே ஏதும் இருப்பதாக உணர முடியவில்லை. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் அது உண்டு என்று தாத்தா சொன்னார்.

அனந்தன் பத்மாசனத்தில் அமரக் கற்றிருந்தான். கால்களை கையால் எடுத்து வைத்து பத்மாசனம் போட்டு அமர்ந்து கைகளை நீட்டி சின்முத்திரை பிடித்து ”ஓம்! ஓ!ம் ஓம்! ” என்று சொல்லிக் கொண்டான். அவன் சொல்லுவதை அவனே கவனித்துக் கொண்டிருந்தான். கொசு கடித்தது. பறம்புக்குள் சருகுமீது ஓணான் ஓடும் ஒலி. காற்றில் தென்னை ஓலைகள் சலசலக்கும் ஒலி பறவை சிறகடிப்பது போல. கொச்சங்காய் திப் என்று விழும் ஒலி. அனந்தன் மனதில் புதிய நினைப்புகளே வரவில்லை. அவன் அங்கேயே உட்கார்ந்திருக்கும் நினைப்புமட்டும்தான் இருந்தது. கொஞ்சநேரத்திலேயே சலிப்பு வந்தது

கண்களைத் திறந்து வெயில் பரவிய பறம்பையும் ஆடும் நிழல்களையும் பார்த்தான். ஒருமாதிரி ஏமாற்ரமாக இருந்தது. கால்சட்டைக்குள் கையைவிட்டு மூலாதாரத்தை தொட்டுப்பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. கையை வைத்து அதன் மீது உட்கார்ந்தான். கொஞ்ச நேரத்தில் சூடு தெரிந்தது. அப்படியே பத்து நாள் உட்கார்ந்தால் நன்றாக சூடாகி தாமரை மலர்ந்துவிடும். அனந்தன் கையை எடுத்து முகர்ந்து பார்த்தபின் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. பறம்பு மட்டும் அசைவில்லாமல் நின்றது. அனந்தன் பார்த்தபடியே சற்றுநேரம் இருந்தான். வெகுநேரம் கழித்துதான் அவன் வழக்கம்போல நினைப்புகளில் மூழ்கி தன்னை மறந்து இருந்ததை உணர்ந்தான்.

எழுந்து வீட்டுக்குள் போனான். அண்ணா ர்ர் ர்ர் என்ற மெல்லிய ஒலியுடன் தூங்கிக் கொண்டிருந்தான். அண்ணாவின் மூக்கு நுனி குவிந்து சரிந்து கழுகு போல இருக்கும். அது அம்மச்சியின் மூக்கு. அப்பாவுக்கு அந்த மூக்கு இல்லை . ”அப்டியே கெளவிக்க மூக்கு, கொத்த வாற களுகு மாதிரி , கண்டியளா அம்மிங்கிரே?”என்று அண்ணா அந்தப்பக்கமாக நகர்ந்ததுமெ தங்கம்மை சொல்வாள். அம்மச்சிக்கும் அண்ணாவுக்கு தன்னுடைய மூக்கு வந்திருப்பதில் பெருமைதான். பேரக்குழந்தைகளில் அண்ணாதான் அம்மச்சிக்கு மிகவும் செல்லம். அவனைப்பார்க்க மட்டும்தான் அம்மச்சி வருவாள். சின்ன வயதில் அண்ணவை மடிமீது போட்டுக்கொண்டு மூக்கையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று அம்மா சொல்வாள்.

”குடும்ப மூக்காக்கும். அம்பலமுக்கு வீட்டுக்க சொத்துண்ணா இந்த மூக்குதான். நாடுவாழ்ச்ச நடத்தின மூத்தம்மச்சிம்மாருக்க மூக்கில்லா?”என்று பாட்டி ஜோசியர் தாத்தாவிடம் சொல்வதை அனந்தன்னே ஒருமுறை கேட்டிருக்கிறான். அனந்தன் தன் மூக்கை கண்ணாடியில் பார்த்தான். அவன் மூக்கு நேராக்ப்போய் தூணில் இடித்துக் கொண்டது போல சப்பை. குறிப்பாக மூக்குப்பாலம் நன்றாக சப்பையாகி குழந்தைகளின் மூக்கு போல இருந்தது. அனந்தன் அடிக்கடி தன் மூக்கை நுனியைபிடித்து இழுத்து விட்டுக் கொள்வதுண்டு. சப்பைமூக்கன் என்று சிலசமயம் பத்மம் சொல்வாள். மூக்கை இழுத்து விட்டால் மெல்லமெல்ல அது நீண்டுவிடும். கைக்குழந்தைகளை மடியில்போட்டுக்கொண்டு காலை வெயிலில் உட்கார்ந்து மூக்குபிடிப்பதை அனந்தன் பார்த்திருக்கிறான். ஆனால் அவன் எவ்வளவு பிடித்தும் அவன் மூக்கு வளரவில்லை.

அவனுக்குப் பசித்தது. வடக்குப்புறத்துக்குப் போய் பார்த்தான். அம்மா சோறு வடித்து அப்படியே வைத்திருந்தாள். பானை கருகி சில இடங்களில் வெள்ளையாகி அவிழ்த்துப்போட்ட கூண்டுவண்டி போல வடிசட்டி மீது கவிழ்ந்து நின்றது. அம்மா அடுக்களையில் தேங்காய்புளிக்குழம்பு தீயடுப்பில் கொதிக்க இரும்பாலான தீக்கரண்டியை அடுப்பு மீது காட்டி கொஞ்சமாக கடுகுதாளித்து அப்படியே குழம்பில் கொட்டினாள். அனந்தன்னைக் கண்டதும் ” கொஞ்சம் இரு மக்கா, இப்பம் அப்பா உண்டுட்டு நாம சாப்பிடலாம்” என்றாள். அனந்தன் தலையாட்டினான்.

அம்மா முண்டின் கோந்தலையில் கையை துடைத்தபடி முன்னறைக்குப் போன போது அனந்தன் பின்னால் போனான். அம்மா கதவுக்குப் பின்னால் நின்றபடி மெல்லிய குரலில் ” வடிச்சாச்சு…”என்றாள். அப்பா கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஆதாரத்தை பகர்ப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அம்மா மீண்டும் தாழ்ந்த குரலில் ”உண்ண வாங்க”என்றாள். உள்அறையில் வக்கீலின் உரத்த குரட்டை ஒலி கேட்டது. அப்பா நிமிர்ந்து அம்மாவை கடுமையான முகத்துடன் பார்த்து ” வேண்டாம்”என்றாள்.

அம்மா தாழ்ந்து, ” உண்டிட்டு போங்க” என்றாள். ”வேண்டாம்னு சொல்லியாச்சுல்ல? போய் சோலியப்பாரு” அப்பா கோபத்துடன் சீறியபின் மீண்டும் எழுத தொடங்கினாள். அம்மா அங்கேயே நின்றாள். வெகுநேரம் கழிந்து அதே தாழ்ந்த குரலில் ” உண்டுட்டு போங்க , வாங்க” என்றாள். அப்பா அதை பொருட்படுத்தவேயில்லை. அம்மா மீண்டும் மீண்டும் மெல்லியகுரலில் கூப்பிட்டபடியே இருந்தாள். அனந்தன்னுக்கு அப்பாவுக்கு வேண்டாமென்றால் ஏன் அப்படி கூப்பிடவேண்டும் என்று பட்டது. ஆனால் கூப்பிடாவிட்டால் அப்பா பயங்கரமாக கோபித்துக் கொள்வாள் என்றும் அவனுக்குத் தோன்றியது

சட்டென்று அப்பா பேனாவை மூடி பெட்டிக்குள் போட்டு தாளை எடுத்து மை ஒற்றி  சுருட்டிப்போட்டு பலகையை நீக்கிவைத்து எழுந்தார். த்ண்டை எடுத்து முகம் துடைத்தபடி பேசாமல் வந்தார். அம்மா பெருமூச்சுடன் போய் ஊண்முறியில் தடுக்கை விரித்து அப்பா வழக்கமாகச் சாப்பிடும் பீங்கான் தட்டைப் போட்டாள். அப்பா நீண்டநேரம் கை கழுவி வாய் கொப்பளித்து முகம் கழுவி துடைத்தபடி வந்தபோது தண்ணீர் வைத்து பயறுத்துவரனும் நாரங்கா உப்பிலீடும் வைத்திருந்தாள். அப்பா வந்து உட்கார்ந்ததும் சோற்றைப் போட்டாள். அப்பா போதுமென்று சொல்லவில்லை .தலைகுனிந்து அமர்ந்திருந்தவர் சட்டென்று ”என் வாரி வாரி தட்டுதே? பாத்துப்போடப்பிடாதா ம்ம் ?”என்றார் கோபமாக . அம்மா நிறுத்திக் கொண்டு குழம்பை ஊற்றினாள். தேங்காய்குழம்பின் கடுகுமணத்தில் அனந்தன்னுக்கு குப்பென்று பசி எழுந்து வாய் நிறைந்தது.

அப்பா எப்போதும் மெல்ல ஒவ்வொன்றாக எடுத்து ருசித்துதான் சாப்பிடுவார். கொஞ்சம் ருசி பிடிக்கவில்லை என்றால்கூட அப்படியே நீக்கி வைத்துவிடுவார். வாயில் ஒருகல் மாட்டினால் கூட அதை கைவிட்டு எடுத்து தட்டின் ஓரமாக அம்மா பார்க்கும்படி வைப்பார்.பொதுவாக அப்பா சாப்பிடும்போது பேசும் வழக்கம் இல்லை. தும்முவதற்கும் வியர்வை துடைப்பதற்கும் மடியில் துண்டு விரித்து போட்டிருப்பார். அம்மா எதிரே அமர்ந்து அப்பா சாப்பிடுவதைப் பார்த்து அவர் அதிகமாக எடுப்பதை உடனே மீண்டும் போட்டு, உரிய நேரத்தில் குழம்பும் மோரும் விட்டு பரிமாறுவாள். அப்பா போதும் என்பதற்கு சிறிய முகச்சுளிப்பை மட்டும்தான் காட்டுவார். அப்பாவின் முகந்திலிருந்து கண்ணெடுக்காமல்தான் பரிமாறவேண்டும். இலையைப் பார்க்காமலேயே குழம்பை அளவாக எடுத்து கூட்டுகள் மீது சொட்டாமல் ஒதுக்கி வைத்த சோற்றின் குழி மீது அம்மா சரியாக  விடுவதை அனந்தன் வியப்புடன் பார்ப்பான். எப்போதாவது அப்பா சோறு எடுக்க கைநீட்டும்போது கையில் ஒரு சொட்டு குழம்பு விழுந்துவிட்டால் ”ம்ம்?”என்று உறுமுவார். அம்மா குற்ற உணர்வுடன் ”ஸ்ஸ்ஸ்”என்பாள்.

ஒருமுறை குழம்பு போதும் என்று அப்பா முகம்காட்டியபடியே முகம் கோணி தும்மும்பொருட்டு திரும்ப அம்மா கொஞ்சம் அதிகமாக ஊற்றிவிட்டாள். அப்பா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அம்மாவை உக்கிரமாக கூர்ந்து பார்த்தார். அம்மா பதற்றமாக ”வேற சோறு பொடுதேன்…”என்று தட்டை எடுக்கப்போனாள். அப்பா அப்படியே எழுந்து போய் கைகழுவி விட்டார். அம்மா பின்னால் போய் கெஞ்சி வெகுநேரம் மன்றாடியபிறகுதான் மீண்டும் சாப்பிட்டார். அப்பா சாப்பிட்டு முடித்து அண்ணாந்து தண்ணீர் குடித்து கைகளை ஊன்றாமலேயே ”அப்பாடி ” என்று எழுந்து கைகழுவி உரத்த ஒலிகளுடன் கொப்பளித்து போய் அமரும்வரை அடுக்களையிலும் ஊண்முறியிலும் சுவர்கள் விரைத்து சிலிர்த்து நிற்பதுபோலிருக்கும்.

அப்பா மோருக்கு கண்ணிமாங்கா உப்பிலீடு தொட்டு சாப்பிட்டு எழுந்தார். தட்டில் ஓரமாக கொஞ்சம் சோற்றை நீளவாட்டில் ஒதுக்கி மிச்சம் வைத்திருந்தார். அம்மா அந்த தட்டின் மீது இன்னொரு தட்டுவைத்து மூடிவிட்டு எழுந்தாள். அப்பா மீண்டும் போய் அமர்ந்ததும் அம்மா அனந்தன்னிடம் ”போடா போய் அண்ணாவை விளிடா”என்றாள். அனந்தன் ஓடி போய் பார்த்தபோது அண்ணா இல்லை. கொண்டியில் அண்ணாவின் வரையன் சடையும் இல்லை. அவன் ஓடிவந்து அம்மாவிடம் அண்னா வெளியே போய்விட்டதாகச் சொன்னான். அண்ணாவுக்கு குளத்துமுக்கு கடையிலும் வடக்குவயல்களுக்குப் போகும் வழியில் தேரியிலும் சாயைக்கடைகளில் பற்று உண்டு.

”நீ உண்ணுடா”என்று அம்மா சொன்னதும் அனந்தன் அவனே ஓடிப்போய் எனாமல் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துகொண்டான். அம்மா சோற்று கலத்தையும் குழம்புச்சட்டியையும் மோர்ச்சட்டியையும் அப்படியே எடுத்துவந்து வைத்து அமர்ந்துகொண்டாள். தன்ணீர் வைக்க மறந்துவிட்டதால் மீண்டும் எழ முயன்றாஅள். அனந்தன் ஓடிப்போய் செம்பில் தண்ணிரும் பித்தளை சீனக்கோப்பைகளும் கொண்டு வந்து வைத்தான். அம்மா அப்பா சாப்பிட்ட எச்சில் தட்டில் அந்த சோற்றுடன் கொஞ்சம் சோறு போட்டு குழம்புவிட்டு பிசைந்து சாப்பிடத் தொடங்கினாள். அனந்தன்னுக்கு அதைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

ஆனால் அப்பா சாப்பிட்ட எச்சில்தட்டில் அம்மா சாப்பிட்டால்தான் அம்மாவுக்கு மோட்சம் கிடைக்கும். இல்லாவிட்டால் செத்துப்போய் சொற்கத்துக்குப் போகும்போது சோற்றுக்குப் பதில் மண்ணை அள்ளிவைத்து சாப்பிடும்படிச் சொல்வார்கள் என்றார் ஜோசியர் தாத்தா. அப்பா சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டால்தான் சாப்பாடு எப்படி இருந்தது அப்பாவுக்கு எது பிடிக்கவில்லை எது பிடித்திருந்தது எல்லாம் அம்மாவுக்கு தெரியுமாம். கல்யாணத்தின்போது வரன் சாப்பிட்ட மிச்சம் பாலையும் பழத்தையும் வது சாப்பிட வைத்து சடங்கு நடத்துவது இதனால்தான். அறப்புரை வீட்டில் சுகுமாரன் அண்ணா கல்யாணம் செய்து பாறசாலையிலிருந்து கூட்டிவந்த அம்பிகை அக்கா அவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிட மறுத்துவிட்டதனால் அங்கே ஒரே சண்டை. ஜோசியர் தாத்தா ”அவளுக்கு திமிரு. அதுக்குண்டான பலனை அவ அனுபவிப்பா.”என்றார்

அம்மா கவனமில்லாமல் ஏதோ யோசித்தபடி சோற்றை அளைந்து கொண்டிருந்தாள். அனந்தன் சாப்பிட்டு முடித்து மோர் போட்டபோதுகூட அம்மா சாப்பிட்டு முடிக்கவில்லை. ”அம்மா”என்றான். அம்மா விழித்து இரண்டுவாய் அள்ளி போட்டபின் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்துவிட்டு தட்டை எடுத்தபடி அப்படியே எழுந்துவிட்டாள். தளர்ந்த நடையுடன் அம்மா எழுந்து போனபோது பக்கவாட்டில் அம்மாவின் வயிற்றை பார்த்தான். முண்டு நழுவி வயிற்றின் கீழ் வளைவில் கசங்கி தொங்கியது. அடிவயிற்றில் முறுக்கிய துணியை விரித்தது வரிவரியாக சருமம் விரிசலிட்டிருந்தது. வயிறு கனம் கொண்டு தொங்குவது போலிருந்தது.

 

[more]

முந்தைய கட்டுரைஅறிமுகம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடன்:கடிதங்கள்