அன்புள்ள ஜெ
இன்று ஈழப்பிரச்சினைக்காகப் போராடும் மாணவர் கிளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் எதையும் சற்று கவனித்த பிறகே கருத்துச் சொல்வீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன்
இப்போது போராடும் இந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினையின் உள்விவகாரங்கள் தெரியுமா? அங்கே உள்ள சகோதரச்சண்டைகளும் சாதியரசியலும் புரியுமா? இங்குள்ள அரசியல்வாதிகள் உருவாக்கும் ஒற்றைவரிகளை நம்பி இவர்கள் போராடுகிறார்கள் என்று தோன்றுகிறது
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள சீனிவாசன்
எந்த மக்கள் போராட்டத்தையும் அது பிரச்சினையின் எல்லா ஊடுபாவுகளையும் கணக்கில் கொள்ளவில்லை என்று சொல்லி நிராகரிக்கமுயல்வதுபோல அபத்தம் வேறில்லை. ஆனால் நம்முடைய அறிவுஜீவிகள் எப்போதும் செய்வது அதையே. அண்ணா ஹசாரே போராட்டம் முதல் இது வரை.
எந்த மக்கள்போராட்டமும் அதற்கான காரணங்களின் மிக எளிய வடிவையே முன்வைக்கமுடியும். அப்போதுதான் பெருவாரியான மக்களுக்கு அது புரியும். அவர்களை ஒருங்கிணைக்கமுடியும். மொத்த அரசியல் பொருளியல் சிக்கல்களையும் புரிந்தவர்கள்தான் போராடவேண்டுமென்றால் ஃபேஸ்புக் விவாதங்கள் மட்டுமே சாத்தியம்
மாணவர்களின் இந்தப்போராட்டம் எந்த நிலையில் நிகழ்ந்தாலும் முடிந்தாலும் நல்ல விளைவுகளையே உருவாக்கும். இலங்கைத்தமிழர்களுடன் இந்தியத்தமிழர்களுக்குள்ள உணர்வுபூர்வமான உறவை இது அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும்
குறைந்தபட்சம் இலங்கை அரசு மீது ஒரு ராஜதந்திர நிர்ப்பந்தம் நிகழவும் அதன் விளைவாக தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைக் கட்டுக்குள் வைக்கவும் அவர்களின் பொருளியல்மீட்பைப்பற்றி யோசிக்கச்செய்யவும் இது கட்டாயப்படுத்தலாம்
அதெல்லாம் நிகழாது போனாலும்கூட ஒரு மானுடப்படுகொலை கண்டிக்கப்படாமல் போயிற்று, அதற்கு எதிர்வினைகளே எழாது போயிற்று என்ற பழியாவது இல்லாமல்போகும். ஆகவே எந்த வகையான எதிர்வினைகளும் நல்லவையே
இந்த இயல்பான போராட்டத்தை வழக்கம்போல இந்திய எதிர்ப்புப்போராட்டமாகக் கொண்டுசெல்ல இங்கே நிதியூட்டப்பட்டு செயல்படும் குறுங்குழு அரசியல்வாதிகள் முயலக்கூடும். அதில் மாணவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லையேல் இதை முன்வைத்து அவர்கள் இன்னும் கொஞ்சம் நிதி பெற்றுக்கொள்வது தவிர ஒன்றும் நிகழாது
இந்தியா என்பது பலநூறு சமூகக்குழுக்களின் வணிக அமைப்புகளின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு பெரும் கட்டுமானம். அதில் நீதிக்கோ உரிமைக்கோ எந்த ஒரு தரப்பும் போராடித்தானாகவேண்டும்.எந்த ஜனநாயகப்போராட்டத்திற்கும் அதில் இடமுள்ளது. பயனும் உள்ளது.
ஜெ