வெண்கடல்- கடிதங்கள்

அன்பின் ஜெயன்

உங்கள் வெண்கடல் வாசித்தேன். ஒரு கதைக்குள் இத்தனை சிந்தனைகளா? அன்னையின் முலைப்பால் அமிர்தப் பாற்கடல் அல்லவா அதை உண்டுதானே மனித குலம் உயிர் தழைக்கிறது. அவள் கடைக்கண் இல்லையேல் மனித குலம் வாழ்வது எப்படி?

பெண்மையைப் போற்றும் உங்கள் எழுத்துக்கள் காலம் கடந்தும் வாழும்.

அன்பின்

கலா

அன்புள்ள கலா

நீண்ட இடைவெளிக்குப்பின் கடிதம்

நலம்தானே? வெண்கடல் ஒரு பழைய நினைவு. நினைவுகள் பழைமையாகும்போது மலைச்சரிவில் உருளும் பாறைகளைப்போல மேலும் நூறுபாறைகளை உருளச்செய்துவிடுகின்றன

ஜெ

அன்புள்ள ஜெ,

இந்த வரிசைக்கதைகளில் மிக உணர்ச்சிகரமான கதை இதுதான். தன் குருதியை உறிஞ்சும் அட்டைகளைத் தன்னுடைய முலைஉண்ட குழந்தைகளாகவே காணும் அந்தப்பெண்ணின் தாய்மை என்னை சிலிர்க்கச்செய்தது. வாசிக்க வாசிக்க எங்கெல்லாம் அந்தக்கதை தொட்டுச்செல்கிறது என்பது புரிந்தது. பெண் பருவமாவதே முலைப்பால் உடலெங்கும் நிறைவதுதான் என்ற வரிதான் கீ என நினைக்கிறேன். அதிலிருந்து தொட்டதுமே பால் உதிர்க்கும் எருமை வரை எவ்வளவு நுணுக்கமான விவரணைகள்

வாழ்த்துக்கள்

சிவராம்

அன்புள்ள சிவராமன்

நன்றி.

ஒரு படிமம் இன்னொன்றில் விட்டுப்போனதை நிறைக்கிறது என எனக்கும் இப்போது படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல் [புதிய சிறுகதை]
அடுத்த கட்டுரைஈழம் இரு எதிர்வினைகள்