கிளி சொன்ன கதை : 2

ramayanam

”இங்கியாடா இருக்கே?” என்றபடி அம்மா மேலே நடைபடியில் வந்து நின்றாள். ”அங்க அப்பா கெடந்து ஆதாளி போடுகா. சட்டுண்ணு போய் என்னாண்ணு கேளு…” அனந்தன் எழுந்து அம்மாவை பார்த்தான். அவனுக்கு சிலகணங்கள் இடம் காலம் ஒன்றுமே புரியவில்லை. ”ஏன் முழிக்கே, பந்தம் கண்ட பெருச்சாளி கணக்கா? வா….காப்பி குடி” அம்மா திரும்பி நடந்தாள்.

அவளுடைய பெரிய வயிற்றை பக்கவாட்டில் பார்த்தபோது அனந்தனுக்கு சட்டென்று ஒரு பயம் வந்தது. அதை அப்படி கவனமில்லாமல் திருப்புகிறாளே நடைநுனியில் இடித்துக்கொண்டால் என்ன ஆவது? தங்கச்சியின் தலை சப்பி தங்கம்மையின் மகன் பொன்னப்பன் மாதிரி ஆகிவிட்டால்.? தலை சப்பி சின்னதாக ஒரு கண் இடுங்கி வேருபக்கம் திரும்பி ப்£ளையெல்லாம் வந்து… எப்போதும் சிரித்தபடி…. ஆனால் அம்மாவிடம் பேசும்படி அவனால் மனதை மாற்ற முடியவில்லை. அவன் நினைப்பதெல்லாம் அவனுக்குள் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தன. அனந்தன் பேச முயன்றால் அவன் நினைக்காததுதான் வாயில் வரும். அவனுக்குள் வேறு யாரோ இருந்து அவன் பேசுமுன் முந்திக்கொள்கிறார்கள்.

கால்சட்டையை மீண்டும் இறுக்கிடபடி ஏறி வீட்டுக்குள் நுழைந்தான். ”என்ன பிள்ளையோ எனக்குண்ணு வந்து வாச்சிருக்கே…எப்பம் பாத்தாலும் எங்கிணயாம் இருந்து சொப்பனம் கண்டுக்கிட்டு…என்னண்ணு வேலையும்தொழிலும் செய்து எப்டி பிழைக்கப்போறியோ… பொன்னு மகாதேவன்தான் காக்கணும்… பாத்து வாடா முழிக்காம…முழியன்…”

அடுக்களையில் கனலடுப்பில் கருகி கரிப்பொருக்கால் ஆனதுபோல் இருந்த செம்புக்கலத்தில் ளப்ளப் என்று கட்டன்காப்பி கொதித்துக் கொண்டிருந்தது. தீயடுப்புகளில் ஒன்றில் பெரிய சோற்றுப்பானை அமர்ந்து விளிம்பு பொங்கி நுரைத்து தொப்பை வளைவில் விழுந்த சோற்றுமணமுள்ள நீரை உலரச்செய்து தாள்போல சுருண்டெழச் செய்தது. துளிவிழுந்ததும் ஒரு தழல்நாக்கு நீண்டுவந்து அதை உண்டது. அடுப்புக்கு மேலே உத்தரங்களில் ஏற்றிய கருப்பட்டிப்பத்தாயத்தின் அடியில் கரிய ஒட்டடை மேலெழும் புகையால் ஊஞ்சலாடியது. அடுக்குகளில் வைக்கப்பட்ட பித்தளைப் பாத்திரங்களின் வளைவுகளிலெல்லாம் தீயின் சுடர் நெளிந்தது. கரி படிந்த கூரையில் உறிகளின் நிழல்கள் ஆடின.

அம்மா கீழே விறகுபுரையில் இருந்து ஒரு தென்னைமட்டையை எடுத்து தீயடுப்பில் செருகிவிட்டு ஓட்டு வங்கத்தில் கட்டன் காப்பியை எடுத்து ஆற்றி கால்வைத்த பித்தளை டம்ளரில் விட்டு அவனுக்குக் கொடுத்தாள். அனந்தன் அதன் விளிம்பைப் பிடித்து மேலே தூக்கி ஊதி  கருப்பட்டி மணம் நிறைந்த ஆவியை நாசியில் வாங்கியபடி குடிக்க ஆரம்பித்தான்.

அவனும் அம்மாவும் மட்டும்தான் சூடாக காப்பி குடிப்பார்கள். அம்மா எழுந்ததுமே பல்தேய்த்து குளித்துவிட்டு ஈரக்கூந்தலை நுனிமுடிச்சுபோட்டு துளிகள் ஜம்பரின் பின்பக்கத்தில் சொட்டவிட்டபடி வடக்குப்புற ஒட்டுத்திண்ணையில் அமர்ந்து முண்டுநுனியால் போணியை பிடித்தபடி கொதிக்கும் காப்பியை மெல்ல மெல்ல உறிஞ்சி குடிப்பாள். தினமும் ஒரே இடம். ஒரே மாமரத்தை பார்த்தபடி. குடித்ததும் நெற்றி வியர்த்துவிடும். பெருமூச்சுடன் எழுந்து காப்பி அடுப்பிலிருந்து கனல் எடுத்து தீயடுப்புகளுக்கு மாற்றுவாள். அப்பா எழுந்து முகம் கழுவிக் கொண்டிருக்கும்போதே அம்மா ஸ்டூலில் காப்பியை கொண்டுவைத்துவிடுவாள். நன்றாக ஆறவைத்து மடங் மடங் என்ற ஒலி கேட்கும்படி குடிப்பார். அம்மா திரும்பும்போது மெல்ல தனக்குள் ”கிடாவு ஊறவெள்ளம் குடிக்கதுமாதிரித்தான்…”என்று முணுமுணுப்பாள். அண்ணாவும் ஆறிய காப்பியை வாய்க்குள் விட்டு கொஞ்சநேரம் கழிந்துதான் விழுங்குவான். அண்ணா அனந்தனைவிட நான்குவயதுதான் மூத்தவன். எட்டாவது படிக்கிறான். ஆனாலும் அம்மா அண்ணாவிடம் பேசுவதும் அப்பாவிடம் பேசுவதும் ஒன்றுபோலிருக்கும். கண்களை தழைத்து வேறு எங்கோ பார்த்தபடி, ” ஆத்துவக்கில வரம்பிடிஞ்சு கெடக்காம். தங்கம்மை சொன்னா. ஒண்ணு சென்ணு பாத்தா கொள்ளாம்”என்பாள். அவர்கள் வேறு எங்காவது பார்த்தபடி அக்கறை இல்லாதவர்கள் போல ”ம்” என்று சொன்னதும் பேசாமல் திரும்பிவிடுவாள்.

தங்கம்மை உள்ளே எட்டிப்பார்த்து ”அம்மிங்கிரே நெல்லு வேவு ஒண்ணு பாத்து செல்லணும்….எறக்கிப்போடலாம்” என்றாள். ”கொள்ளாம் அப்பி இப்பளா காப்பி குடிச்சுது? சோறு திங்குத நேரம் ஆச்சே”என்று அனந்தனிடம் சொல்லிவிட்டு நீளமான இரும்புச் கண்ணகப்பையை எடுத்துச் சென்றாள்..”அங்க கெடந்து தொண்ட கீறுதாங்க. எந்திரிச்சு மேக்குப்பொறத்தில வாய பெளந்திட்டு இருக்கான். என்னண்ணு சொல்ல….நீ பாய விரி நான் இத கிண்டிபோட்டுட்டு வாறேன்” எனறாள் அம்மா.

அனந்தன் டம்ளரைக் கொண்டுபோய் வடக்குப்புறத்தில் அழுக்குப்பாத்திரக் குவியலில் போட்டுவிட்டுலொட்டு திண்ணையில் நின்று பார்த்தான். வடக்குப்புரைக்குள் பெரிய நெல்லடுப்பில் செம்புக்குட்டுவத்தில் வெந்த உப்பி எழுந்து கோபுரமாகி ஆவி எழுப்பிக் கொண்டிருந்தது. எரிமலை போல என்று அனந்தன் எண்ணினான். இளவெயில் சாய்வான கற்றைகளாக மாமரத்துக்கு அப்பாலிருந்து வந்து முற்றமெங்கும் சரிந்து கிடந்தது. அதில் தூசிபோல ஒளிவிட்ட நீர்த்திவலைகள் பறந்து அலைந்து கீழிறங்கின. நெல்லின் ஆவி வெயிலில் சிவந்த சன்னமான தழல் போல எழுந்து ஆடியது. அடுப்பில் எரிந்த சூட்டுக்கற்றைகளை உருவி அணைத்துவிட்டு தங்கம்மை கண்ணகப்பைக்கரண்டியை நெல்குவியலில் மெல்ல செலுத்தி நெல்லை கிண்டினாள். அவளை ஆவி முழுமையாக மறைத்தது. ஆவியிலிருந்து அவள் விலகியதும் வியர்வை கொட்டிய முகத்தை முழங்கையால் துடைத்தாள்.

அம்மா கனமாக தளர்ந்து நடந்து அருகே போய் தங்கம்மை நீட்டிய கண்ணகப்பையிலிருந்து ஒரு நெல்லை எடுத்து வாயில் போட்டு நுனிப்பல்லால் கடித்துப் பார்த்து ”பதம்தான். எறக்கு” என்றாள்.

தங்கம்மை மேற்குப்புறத்துக்குப் போய் கூரையை ஒட்டிய அசையில் சுருட்டி தொங்கவிடப்பட்ட பெரிய பிரம்புப்பாயை எடுத்து தலைமீது வைத்து கொண்டு வந்தாள். அது இருபுறமும் வளைந்து தரையைத் தொட்டது. சாணிமெழுகி உலர்த்திய பிரம்புப்பாயை தரையில் வைத்து அதன் மீது செங்கல்லை தூக்கிவைத்து நுனியின் வளையும் முயற்சியை தடுத்துவிட்டு காலாலேயே அதை விரித்து மறு எல்லைக்குச் சென்று அங்கும் செங்கல்லைத்தூக்கி விரித்தாள். நெல்லை கண்ணகப்பையால் அள்ளி அள்ளி நீரை சொட்டிவிட்டு பாய்மீது போட்டாள். அம்மா பெரிய தென்னை மட்டையால் நெல்லை விரித்தாள். ஆவி அம்மாவை மூடியது. அந்த ஆவிக்கு மெல்லிய இனிப்பு மணம் எப்படி வந்திருக்கும் என்று அனந்தன் யோசித்தான்.

”அறப்புரைக்காரங்க எப்பம்டீ நெல்லு அவிக்காவ? ” என்று அம்மா கேட்டாள். ”அதிப்பம் வெளிய செல்லுத காரியமில்ல அம்மிங்கிரே. அங்க பத்தாயத்தில நெல்லு இருக்கா இல்லியாண்ணு ஒடய தம்பிரானுக்குத்தேன் அறியிலாம். இந்நேற்று காலம்பற மூத்தவரு அந்தி எறங்கின பிறவு பறம்பில செண்ணு இம்பிடு வலிய காச்சிலு வெட்டி கடவத்தில வச்சு கொண்டுவாறாரு…. வலிய பொற்றயில வீட்டில அத்தாழம் காச்சிலு சுட்டு…. வெளிய செல்ல ஒக்குமா?”

அம்மா நிமிராமலேயே ” போன பூவில வலிய கண்டத்தில முப்பதுகோட்டையில்லா விழுந்த்தது.நான் நிண்ணு கண்டதாக்குமே”என்றாள்.

”நெல்லிருந்தா வேவிச்சு திங்கணும். வித்து வித்து கூத்திக்கு குடுத்தா பத்தாயத்தில என்ன ஊற்றா இருக்குவு? கொள்ளாம்” என்றாள் தங்கம்மை.

அம்மா அனந்தனைப்பார்த்து ”இங்கியா நிக்கே? அப்பா விளிச்சாங்களே?” என்றாள். அனந்தனுக்கு அப்போதுதான் அது நினைவு வந்தது. அவன் உள்கூடம் வழியாக தெற்குப்பக்க வாசலுக்குச் சென்றான். அப்பா மேல்துண்டை தலையில் முண்டாசாகக் கட்டியபடி சிவப்பிக்கு கழுநீர் காட்டிக்கொண்டிருந்தார். தொட்டியை விட்டு அவர் கையை எடுத்து உதறியதும் சிவப்பி துளிகளுக்குக் கண்களைச் சுருக்கியபடி காதுகளை அடித்து தலை சிலுப்பி தொட்டியில் முகம் முக்கினாள். நீர் மீது கொப்புளங்கள் வெடித்தன. அப்பாவின் முழங்கைக்குமேல்வரை தவிட்டுப் படலம் படிந்திருந்தது. சிவப்பி தலையை தூக்கி மூச்சு சீறி நாக்கை வளைத்து கரிய மூக்கை துழாவினாள். நரம்புகள் புடைத்த முகத்தில் தவிட்டுக்கோடு. பெரிய கரிய கண்களால் அனந்தனைப்பார்த்து சிவப்பி வயிற்றுக்குள் ‘ம்ம்ஹம்” என்றாள்.

தொழுத்தில் அண்ணா ஒற்றைத்துவர்த்து மட்டும் உடுத்து சாணி அள்ளிக் கொட்டியபின் தென்னை கொச்சட்டையால் கூட்டி ஒதுக்கிக் கொண்டிருந்தான். அப்பா அனந்தனை கூர்ந்து பார்த்தார். மீசையற்ற மேலுதடு இறுகியிருக்க, கன்னங்களின் அதைப்பை பார்த்தபோது உள்ளே வெற்றிலைபோட்டு ஒதுக்கியிருப்பது தெரிந்தது. சிவப்பியை கயிற்று நுனியால் மெல்ல தட்டினார். அவள் குடித்து முடித்து அடித்தட்டை சொரசொரத்த நாக்கால் நக்கிக் கொண்டிருந்தாள்.

அப்பா சட்டென்று அனந்தனிடம் ” ஒறங்கி எழிக்கிறதுக்கு எட்டுமணி ஆவும் ,இல்லடா?” என்றார். அனந்தன் இல்லை என்பது போல தலையை அசைத்தபடி பின்னால் நகர்ந்து கட்டளையில் ஒட்டிக் கொண்டான்.

”வாடா இங்க” என்றார் அப்பா. அண்ணா சாணியை காலால் ஒதுக்கி வள்ளிக்கூடையில் ஏற்றியவன் நின்று ஏறிட்டுப்பார்த்தான். ”வாடா இங்க…”

அனந்தன் தலையை மாட்டேன் என்பதுபோல ஆட்டியபடி தொடைகள் தன்னிச்சையாக நடுங்க, விரைக்கும் கைகளால் கால்சட்டை நுனியை பற்றியபடி மேலும் பின்னகர முயன்றான். ”வாடா இங்க….வரலேண்ணா இருக்கு உனக்கு…. வாடா”

குரல் எகிறியதும் அனந்தன் ஒரே ஓட்டமாக ஓடி அப்பாவருகே சென்று சற்று தள்ளி நின்றான். அவனால் நிற்க முடியவில்லை, இரு கைக¨ளையும் தடுப்பதுபோல முன்னால் நீட்டினான்.

”நான் உனக்ககிட்ட என்னடா சொன்னேன்?”. அனந்தன் அப்பாவின் மீசையில்லாத மேலுதடுகளின் இறுக்கத்தை மட்டுமே பார்த்தான். ”என்னடா சொன்னேன்?” அப்பா நெருங்கி வந்தார். சிவப்பியின் வால் அவர்களுக்கு நடுவே சுழன்றது. ”காலம்பற எந்திரிச்சு சாணியள்ளணும்னு சொன்னேன்ல? சொல்லிட்டுண்டா இல்லியா?”

அனந்தன் அவரது உதடுகளை தவிர எதையுமே பார்க்கவில்லை. ”என்ன கேட்டாலும் முழிச்ச்சிட்டு நில்லு….மாந்தையன்…” அப்பா கயிற்றை சுழற்றி அவனை அடித்தார். அடி அவன் முழங்கையில் பட்டு கயிறு வளைந்து சென்றது. சிவப்பி குளம்புகளை உதைத்தபடி இடம்மாறி சுழன்றாள். அனந்தன் வலியை உணரவில்லை

அண்ணா அவர்கள் நடுவே வந்து சிவப்பியின் கயிற்றை பிடித்தான். அதன் புட்டத்தில் அடித்து, ”பசு இங்க வா” என்றபடி அவளை வளைத்து கொண்டுசென்றபோது அப்பா பின்னகர்ந்தார். ”குளிப்பாட்டிட்டு வாறேன்” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ” ஒரு பிரி வைகோல் எடுடா” என்று அவனிடம் அதட்டினான்.

அனந்தன் ஓடிப்போய் வைக்கோல்போரிலிருந்து வைக்கோலை பிடுங்கினான், வைக்கோல்போருக்கு அடியில் படுத்திருந்த செவலை அடைக்கோழி கொக்கொக்கொக் என்று எழுந்து விலகி நின்று சிறகை தழைத்து உடலை உதறிக் கொண்டது. வைக்கோல் போருக்கு அடியில் நல்ல சூடாக இருக்கும். இரவில் பனி இருந்தால் கருப்பன்கூட அங்கே போய் சுருண்டு கொள்ளும்.

அனந்தன் முழங்கை லேசாக எரிவதை உணர்ந்தான். கருப்பன் வைக்கோல்போருக்கு அப்பால் முருக்குவேலியருகே இளவெயிலில் பச்சைநிற விளக்குகள் போல ஒள்ளிவிட்ட முருக்கிலைகளுக்குள் இருந்த ஓணானைப் பார்த்தபடி வாலை தூக்கி நாசி நீட்டி ஆவலுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. வைக்கோல் போருக்கு அப்பால் பழைய தறவாட்டுவீட்டின் பெரிய வெண்சுதை ஆங்காங்கே உதிர்ந்து உள்ளே செம்மண் சதை தெரிந்த ஆனைமதில். அண்ணா வைக்கோலை வாங்கியபடி ”கண்ணுகுட்டியை பிடிடா” என்றான். அனந்தன் கட்டில் கயிற்றை இழுத்து கழுத்தை நெடுக்கி கால் பரப்பி வாய் திறந்து நின்ற கொச்சுவெள்ளையை முதுகில் லேசாக அடித்தான். கட்டுகயிறு கம்பு போல விரைத்திருந்ததனால் முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. அனந்தன் வயிற்றுக்கு கீழே தொங்கிய அதன் குஞ்சை கையால் அளைந்தான். அது அவனை நோக்கி திரும்பி நாக்கை நீட்ட கயிறு தளர்ந்தது. அவன் அவிழ்ப்பதற்குள் அண்ணா படல் கடந்து கோயில்பறம்புக்குள் நுழைந்து போய்க்கொண்டிருந்தார்.

தரையில்கிடந்த பலா இலையை நாக்கு நீட்டி எடுத்த சிவப்பி திரும்பி கன்றைப்பார்த்து ”அம்பேய்”என்று கூப்பிட்டாள். கொச்சுவெள்ளை அனந்தனை இழுத்தபடி ஓடி சிவப்பியின் மடியில் முகத்தை வைக்க முயன்றது. சிவப்பி நடந்ததனால் தொடைகளால் மூக்கு விலக்கப்பட தன் முயற்சியை கைவிட்டு ஒரு பலா இலையை நாக்கு நீட்டி எடுத்து ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி அதை மெல்ல முயன்று எச்சில் கொழகொழக்க அதை போட்டுவிட்டு நான்குபக்கமும் ஆச்சரியமாக பார்த்து கால்களைப் பரப்பி நின்று, சட்டென்று காதுகளை விடைத்து வாலை தூக்கி துள்ளி எதிர் திசை நோக்கி ஓடியது. அனந்தன் அதன் கயிற்றைப்பிடித்தபடி கூடவே ஓடினான்.

மாமரத்தடிக்கு வந்தபோது அதுவே நின்றது. அனந்தன் அதை தன் முழுபலத்தாலும் இழுத்து படிகளை நோக்கிக் கொண்டுவந்தான். சிவப்பி வயிறு முன்னால் உந்தி அசைய படிகளில் குளம்புகள் ஒலிக்க எடுத்து வைத்து இறங்கிச்சென்றாள். மேல் படியில் நின்ற கொச்சுவெள்ளை கீழே விரிந்த ஆற்றுப்படுகையை நோக்கி நின்றபின் சடசடவென படிகளில் இறங்கி சரிவில் ஓடி ஆற்றை நோக்கிச் சென்றது.

வடக்கேயிருந்து வளைந்து வந்து தெற்கே இரு பாறைகள் நடுவே புகுந்து மறைந்த வள்ளியாறு காலை ஒளியில் இளநீலநிறமான புடவை சுருங்கியும் விரிந்தும் கிடப்பதுபோல ஓடியது. புடவைக்கு வெண்ணிறச்சரிகைக் கரைகள். ஆங்காங்கே அலையலையாகச் சுருக்கங்கள். நீரோட்டத்தின் ஒருபக்கம் அப்புப் பெருவட்டனின் தோட்டத்தை அரித்தபடி நெருங்கியிருக்க மறுபக்கம் வெண்மணல் குவிந்து பரந்த வெளி. அதில் குடிநீருக்குத் தோண்டிய ஊற்றுகள். ஊற்றுநீர் கொண்டுபோகும் ஒற்றையடிப்பாதைகள்  அம்மாவின் இடுப்பில் உள்ள சிவந்த தடம் போல.

மணல்மீது ஆடிச்சாரல் விழுந்து மெல்லிய பொருக்கு. அதில் கால் வைத்தபோது அனந்தனுக்கு உள்ளங்கால்வெள்ளை கூசியது. நீர்விளிம்பில் நாக்குகள் ளக் ளக் என்று மணலை அரித்தன. மணல்கரை மெல்லமெல்ல கரைந்து சட்டென்று இடிந்து சர்ந்து நீரில் விழுந்து கலங்கி ஓடி மறைந்தது. மணல்பரப்பில் சில இடங்களில் கூட்டம்கூட்டமாக பறவைகளின் மூன்றுவிரல்தடங்கள். குத்தாலம்பிள்ளைப் பறம்பின் ஓரமாக நின்ற புன்னைமரங்களிலிருந்து மஞ்சள்நிறத்தில் பூக்கள் கொட்டி மணலில் துணி காயப்போட்டது போல விரிந்துகிடந்தன. கைதை, தாழை நீட்டோலைகள் இரவின் காற்றில் ஒடிந்து ஒடிந்து குவியல்கள் போல நின்றிருக்க மேலே தென்னை ஓலைகள் காற்றில் பறந்தன.

சின்னக்குழி கடவில் ஆனந்தவல்லி மாமி மார்பில் நேரியதை கட்டிக்கொண்டு காலை துவைகல்மீது தூக்கிவைத்து ஈஞ்சப்பட்டையால் தேய்த்துக் கொண்டிருந்தாள். துவைத்த துணிகள் வாழை இலைமீது முறுக்கி வைக்கப்பட்டிருந்தன. நீரில் கழுத்தளவு ஆழத்தில் ரோசிலி கூந்தல் நீரோட்டத்தில் மிதந்து நீர்பாசி போல அலைபாய நெற்றியில் ஈரமுடி ஒட்டியிருக்க உட்கார்ந்திருந்தாள். நீரில்வந்த புன்னைப்பூக்கள் அவளருகே ஒதுங்கிச்சென்றன.

மாமி காலைமாற்றி வைத்து தேய்த்தபடி ” பசு கறவ ஒண்டோடா ராஜா?”என்று அண்ணாவிடம் கேட்டாள். ‘ம்’ என்று அவன் பதில் சொன்னான். ”எந்து வரும்?”

அண்ணா அவளைப்பார்க்காமல் பசுவை லேசாக கயிறால் அடித்தபடி ,” நாநாழி” என்றான். மாமி சிரித்தபடி திரும்பி ரோசிலியைப்பார்த்தாள். மாமியின் முலையின் காம்பு துணிக்குள் ஒட்டி கருமையாக தெரிந்தது. தோளில் சிவந்த சருமம் மீது நீர்துளிகளும் கூந்தலிழைகளும் ஒட்டியிருந்தன.

ரோசிலி நீரை கொப்பளித்து துப்பியபின், ”அப்பம் ஒரு அரநாழிப்பாலு இந்த சள்ளுபயலுக்கு குடுக்கப்பிடாதோ? பாவம், தேவாங்குபோலுல்லா இருக்குவு?” என்றாள். அண்ணா அவளை பார்க்காமல் நடந்தாள்.

மாமி பின்னால் ” பசுவின்றெ மடி கண்டா இருநாழிந்நே தோநூ மோனே” என்றாள். ”மடியயா பாக்குதது? பாலுகறக்குத பிடிய இல்லா பாக்கணும் ?” ரோசிலி சொன்னாள். இருவரும் பின்பக்கம் சிரிக்கும் ஒலி கேட்டது.

அண்ணா சிவப்பியை ஆற்றுக்கரைக்கு கொண்டு சென்றபின் அவளை பின்னாலிருந்து தள்ளி நீரில் இறக்க முயன்றான். சிவப்பி திரும்பி நாக்கால் விலாவை நக்கி எச்சிலை சிலந்திவலைபோல படிய வைத்து ஈயை ஓட்டியபின் காதை அடித்துக் கொண்டு மூச்சுவிட்டாள். அண்ணா நீரை அள்ளி அவள் பின்பக்கம் விட்டான். உடலை பல இடங்களில் சிலிர்த்தபடி சிவப்பி முன்னால் நகர்ந்து நீரில் இறங்கிநாள். நீரின் விளிம்பு அவள் சருமத்தில் கோடுபோல ஏறுவதையும் அவள் வால் மிதப்பதையும் அனந்தன் கண்டான்.

சிவப்பி வாலைதூக்கி பச்சையாக சிறுநீர் கழித்தபடி நீரில் நீந்தி எதிர்கரையில் நீருள் தழைந்து நின்ற புன்னைமரம் நோக்கிச்சென்றாள். அண்ணா நீரில் இறங்கி லேசாக நீந்தி அவள் கூடவே சென்று மண்ணில் சிவப்பாக்ப் புடைத்து பெரிய கால்விரல்போல நின்ற வேரில் சிவப்பியைக் கட்டிவிட்டு நீரில் மூழ்கி நீந்திவந்து எழுந்து தலைமயிரை ஒதுக்கியபடி ”அதையும் எறக்குடா…”என்றான். அனந்தன் லேசாக தள்ளுவதற்குள் கொச்சுவெள்ளையே நீரில் இறங்கி நீந்திச்சென்று சிவப்பியின் பின்கால்பக்கம் முட்டியது. மிதந்துவந்த புன்னைப்பூக்கள் பசுவின் முதுகில் படிந்து ஒட்டின.

அண்ணா எழுந்து கரை நோக்கி வந்து நீரின் ஓரத்தில் படிந்திருந்த மெல்லிய மன்ணை எடுத்து  நரரவென்று உடலில் தேய்த்துக் கொண்டான். ” ஊறினம்பெறவு நல்லா தேச்சு கழுவி தொழுத்தில கொண்டுசென்ணு கெட்டு. அம்மா கேட்டா நான் கீழக்கண்டத்தில வெள்ளம் ஒதுக்கீட்டு வாறேன்னு சொல்லு கேட்டியா?” என்றான்.

அனந்தன் தலையாட்டினான். ”ஆராம் என்னமாம் கேட்டா வாயத்தெறந்து வல்லதும் சொல்லு. அப்பம்தான் மனுஷனா மதிப்பாவ. சும்மா முழிய முழியக் காட்டினா முட்டாப்பயன்னுல்ல நெனைப்பாவ? ”

அனந்தன் அதற்கும் தலையாட்டினான். ”என்னடா?” என்றான் அண்ணா. ”இல்ல” .”என்ன இல்ல?” ”பேசுகேன்”

”என்னத்த பேசினியோ என்ன எளவோ” அண்ணா நீரில் இறங்கி நன்றாகத் துழாவி கழுவி மூழ்கி எழுந்தான். இடைவரை நீரில் நின்றபடி துண்டை உருவி தலைக்குமேல் தூக்கி முறுக்கிப் பிழித்து தலைதுவட்டி முகம் துடைத்தபின் சட்டென்று எழுந்து அதை இடையில் சுற்றிக் கொண்டான். மேலேறி கைகளால் காதுகளை குடைந்தபடி ”பாத்து எடுத்து செய்யி. பின்னயும் போயி அடிவாங்காத” என்றபடி வடக்குநோக்கி மணல் வழியாக நடந்தான். மணலில் கூடி அமர்ந்திருந்த நாலைந்து காகங்கள் அவனை கண்டதும் எழுந்து கூவியபடி இடம் மாறி அமர்ந்தன.

அண்ணா மணலில் சிறிதாக ஆகி கைதைப் படப்பிற்கு நடுவே மறைந்ததும் அனந்தன் புத்துயிர்கொண்டான்.பரபரப்பாக பாய்ந்து ஆற்றில் இறங்கி குளிர்ந்த நீருக்குள் மூழ்கி சிவப்பியின் அடிப்பக்கமாகச் சென்றான். அவள் அடிவயிறு வெளிர் சிவப்பாக பெரிய மீன் போல தெரிந்தது. சிவப்பி உள்ளே மணலில் கால் ஊன்றி நின்றாலும் அடிக்கடி கால்மாற்றி ஊன்றினாள். அனந்தன் மேலே வந்து மூச்சிழுத்தபின் மீண்டும் மூழ்கி உள்லே போய் சிவப்பியின் பின் கால் இடுக்கில் அகிடு தொங்கி கிடப்பதைக் கண்டான். பால் இல்லாத அகிடு. கைநீட்டி அதில் ஒரு காம்பை தொட்டான். நீருக்குள் ஒரு பொத்தை மீனை தொட்டதைப்போல உயிருடன் வழவழத்து சிவப்பி திடுக்கிட்டு விலகியபோது வழுக்கிச்சென்றது. மீண்டும் மேலே வந்து மூச்சுவிட்டபின் அனந்தன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் பார்க்கவில்லை, தொலைவில் ஆனந்தவல்லி மாமியும் ரோசிலியும் பேசியபடிச் சென்றார்கள்.

இளவெயில் ஒருவிதமான சிவப்பு நிறத்தில் கைதை, தாழைப்புதர்களின் நிழல்களை மணல்மீது வீழ்த்தி சரம் சரமாக அப்பால் ஆற்றுபறம்புகளுக்குள்  சாய்ந்து இறங்கி நின்றது. மணலிலும் கைதைஓலைகளிலுமாக மாறிமாறி அமர்ந்து சருகுச்சுழல்காற்று போல சாம்பல்நிறச் சிறகடித்து எழுந்து பறந்த  குருவிகளின் கில்கில்கில் குரல்களன்றி ஒலியே இல்லை. மீண்டும் மூழ்கி சிவப்பியின் கால்களுக்கு நடுவே சென்று அதன் அகிடருகே வாயைக் கொண்டு போனான். மூச்சுத்திணறலுடன் சேர்ந்து நெஞ்சு அதிர்ந்தது. அகிடுக்காம்பை  கையால் பற்றி  வாயில் வைத்து சப்பினான். விரல்போலிருந்தது. பாலே வரவில்லை. சிவப்பி இருமுறை அதிர்ந்து விலகியபோது காம்பு வாய்விட்டு விலகினாலும் மீண்டும் கவ்விக் கொண்டான். பிறகு சிவப்பி பேசாமல் நின்றாள். ஆனால் பால் வரவில்லை. கையால் பற்றி வலுவாகப்பிடித்து இழுத்தான். மீண்டும் வாய் வைத்தபோது பாலின் மெல்லிய ருசி வாயில் பட்டது. மூச்சு இறுகி அவன் மேலே வந்தான். உற்சாகமாக கொப்பளித்து  நீட்டித்துப்பிவிட்டு மீண்டும் நீருக்குள் அமிழ்ந்து அகிடு நோக்கிச்சென்றான். பால்வாசனை கேட்டு பெரிய கண்களுடன் சிப்பிப்பொத்தை மீன்கள் சிவப்பியின் கால்முடுக்கில் சுழித்து சுழித்து முட்டி நீந்தின. அவள் கால்களை உதைத்தபடி கயிற்றில் சுற்றிவந்தாள்.

அனந்தன் மேலே வந்து கரையேறி மணலில் அமர்ந்து வானைப்பார்த்தான். கரியமேகங்கள் மணல்கரை போல ஒதுங்க நடுவே நீலநிறமாக வானம் தெரிந்தது. கிழக்குபக்கம் வானத்தில் சூரியனின் ஒளிரும் விளிம்பு. நாடோடிப்பறவைகளின் ஒரு பெரிய குழு மிக உயரத்தில் வானில் சிறகுகளால் அளைந்தபடி சென்றது. அவை ரஷ்யாவிலிருந்துகூட வரும் என்று பத்மம் சொன்னாள். ‘பால காகளம்’ பத்திரிகையை படித்துவிட்டு அதை விரித்து கல்தரையில் விரித்து ”வந்து பாரு…. இதாக்கும் ஆர்ட்டிக் டென். தரையில எறங்காம ஆறாயிரம் மைல் யாத்திரை செய்யும் தெரியுமா?”

அனந்தன் குப்புறப்படுத்து மூக்கு தொடும் அளவுக்கு நெருங்கி ஆர்ட்டிக் டென்னை பார்த்தான். சின்ன படம். சிறகுகள் ஒன்றும் பெரிதில்லை. ” ஆர்ட்டிக்டென் மேலே நாம கேறி இருந்து பறக்க ஒக்குமா?” என்றான். ”போல, சொங்கி. அது சின்ன பக்சியில்லா. அதுக்கு மேல எப்டி கேறமுடியும்?” அனந்தன் ஏமாற்றத்துடன் ”சின்ன பையன்னாக்கா கேறலாம். வேற ஒரு புஸ்தகத்தில போட்டிருந்து” என்றான்.”போலே சொங்கி.” ”நீதான் சொங்கி நீதான் சொங்கி” அனந்தன் அவளுடைய புத்தகத்தை எட்டி உதைத்துவிட்டு ஒருகையால் கால்சட்டையை பற்றிக் கொண்டு ஓடினான். அவள் பின்னால் ”சொங்கி ,தேவாங்கு வவ்வவ்வே ஈஈ…”என்று கூவினாள்.

வானத்தின் கண்கூசும் வெளியில் சத்தமேயில்லாத அசைவாக கண்ணாடிப்பரப்பில் வழுக்கிச் செல்வதுபோல பறந்துபோகும் பறவைகள் ஒருவெளை ஆர்ட்டிக் டென்னாகக் கூட இருக்கலாம். அவை திருவைப்பில் எல்லாம் இறங்குவதில்லை. கைத்தோடுக்கு அப்பால் ஏக்கிகுளத்திலும் அதற்கு அப்பால் பட்டாணிக்குளத்திலும்கூட இறங்குவதில்லை. அதற்கு அப்பால் திற்பரப்பு அருவி. அதன்பின் களியல். அதற்கு அப்பால் பேச்சிப்பாறை. அதற்கு அப்பால் மலைகள். மலைகளின் உச்சியில் மட்டும் அவை கொஞ்சநேரம் இறங்கும். யாருமே பார்க்காமல். ஓய்வு எடுப்பதற்காக. கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளும். மீண்டும் பறக்கும்.

அனந்தன் பெருமூச்சுவிட்டான். அப்பறவைகளுக்கு அவனுடைய சிறிய ஊர் ஒரு பொருட்டாக இல்லாம்லிருப்பதை எண்ணியபோது ஏக்கமாக இருந்தது. ஏரோப்ளேன்கூட திருவைப்பில் இறங்குவதில்லை, திருவந்தபுரத்தில் மட்டும்தான் இறங்கும். அவை வானத்து பறவைகள். வானைத்தில் அவை என்ன செய்யவேண்டும் என்ன செய்யக் கூடாதென்றெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கிறது. நாடோடிப்பறவைகளுக்கு யாருமே வழி சொல்லிக் கொடுக்கவேண்டாம். மேலிருந்து பார்த்தால் கீழே பூமியில் வழிகள் மட்டும்தான் தெரியும். மனிதன் குனிந்து பார்க்கும்போது எறும்புக்கூட்டங்களின் வழிகள் தெரிவது போல.

சிவப்பி அவனை நோக்கி குரல்கொடுத்தபோது அனந்தன் திடுக்கிட்டு எழுந்துகொண்டான். ஆற்றில் இறங்கி சிவப்பியை அவிழ்த்தபோது அவளே நேராக மணல்மீது வந்து நின்று உடல் சிலிர்த்தாள். அடிவயிற்றில் மூத்திரம்போல நான்கு கம்பிகளாக நீர் கொட்டியது. வைக்கோல் சுருணையால் சிவப்பியின் பின்பக்கத்தின் சாணிப்பூச்சை தேய்த்தான்.நன்றாக ஊறியிருந்ததால் எளிதாகக் கரைந்து வந்தது. கால்களின் அடிப்பகுதியையும் புட்டத்தையும் பள்ளையையும் புள்ளிரிக்கையையும் தேய்த்தான் பூஞ்ஞையையும் தேய்த்தான். பசுவின் முன்காலிடுக்கில் தொங்கும் பூஞ்ஞைக்குள்தான் கோரோஜனை இருக்கிறது என்று ஒருமுறை ஆசாரி சொன்னார். வேகமாக ஓடும்போது பூஞ்ஞை அடிபட்டால் பசு அப்போதே செத்துவிடும்.

பதினாறு குட்டிபோட்ட அம்மச்சிப் பசுவின் மார்பில் மட்டும்தான் கோரோஜனை வளரும். அது மானின் மார்பில் வளரும் கஸ்தூரியை விடவும் நூறுமடங்கு மணமானது. ஒருபசு பதினாறுகுட்டி போட்டு பாலூட்டிவிட்டால் பிறகு அது குட்டிபோடாது. உடனே திருவனந்தபுரத்துக்கு தெரிவிக்கவேண்டும். கொட்டாரம் வைத்தியர் வந்து சுழியும் நெளியும் நோக்கி அதை பொன்னுவிலை கொடுத்து வாங்கி கொட்டாரம் கோசாலைக்குக் கொண்டுபோய் கட்டுவார். அங்கே அதற்கு கறுகைப்புல்லும் நீரும் மட்டும் கொடுத்து நான்குவேளை குளிப்பாட்டி நறுந்தூபம் காட்டி வளர்ப்பார்கள். அதன் ரத்தத்தில் ஓடும் பாலெல்லாம் அமுதகலையாக மாறி பூஞ்ஞையில் சேர ஆரம்பிக்கும். பால்கறக்கும் பசு போலவே அகிடு கனத்து காம்பு சிவந்து இருக்கும். அப்போது பசு அதன் அருகே வரும் எல்லா உயிர்களையும் தன் குட்டி என்றே நினைத்து நக்கும். அதை எவரும் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. அம்மை என்றுதான் சொல்லவேண்டும். மகாராஜாவே அப்படித்தான் அழைப்பார். அதன் வாயிலும் மூச்சிலும் நல்ல மணம் வரும். அதன் குரல் மனிதக்குரல்போலவே ஆகி அது கத்துவது யட்சிகள் பாடுவது போல கேட்கும்.  அதன் உடல் மென்மையாக ஆகி லேசாக கொம்பைக் கிள்ளினாலே ரத்தம் கனியும். அதன் கண்களிலும் முகத்திலும் ஒளி எழும். மெல்லமெல்ல பசுவின் உடலே நிலாபோல ஒளிவிட தொடங்கும். இரவில் அது நிற்கும் இடத்தில் எல்லாம் அதன் ஒளி பரவியிருக்கும். அதற்கு மகாராஜாவே தினமும் கோபூஜை செய்வார்.

கோரோஜனை கனிந்து கனத்து பாதரசக்கட்டி போல கனக்க ஆரம்பிக்கும்போது பசுவால் நிற்க முடியாது. அப்போது பசுவின் பூஞ்ஞையை வைக்க சந்தனத்தால் சிறிய ஸ்டூல் செய்து வைப்பார்கள். கோரோஜனை நன்றாக விளைந்த பின் பசு சத்தமே போடாது. பிரம்ம முகூர்த்தத்தில் அதை கைலாசத்துக்கு அழைத்துப்போக சிவகணங்கள் வருவது அதன் கண்களுக்குத் தெரியும்போது மட்டும் அது மென்மையாக சங்கீதம் போல ஓசையெழுப்பும். உடனே நின்ற நிலையில் அப்படியே இறந்துவிடும். அதன் கண்கள் வழியாக உயிர் போவதனால் அவை திறந்துதான் இருக்கும். உடனே கொட்டாரம் வைத்தியர்கள் அதைக் கொண்டுபோய் மார்பை பிளப்பார்கள். அதன் உடலில் ரத்தமே இருக்காது. வெண்ணிறமான ஒளியுடன் பால்தான் ஓடிக்கொண்டிருக்கும்.மார்பில் பூஞ்ஞைக்குள் நிலாவடிவில் கோரோசனை வெண்ணிரமாக  பளபளப்பாக இருக்கும். அதை எடுத்து சீனபரணியில் வைத்து தம்புரானுக்குக் கொடுப்பார்கள். யாருக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மகாராஜாவே பகிர்ந்து கொடுப்பார். அது சஞ்சீவி மருந்து போல. மகாராஜா தினமும் இரவு படுக்கும்போது தன் உடைவால் நுனியால் கொஞ்சம் கோரோஜனையைத் தொட்டு தன் படுக்கையைத் தீண்டுவார். இரவு முழுக்க அந்த அறையே நறுமணம் கமழ இருக்கும். கொசுவோ கெட்ட கனவோ வராது.

சிவப்பியை நீரில் இறக்கி நன்றாகக் கழுவி ஏற்றி தாழை வெட்டிய தடிக்குச்சத்தில் கட்டிவிட்டு மறுபக்கம் திட்டில் ஏறி நின்று காகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த கொச்சுவெள்ளையை இழுத்து சரசரவென்று குளிப்பாட்டினான். கொச்சுவெள்ளையை இழுத்துக் கொண்டு சென்று தொழுத்தில் கட்டினான். அது சிறிதுதூரம் ஒழுங்காக வந்தது, சட்டென்று திரும்பி புதிய திசை நோக்கி இழுத்துச்சென்றது. வேலியில் நுழைய முற்பட்டபோது பூச்செடியின் சிறிய பூக்கள் அதன் முதுகில் கொட்டின. தொழுத்தில் அப்பா இல்லை. காளி எருமையும் காரிப்பசுவும் வைக்கோல்போர் அருகே வெப்பம் இல்லாத வெயிலில் படுத்திருந்தன. அருகே சற்று தள்ளி கருப்பன் நன்றாக ஒருக்களித்து படுத்திருந்தது. அப்பா குளிக்கப் போயிருப்பார் என்று அனந்தன் நினைத்தான். கருப்பன் படுத்தபடியே தலையை திருப்பாமல் வால்நுனியை மட்டும் ஆட்டியது. அது அனந்தனை பொருட்படுத்துவதேயில்லை. சமையலறையில் பப்படம் காய்ச்சும் மணம் எழுந்ததும் அனந்தனுக்குப் பசித்தது.

அனந்தன் திரும்பி ஆற்றுக்கரைக்கு வந்தபோது சண்முகம் ஆசாரியும் அண்ணாமலைச்செட்டியாரும் ஏசுவடியானும் குளிக்க வந்திருந்தார்கள். ஏசுவடியானுக்கு காலில் வாதம். மெலிந்த உடலில் சிவந்த குத்தாலம் துவர்த்துமுண்டு மட்டும் உடுத்து சின்ன சீசாவிலிருந்து குழம்பை எடுத்து உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். காயத்திருமேனி எண்ணை போல குழம்பு மணத்தது. ஆசாரி வெளிக்கிருந்துவிட்டு வந்து பருத்த குண்டியைக் காட்டியபடி நீர்விளிம்பில் அமர்ந்து பொடிமண்ணைதேய்த்து கழுவினார். அவரது கொட்டை பெரிதாக தொளதொளப்பாகத் தொங்கியது. அழுக்குத்தேமல் படர்ந்த கொழுத்த முதுகில் பூணூல் விலகிக்கிடந்தது.

செட்டியார் துணியை கல்லில் நீலசோப்பு வைத்து நுரைக்க துவைத்தபடி ” அப்பா இண்ணைக்கு புதுக்கடைக்கு போக்கு உண்டா ?”என்று அனந்தனிடம் கேட்டார். அனந்தன் அவரை விழித்துபார்த்தான். செட்டியாரின் மீசையில்லா முகத்தில் மூக்கு ரோமம் வெளியே வந்து பெரிதாகத் தெரிந்தது. ”என்ன கொச்சே, கேட்டது மனசிலாவேல்லியா?”என்றார் செட்டியார். அனந்தன் மீண்டும் ஆசாரியின் பின்பக்கத்தைப் பார்த்தான். அவர் சற்று கால்மடித்து உக்கி கோமணத்தை இறுகக் கட்டினார். ”நீரல்லாம வல்லவனும் இந்த பொட்டன் பயகிட்ட கேப்பானா? அப்பி போணும்…ஒண்ணுமில்ல” என்றார் ஏசுவடியான்.

அப்பா இன்றைக்கு புதுக்கடைக்குப் போகவில்லை. போவதாக இருந்தால் காலையிலேயே அம்மா அறைக்குள் இருக்கும் தேக்குமரத்தாலான பெரிய உடுப்புபெட்டியிலிருந்து அப்பாவின் சட்டை வேட்டி பாடி எல்லாவற்றையும் எடுத்து அவரது அறைக்குள்டலமாராவில் கொண்டுபோய் வைப்பாள். காலையில் இட்டிலி அவிப்பாள். இன்றைக்கு கஞ்சி போலிருக்கிறது. அப்பாவைத் தேடி இன்றைக்கு குழித்துறை வக்கீல் வேறு வருவார். நேற்று அப்பா அம்மாவிடம் சொன்னதை அனந்தன் கேட்டான். மத்தியான்னம் வக்கீல் சாப்பிடுவார். அவருக்கு மீன்இறைச்சி பிடிக்காது. சாம்பார் வைக்கவேண்டும். அனந்தன் திரும்பி செட்டியாரைப் பார்த்தான். செட்டியார் ”என்ன கொச்சே?” என்றார். அனந்தன் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு ஓடினான்

சிவப்பியைக் காணவில்லை. அனந்தனுக்கு கொஞ்சநேரம் ஒன்றுமே புரியவில்லை. அங்கேயே நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். சிவப்பி கயிற்றை உருவிக் கொண்டு போயிருந்தாள். அவனுக்கு திடீரென்று அப்பா நினைவு வந்து பதறியது. ஓடிப்போய் தன்ணீரைப்பார்த்தான். மணலில் அங்குமிங்கும் ஓடிப்பார்த்தான். அழுகை வந்து கண்ணீர் மார்பு மீது கொட்டியது. ” அம்மா அம்மா ”என்று அரற்றியபடி அவன் வீட்டுக்கு ஓடினான். செட்டியார்”கொச்சு நிக்கணும் …கொச்சே …”என்றார். ஆசாரி”என்ன பிள்ள என்ன காரியம்?” என்றார். அனந்தன் ஒன்றும் சொல்லாமல் மேலும் ஓடி படிகள் வரை போய்விட்டு வீட்டுக்குப்போக பயந்து மீண்டும் ஓடிவந்தான்.

”அப்பி காரியத்தச் செல்லணும்…என்னவாக்கும்?” என்றார் ஏசுவடியான். தேம்பி தேம்பி அழுதபடி அனந்தன் ” சிவப்பி… ஓடிப்போனா” என்றான்.

”செவப்பியா அதாரு?” என்றார் ஏசுவடியான்.

”பசுவு…”

”அதுசெரி. பசு ஓடினதுக்கா இந்த பெகளம்? குட்டி இருக்க பசு எங்கிணயாம் போவுமா? அப்பி சென்ணு அதுக்க கால்தடத்த பாக்கணும்…”

செட்டியார் ஈரமான துவர்த்து தொடைகளில் ஒட்ட,மார்பில் நீர் வழிய எழுந்து, ”நில்லு கொச்சே நான் வந்து பாக்கேன்”என்றான்.

”வேய் செட்டி, நீரு இரும். இரும்வே..செல்லட்டு. என்ன அத்து விளுவுண்ணுட்டு எந்திரிச்சு ஓடுகேரு? வளந்த பெயதானே , ஒரு பசுவ தன்னே தேடிக்கிட மாட்டானா? அப்பி செண்ணு தேடணும்…… இவனுக்க ஒப்பம் படிக்க செல்லநாடானுக்க மவன் சந்தைக்கு மாட்ட ஒத்தயில கொண்டுசென்ணு வித்துட்டு வாறான்… எல்லாருமாட்டு செல்லிச் செல்லி அவன பொட்டனாக்காதிய… போணும் அப்பி நிண்ணு மோங்காம ”

அனந்தன் ஏங்கி ஏங்கி அழுதபடி பசு கட்டப்பட்டிருந்த இடத்தை அடைந்தான். அது நாலைந்துமுறை வட்டம் சுற்றி நடந்த தடம் தெரிந்தது. பிறகு குளம்புத்தடம் மேடேறி தங்கம்பெருவட்டரின் தோட்டத்துக்குள் புகுந்திருந்தது.

அனந்தன் தாழைப்புதரின் கீழே உலர்ந்த தாள்களுக்குள் பசு புகுந்து சென்ற துளை வழியாக நுழைந்தான். முதுகில் முள் குத்தி இழுத்தது. மறுபக்கம் சென்றால் உடலே காந்தியது. அப்பால் சேறு கணுக்கால்வரை அழுந்திய ஈரமான வணடல்பறம்பு. கமுகமரங்களுக்கு நடுவே குட்டித்தென்னைகள் சிறகுகள் போல இலையசைத்தன. பசு சென்ற தடத்தை சேற்றில் கண்டுபிடித்து அவன் சென்றான். பசு பல இடங்களில் தென்னையின் இளம் ஓலையை மென்று தின்றிருந்தது.
மேலே ஏறியபோது ஒரு சேற்றுக்குட்டையில் பசு கிடப்பதை அனந்தன் கண்டான். அவன் அருகே செல்வதுவரை சிவப்பி வேறெங்கோ பார்த்து அசைபோட்டுக்கொண்டிருந்தால். அவனைக் கண்டதும் கால் மடித்து எழுந்து அவசரமாக ஓடி மேலும் மேடேறினாள். அயனி மரத்தின் பாயல்படிந்த பெருந்தடிக்கு அப்பால் அவள் மறைந்தாள். அனந்தன் ஓடி அவள் கயிறு நுனியைப்பிடிக்க முயன்றான். சிவப்பி மடி குலுங்க வயிறு அதிர ஓட ஆரம்பித்தாள்.

குறுக்காக பறம்பைக் கடந்து பிறுத்தி அடர்ந்த கையாலையை தாவி ஊடுருவி மறுபக்கம் சென்றாள். அனந்தன் மறுபக்கம் சென்றபோது அப்பா எதிரே ஓடிவந்ததைக் கண்டான். அது அவர்களுடைய வீட்டுபறம்புதான் என்பது அப்போதுதான் தெரிந்தது. சிவப்பி அப்பாவைக் கண்டதும் நின்று ‘ம்பெய்”என்று கூவியது.அப்பா ஓடிவந்து அவள் கயிற்ரைப்பிடித்தபின் அவனைக் கண்டார். ”சீ நாயடமோனே…” என்றபடி சிவப்பியை தென்னைமரத்தில் கட்டினார். அவர் ஆவேசமாகத் தன்னை நோக்கி வருவதை கண்டபடி அனந்தன் உறைந்து நின்றான். அவரது உடலின் வெப்பமும் வியர்வையும் அவனை தொட்டபோது சூடான சிறுநீர் அனந்தன் கால்வழியாக இறங்கியதை அவன் உணர்ந்தான். அப்பா வரும் வழியிலேயே ஒரு பச்சைக்கம்பை உரித்து எடுத்தார்.

அனந்தன் அந்தக் கம்பை பிடித்த நடுங்கும் கரத்தையே பார்த்தான். மயிர் அடர்ந்த கை. சுளீரென்று அடி தொடையை தொட்டதும் அபந்தன் ”அய்யோ அம்மா” என்றலறியபடி அப்படியே தரையில் அமர்ந்தான். கைகளால் கம்பைப் பிடிக்க முயன்றான். கம்பு கம்புகளாக மாறி பல திசைகளிலிருந்தும் அவனை தீண்டி தீண்டி வளைந்து விலகியது. அதம் விம் விம் என்ற உறுமலையும் அது தொட்ட இடங்களில் தீச்சுட்டது போல் எழுந்த வலியையும் மட்டும் அவன் உணர்ந்தான். உருண்டு புரண்டு அப்பால் சென்று எழுந்து தேனீக்கூட்டம் கொட்டியவன் போல உடலை கைகளால் மாறி மாறித் தேய்த்தபடி ஊளை ஒலி எழுப்பி அலறியபடி ஓடினான்

அனந்தன் ஓடி வடக்குப்புறம் வழியாக வீட்ட்டுக்குள் நுழைந்தான். ”என்ன மக்களே என்னடா?”என்று அம்மா ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவன் அம்மாவின் முண்டுநுனியைப்பிடித்தபடி தொடைகளில் முகம் புதைத்து கதறினான்.

அப்பா திம் திம் என்ற ஒலியுடன் ஓடி படி ஏறி ”விடுடீ அவன் விடச் சொன்னா விடணும்..இண்ணைக்கு தெரிஞ்சாகணும் இவன் திருந்துவானா இல்லையாண்ணு…விடுடீ” என்று கூவியபடி அவனை எட்டி எட்டி அடித்தார். அடிகள் அனந்தன் தோளிலும் தொடைகளிலும் பளீர் பளீரென்று பட்டன.

”விடுங்க விடுங்க அவனை” என்று அம்மா கூவினாள். அவள் புஜங்களிலும் தோளிலும் அடிகள் விழுந்தன. அவள் தடுமாறி பின்னால் சரிந்தபோது அனந்தன் சுவரில் மோதி கீழே விழுந்தான். ” அனந்தா…மக்களே !” என்று அம்மா கதறினாள். அவள் முகம் கோணி கண்ணீர் கொட்டுவதை அனந்தன் கண்டான்.

அலறியபடி கைகளால் தோளையும் தொடைகளையும் வெறிபிடித்ததுபோலத் தேய்த்தபடி அனந்தன் எழுந்து தெற்குபக்க வாசல்வழியாக குதித்து வெளியே ஓடினான். கருப்பன் குரைத்தபடி அவனுக்குப் பின்னால் ஓடிவந்தது. காரி திடுக்கிட்டு எழுந்தது. அவன் வீட்டை வளைந்து கிழக்கு வாசலுக்கு ஓடி கோயில்பறம்புக்குள் பாய்ந்தான்.

அப்பாமுகப்புவாசல் வழியாக கம்புடன் வெளியே ஓடிவந்தார். பின்னால் ‘ அடிக்காதீங்க அடிக்காதீங்க வேண்டாம் வேண்டாம்”என்று கைநீட்டி கதறியபடி அம்மா. அனந்தன் எதிரே அண்ணா கையில் சேம்பிலையில் அள்ளிய சாணியுடன் வருவதைக் கண்டான். ”அண்ணா! அண்ணா ! ” என்று அலறியபடி அவனை நோக்கி ஓடினான்.

சாணியை போட்டுவிட்டு ”என்னடா டேய்” என்றான் அண்ணா. அப்பா கம்புடன் மூச்சிளைக்க ஓடிவந்து ” தள்ளுடா அந்த நாயடமோனை இண்ணைக்கே வெட்டிப்போடுகேன்..” என்று வலிப்பு போன்ற முகபாவனையுடன் கூவினார்.

”என்ன காரியம் ?”என்றபடி அண்ணா கம்பை பிடித்தான். ”ஏன் உனக்க கிட்ட சொல்லணுமோ?”என்றார் அப்பா கோபத்துடன்.”ஆமா சொல்லணும்”என்றான் அண்ணா.

அப்பா அவனை கூர்ந்துபார்த்தார். அவர் தலை வெட்டுக்கிளி போல ஆடியது. ”தங்கம்பெருவட்டனுக்க தென்னம்பிள்ளைய பசு தின்னிருக்கு. ஒரு பசுவ கெட்டதெரியல்லேண்ணா இவனெல்லாம் என்னத்துக்கு சீவிக்கணும்? ” அப்பா மூச்சுவாங்கியபடி கேட்டார்.

”பசுவக் கட்டினது நான்லா”என்றான் அண்ணா. அப்பா அவனை கூர்ந்து பார்த்தபின் அவிழ்ந்த வேட்டியை ஏற்றி இறுக்கிக் கட்டியபடி திரும்பி நடந்தார்.

அண்ணா அனந்தனிடம் ”இத அள்ளி எருக்குழியில போடுடா” என்றான். அனந்தன் கண்ணீருடன் விசும்பியபடி சாணியை அள்ளி எருக்குழிக்குள் கொண்டுபோய் போட்டான்.

தங்கம்மை  ”என்னம்பா அடிச்சுப்போட்டு பிள்ளைய”என்று முகவாயில் கையை வைத்தபடி தொழுத்தருகே நின்றாள். ”அப்பி வரணும் கெளங்கு சுட்டு தாறேன்” என்று அனந்தனைப் பிடித்தாள். அனந்தன் அவள் பிடியை உதறினான். அவள் அவனை முரட்டுத்தனமாகப் பிடித்து தோள்களை அணைத்து கண்களைத் துடைத்துவிட்டாள். அவள் கைகள் மரம்போல சொரசொரப்பாக இருந்தன. சேலையில் சாணிவீச்சமும் வெந்த நெல்லின் மணமும் வீசியது. அனந்தனுக்கு அழுகை பீரிட்டுவந்தது.  அவள் சேலையில் முகம் புதைத்து அழுதான்.

அப்பா படி ஏறியபோது சுவர் சாய்ந்து கண்ணிருடன் அம்மா நிற்பதைக் கண்டு கண்களை விலக்கியபடி வெளியே துப்பினார். திரும்பி அவனைப் பார்த்து ” கரையுதான் பாரு பொட்ட கணக்கா… டேய் வாய மூடுதியா இல்லியா?”

தங்கம்மை கடும் கோபத்துடன் ,”சும்மா இருக்கணும் ஏமான், கெடந்து சாடாம. நானும் கொறெ கண்டவதான்… அப்பி வரணும்”என்று சீறினாள். அப்பா திகைப்புடன் மறுபக்கம் திரும்பினாள்.

அண்ணா படிகளில் ஏறினான். அப்பா ”வெள்ளம் நிக்குதாடா?” என்றார். அண்ணா ‘ம்” என்றான்.

அப்பா ஈஸிசேரில் அமர்ந்து வெற்றிலைத் தட்டத்தை எடுத்து மடிமீது வைத்தபடி ”நீயெல்லாம் சேந்துதான் அவன பொட்டனா ஆக்குதது. எனக்கென்ன, நான் போயிருவேன். பின்ன அவனுக்கு அவனுக்க கையும் காலும்தான் துணை. கைதிருந்தி ஒரு சோலி செய்ய படிச்சான்னா அவனுக்கு கொள்ளாம்…. அவனவன் கைதான் அவனுக்கு. அல்லாம அண்ணனும் மச்சானும் ஒண்ணும் வந்து அள்ளிக்குடுக்கமாட்டாங்க” என்றார். பாக்கை எடுத்து பாக்குவெட்டியால் சீவியபடி. ”அந்த நினைப்பு வேணும். இண்ணைக்கு ஓடிவருவே. எண்ணைக்குமா ஓடிவத்து பாத்துக்கிடுவே?” என்றார்.

அண்ணா உள்ளறைக்கு போனவன் திரும்பி ” ஆமா” என்றான். அப்பா சீவுவதை நிறுத்தி ”என்னது?” என்றார். ”எண்ணைக்கும் பாத்துக்கிடுவேன், போருமா?”என்றான்.

அப்பா அவன் போன திசையையே பார்த்தார். பிறகு திரும்பி அனந்தனைப்பார்த்தார். வெற்றிலையை எடுத்து ஒன்றும்புரியாதவர் போல காம்பைக் கிள்ளினார்.

 

[more]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:கடிதங்கள்