ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’

லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள். அவளை பெற்றோரின் கட்டயம் காரணமாக திருமணம் செய்துகொள்ளும்படி நிகழ்கிறது. அவரைக் கேட்காமலேயே உறுதிசெய்யப்பட்ட அத்திருமணத்தை அவரால் சீனக் கிராம வாழ்க்கையின் விதிகளின்படி மறுக்க இயலாது. மேலும் அவரது வயதான தாய்தந்தையரையும் பண்ணையையும் பராமரிக்க ஆள் தேவைப்பட்டது. லின் காங்கால் அவளை சற்றும் நேசிக்க இயலவில்லை, அவளது அழகின்மை மேலும் மேலும் அருவருப்பை அளிக்கிறது. அவளிடம் அவருக்கு எளிய காமம் கூட உருவாகவில்லை.

ஷு யு பழைமையான சீனப் பாரம்பரியத்தில் வளர்ந்தபெண். ஒரு நல்ல கணவனை தேடுவதே பெண்ணின் வாழ்க்கையின் நிறைவு என்று நம்பவைக்கப்பட்டவள் . மரபான சீன வாழ்வில் ஒரு பெண் தன் கணவனுக்குக் கொடுக்கக் கூடிய சிறந்த பரிசு ‘சிவந்த தாமரைகள் ‘ தான். பெண்களின் கால்களை ஏழெட்டு வயதிலேயே இரும்புச் செருப்புக்குள் நிரந்தரமாகத் திணித்து அதை வளரவிடாது செய்து வெளிறிய சூம்பிய வடிவம் கொள்ளச்செய்து அதை பெண்ணழகின் உச்சமாக ‘சிவந்த தாமரை ‘ என்று அழைப்பது சீனவழக்கம். ஷு யு தன் ஏழுவயதில் தான் அழகற்றவள் என்று உணர்ந்தாள். அவளது பெற்றோர் இரும்புச்செருப்பு போட்டுவிட்டபோது அவள் அதனை ஏற்றுக் கொள்ள அதுவே காரணம். அப்போதே அவ்வழ்க்கம் ஏறக்குறைய இல்லாமலாகிவிட்டிருந்தது.

ஷு யு தாமரைக்கால்களுக்காக தன் இளமையையே தியாகம் செய்தாள். இரவுகளில் தாங்கமுடியாத வலியுடன் அழுந்தி சூம்பும் எலும்புகளை ஒவ்வொரு கணமும் அனுபவித்தபடி அவள் வாழ்ந்தாள். ஓடியாடியதில்லை, மனம் நிறையும்படி வேலை செய்தது இல்லை. நடக்கமுடியாமையால் பள்ளிசெல்லவும் இல்லை. அவள் அறிந்ததெல்லாம் வலி ஒன்றைத்தான். தனக்கு வரப்போகும் கணவனுக்காக அந்த தவத்தை ஆற்றி தாமரைகள தன் கால்களில் உருவாக்கினாள் அவள்.

ஆனால் லின் காங் நகரத்தில் படித்தவர். கலாசாரப் புரட்சிக்குப் பிறகு உழைப்பு மற்றும் வலிமை புதிய அழகியல் மதிப்பீடுகள் உருவாகி வலிமைகொண்ட காலத்தைச் சேர்ந்தவர். புதிய காலகட்டத்தில் தாமரைக்கால் அசிங்கமான பழைமைச்சின்னமாக கருதப்பட்டது. தாமரைக்கால்ப் பெண்களின் தத்தித் தத்தி நடக்கும் நடை கேலிக்குரியதாக எண்ணப்பட்டது. ஷு யுவிடம் அவர் அதிகமாக அருவருத்ததே அவளது கால்களைத்தான். முதலிரவில்தான் அவருக்கு அவள் தாமரைக்காலி என்று தெரிந்தது. அவர் அருவருப்புடன் அதை மூடச்சொன்னார். பிறகு அதை அவர் பார்க்கவேயில்லை. ஷு யு யின் கண்ணீரும் தவமும் வீணாயிற்று. அவளது பொக்கிஷம் ஒரு ஆறாத புண்ணாக மாறியது.

ஆனால் ஷு யு பண்பும் கடுமையான உழைப்புமனநிலையும் கொண்ட கிராமத்துப் பெண். லின் காங்கின் குடும்பத்தையும் பண்ணையையும் அவள் அருமையாக கவனித்துக் கொண்டாள். அவர் படிக்கும் செலவுகளை அவளே ஏற்றாள். அவள்தான் அவரது வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்தார். அவளில் அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது — மொ ஹுவா. அவள் சிறு குழந்தையாக இருக்கும்போது அவள்மீது சற்று ஈர்ப்பு அவருக்கு இருந்தது. அவள் வளர வளர அது குறைந்தது .அவள் அதிகமும் அம்மாவுடன் வாழ்பவள். அவருடன் உறவென்பது அவர் மியூஜி நகரிலில்ருந்து மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை அரிதாகக் கிடைக்கும் விடுப்பில் வரும் போதுமட்டும்தான். அவள் தன் அன்னையின் மறுபதிப்பு . அதேசமயம் திடமான உடலும் கறாரான மனமும் கொண்ட அடுத்த தலைமுறைப்பெண். வயலில் கடுமையாக உழைத்து மண்போல ஆகிவிட்ட உறுதியான கால்கள் கொண்டவள்.

லின் காங் மியூஜி நகரில் ராணுவ முகாமில் நர்ஸாக இருக்கும் மன்னா வு விடம் காதல் கொண்டிருக்கிறார். அவளை மணந்து ஒரு காதல் வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதே அவரது கனவு. ஆனால் சீன ராணுவ அரசுச்சட்டங்கள் கடுமையானவை. அங்கே ஆண்பெண் உறவு என்பது கடுமையாக கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது. ஒரே இடத்தில் அருகருகே வாழ்ந்தபோதும்கூட லின் காங் மன்னா வூவை வாரத்தில் ஒருமுறை தோட்டத்தில் சந்தித்து வெறுமே வாயால் பேசிக் கொண்டிருக்கத்தான் முடியும். அவளை அவர் மணம் செய்யவேண்டுமென்றால் அவர் ஷு யுவை மணவிலக்கு செய்தாகவேண்டும்.

ஷு யு மணவிலக்குக்கு சம்மதிப்பதேயில்லை. அவள் சம்மதிக்காமல் மணவிலக்கு அளிக்க மாவட்டத் தலைநகரான வூஜா பட்டணத்து நீதிபதி யை அணுகுகிறார்கள். போலீஸ் அதிகாரி, கட்சித்தலைவர், நீதிபதி மூன்றுமே ஒருவரின் பதவிதான். அவர் முன் மணவிலக்கு வழக்குகள் அரிதாகவே வரும். வருடத்துக்கு பத்துபதினைந்து. அவற்றின் அதிகபட்சம் மூன்றுதான் மணவிலக்கில் முடியும். தெளிவான சட்டம் ஏதுமில்லை. மணவிலக்கு அளிக்கவேண்டுமென்றால் சம்பந்தப்பட்டவர் மனநோயாளியாக இருப்பது முக்கியமான காரணம். மற்ற உளவியல்காரணங்கள் நீதிபதிக்கு புரிவதில்லை. அவரது தீர்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது.

லின் காங் வருடம்தோறும் வேனிற்காலத்தில் கூஸ் கிராமம் வந்து மனைவியிடம் கண்ணீருடன் கெஞ்சுவார் . மணவிலக்கு தந்து தன்னை விட்டுவிடும்படிக் கோருவார். அவள் ஒரு கட்டத்தில் மனமுருகி அதற்குச்சம்மதிப்பாள். இருவரும் டிராக்டர் வாடகைக்கு எடுதுக் கொண்டு ஏறி மியூஜிக்குச் செல்வார்கள். நீதிபதி ஷு யுவை தனியாகக் கூப்பிட்டு மூன்றுவினாக்கள் கேட்பார். உன்னால் வேலை செய்ய முடியுமா ? உனக்கு கணவன் மீது பிரியம் இருக்கிறதா ? நீங்கள் சேர்ந்துதான் வாழ்கிறீர்களா ? எல்லாவற்றுக்கும் ஷு யு ஆம் என்று பதில் சொல்வாள். அவ்வளவுதான் வழக்கு தள்ளுபடி செய்யப்படும். கண்ணீருடன் ஷு யுவும் கண்ணீர் வெளியே தெரியாமல் அழுதபடி ஷு யுவும் வீடு திரும்புவார்கள். இது வருடம் தோறும் நடக்கும்.

அவர் மனைவியை மணவிலக்குசெய்தபின் அவரை மணம்செய்யலாம் என்று மன்னா வூ காத்திருக்கிறாள். அவளைப்போன்ற பெண்களுக்கு மணமகன் கிடைப்பது அரிதிலுமரிது. அவள் மீது மாளாக்காதலுடன் , அடக்கப்பட்ட காமத்துடன் லின் காங் காத்திருக்கிறார். ஒரு முறை உறவுகொள்ளக்கூட அச்சம். ஏனெனில் பிடிக்கப்பட்ட கள்ள உறவு ஒட்டுமொத்தமாக வாழ்க்கையையே அழித்துவிடும். கட்சி அதை மன்னிப்பதேயில்லை. அவளை நினைத்து இரவுகளில் ஈரக்கனவுகள் கண்டு கால்ச்சட்டையை நனைத்துக் கொண்டு கேலிக்குரியவராக ஆவதுதான் அவரது காமவாழ்க்கை. ஒவ்வொரு வருடமும் மன்னா வூ மன்றாடி அவரை ஊருக்கு அனுப்பி வைப்பாள் , மணவிலக்கு வாங்கி வரும்படி . அவர் தோல்வியுற்ற துயரம் கப்பிய முகத்துடன் மீள்வார். இன்னொரு வழி இருக்கிறது. சீனச் சட்டப்படி மணமாகி இருபது வருடம் தாண்டியபிறகு ஒருதலைபட்சமாக மணவிலக்கு கோரலாம். அதுவரை காத்திருப்பது. ஆனால் மன்னா வூவுக்கு அப்போதே இளமை கழிந்துகொண்டிருக்கிரது. அவள் அப்போதும் கன்னி. தன் கன்னித்தன்மையை விரும்பினால் கூட இல்லாமலாக்க அங்கே அவளுக்கு வாய்ப்புகள் இல்லை. அல்லும்பகலும் காமக்கற்பனைகள் வழியாக அவள் வாழ்க்கை செல்கிறது

&&&

ஹா ஜின் எழுதிய காத்திருப்பு என்ற நாவலின் கதை இந்த இடத்தில் தொடங்குகிறது. அதன் அனைத்துக் கதாபாத்திரங்களும் காத்திருக்கிறார்கள் , வாழ்க்கையில் எதோ ஒன்று நிகழ்ந்து எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக. காத்திருப்பு முடிவின்றி நீள்கிறது. ஒன்றுமே நிகழ்வதில்லை. அதன் அலுப்பூட்டும் அன்றாடத்தன்மையை அலுப்பின்றி சொல்லிச்செல்ல இயல்கிறது PEN மற்றும் ஹெமிங்வே விருதுகளை சிறுகதைக்காகப் பெற்ற சீன- ஆங்கில எழுத்தாளரான ஹா ஜின்னால். அவரது இரண்டாவது நாவல் இது. 1985ல் கலூரிப்படிப்புக்காக சீனாவைவிட்டுவந்த ஹா ஜின் இப்போது அமெரிக்கக் குடிமகன். எமோரி பல்கலைக்கழக ஆங்கில ஆசிரியர்.

பதினேழுவருடம் மன்னா வூ லின் காங் ‘ கை காதலித்து காத்திருக்கிறாள். இறுதியில் ஒருதலைமணவிலக்குக்கு விண்ணப்பிக்க முடிகிறது. மணவிலக்கும் கிடைக்கிறது. அவளுக்கு அது ஒரு விடுதலை, தன் கன்னித்தன்மையிலிருந்து, அதன் அருவருப்பூட்டும் சுமையிலிருந்து. ஆனால் ராணுவ அதிகாரியான ஜெங் யாங் அவளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவதுதான் அவளது முதலனுபவம். மிகக் கொடுமையான அருவருப்பூட்டும் அனுபவம். அதை அவள் மணமான பிறகு லின் காங்க்குச் சொல்கிறாள். ஆனால் அவரால் அவனை ஒன்றும் செய்ய இயலாது என்பதே சூழல்.

லின் நெடுநாள் தவம் முடிந்து மன்னா வூ ஐ மணம் செய்கிறார். மணமான பிறகு சிலநாள் உற்சாகமான தேனிலவு . மன்னா வூ காமத்தில் திளைக்கிறாள். ஆனால் அதற்குள் நாற்பதை தாண்டிவிட்டிருந்த லின் காங் வால் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலவில்லை. அப்போது அவருக்குத் தேவையாக இருப்பது கட்டற்ற காமம் அல்ல, அன்பாகப் பராமரிக்கும் ஒரு வயதான மனைவி மற்றும் துணைவிதான். மன்னா வூவிடமிருந்து சீக்கிரத்திலேயே அவர் மனவிலக்கம் கொள்கிறார். அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை மன்னா வூவின் ஆரோக்கியத்தை சீரழிக்கிறது. மன்னா வூவால் தன் முதலனுபவத்தின் கசப்பை வெல்லவே இயலவில்லை. அவள் காமத்தில் முக்குளிப்பது அதை வெல்லவே. அது இயல்வதில்லை. அவளை வன்பாலுறவு செய்த ஜெங் யாங் மாறிய சூழலில் அரசு குத்தகை வேலைகளை எடுத்து பெரும் பணக்காரனாக ஆவதை தொலைக் காட்சியில் கண்டு அவள் குமுறுகிறாள். தன் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிட்டதென உணர்கிறாள். நாற்பதுக்கு மேற்பட்ட வயதில் சின்னஞ்சிறு குழந்தையை பராமரிப்பதும் நோயுற்ற இளம்தாயான மனைவியை கவனித்துக் கொள்வதும் லின் காங்குக்கு நரக வாழ்க்கையாக அமைகிறது. பருவம் தவறிய தாம்பத்தியத்தின் அத்தனை சிக்கல்கலையும் அவர் அறிகிறார்.

ஷு யு தன் மகளுடன் அந்த ராணுவ முகாமுக்கு வருகிறாள். மொ ஹுவாவிற்கு அங்கே வேலைகிடைத்துள்ளது. இப்போது ஷு யு க்கு இன்னொரு பாதுகாப்பு இருக்கிறது, கிராமத்தில் தவிர்க்க இயலாததான சமூக அடையாளமும் அங்கே தேவையில்லை. ஆகவே ஷு யு மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள். கணவனை மறந்துவிட்டாள் என்றே சொல்லலாம். அவர்களிடம் தவிர்க்க இயலாதபடி உதவிக்குச் செல்கிறார் லின் காங். அவர்களுடைய இனிய வீடு அவருக்கு ஒரு புகலிடமாக உள்ளது. அங்கே நிரந்தரமாக சென்றுவிடுவதைப்பற்றி எண்ணி அந்தரங்கமாக ஏங்குகிறார் .அதை நுட்பமாக உணரும் மன்னா வூ அவரை அங்கே போகலாகாது என்று வசைபாடுகிறாள்.

மன்னா வூயின் இதயம் பலவீனமுற்றிருப்பதை டாக்டர் சொல்கிறார். காலம்தாழ்த்திய பிரசவம் அவளை மிகவும் பலவீனப்படுத்தி எந்நேரமும் அவள் இறக்கலாம் என்றநிலையை உருவாக்கியிருக்கிறது. முதலில் அதற்காக அதிர்ச்சி கொண்டு வருந்தியழுதாலும் மெல்ல லின் காங்க்கு ஓர் ஆசை துளிர்க்கிறது. மன்னா வூ இறந்தால் அவர் மீண்டும் தன் முதல் மனைவியிடம் செல்ல இயலும். அவர் அவளது மரணத்துக்காகக் காத்திருக்க ஆரம்பிக்கிறார்.

நாவல் இங்கே முடிகிறது

&&&&

1999 ல் வெளிவந்த இந்நாவல் கடந்த சிலவருடங்களில் அமெரிக்க இலக்கிய உலகில் அதிகமாக பேசப்பட்ட பாராட்டப்பட்ட நாவல்களில் ஒன்று. நேரடியான எளிய கதைசொல்லும்முறைகொண்டது. கச்சிதமான மொழி. நாவல் இப்படி தொடங்குகிறது , ‘ ‘ ஒவ்வொரு கோடையிலும் லின் காங் கூஸ் கிராமத்துக்கு தன் மனைவியை மணவிலக்கம் செய்யும்பொருட்டு வருவதுண்டு . ‘ ‘ ஆங்கில வணிக இலக்கியத்தில் உருவாகி சீரிய இலக்கியத்தில் புகுந்துள்ள கதைத்தொழில்நுட்ப நேர்த்தியின் சிறந்த உதாரணம் இந்நாவல். துல்லியமாக வெட்டித்தொகுக்கப்பட்டு கச்சிதமான தொழிற்சாலைத்தயாரிப்புபோல உள்ளது கதை. இதை சாதகமான அம்சமாகவோ எதிராகவோ கொள்ளலாம். நான் எதிராகவே கொள்வேன். இத்தகைய துல்லியம் பலர் சேர்ந்து உருவாக்கும் கூட்டுழைப்பில் உருவாகக் கூடியது. இது படைப்பை ஓர் உற்பத்தியாக ஆக்கிவிடக்கூடியது. படைப்பின் பிசிறுகள் பிழைகள் சிக்கல்கள் முதலியவை இத்தயாரிப்பில் களையப்படுகின்றன

உண்மையில் படைப்பின் பிசிறுகள் பிழைகள் சிக்கல்கள் முதலியவை எல்லாமே படைப்பின் இன்றியமையாத பகுதிகள். படைப்பின் பிசிறுகளை இருவகையாகப் பிரிக்கலாம். அ ] படைப்பாளியின் மனம் படைப்பூக்கத்துடன் செயல்படாதபோது உருவாகும் அழுத்தமற்ற பகுதிகள் ஆ] படைப்பாளியின் மனம் அவனையறியாமலே உருவாக்கும் சிக்கல்கள் மற்றும் உதிரி வெளிப்பாடுகள். முதல்வகைப் பிசிறுகளை அடையாளம்கண்டு களைவது எந்த ஒரு ஆக்கத்திலும் இன்றியமையாததுதான். இரண்டாம் வகை பிசிறுகள் படைப்பாளியின் அந்தரங்கத்தை வேறு கோணத்தில் வெளிப்படுத்துபவை. படைப்பாளி ஒரு குறிப்பிட்டவகையில் ‘கூறிக் ‘கொண்டிருக்கையில் வேறு ஒருவகையில் அவனது ஆழ்மனம் வெளிப்படும் புள்ளிகள் அவை. உதாரணமாக தல்ஸ்தோயின் மனிதாபிமான , ஒழுக்கவாத நோக்கை அவரது மாபெரும்நாவலான போரும் அமைதியும் முன்வைக்கும் பல ‘பிசிறுகள் ‘ நேரெதிராகத் திருப்பிக் காட்டுகின்றன. அவரது கட்டற்ற பிரபுகுல வாழ்க்கையின் கூறுகள் அவற்றில் வெளிப்படுகின்றன. போரும் அமைதியும் நாவலில் உள்ள ராணுவ வாழ்க்கைச்சித்தரிப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அதீத தொழில்நுட்பம் கொண்ட மேலைநாட்டு ஆக்கங்களில் ‘தேர்ச்சி பெற்ற ‘ தொகுப்பாளர்குழு இரண்டாவது வகை பிசிறுகளையும் வெட்டிவிடுகிறது. அதை இந்நாவலின் வாசிப்பில் தெளிவாகவே உணரலாம். இதில் வாசகனின் நுட்பமான கவனம் தொட்டெடுக்கவெண்டிய பக்கவாட்டுப் புள்ளிகள் ஏதும் இல்லை. கதை என்று எது சொல்லப்படுகிறதோ அது கனகச்சிதமாகச் சொல்லப்படுகிறது. இந்நாவலின் முக்கியமான பலவீனம் இதுவே. அதிகமும் அமெரிக்க நாவல்களிலும் , ஆங்கில-இந்திய, ஆங்கில- ஆப்ரிக்க நாவல்களிலும் காணப்படும் இயல்பு இது. ஏற்கனவே புகழ்பெற்ற நாவல்களில் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் இவ்வியல்பு காணப்படுவதில்லை. தெரியும் தல்ஸ்தோயும் மறைந்து வெளிப்படும் தல்ஸ்தோயும் சேர்ந்ததுதான் அவர். அத்தகைய அடித்தளம், படைப்பாளி கைநழுவவிடும் துளிகள், இத்தகைய தீவிர தொகுப்புமுறையால் களையப்படுகின்றன.

உச்சியில் சர்வாதிகாரம் கொண்ட ஓர் அரசு மனித வாழ்க்கையின் எல்லா புள்ளிகளிலும் தலையிட்டு வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குவதை மனதில் அழுத்தமாக பதிய வைப்பதனால் இப்படைப்பு முக்கியமானதாக எனக்குப் படுகிறது. இதன் மையம் இங்குதான் நம்மை தொடுகிறது. தனிமனிதனுக்கு அரசு என்பது ஓர் அன்னியமான அமைப்பு அல்ல, அது அவனுக்குள் செயல்படும் ஒரு இரும்புவிதி. எவ்வகை அரசு உன்னுடையது என்பது எவ்வகை சிந்தனை உனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வினாவேயாகும். அரசு உருவாக்கும் கெடுபிடிகளை மீறி யோசிக்கவே லின்னால் இயலவில்லை . அதேசமயம் அதை மீறும் இயல்பு கொண்டவர்கள் சாதாரணமாக மீறிச்சென்று தாங்களே அரசாக ஆகியபடியே இருக்கிறார்கள். அரசமைப்பு என்பதில் உள்ள அன்றாட அநீதி ஒரு தனிமனிதனின் ஆன்மீகநம்பிக்கையை அழித்து அவனை அவநம்பிக்கைக்குள் கொண்டு தள்ளுகிறது என்பதை காட்டும் அரிய நாவல் இது.

அதேசமயம் காத்திருப்பு என்ற கருத்தை பலவகையில் விரிவாக்கம் செய்ய இந்நாவலால் இயலவில்லை. உலகியல் சார்ந்த , ஒரு குறிப்பிட்ட சமூகச்சூழல் சார்ந்த காத்திருப்பை ஆன்மீகமான எக்காலத்துக்கும் உரிய மானுடக்காத்திருப்பாக ஆக்க இது முனையவில்லை. அதற்குக் காரணம் இந்நாவல் தன் கூறுமுறைக்கு கவித்துவச் சாத்தியக்கூறுகள் எதையுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே. ஒரே விதிவிலக்கு ‘தாமரைக் கால்கள் ‘ . ஆசிரியரின் கறாரான கூறுமுறையின் தடையை மீறி நாவலில் அது பெண்மனதின் உதாசீனப்படுத்தப்பட்ட வலியின் குறியீடாக மாறுகிறது. ஆனால் ‘காத்திருப்பு ‘ என்பது அப்படி மாறவில்லை

இந்நாவலின் இரு நுட்பதளங்கள் என் வாசிப்புக்குத் தட்டுபட்டன. லின் நவீன காலத்தைச் சேர்ந்த சிந்தனைகளும் அழகுணர்வும் உள்ளவன். ஆனால் பெண்ணை அழகுப்பொருளாக, காமக் கருவியாகக் காணும் நிலப்பிரபுத்துவ மனம் அவனுடையது. ஷு யு நிலப்பிரபுத்துவ யுகத்தில் உருவான நோக்கு கொண்டவள் . ஆனால் அவள்தான் உழைப்பின் அடிப்படையில் உருவான மனம் கொண்டவள். இருவரில் எவர் ஒரு கம்யூனிச சமூகத்துக்கு உரியவர்கள் என்ற வினா நாவலில் எழுகிறது

இன்னொரு தளம் லினின் வாழ்க்க்கையின் பொருள் குறித்தது. லின் இரு தருணங்களில் மட்டுமே ஆழமான மகிழ்ச்சியை அடைகிறான். ஒன்று ஹுவா சிறுமியாக இருக்கையில் அவளுடன் அவன் விளையாடும்போது. இரண்டாவது சிரமம் மிக்க ராணுவ நடைபயணத்தின்போது காலில் கொப்புளம் வந்து துயருறும் சகபயணிகளுக்காக கொப்புளத்தை கீறி அதில் ஒரு மயிரிழையை வைத்து கட்டும் முறையை லின் சுயமாகக் கண்டடையும்போது. மானுட வாழ்க்கையை அர்த்தபடுத்தும் இரு கூறுகளை அவர் இவ்வாறு அறிகிறார். இப்புள்ளிகள் நாவலின் கட்டமைப்பில் ஆசிரியரின் ‘கவன ‘த்தை மீறிய பிசிறுகளாகவே வெளிப்பட்டுள்ளன. இவற்றை ஆசிரியரே அடையாளம் கண்டு மேலும் அழுத்தமளித்திருந்தால் நாவல் உருவாக்கும் வினா அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கும்.

காத்திருப்பு என்ற கருதுகோள் வாழ்க்கையைப்பற்றிய உருவகமாக இலக்கியத்தில் பெரிதும் முன்வைக்கப்பட்ட ஒன்று. வராது போகும் ஒன்றுக்காக, அறியமுடியாத ஒன்றுக்காக நிரந்தரமான காத்திருப்பில் இருக்கும் மக்களை நாம் இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் காண்கிறோம் .அக்காத்திருப்பு பலவகைப்பட்டதாக இருக்கலாம். வரண்ட சகாராவில் ஒரு மழைக்காககக் காத்திருப்பது முதல வராத கோதோவுக்காகக் காத்திருத்தல்வரை [ சாமுவேல் பெக்கட்] ஆனால் அக்காத்திருப்பை எழுதிய ஆசிரியர்கள் அதன் வெறுமையையும் தவிர்க்கமுடியாமையையும் ஆழமாக அடிக்கோடிட்டு அதை எதிர்கொள்ள மனிதமனம் கொள்ளூம் பலவகையான பாவனைகளை தந்திரங்களை விரிவாகக் காட்டி அதை மானுடக் காத்திருப்பாக ஆக்கிக் காட்டுவார்கள் ஹா ஜின் அப்படி விரியும் நாவலாக இதை ஆக்கவில்லை. இங்கே காத்திருப்பை உருவாக்குவது அரசுதானே ஒழிய இயற்கையின் இன்றியமையாத விதிகள் அல்ல

சீனாவின் இன்றைய வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை ஒரு மனிதனின் வாழ்க்கையில் வலிமையாக பிணைத்துக் காட்டுவதனால் இது முக்கியமான நாவல். அதற்கு அப்பால் நகராத காரணத்தால் மிகமுக்கியமான நாவல் அல்ல.

[ WAITING . A Novel by HA JIN .Pantheon Books New york .]

மறுபிரசுரம்/ முர்தற்பிரசுரம் 2004

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49