கனி

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது பார்த்த ஓர் ஓவியம் அதன் வண்ணக்கோவையினால் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் நவீன ஓவியத்தின் அலை தொடங்கி இரு நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. இருந்தாலும் அங்கே யதார்த்தபாணி ஓவியங்களுக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓவியக்கூடங்களிலும் வீடுகளிலும் அவை இருப்பதை கவனித்திருக்கிறேன். உடனே அதைத் தரவிறக்கி வைத்துக்கொண்டேன்.

சிலமாதங்கள் கழித்து மீண்டும் அதைப்பார்த்தபோது அந்நேரத்துத் தனிமையில் என்னென்னவோ எண்ணங்கள். இந்த வகையான ஓவியம் ஏன் இன்னமும்கூட அபாரமான மன எழுச்சியை அளிப்பதாக இருக்கிறது?

காரணம் இந்த ஓவியங்கள் ஐரோப்பிய ஓவியத்தின் செவ்வியல் மரபை- குறிப்பாக வெனிஸ் பாணியை- நினைவூட்டுகின்றன என்பதே. . இந்த ஓவியத்தையே கூட ரெம்ப்ராண்ட் இன்றிருந்தால் வரைந்திருப்பார் என்று தோன்றியது.எல்லாவகையிலும் ஒரு நவீன வெனிஸ்பாணி ஒவியம் இது என்று சொல்லிவிடமுடியும். முக்கியமாக இதன் வண்ணக்கோவை. பசுமையும் செந்நிறமும் அதன் வெவ்வேறு அழுத்தங்களில் அழகாகக் கலக்கப்பட்டிருக்கின்றன. அந்தவண்ணங்கள் வழியாகவே ஒளியும் இருளும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் வெனிஸ்பாணி காலாவதியாகி நவீன ஓவியமரபு உருவான பின்னர் வரையப்பட்டது. பிரெஞ்சு ஓவியர் William-Adolphe Bouguereau 1880இல் இதை வரைந்திருக்கிறார். பைபிள்சார்ந்த குறியீட்டுத்தன்மையுடன் வரையக்கூடியவராக இருந்திருக்கிறார். தலைப்பு ‘Temptation’

இதன் ஓவியவெளியும் ரெம்ப்ராண்ட்டையே நினைவுக்குக் கொண்டுவந்தது. ஓவியப்பெண்ணின் முன்னால் இருக்கும் நீர்லில்லி மலர்ந்த சிறிய குட்டை முதல் தொலைதூரத்தில் ஒளிபெற்று நீண்டிருக்கும் தொடுவானம் வரை ஓவியம் மிகப்பெரிய நிலத்தைத் தன் சட்டகத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. நடுவே இளவெயில் விரிந்த அந்த வயல் மிக கனவுபோலத் தெரிகிறது.

வெனிஸ் பாணி ஓவியங்களில் வெளிச்சம் விழும் கோணம் மிக முக்கியமானது.தாயின் தோளுக்குப்பின்னாலிருந்து வரும் அழகிய மென்னொளி அவளுடைய சட்டையைத் துலங்கச்செய்கிறது. முகத்தின் பக்கவாட்டில் மெலிதாக விழுந்து குழல்கற்றைகளை பொற்சுருள்களாக்கிச் செல்கிறது. ஆனால் குழந்தையைத் தங்கச்சிற்பமாகவே ஆக்கிவிடுகிறது. அதன் கை, கால் விரல்களும் கூந்தல்சுருள்களும் வரையப்பட்டிருக்கும் முப்பரிமாண நேர்த்தி இந்தக்காட்சியை ஓர் அழகிய கனவாக ஆக்க்குகிறது. இத்தகைய அழகு கனவுகளில் மட்டுமே நிகழக்கூடியது

வெனிஸ்பாணி செவ்வியல்தன்மை கொண்டது. ஆனால் கம்பராமாயணம் போல கற்பனாவாதச் செவ்வியல். ஆகவே அழகு,பேரழகு, கம்பீரம் என்றே அது தேடிச்செல்கிறது. இந்த ஒருசட்டகத்திற்குள் அழகு அல்லாத எதுவுமில்லை. இதன் ஒவ்வொரு தூரிகைத்தீற்றலும் அழகை உருவாக்கவே.

ஆனால் அந்தக்கற்பனாவாத அம்சத்தை மறுத்து இதை தூய செவ்வியல்கலையாக நிலைநாட்டும் ஓர் அம்சம் இந்த சட்டகத்திற்குள் உள்ளது. அந்த ஆப்பிள்.தாய் அதை சற்று ருசிபார்த்திருக்கலாம். அவள் அதைப்பற்றி ஏதோ சொல்ல பெரும் ஆர்வத்துடன் பெண்குழந்தை அதை கவனிக்கிறது. தாய் சற்று உல்லாசமான ஓய்வுத்தன்மையுடன் படுத்திருக்க குழந்தை பரபரப்புடன் தாவி அதைப்பிடுங்குவதற்கு முந்தைய கணத்தில் இருக்கிறது. குழந்தையின் பரபரப்பைக் கண்ட சிறிய வியப்பு தாயின் கண்களில்.

ஆப்பிள் என்பது ஐரோப்பியக் கிறித்தவச் செவ்வியல் மரபில் பாவத்தின் கனி என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. பழையசெவ்வியல் ஓவியங்களில் அது பலவகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும். கிறிஸ்துவோ புனிதர்களோ உள்ள பழங்கால ஓவியங்களில் ஆப்பிள் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பது ஓர் அடிப்படையான ஓவியப்பயிற்சி.

அந்த ஆப்பிள் வழியாக எங்கெங்கோ இட்டுச்செல்கிறது இந்த ஓவியம். பேரழகும் பாவமும். தாய்மையும் பாவமும். களங்கமற்ற குழந்தைமையும் பாவமும். கைமாறப்படும் பாவம். அழியாமல் தலைமுறைகளில் நீடிக்கும் பேரழகு கொண்ட புனிதபாவம்.

http://zoom.artsconnected.org/collection/99365/mothers-and-children?print=true#%281%29

முந்தைய கட்டுரைதிருமுகப்பில்-கடிதம்
அடுத்த கட்டுரைவெண்கடல்- கடிதங்கள்