என்னுடைய நண்பர்கள் திரும்பத்திரும்ப ஒரு கேள்வியைக் கேட்பார்கள், இலங்கைப் படையால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகையில் இந்திய அரசு மௌனமாக இருப்பது அவர்கள் தமிழர்கள் என்பதனால்தானே?
நான் அவர்களுக்குத் திரும்பத்திரும்ப பதிலளிப்பேன், ‘நண்பரே, இந்தியா எக்காலத்திலும் வலுவான அரசாக சர்வதேச அரசியல் சூழலில் இருந்ததில்லை. நாம் ஒரு பெரிய கையேந்திதேசம்….’
‘அப்படி என்றால் ஏன் நாம் இந்தியாவுடன் இருக்கவேண்டும்? தமிழ்நாடு பிரியட்டும்’ என சிலர் கொந்தளிப்பார்கள்.
‘அது இன்னும் கேவலமான ஒரு சின்ன கையேந்தி தேசத்தின் பிரஜைகளாகவே நம்மை ஆக்கும். நம் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்தால் அதில் எந்த சந்தேகமும் வராது’ என்பேன்.
‘என்ன செய்வது?’
‘வலிமையான தேசமாக ஆவதுதான் ஒரே வழி. உண்மையான இறையாண்மை கொண்ட நாடாக ஆவது. அதற்குத் தேவை, இன்னமும் தேச ஒற்றுமை. இன்னமும் தேசப்பெருமிதம்’ என்பேன்.
நேருகாலத்தில் வட இந்தியாவை சூழ்ந்த பெரும் பஞ்சத்தை வெல்ல, வெட்கத்தைவிட்டு அமெரிக்காவிடம் அந்தப் பெரியமனிதர் பிச்சைகேட்டார். அமெரிக்காவின் மக்காச்சோளத்தால் நம் நாடு பட்டினிமரணம் நிகழாமல் தப்பித்தது. அவ்வாறாக நம் சுதந்திரம் திருவோட்டுடன் மங்களமாக ஆரம்பித்தது.
இருநூறாண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த மாபெரும் பஞ்சங்களில் நம் நாட்டை ஆண்டவர்கள் வெள்ளையர். அவர்கள் நம்மைக் கோடிக்கணக்கில் சாகும்படி விட்டார்கள். அரசியல் சுதந்திரம் பெற்றதனால் நாம் அடைந்த முதற் பெரும்பயன் பஞ்சங்களை வென்றதுதான். அதற்காகவே நேரு அணைகளைக் கட்டினார், இந்தியாவின் சுற்றுச்சூழலை முழுமையாக அழிக்கவும் துணிந்தார்.
அதன்பின் இந்தியா ருஷ்யாவின் கௌரவ அடிமையாக கால்நூற்றாண்டுக்கும் மேல் நீடித்தது. நமக்கு சொந்தமாக வெளியுறவுக் கொள்கைகளோ நிலைப்பாடுகளோ இருந்ததில்லை. ருஷ்யா அனுமதித்த எல்லை வரைக்கும் மட்டுமே நம்மால் செல்லமுடிந்தது. போரில் வென்றாலும் காஷ்மீரின் பாதியை நாம் பாகிஸ்தானுக்கே விட்டுக்கொடுக்க ருஷ்யா மெல்லக் கண்ணசைத்ததே காரணம்.
அதன்பின் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் அவரது பிடிவாதமான ஆளுமை காரணமாக ஒரு மெல்லிய கௌரவத்தை நாம் கிழக்கத்தியச் சூழலில் அடைந்தோம். ஆனால் அதுகூட ருஷ்யாவின் ஆணைக்குட்பட்டு மட்டுமே.
சென்ற முக்கால்நூற்றாண்டில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை, சர்வதேச அரசியலில் அதன் நிலைப்பாடுகளை கவனித்தால் எந்தவிதமான சுயத்துவமும் இல்லாத ஓர் அடிமைநாட்டின் மனநிலையையே நாம் காணமுடியும். இலங்கைப்போரின் மானுட அழிவில் இந்தியா காட்டும் மௌனத்தை கவனிப்பவர்கள் கொதிக்கிறார்கள். ஆனால் சென்ற காலத்தில் அப்படி எத்தனை விஷயங்களில் இந்தியா வெட்கமே இல்லாத மௌனத்தைக் கடைப்பிடித்திருக்கிறதென்று கண்டால் அந்தக் கொதிப்பு பெரும் கழிவிரக்கமாகவே மாறும்.
குடிமக்களின் மரணம் பற்றிப்பேசுகிறோம். ஆனால் எத்தனை அரசியல் தலைவர்களின் மரணங்கள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன! லால்பகதூர் சாஸ்திரி 1966-இல் இந்தியா பாகிஸ்தான் போர் முடிந்து இந்தியா முன்னேறி மொத்தக் காஷ்மீரையும் வெல்லும் நிலையில் இருந்தபோது வலுக்கட்டாயமாக ருஷ்யாவுக்கு அழைக்கப்பட்டார். தாஷ்கண்ட் நகரில் அவர் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்யப்பட்டார்.
அன்றிரவே அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவருக்கு இதய அடைப்பு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. ஆனால் அவரது தனிமருத்துவர் உட்பட எவரும் அவருக்கு எந்த விதமான இதயச்சிக்கலும் இருந்ததாகச் சொல்லவில்லை. அவரது மரணம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ராஜ் நாராயண் கமிட்டி அறிக்கை எங்கே என்று தெரியாமலேயே மறைந்துபோயிற்று. ஒரு தாள் கூட மிஞ்சாமல் அது தொலைந்து போய்விட்டது என்கிறது மத்திய அரசு.
இந்திய மார்க்ஸிய இயக்கத்தின் பிதாமகனும் லெனின் நெருக்கமான நண்பரும் சிந்தனையாளருமான எம்.என்.ராய் 1954-இல் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் ஸ்டாலினை மிகக்கடுமையாக விமர்சித்துவந்த தருணம் அது. அவரது மரணம் பற்றி அவரது கட்சியான ராடிகல் ஹ்யூமனிஸ்ட் பார்ட்டி விசாரணை கோரியது. ஆனால் அப்படி எந்த விசாரணையும் நடக்கவில்லை.
இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். இவையெல்லாம் இந்தியா இறையாண்மை உடைய தேசம் என்றாலும் அதன் இறையாண்மை என்பது வல்லரசுகள் அனுமதிப்பது வரைதான் நடைமுறையில் உள்ளது என்பதற்கான ஆதாரம். இன்னும் ஒருபடி கீழே வந்தால் இந்தியாவில் எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு ஐரோப்பிய அல்லது அமெரிக்க வெள்ளைக்குடிமகன் தண்டிக்கப்பட முடியாது என்பதைக் காணலாம். அப்படி தண்டிக்கப்படும் குற்றவாளிகள் மிகமிக அபூர்வம்.
வெள்ளையர் தேசங்கள் ஒரு கறுப்புநாடு தன் குடிமக்களை விசாரணை செய்வதையே அவமதிப்பாக எண்ணுகின்றன. மிகுந்த பணிவுடன் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அந்த மனநிலையை ஏற்றுக்கொள்கின்றன. அரசும் நீதிமன்றங்களும் சேர்ந்து மிக நுட்பமான ஒரு சதி மூலம் எப்போதும் குற்றவாளிகளைத் தப்பவிட்டுவிடுகின்றன.
போஃபர்ஸ் வழக்கில் குவத்ரோச்சி தப்பியதை நாம் அறிவோம். அவருக்கு இந்திய உச்சஅரசியல்வாதிகளுடன் தொடர்புண்டு. ஆயுதபேர வல்லுநர். அவரைத் தொடுவதைப்பற்றி இந்தியா நினைக்கக்கூட முடியாது. ஆனால் இந்திய நிலப்பகுதிக்குள் விமானத்தில் ஆயுதங்களைக் கொண்டுபோட்ட புரூலியா வழக்கைப்பற்றி நினைவிருக்கிறதா?
1995-இல் நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்சன் என்னும் டென்மார்க் குடிமகனின் தலைமையில் ஒரு குழு லாட்வியா நாட்டு விமானமொன்றில் ஏராளமான ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறிக்குண்டுகள். ஒருலட்சம் முறை சுடுவதற்குண்டான குண்டுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட போர்த்தளவாடங்களை ஏற்றிக்கொண்டுவந்து மேற்குவங்கம் புரூலியா மாவட்டத்தில் அடர்காடுகள் நிறைந்த கிராமப்பகுதியில் போட்டது.
அவர்கள் போட்ட பொதிகள் சில இடம்மாறி விழவே அது அரசின் கவனத்துக்கு வந்தது. மீண்டும் ஆயுதங்களைப்போட வந்த நீல்ஸன் மாட்டிக்கொண்டார். அவரது விமானம் இந்திய விமானப்படையால் தரையிறங்கச் செய்யப்பட்டது. விமானத்தில் ஐந்து லாட்வியக் குடிமகன்கள் இருந்தனர். விமானத்தை ஓட்டிவந்தவர்கள் அவர்கள். கூடவே பீட்டர் பீளீச் என்ற பிரிட்டிஷ் குடிமகனும் அதில் இருந்தார். அவர் சர்வதேச ஆயுதவணிகர். அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.
நீல்சன் இந்தியாவிலிருந்து டென்மார்க் தூதரக உதவியுடன் தப்பிச்சென்றார். பிறர் நீதித்துறைமுன் நிறுத்தப்பட்டார்கள். விசாரணை மூடுமந்திரமாகவே நீடித்தது. குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. உண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும், ஏனென்றால் அது இந்திய இறையாண்மைக்கு எதிரான போராகவே பொருள்படும். ஆனால் ஆயுள்தண்டனை வழங்கவே நீதிமன்றம் அஞ்சி நடுங்கியது. விசாரணைக்காலம் கழித்துக்கொள்ளப்பட்டால் மிகச்சில ஆண்டுகளே அவர்கள் சிறையில் இருந்திருக்கவேண்டும்.
ஆனால் அதையே பிரிட்டிஷ் அரசு ஓர் அவமானமாக எடுத்துக்கொண்டது. மிகக்கடுமையான ராஜதந்திர நெருக்கடிகள் அளிக்கப்பட்டன. 2004-இல் பீட்டர் பிளீச் இந்திய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு ’அரசுமரியாதை’யுடன் பத்திரமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதற்கு முன்னரே, 2000-இல் லாட்வியாவின் குடிமக்களை ருஷ்ய அரசு கடுமையான வற்புறுத்தல்மூலம் திரும்பப் பெற்றது. அவர்களுக்கு இந்திய நீதிமன்றம் அளித்த தண்டனை அரசால் ரத்து செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல்முறையீடு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்றும் அந்தரத்தில் நிற்கிறது.
இந்த விசாரணைகளே கேலிக்கூத்தாக இருந்தன. கிட்டத்தட்ட ஓய்ந்து அழிந்துவிட்டிருந்த ஆனந்தமார்க்கம் என்ற ரகசிய மதக்குழுதான் அந்த ஆயுதங்களைக் கொண்டுவரச்சொன்னது என்று அரசு சொன்னதை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனந்தமார்க்கம் அரசுக்கோ அல்லது வேறெந்த அமைப்புக்கோ எதிராக பெரிய கலகம் அதுவரை செய்ததில்லை. அதன்பின்னரும் செய்ததில்லை. அவர்களுக்கு பெரிய அளவில் தொண்டர்கள்கூட இல்லை. இத்தனை ஆயுதங்கள் அவர்களுக்கு எதற்கு என்ற வினா பெரிதாக எழுந்தது.
இப்போது எல்லாருக்குமே தெளிவாகத் தெரியும், அந்த ஆயுதவீச்சுக் காலகட்டத்திற்குப் பின்னரே மேற்குவங்கம் – ஒரிசா – பிகார் பகுதிகளில் பெரிய அளவில் மாவோயிஸ்டு கிளர்ச்சிகள் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கின்றன. அவர்களிடமுள்ள அதிநவீன போர்த்தளவாடங்கள் இக்காலகட்டத்தில் இப்படி ஏராளமாக அப்பகுதியில் போடப்பட்டவைதான் என்பதும் அதன்பின் ஐரோப்பியநாடுகளோ சீனாவோ இருந்தன என்பதும் இன்று அப்பட்டமாக தெரியவந்துவிட்டன.
நீல்சன் ஒரு சர்வதேசக் குற்றவாளி. அவனை எந்த நாடு கைதுசெய்திருந்தாலும் டென்மார்க் வரவேற்றிருக்கும். ஆனால் இந்தியாவில் கறுப்பின அரசால் அவர் கைதுசெய்யப்பட்டதை அவர்கள் ஒரு தேசிய அவமானமாகவே எடுத்துக்கொண்டார்கள். குற்றவாளிகளை கைமாற்றம்செய்ய இந்தியாவுடன் சர்வதேச ஒப்பந்தம் செய்துகொண்ட நாடு டென்மார்க். ஆனால் அது அவரை ரகசியமாக தப்பவைத்து தன் நாட்டுக்குள் எடுத்துக்கொண்டது.
2000-இல் நீல்சன் டென்மார்க்கில் சுதந்திரமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவனைத் திரும்பக்கொண்டுவர இந்திய அரசு சம்பிரதாயமான முயற்சிகளை மேற்கொள்ள, டென்மார்க் அரசு சம்பிரதாயமான நடவடிக்கைகளைச் செய்ய, அதெல்லாம் அவரை அனுப்பமுடியாது என அந்நாட்டு நீதிமன்றம் கைவிரித்துவிட்டது. இந்திய நீதிமன்றங்களும் சிறையும் ‘மனிதாபிமானமற்றவை’ என அது கருதியது.
நீல்சன் டென்மார்க்கில் சுதந்திரமாக இருக்கிறான். இந்திய அரசுதான் தன்னை ஆயுதம் கொண்டுபோடச்சொன்னது என்றும், இந்தியப் பிரதமர்தான் தன்னை தப்பவைத்தார் என்றும் பேட்டிகள் கொடுத்தான். இந்திய அரசு, நீதித்துறை பற்றி மிகக்கேவலமான கருத்துக்களை ஊடகங்கள் முன் பேசினான். இன்றுவரை இந்திய அரசு நீல்சனை தொட முடியவில்லை. அவ்வப்போது சில ‘காகித ராஜதந்திர’ நடவடிக்கைகள் மட்டும்தான் நடக்கின்றன.
இப்போது கேரள மீனவர்கள் இத்தாலியக் காவலர்களால் கொல்லப்பட்டதும் நீதிமன்றத்தை அப்பட்டமாக ஏமாற்றி அவர்கள் தப்பிச்சென்றதும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது. சென்ற பிப்ரவரி 2012 அன்று எம்.வி.என்ரிகா என்ற கப்பலின் காவலர்கள் இருவர் இந்தியாவுக்குச் சொந்தமான ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை நோக்கிச் சுட்டார்கள். இரு ஒரு தமிழர் உட்பட இரு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். உடனடியாக அக்கப்பல் இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டது. இரு காவலர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.
அவர்கள் இத்தாலிய கடற்படையைச்சேர்ந்தவர்கள் [Italian Navy Vessel Protection Detachment (VPD)] என்ற அமைப்பின் ஊழியர்கள். கொல்லப்பட்ட அஜீஷ், ஜெலஸ்டைன் என்ற இரு மீனவர்களும் மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குற்றப்பின்னணி அற்றவர்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்கள் இந்திய எல்லையைத் தாண்டவுமில்லை. இத்தாலியக்கப்பல் அவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. நேராகச் சுட்டுத்தள்ளினார்கள், அவ்வளவுதான். கறுப்பர்கள் கிரிமினல்கள் என்ற இயல்பான வெள்ளைய முன்முடிவுதான் கொலைக்குக் காரணம் என அந்தவழக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் நேர்ப்பேச்சின்போது சொன்னார்.
இந்த இருவரையும் கைதுசெய்ததை இத்தாலி கடுமையாக எதிர்த்தது. அதற்கான அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என வாதிட்டது. சட்டபூர்வமாகக் குற்றவாளிகளைக் கைமாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதனால் இந்தியாவுக்கு அவர்களை விசாரிக்க எல்லா உரிமையும் உண்டு என நீதிமன்றம் சொன்னது. இத்தாலி இந்திய நீதித்துறையும் சிறைத்துறையும் ‘பிற்பட்டவை’ என வாதிட்டது.
கடைசியில் இத்தாலியத் தூதரின் சொந்த ஜாமீனின் பேரில் இருவரும் இத்தாலியத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள். தபால்வாக்குக்கு இத்தாலியில் அனுமதி இருப்பது கேரள அரசின் வழக்கறிஞரால் சுட்டிக்காட்டப்பட்டது. ஜாமீன் நிபந்தனைகள் மீறப்பட்டால் கைதுசெய்யப்படவோ பிற நடவடிக்கைகள் எடுக்கப்படவோ முடியாத தூதர் ஜாமீன் அளிக்கமுடியாதென்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை. விசாரணைக்கு வந்தாகவேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்தாலிக்கு அவர்களை அனுப்பியது இந்திய அரசு.
அத்தனைபேருக்கும் தெரிந்த விளையாட்டுதான். சென்ற மார்ச் 11 ஆம் தேதி இத்தாலிய அரசு அறிவித்துவிட்டது, அவர்கள் இனி இந்தியா வரமாட்டார்கள், விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார்கள் என. இந்திய அரசு ஜாமீன் அளித்த இத்தாலியத் தூதரை அழைத்து ‘வருத்தம்’ தெரிவித்தது. கோபத்துடன் பிரதமரைச் சந்தித்துப் புகார்செய்த கேரள எம்பிக்களிடம் ‘இதை ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்று சொன்ன பிரதமர் மறுநாளே அடித்துப்புரண்டு அப்படிச் சொல்லவே இல்லை என்று பதறினார். இன்னும் அந்தக்கப்பல் இந்தியக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அதிகபட்சம் ஆறுமாதத்துக்குள் எந்த நிபந்தனையும் இல்லாமல் அதுவும் திருப்பி அளிக்கப்படும்.
கேரள ஊடகங்கள் கொந்தளிக்கின்றன. ஒருவாரத்துக்குள் அவை அடுத்த விஷயத்துக்குத் தாவிவிடும் என இந்திய அரசுக்கும் தெரியும். ஏனென்றால் இது ஒரு புதிய கதை அல்ல. எப்போதுமே இதே கதைதான் நிகழ்கிறது. 1996-இல் இரண்டு பிரெஞ்சு குடிமகன்கள் இந்திய நிலப்பகுதியில் மின்னணுக்கருவிகளால் உளவறிந்ததற்காகவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருந்தமைக்காகவும் கொச்சி துறைமுகத்தில் கேரள அரசின் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்கள்.
பிராங்வா கிளேவல், பிலிப் எல்லி ஆகிய இருவரும் சிலமாத சிறைவாசம் முடிந்ததும் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது கேரள உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் பாரீஸ் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். பிரெஞ்சு அரசு நேரடியாகவே தலையிட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டுமென வாதாடியது. அவர்கள் திரும்பி வருவதற்கு பிரெஞ்சு அரசின் சார்பில் இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் உறுதியளித்தார். ஆனால் பாரீஸ் சென்ற அவர்கள் திரும்பவில்லை. சிபிஐ அந்தவழக்கை இண்டர்போலுக்கு சம்பிரதாயமாகக் கையளித்தது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என பிரெஞ்சு அரசு சம்பிரதாயமாக பதிலளித்தது. அவ்விஷயம் பதினாறு வருடங்களாக நீதிமன்றக் காகிதங்களில் தூசிபடிந்து கிடக்கிறது.
இத்தாலிய வீரர்களான லாட்டோரி [Massimiliano Lattore] கிரோனி [Salvatore Girone] இருவரும் நீதிமன்றத்தில் நிற்கும் காட்சி திரும்பத்திரும்ப ஊடகங்களில் வருகிறது. கொலைக்குற்றத்தில் மாட்டிக்கொண்ட பதற்றமே அவர்களிடமில்லை. சூயிங் கம் மென்றுகொண்டு இந்தியக்காவலர்களை நோக்கிக் கிண்டல்செய்து சிரித்துக்கொண்டு அலட்சியமாக நீதிமன்றத்தில் நின்றிருந்தார்கள். எல்லா வினாக்களுக்கும் மிக அலட்சியமாகவே பதிலளித்தனர். ‘மானுடப்பதரே என்னை விசாரிக்க நீ யார்?’ என்ற தேவர்களின் பாவனை.
இந்தியக் காவல்துறை சக்கரவர்த்திகளை நடத்துவதுபோல அவர்களை நடத்தியது. அவர்களிடம் பேசவே அவர்கள் அஞ்சுவதைத் தொலைக்காட்சியில் பார்க்கமுடிந்தது. ஒருமுறை ஒரு காவல் உயரதிகாரி அவர்களிடம் போகலாம் என்று சொல்லும்பொருட்டு சற்று கையை முன்னால் நீட்டிவிட்டார். கடும் கோபத்துடன் சுட்டுவிரலால் கையை எடு என அவர்களில் ஒருவர் சொன்னார். அவர்களுக்கு நன்றாகவே தெரியும் இந்தக் கறுப்புதேசம் அவர்களைத் தீண்ட சக்தியற்றது என.
.
வெள்ளையநாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாபோன்ற கையாலாகாத நாடுகளிடமிருந்து மிக எளிதில் மீட்கின்றன. ஆனால் இந்தியா தன் குடிமக்களை இலங்கை போன்ற ஒரு சின்ன நாட்டிடமிருந்துகூடக் காக்க முடிந்ததில்லை. இந்தியாவின் கடந்த முக்கால்நூற்றாண்டு வரலாற்றில் எந்த ஒரு தேசத்திலும் இந்தியக்குடிமகனுக்கு சட்டபூர்வமான தூதரக உதவிகூட கிடைத்ததில்லை. ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை அநீதியான முறையில் தண்டிக்கப்பட்ட இந்தியக்குடிமகன்களுக்காக ஒரு சம்பிரதாயமான கண்டனத்தைக்கூட இந்தியாவால் அளிக்கமுடிந்ததில்லை.
ஆமாம், இந்தியா ஒரு வாழைப்பழக்குடியரசுதான். வேண்டுமென்றால் உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழக்குடியரசின் குடிமக்கள் நாம் என பெருமைகொள்ளலாம். இந்த தேசத்தால் இதன் குடிமக்களைக் காக்கமுடியாது. வெள்ளையநாடுகளின் கோழிமுட்டை இந்தியாவின் அம்மியை உடைக்கும். சீனா கொட்டாவி விட்டால் இங்கே புயலடிக்கும்.
ஏன்? ஒன்று, சென்ற பல ஆண்டுகளாக இந்தியாவில் உண்மையான அரசியல் தலைமை கிடையாது. பல்வேறு வணிகசக்திகளின் கூட்டு சமரசத்தால் அமைந்த ஒரு பொம்மை அரசுதான் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் மதிக்கப்படக்கூடிய ஒரு தலைவர் நம்மிடமில்லை. பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் வெள்ளையர்களின் ஏவலராகப் பணியாற்றிய மன்மோகன்சிங் போன்ற ஒருவரால் ஆளப்படும் ஒரு தேசத்துக்கு அவர்களின் கண்ணில் என்ன மதிப்பிருக்கமுடியும்?
இரண்டு, எல்லா அரசியல்கட்சிகளுக்கும் நிதியளித்து மறைமுகமாக நம்மை ஆள்பவர்கள் இந்தியவணிகர்கள். அவர்களின் நலன்கள் அன்னிய நாட்டு வணிக நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்தியா அந்த வணிகத்தின் களம் மட்டுமே. தங்கள் வணிகநலன்கள் பாதிப்படைய அவர்கள் விடமாட்டார்கள். அவர்கள் வழியாக அன்னிய நாடுகள் இந்தியாமீது அழுத்தம்கொடுக்கமுடியும்.
முன்பு கேட்ட ஒரு கதை. தொலைபேசித்துறை அதிகாரி ஒருவர் வங்காளத்தில் அடர்காட்டில் சந்தால் பழங்குடிகளிடம் மாட்டிக்கொண்டார்..அவர்களின் வழிபாட்டிடத்தின் மீது கால்வைத்து மேலேறிக் கம்பி இழுத்திருந்தார் அவர். அவரைப் பிடித்துக் கட்டி இழுத்துச்சென்றார்கள். அபச்சாரத்துக்கு மரணதண்டனைகூடக் கிடைக்கலாம்.
விசாரணைக்காக சந்தால்களின் குலத்தலைவர் நகரத்தில் இருந்து வருவதை நடுங்கியபடி இவர் காத்திருந்தார். குலத்தலைவர் வந்தார், ஆனால் அவர் தொலைபேசித்துறையின் கடைநிலை ஊழியர்! ‘டேய் கட்டை அவிழ்த்துவிடுடா’ என்று அதிகாரி ஆணையிட்டார். கட்டு அவிழ்ந்ததும் அனுமதியில்லாமல் வேற்றூருக்கு வந்ததற்காக அவருக்குக் கையோடு ஒரு ‘மெமோ’வும் கொடுத்தார். இதுதான் இந்தியாவில் நடக்கிறது.