திருமுகப்பில்-கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

“ திருமுகப்பில்” வாசித்தேன். ஆதிகேசவனை சேவித்தேன். நன்றி.

ப்ரம்மாண்டத்தை சேவித்து ப்ரமித்துப் போனேன்.

இப்படியும் ஆதிகேசவனை உணர வைத்ததற்கு நமஸ்காரம் கோடி.

அந்தக் கைகளாலும், ஒடியும் கேசவனின் நீளத்தைப் புரிய வைக்க முயன்றதைப் படித்து ஆதிகேசவனும் சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

அளக்க முடியுமா அவனை? முடியாது என்பதை காளிசரன் புரிந்து கொண்டு விட்டாரே உங்கள் மொழி பெயர்ப்பில்!!

உங்கள் விளக்கமும் காளிசரனின் புரிதலும் ஆதிகேசவனின் ஆளுமையும் என் மனதில் இன்னும் கொஞ்ச நாட்கள் உலவிக் கொண்டிருக்கும்.

நல்ல அனுபவத்தைத் தந்தற்கு நன்றி.

அன்புடன்
மாலா

நகைச்சுவை – டிர்வாட்டார் டெம்பிள்

துரியம் விளக்கம் – ”கையில காசிலேண்ணாக்க அது நல்லாத்தெரியும்- முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது. நல்ல வேளை காளிச் சரனுக்குத் தமிழ் தெரியாது!!

துரியம் – நினைப்பு. நினைத்து நினைத்துப் போய் ஒன்றுமே இல்லாமல் ஆகுமே அது……..அருமையான விளக்கம்.

மாலா சௌரி

அன்புள்ள மாலா

நன்றி.

திருமுகப்பில் ஒரு பழைய நினைவு. கடவுளைக் கருமையாகக் காண்பதன் அர்த்தம் எனக்கும் புரிந்த நாள்

ஜெ

*

ஜெ

திருமுகப்பில் கதையை முன்பே வாசித்திருக்கிறேன் ,அது எனக்குப்
பிரியமான கதைகளில் ஒன்று.காரணம் நான் டிவியில் கிரிகெட் நிகழ்வுகளை
விழுந்துவிழுந்து பார்ப்பவன்.எனக்கு நேர் எதிரா ஒரு பையன்:))

என் தாத்தாவின் அப்பா பெயர் கருப்பன்,என் பெரியப்பா பெயர் கூட
அதுதான். சாரதா,கிருஷ்ணர் பெயர்கள் கூடக் கருமையை சொல்லும் பெயர்கள்னு
உங்கள் மூலம் அறிந்திருந்தேன். இருளுக்கு,கருமைக்கு,கறுத்த நிறத்திற்கு நம்
மரபில் மகத்தான இடம் இருந்திருக்கும். உங்கள் காடு நாவல் அந்தக் கருமையை
இருளைக் கொண்டாடுகிறது ,இரவு நாவலும் கூட , இந்தக் கதை சொல்வது பெரிய
தரிசனம்,இப்போதும் அதை சரிவர என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
திருவட்டார் செல்லலாம் என்றிருக்கிறேன்.

ராதாகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்
அடுத்த கட்டுரைகனி