ராமாயணக்கிளியின் குழறும் குரல் பிசிறிப் பிசிறி உதிரும் ஆடிச்சாரலுடன் கலந்து வந்து காலையிலேயே அனந்தனை எழுப்பியது. விழிப்பு வந்ததும் அனந்தன் கேட்கும் முதல் ஒலி . மென்மையான பெண் குரல் ‘அடடா! அடாடா !’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல. ‘அய்யய்யோ! அய்யய்யோ !’ என்று துயரத்துடன் புலம்புவது போல . கனவில் அந்தக்கிளியை கண்டான். அடர் பச்சை செறிந்த பலாமரத்து இலைப்புதருக்குள் இலைப்பொதி போல இருந்தது.
ராமாயணக்கிளி பலாமரத்திலோ மாமரத்திலோதான் அதிகமும் வந்து அமரும். பழங்கள் விளையும் மரத்தில். பழம் கனிந்த நாட்களில் வந்து அமர்ந்து தின்ற நினைவு. வீட்டுபறம்பின் கீழ்மூலையில் நிற்கும் ரண்டுகொம்பி பலாமரம் மிகவும் பெரிது. அதற்கு நூறுவயது. காய்ப்புப் பருவத்தில் கிளைகள் காய்க்கனத்தால் சரியும். பெருந்தடியில் கூட காய்கள் தொங்கும். சின்ன காய்கள்தான், ஆனால் முள்பரந்து வெடிக்கப்போவதுபோல விம்மியிருக்கும். முதுபலா என்றால் தேனுக்கு குறைவிருக்காது. கீழே பாளை வைத்துதான் அறுக்கவேண்டும். சுளைகளை தின்னும்போது முழங்கைவரை தேன் வழிவதனால் தேன்வருக்கை என்று அதற்குப் பெயர். ரண்டுகொம்பிப்பலாவின் கனத்த வடகிளையின் கொப்பில் வெற்றிலைப்பச்சை நிறச் சிறகுகளை இறுக்கியபடி அமர்ந்து, அடைக்காய்ச் சிவப்புள்ள வளைந்த குட்டை அலகை பிளந்து , செவ்வரி ஓடிய கழுத்தை சற்றே தூக்கி ராமாயணக்கிளி பாடியது. கழுத்தின் மென்னிறகுகள் சிலிர்த்திருந்தன. அதன் படிந்த ஈரச்சிறகுகள் வழியாக கண்ணீர் போல மழைநீர்ச்சொட்டுகள் ஒளியுடன் உருண்டு கீழே சொட்டின.
தடித்த இரு கிளைகளை விரித்த பலாமர இலைநுனிகளிலிருந்தெல்லாம் நீர்த்துளிகள் சொட்டி சொட்டி கீழ் இலைகள் மீது விழ இலைத்தகடுகள் பளபளப்புடன் அமிழ்ந்தமிழ்ந்து எழுந்தன. பறம்பு நீரொலி செய்தது. மரத்தடியின் ஒருபக்கம் நனைந்து வெண்ணிற வட்டங்களாக பாயல் படிந்த பட்டை வழியாக நீர் மௌனமாக சரிந்து பொருக்குகளில் ஒதுங்கி வழிந்திறங்கியது. கிளியின் கண்களை அவன் கண்டான். சிவந்த குன்னிமுத்துக்கள். பார்வையில்லாத இரு துளிகள். தொலைவில் ”அனந்தா!”என்று குரல் கேட்டது. கிளி அவனை திரும்பிப்பார்த்தது. அதன் கண்கள் அவனுக்கு நன்கு தெரிந்தவை. மனிதக் கண்கள் . அழகான கண்கள். அவை அவனிடம் எதையோ சொல்ல முயன்றன. அனந்தனுக்கு அது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அது மிக மிக உள்ளே இருந்தது. அதை நினைப்புக்குக் கொண்டுவர முடியவில்லை. அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் சட்டென்று அவன் தன் தட்டுபடியில் கழுத்துவரை போர்த்திக்கொண்டு சுருண்டு கிடப்பதை உணர்ந்துவிட்டான். தலையணை கீழே விழுந்திருந்தது. கால் வெளியே நீட்டிக் கொண்டு குளிர்ந்தது.
அனந்தன் காலை நீட்டி உடலை விரைத்து சோம்பல் முறித்தபடி கண்களை திறந்தான். அப்படியே மச்சை பார்த்தபடி சற்று நேரம் படுத்திருந்தான். மச்சு பழங்கால கரிய பலாமரப் பலகையினால் ஆனது.பலகைச்சட்டங்கள் மீது ஒட்டியிருந்த ஒட்டடை காற்றில் துணிப்பந்தலின் அடிப்பகுதி போல அசைந்தது.மிகச்சிறிய பந்தல். ஏதோ பல்லிக்குஞ்சுக்கு கல்யாணம். போனமாதம் கல்யாணமான ஆக்னீஸ்மேரி பல்லி மாதிரித்தான் இருந்தாள். வெளிறிய முகம், மெலிந்த கழுத்து. அவள் போர்த்திய போட்ட வெண்சல்லா வழியாக கன்னத்தின் தேமல் தெரிந்தது. ஆர்சி கோயில் சாமியார் அவளிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்க அவள் சல்லாத்துணிக்குள் முகம்குனிந்து தலையசைத்தாள். அவள் அழுதுகொண்டிருக்கிறாள் என்று அனந்தன் நினைத்தான். ஆர்சி கோயிலில் மட்டுமல்ல சிஎஸ்ஐ கோயிலிலும் திர்ப்பரப்பு கோயிலிலும் வீட்டில் கட்டிய பந்தலிலும் எங்கும் கல்யாணம் செய்துகொள்ளும் பெண்கள் அழுகிறார்கள். சிலசமயம் கண்ணீர் இருப்பதில்லை. ஆனால் கண்களும் மூக்கும் உதடுகளும் அழுதுகொண்டிருக்கும். குமாரி அக்கன், ஸ்ரீகலாசிறியம்மை எல்லாருமே கல்யாணத்தின்போது அழுதார்கள், அனந்தனுக்கு நினைவிருக்கிறது.
சாமிநாடார் மகள் அக்னீஸ் உருகிவழியும் வெள்ளை மெழுகுவத்தி போலிருந்தாள். அவள் மட்டுமல்ல, கல்யாணத்துக்கு வந்த பாதிப் பெண்களின் முகத்தில் எங்கோ ஓர் அழுகை இருந்தது. சிலர் உரக்கச் சிரித்து ,நெக்லஸ் அணிந்த கழுத்து புடைக்க பேசி ,சரியும் முக்காட்டை வளையல் குலுங்கிய கைகளால் தூக்கி தூக்கி கொண்டைமேல் போட்டு ,பரபரப்பாக இருந்தாலும் அவர்கள் அழுகிறார்கள் என்றுதான் அனந்தன் நினைத்தான்…. கல்யாணவீட்டில் பெண்குழந்தைகள் மட்டும்தான் உற்சாகமாக இருக்கிறார்கள். நிறைய பெண்குழந்தைகளுக்கு ஏராளமாக பூவைத்து கனமாக கண்ணெழுதி பெரிய பொட்டு போட்டு விடுகிறார்கள். அத்துடன் அக்கன்மாரும் மாமிகளும் அவர்களிடம் ஏதாவது தகவல்கள் சொல்லி அனுப்பிக் கொண்டே இருக்கிரார்கள். பெண்குழந்தைகள் திடீரென்று பொறுப்புகள் கிடைத்து வளர்ந்துவிட்டவை போல உணர்கின்ரன. பல்லிக்குஞ்சு கல்யாணத்தின்போது அழுமா என்ன? பல்லிகளுக்கு கல்யாணம் உண்டா? அவை மேலே ஒட்டியிருந்து கீழே மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன. பல்லிக்குத்தெரியாமல் வீட்டில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. பல்லிகள் மச்சில் பற்றி அமர்ந்துகொண்டு கீழே தொங்கிக்கிடக்கும் மனிதர்களின் உறவை வேவுபார்க்கின்றன. அதற்காகவே அவற்றின் கண்கள் கீழே வைக்கப்பட்டிருக்கின்றன. மச்சுகள்கூட பல்லிகளுக்காகவே செய்யப்பட்டுள்ளன என்று அனந்தனுக்கு தோன்றியது.
பழையகாலத்தில் வீடுகளை மூத்த பலாமரத்தால்தான் செய்வார்கள் என்று குமாரன் ஆசாரி சொன்னார். பிள்ளையும் குட்டியுமாக வீடும் புரையும் நிறைந்து வாழவேண்டுமானால் பால்மரத்தால்தான் வீடு செய்யவேண்டும். ”பிலாவு அம்மையில்லா? காலில நாலுபிள்ள இடுப்பில நாலுபிள்ள தோளில நாலுபிள்ளண்ணு வச்சிட்டு நிக்குத அம்மையாக்கும் அவ. அவளுக்க தேகமெங்கும் ஓடுதது முலைப்பாலாக்கும்..பழத்தில தேனாட்டு கனிஞ்சு நிக்குதது அந்த முலைப்பாலுல்லா? இஞ்சேருங்க , சீவுளி வச்சு சீவும்பம் நல்ல மூத்த பிலாந்தடியில அம்மைப்பாலுக்க கெச்சம் அடிக்கும் கேட்டுக்கிடுங்க…. நாலும் தெகைஞ்சு நாளெல்லாம் வாழ நல்ல பிலாவின் தடிகொண்டு செய்க வீடே… நாலுண்ணாக்க தர்மார்த்தகாமமோட்சம்… மூப்பிலாம்மாரு நல்லா சிந்திச்சு சொல்லி வச்சிட்டுண்டு கொச்சப்பியே” குமாரனாசாரி கொட்டுவடியால் தட் தட் தட் என்று அடித்து விட்டு சொன்னார். ”அந்த சிற்றுளிய எடுங்க பாப்பம்….ஆ… அதுதான்…. தேறிப்போட்டே… அப்பி வருதா, தொளிலு சொல்லி தாறேன். ஆசாரிப்பணி நல்ல வற்கத்துள்ளதாக்கும். ஒரு பாவம் இல்ல. ஒரு கள்ளம் இல்ல.கச்சேரியில செண்ணு எழுத்துகுத்து நடத்துத மாதிரி பாவங்களுக்க சாபத்த வாரி தலையிலே வைக்குத சோலி இல்ல…. இது தேவேந்திரனுக்க மகன் விஸ்வகர்மா உண்டாக்கின தொளிலாக்கும் கேட்டுதா?”
அனந்தன் ஆவலுடன் முன்னகர்ந்து அமர்ந்து ” உள்ளதா ஆசாரியே ? சொல்லிக்குடுப்பீரா?” என்றான். சிற்றுளியை இருமுறை பொறிபறக்க தீட்டியபடி ”கொள்ளாம். நாயரு ஆசாரியானா பின்ன ஆசாரி என்ன ஆவுயது? மண்ணு சொமக்க போவணுமோ? செண்ணு சோலியப்பாக்கணும் அப்பியே ”. ஆசாரி எச்சில் வராமல் எட்டி துப்பினார். ”அப்பிக்கு எளுதியிட்டுள்ளது எளுத்தும் மசியுமாக்கும். அத இனியிப்பம் தேவேந்திரனுக்க மூத்தப்பன் பிரம்மா நினைச்சாலும் மாத்த முடியாது….”. புஜச்சதை இறுகி அதிர சிற்றுளியை கொட்டுவடியால் அழுத்தி தட்டி மெல்லிய மரச்சுருளை சுருட்டி எழுப்பினார். காப்பியில் போட அம்மா கத்தியால் வருடித் திரட்டும் கருப்பட்டிச் சீவல்போன்ற அரக்கு மணம் எழும் சுருள்.
சமையலறையில் காயும் கருப்பட்டி காப்பியின் மணத்தை ஏற்றபடி அனந்தன் போர்வையை காலால் உதறி எழுந்தான். இடையில் சரிந்த கால்சட்டையை இழுத்து இருமுனைகளையும் சுருட்டி முடிந்து வயிற்றை எக்கி உள்ளே செருகினான். மரச்சட்டங்கள் போட்ட சன்னல் வழியாக ஈரமான குளிர்ந்த காற்று ஒரு அலையாக வந்து கொடியில்தொங்கிய துணிகளை அசைத்து கதவினூடாக அப்பால் சென்றது. ஒட்டடைகள் அசைய மச்சு அலையில் தெரியும் அடிப்பாறை போல நெளிந்தது. வெளியே வெயில் வரவில்லை. கர்கிடகமாதம் அனேகமாக வெயிலே வருவதில்லை. எந்நேரமும் மங்கிய வானிலிருந்து மெல்லிய ஆடிச்சாரல் பெய்துகொண்டிருக்கும். அபூர்வமாக வரும் வெயில்கூட சாரலின் சிலந்திவலைத் திரைக்கு உள்ளேதான் வெம்மையில்லாமல் பெய்யும். பறம்புத்து மரக்கூட்டங்களின் நடுவே கனத்த சொட்டுகள் இளமழையாக பொழிந்துகொண்டிருக்கும்.
ஓட்டுக்கூரை விளிம்புகள் உருகி கனத்து கண்ணாடித்துளிகளாக தயங்கி சொட்டி விழும் இடம் குழிகளாக மாறி நேர்கோடாக நீண்டு கூரை மடிப்பில் புத்தக முனைபோல மடிந்து செல்லும். நீர்த்துளிப் பிசிர்கள்தெறிக்கும் மண் மென்மையாக சிலிர்த்து குளிரடிக்கும்போது பசுவின் சருமம் புல்லரித்திருப்பதுபோலிருக்கும். அனந்தனுக்கு அந்த மென்மணல்பொருக்கில் கால்பதித்து தடம்வைப்பது பிடிக்கும். பசுவின் புல்லரிப்பில் விரலால் தன் பெயர் எழுதவும் பிடிக்கும். எழுதி முடிக்கும்போதே சிவப்பி சிலிர்த்து அதை அழித்துவிடும். மண் சிலிர்ப்பதில்லை. பொறுமையாக அனந்தன் மேலும் கால்பதிக்க காத்துக் கிடக்கும். முகப்பு முற்றத்தில் சிலசமயம் அப்பாவின் காலச்சு சீராகநடந்து தொழுத்திற்கு போயிருப்பது தெரியும். அப்பா அதிகாலையிலேயே எழுந்து கட்டன் கருப்பட்டிக்காப்பி குடித்துவிட்டு தொழுத்திற்குப் போயிருப்பார். விடியும்வரை அங்குதான் இருப்பார். கூடவே கருப்பனின் நான்குவிரல் தடமும் இருக்கும். அப்பா போகுமிடமெல்லாம் நாக்கை வளைத்து மூக்கை தடவி சப்பு கொட்டியபடி அதுவும் போகும். அப்பா அதனிடம் பேசுவதேயில்லை. கையைநீட்டி உறுமுவார், அவர் உத்தேசித்ததை அதுசெய்யும். அனந்தனுக்குத்தான் அப்பா பேசுவதுகூட ஒருதடவை கேட்டால் புரிவதில்லை. அவர் அவனிடம் பேசினாலே அவனுக்கு மூத்திரப்பை கூசி கால்கள் தளரும்.
அனந்தன் மாமரத்தடிக்குச் சென்று மரத்தடிமீது மூத்திரம் பெய்தான். மரத்தில் பற்றி ஏறிய சிதல்புற்று கரைந்து வழிந்தது. கிளைகிளையாக விரிந்து மாமரத்தின் முதலைச்செதில்களை மூடி பரவிய மென்மையான செம்மண் சுவர். ஆனால் அவற்றைக் கட்டிய சிதலாசான்கள் உள்ளே இல்லை. நாகப்பறம்பு வலியமாடம்பிக் கொட்டாரம் போல காலியான வீடு. ஆனால் கைவிட்டுச்சென்ற வீடு அல்ல. அனந்தன் அதை நேற்றுத்தான் மூத்திரத்தால் கரைத்தான். இரவோடிரவாக அதை சிதல்கள் மீண்டும் கட்டிவிட்டிருக்கின்றன. இருட்டில் அவற்றுக்கு கண்தெரியும். சிதல்களெல்லாம் வெள்ளைக்காரர்கள்போல என்று பத்மம் அவனிடம் சொன்னாள். திருவனந்தபுரம் வலிய ரெயிலாப்பீஸ், காழ்ச்சை பங்களாவு, கனகக்குந்நு கொட்டாரம் எல்லாவற்றையும் கட்டியது அவர்கள்தான். பேச்சிபப்றை அணையைக்கூட செம்பந்துரைதான் கட்டினார். வெள்ளைக்காரர்களுக்கு இருட்டில் நன்றாக கண்தெரியும். வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றையும் தின்பார்கள். கல்லையும் மண்ணையும் மட்டும் தின்ன முடியாது. கல்லையும் மண்ணையும் தின்ன அருவிக்கரை யட்சியின் பூதங்களால் மட்டுமே முடியும். ஏனென்றால் அவற்றின் பற்கள் இரும்பாலானவை.
ஒரு வெண்சிதலை சுட்டுவிரலில் எடுத்து பத்மம் அனந்தனிடம் காட்டினாள். ”பாத்தயா அனந்தா? எம்பிடு வெள்ள? சவம் வெள்ளக்காரன்லா….?” அனந்தன் பார்த்தபோது துரை அவளது சிவந்த சுட்டுவிரல்நுனியில் பெரிய வயிற்றை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி பின்னால் நகர்ந்துகொண்டிருந்தார். அவனுக்கு துரையை நினைக்க பாவமாக இருந்தது. ”வெள்ளையனே வெளியேறு” என்றபடி பத்மம் குனிந்து பெரிய சிவந்த உதடுகளை செம்பருத்தி இதழ் மாதிரி சுருக்கம் விழ குவித்து உப் என்று ஊதினாள். துரை பறந்து மண்ணில் விழுந்தார். அனந்தன் மண்ணில் தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை/”பாவம்லா?” என்றான். ”என்ன பாவம்? நம்ம மகாதேவர் கோயிலில வடக்குத்தூணப்பாத்தியா, இதுக தின்னு தின்னு அப்டியே உடைஞ்சு நிக்குது. சாமி கோயில இடிக்கலாமா?” அனந்தனுக்கு மேலும் அனுதாபம்தான் ஏற்பட்டது. எவ்வளவு பசி இருந்தால் மகாதேவர் கோயில் தூணையே தின்னத் தோன்றும். ”இது எப்டி வீட்டுக்கு போவும்?” பத்மம் ”ருசி பாத்து பாத்து போயிரும்…. எங்க வீட்டுக்கு வாறியா? அம்மை இல்ல. ஆத்துக்கு போயிருக்கா. தாத்தா ஒறங்குகா. நான் உனக்கு மச்சிலேருந்து கண்ணிமாங்கா எடுத்து தாறேன்.”
சிதல்கள் இருட்டில் ஏன் வேலைசெய்யவேண்டும்? இருட்டில் அவன் தூங்கியபிறகு ஒரு உலகம் விழித்தெழுகிறது. சிதல்மாளிகைகள் மெல்ல வளர்ந்தெழுகின்றன. பூச்சிகள் பாடியபடி தூங்கி விழிக்கின்றன. பாம்புகள் ஊர்ந்து மண்ணில் தடமெழுதிச்செல்கின்றன. பெயரறியா பறவைகள் மரங்களின் அடியில் எச்சமிட்டு நிறைக்கின்றன. புரிந்துகொள்ளமுடியாத காலடிகளை பறம்புப் புதர்களுக்குள் விட்டுச்செல்லும் சிறு பிராணிகள் சலசலத்து ஓடிவிளையாடுகின்றன. அனந்தன் வாழும் உலகில் அவன் காணாதவைதான் பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன. மரங்களுக்குமேலே மண்ணுக்கு கீழே இருட்டில் ஆழத்தில் எவ்வளவோ வாழ்க்கைகள். அனந்தனுக்கு எல்லா இடங்களிலும் போக ஆசைதான். ஆனால் அவனுக்கு இருட்டு என்றாலே பயம். இருட்டு என்பது அவனுக்குத்தெரியாத விஷயங்களினால் ஆன ஒரு கனத்த படலம். இருட்டுக்குள் எல்லா இடங்களிலும் கூர்ந்து பார்க்கும் கண்கள் நிறைவதை அவனுடைய முதுகும் பின்தலையும் உணரும். ஆகவே படுக்கப்போகும்முன் விளக்கின் ஒளிபடும் இடத்திலேயே ஒன்றுக்கு இருந்துவிட்டு ஓடிவந்துவிடுவான். சமையலறை சன்னல் வழியாகத்தான் வெளிச்சம் சிவந்த புகைச்சட்டம்போல நீட்டி வைக்கோல்போர் அருகே சரிந்து செவ்வகமாக விழுந்து சில சருகுகளை ஒளிரச்செய்தபடி கூழாங்கற்களின் நிழல்களை நீளச் செய்தபடி கிடக்கும். அனந்தன் அதில் சென்று நின்று கொள்வான். அவன் உடல்மட்டும் ஒளியில் சிவந்து தெரியும். அவனைச்சுற்றி அவன் அறியாத பேருலகம் அவனை முறைத்து பார்த்தபடி ரீங்கரித்து சுழன்றுவரும். அப்பப்பப் என்று தொலைவில் ஒரு பறவை எக்காளமிடும். சரியும் வானில் மிதந்து கிடக்கும் நட்சத்திர குமிழிகள். சிலசமயம் கீற்று நிலாவின் ஒளிபட்டு சற்று துலங்கும் மேகங்கள். தொழுத்தின் கூரையின் சரிவில் சரசரவென ஓடி இறங்கும் எதுவோ ஒன்று.
அறியமுடியாதவை எவ்வளவு அச்சம் தருகின்றன! ஆனால் அவன் எப்போதும் அறியாதவற்றைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான். அனந்தன் அதை வியப்புடன் எண்ணிக் கொள்வான். அவன் நினைப்பது எப்போதும் அவனுக்குத்தெரியாதவற்றைப்பற்றித்தான். தெரிந்தவற்றை பற்றி நினைக்கவேண்டுமென்றால் கூட அவை தெரியாதவற்றுடன் கலந்து வரவேண்டும். வானத்தில் பறக்கும் விமானங்கள் நீர்மூழ்கிக்கப்பல்கள் யட்சிகள் பேய்கள் அமெரிக்கா ஆப்ரிக்கா இமயமலை கங்கை ஆறு நெப்போலியன்…. எவ்வளவு விஷயங்கள். அவ்வளவு விஷயங்களையும் எப்படி தெரிந்துகொள்ள முடியும்? தெரிந்துகொள்ளும்தோறும் அவை வளர்கின்றன. சிதல்கள் தின்பது போல ஓயாமல் ஒழியாமல் இரவெல்லாம்
அனந்தனுக்கு ஒரு வெண்சிதலாக மாறி எல்லாவற்றையும் இரவெல்லாம் தின்றபடியே இருக்கவேண்டுமென்று பட்டது. சிதல்களுக்கு பசி அடங்கவே அடங்காது என்றாள் பத்மம். சிதல்கள் எதையும் தின்று பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும்,காரணம் அவற்றுக்கு கண் கிடையாது காது கிடையாது. பிரம்மா மண்ணை கொஞ்சம் எடுத்து தீயை விட்டு குழைத்து அவற்றை படைத்து கீழே விட்டதும் அவை பிரம்மாவின் காலை கடித்து பார்த்தன. பிரம்மா கோபம் கொண்டு சாபம் போட்டார், உங்களுக்கு ஒருநாளும் ஒருகணமும் பசி தீராமலிருக்கட்டும். சிதல்கள் அழுதபடி பிரம்மாவிடம் சாபமோட்சம் கேட்டன. தீராப்பசிக்கு உணவு எங்கே தேடுவோம் என்றன. உயிரில்லாத எல்லாமே உங்களுக்கு உணவாகட்டும் என்று பிரம்மா சொன்னார். அதன்பின் சிதல்கள் உலகையே தின்ன ஆரம்பித்தன. உலகத்தில் உயிர் முன்னால் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொட்டுபின்னால் சிதல்கள் துரத்திக்கொண்டே இருக்கின்றன. உயிர்கொஞ்சம் நின்றால்கூட சிதல்கள் ஜெயித்துவிடும். சிதல்களுக்குள் அக்கினி எரிந்துகொண்டே இருக்கிறது. அது வடக்கே வானத்தில் எரியும் ஊழித்தீ. தெற்கே மயானங்களில் எரியும் தீயும் அதுதான்.
பத்மத்தின் தாத்தா ஜோசியர் போத்தி அதேபோல நிறையக் கதைகள் சொல்வார். அவரது பழுப்புநிறத்தில் ஓரங்கள் சுருண்டு எழுந்த கனத்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஆங்காங்கே சிதலரித்திருப்பதை அனந்தன் கண்டிருக்கிறான். ”ஓலையையும் தாளையும்தான் சிதலரிக்கும் மக்கா. சத்தியமாட்டு சொன்ன சொல்லு சிதலரிக்காது. அதாக்கும் சாஸ்திரம்” ஜோசியர் சொன்னார். அனந்தனுக்கு சிதல்கள் தூங்கவே முடியாது என்றுபட்டது. ஒவ்வொருநாளும் மரங்களில் இலைகள் விரிகின்றன. ஒவ்வொருநாளும் காடு வளர்கிறது. சிதல்களுக்கு தூக்கம் இருக்க வாய்ப்பே இல்லை. அனந்தன் குனிந்து ஒரு மாஞ்சருகால் சிதல்மண் படலத்தை சுரண்டினான். அடியில் எதுவுமில்லை. உள்ளே எங்கோ அவை வேலை செய்கின்றன. கூட்டாக, அமைதியாக. தூங்கவே தூங்காமல். அனந்தனுக்கு அவன் தூங்கியதுபற்றி வருத்தம் ஏற்பட்டது. இரவில் தூங்காமலிருக்க முடிந்தால் எத்தனை நேரம் கிடைக்கும். எல்லாவற்றையும் பார்க்கலாம். எல்லா இடங்களுக்கும் போய்விடலாம்.
கற்கிடகத்தில் காலைநேரம் மிக அமைதியாக இருக்கிறது. முந்தைய இரவெல்லாம் அடித்த பேய்க்காற்றை நினைவுபடுத்துவதனால் வரும் அமைதி அது. மதியம் தாண்டினால்தான் காற்றுவீசத்தொடங்கும். ”ஆடிக்காத்தில அம்மையும் பறப்பாள்லா?”என்று தங்கம்மைநாடாத்தி பாம்படம் தொங்கி கழுத்தில் தட்ட தலையை ஆட்டியபடி சொல்லி ,அழுந்தச் சுருட்டிய வெற்றிலையை வாய்க்குள் திணித்தாள். ”ஆடியில எல தொளியும், அடுக்கடுக்கா தல சரியும்ணாக்கும் பாட்டு அம்மிங்கிரே….பாட்டில எல்லாம் சொல்லியிட்டுட்டுண்டு. இப்பம் இது எத்திராமத்த சாவு தெரியுமா? ஆத்தியத்த தல நம்ம ராமக்கோனாராக்கும். அது பின்ன நெத்து வத்தின மரம். வயது தொண்ணூறு களிஞ்சாச்சு. சித்திரகுத்தனுக்க பற்றுகணக்கில கொறெ நாளாட்டு பிடியும் வலியுமாட்டு கெடக்காரு. போனா அந்தமட்டும் எடம் லாபம்ணு வையுங்க… இந்நேற்று நம்ம அறுதலி எசக்கிக்க ஒரே பய சந்திரன் பனிச்சுகெடந்து செத்தான். அவளுக்க கரச்சில காதால கேக்க பளுதில்ல. சங்கில கொள்ளிய வச்சு தீட்டுதமாதிரி இருக்குவு…. ஒக்கே விதியாக்கும். ஆடி வந்தா ஆடிஅடங்கித்தான் போவும் . அதாக்கும் சாத்திரம்…”
காலையிலேயே கடன்வாங்கவந்த பங்கஜாட்சி மாமி ”… சாகிறவங்களுக்கு ஒண்ணும் அறியாண்டாமே…. இருக்கிறவிகளுக்குதானே கும்பி நிண்ணு எரியும். அம்மே மண்டைக்காட்டு பகவதியம்மே இந்த கர்க்கிடகம் ஒண்ணு கழிஞ்சு கிட்டினா உனக்கு நான் ஒரு எண்ணவிளக்கு சாத்துவேனெடியே ”என்று திரும்பி தலைமீது கைதூக்கிக் கும்பிட்டுவிட்டு ”அரியுண்டெங்கி ஒரு உரி அரி தாடி விசாலமே. உனக்க பேரச்சொல்லி பிள்ளையளுக்க வயத்த நனைக்குதேன். உன்னாணை விசாலமே அரிவெள்ளம் உள்ள செண்ணு நாலு நாளாச்சு. கெழங்கும் எலையுமா திண்ணு திண்ணு கொடலு உப்பிப்போச்சு ” என்றாள். அம்மா ஒன்றும் பேசாமல் உள்ளே போய் முறத்தில் பொடியரிசி கொண்டுவந்து பக்கத்தில் வைத்தாள். ”நல்லாயிருப்பேடி. உனக்கு மண்டைக்காட்டம்மை ஒரு குறையும் வைக்கமாட்டா. கெளவியாக்கும் காலத்த சொன்னது, விசாலாட்சிக்கிட்ட செண்ணு கேளு , அன்னலெச்சுமியாக்கும் இல்லேண்ணு சொல்லமாட்டாண்ணு. நான் இத எப்பம் பைசா கிட்டுமோ அப்பம் தந்திருவேன்…” .பங்கஜாட்சிமாமி கிளம்பி போனபின் தங்கம்மை ”இது எட்டாமத்த மட்டமாக்கும் அரி கடம் வாங்குதது ” என்றாள். ”போட்டு நாடாத்தியே பொடியரிதானே. வளரும் பிள்ளைள்லா, சுடுகஞ்சிகுடிக்கட்டும் ”என்றாள் அம்மா.
மாலை கனக்கும்தோறும் இருளுடன் சேர்ந்து சாரலும் காற்றும் கனத்து வலுக்கும். மரங்கள் உய்ய் உய்ய் என்று ஊளையிட்டபடி இலைகளை மறித்து நிறம்மாறி தெற்குநோக்கிச்சரிந்து அதிரும். பறக்கும் காகங்களின் சிறகுகள் கூட கலைந்து சாம்பல் தெரியும். வீட்டுக்குள் சாரல் தெறிக்கும் என்று அப்பா ஓடி ஓடி சன்னல்கதவுகளைச் சாத்துவார். ஆனாலும் மண் தேய்த்து வெள்ளைபூசிய சுவர்கள் குளிர்ந்து சிலிர்த்து நிற்கும். தோள் சாய்த்து அமர்ந்தால் சில்லென்று தொட்டு அதிரவைக்கும். இரவில் இருட்டுக்குள் காற்றின் ஓலம் சுவர்களை அறையும். தட் தடால் என்று கூரையில் தொங்கவிட்ட ஏணியோ புறமாடத்தில் வைத்த காக்கோடையோ தொழுத்தில் சாய்த்த ஏர்க்கொழுவோ சரிந்தோ முட்டியோ ஒலிக்கும். விடிகாலையில் விழிப்புவந்தால் நினைவில் அந்த ஒலி நீடிக்க ஒருகணம் திகைத்தபின்னர்தான் அமைதியை உணர முடியும். குளிருக்கு உக்கிய பறவை ஒன்றின் குறுகலையும் துளி சொட்டும் ஒலியையும் கேட்டு வெளியே இருட்டு பரவிய பறம்பு அப்போது எப்படி இருக்கும் என்று எண்ணி படுத்திருப்பான் .
காலையில் கதவைத்திறந்தால் படிவரை சருகுகளும் ஒடிந்த பச்சைக்கிளைகளும் சிதறிய முற்றம் கண்டு அம்மா ”எனக்கு வய்ய, என்றெ தேவியே…நான் போய் சாவுறேன்”என்று புலம்புவாள். சென்றவாரம் சாக்கோட்டை பகவதிக்கு கொடைகொடுக்க போன அன்றுதான் அனந்தன் அதிகாலையில் எழுந்து முற்றத்தைப்பார்த்தான். ஈரத்தரையில் இறங்கி ஓடி இலைகளை பொறுக்கினான். மிசிறுப் பொட்டல்ங்கள் அப்படியே தூக்கிவீசப்பட்டிருந்தன. அவன் கால்களில் கணத்தில் படர்தேறிய அவை அமில மணம் எழுப்பி வயிற்றை அழுத்தி கடித்தன. அவன் மிசிறுடன் ஓடிவந்து திண்ணையில் ஏறி அம்மாவை கட்டிக் கொண்டான். அம்மா அவனை பிடித்து தள்ளி நிறுத்தி மிசிறை தட்டினாள். ”என்ன ஏதுண்ணு பாக்காம சாடி எறங்கு… வர்க்கத்து கெட்ட சவம்….”என்று தலைமயிரை முண்டு நுனியால் துடைத்தாள். அவன் வாயில் பட்ட மிசிறு புளித்தது. ”மிசிறு எதுக்கு புளிக்குது அம்மா?” .அம்மா குரலைத்தாழ்த்தி ”போய் கேளு போ… சோலியும் தொளிலும் இல்லாம தொளுத்தில குத்தி இருக்காருல்லா? ” என்றபடி தென்னை ஈர்க்கில் துரப்பையை சுழற்றி இறுக்கி அடிப்பகுதியை கையால் அடித்து நிரப்பாக்கி குனிந்து கூட்ட ஆரம்பித்தாள்.
அம்மாவின் வயிறு கனமாக தொங்கியது. கமுகம் பாளையின் வரிகள்போல சருமம் விரிசல்விரிசலாக தெரிந்தது. உள்ளே ஒரு குழந்தை இருக்கிறது. பலாமரத்தில் குட்டிக்காகாய் பிறந்து வளர்வதுபோல அது உள்ளே வளர்கிறது. கனமாக ஆகும்போது அதன் தண்டு தாங்காமல் உடையும். உடனே அது வெளியே வந்துவிடும். அனந்தன் அம்மாவின் வயிற்று விரிசலைத் தொட்டான். அம்மா கூசி விலகி ”சீ கைய எடுடா” என்றாள். ஒருவேளை வயிறு விரிசல்விட்டு கிழிந்து குழந்தை வெளியே வருமா? ”வயறு கிளிஞ்சா அம்மா பிள்ள வரும்?” .அம்மா சிரித்தபடி அவன் கையைப் பிடித்து வயிற்றின்மீது வைத்தாள். ”கிளியாமத்தான் வெளியே வரும். தொட்டுபாரு, தங்கச்சி சவிட்டுதது தெரியுதா?” அனந்தன் கைவழியாக கவனம் கூர்ந்தான். ஒன்றும் தெரியவில்லை. மென்மையான சருமத்துக்குள் அப்படி கடினமாக இறுக்கமாக இருப்பதுதான் வியப்பாக இருந்தது. ”தங்கச்சியா அம்மா?” ”பின்னே?” ” நீ எப்டி பாத்தே?” . ”அதெல்லாம் தெரியும்டா ” ”எப்டி?”. ”’கனவில தெரியும்”
அனந்தன் அதைப்புரிந்துகொண்டான். அம்மாவுக்கு நிறைய கனவுகள் வரும். அம்மா பிறந்து வளர்ந்த நட்டாலம் வீடும் அங்கே முன்பு இருந்த பசுவும் கன்றும் அம்மாவின் செத்துப்போன அம்மாவும் அப்பாவும் எல்லாரும் கனவில் வருவார்கள். அம்மாவின் கனவில் மரங்களும் செடிகளும்கூட தெளிவாகவே வரும். கனவு கண்டால் அம்மா காலையில் அழுது தடித்த கண்களுடன் இருப்பாள். ஏதாவ்து கேட்டால் திட்டுவாள். சிலசமயம் அப்படியே இழுத்து வெங்காயம் மணக்கும் முண்டுடன் சேர்த்து அணைத்துக் கொள்வாள். அம்மா கூட்டும்போது மேலே போர்த்த நீலக்கரையிட்ட வெள்ளை நேரியதுக்குள் அவள் முலைகள் அசைந்தன. கழுத்தில் புதிதாக எடுத்துப்போட்ட இரட்டைவட அவல்மாலை ஜம்பருக்குள் இருந்து வெளியே வந்து தொங்கி ஆடியது. அதில் நிறைய ஊக்குகள் தொங்கின. ”அம்மா எனக்கு காலில மூள்ளு இருக்கு. ஊக்கு கொண்டா”. அம்மா திரும்பாமலேயே ” நான் அப்றமா முள்ளு எடுத்துவிடுறேன்… ”என்றாள். அம்மா மத்தியான்னம் தூங்கும்போது ஒரு ஊக்கு எடுப்பது என்று அனந்தன் முடிவுசெய்தான்.
குனிந்து கூட்டும்போது பக்கவாட்டுக் காட்சியில் அம்மாவின் மூன்றுகல் மூக்குத்தி மெல்லிதாக சுடர்ந்தது. அம்மா பித்தளைப் பாத்திரத்தின் நிறம். சின்ன செம்பு போல முகம். மூக்குத்தி அதில் ஒரு துளி தண்ணீர்போல. அம்மாவின் காதுக்கு கீழே மென்மையான மயிர் பரவல் . முகம் கழுவியிருந்ததால் அவை ஒட்டி நீலநிறவரிகள் போல கன்னத்தில் படர்ந்திருந்தன. ஜம்பரின் கை அழுத்தி பிடித்த புஜங்களில் மென்மையான தசை அவள் கூட்டும்போது அசைந்தது. ஜம்பர் கை அம்மா நின்றபோது இறுகப் பிடித்திருந்த இடம் குனிந்தபோது ஜம்பர் மேலேறி சிவந்த வளையமாக புஜத்தில் தெரிந்ததை அனந்தன் கூர்ந்து பார்த்தான். குனிந்தபோது இடுப்பில் முண்டு இறுகப்பற்றிய இடமும் அதேபோல சிவந்த தடமாக தெரிந்தது. கண்களுக்கு கீழே சற்று கருமை படர்ந்து இமைகள் வெங்காயச்சருகு போல சிவந்து கன்னங்கள் கனத்து சில முகப்பருக்கள் சிவந்த புள்ளிகளாக விழுந்து அம்மா அவன் அதுவரை பார்க்காத வேறு எவரோ போல இருந்தாள். ஆனால் அவனுக்கு அம்மாவை அப்போது மிகவும் பிடித்திருந்தது.
அம்மா எருமைக்குப் பால்கறக்கும் ஒலி போல தொரப்பை உரசிச் சீற கூட்டினாள். ஈரத்தரையில் ஈர்க்கில் நுனிகள் வரிவரியாக வரைந்து சென்றன. அனந்தன் ஓடிப்போய் அந்த வரிகள் மீது தன் கால்களை பதித்து தடம் வைத்தான். அங்கே நின்று பார்த்தபோது அரைவட்ட அடுக்குகளாக தொரப்பைத்தடம் பதிந்த முற்றம் கையால் வீசி வீசிச் சாணிமெழுகிய களமுற்றம்போல தெரிந்தது. மெல்லிய காற்றில் அம்மாவின் காதோரமயிற்சுருள் அசைந்தது. முதுகில் கிடந்த கூந்தல்கற்றை மறுபக்கம் சரிந்தது. அம்மா நேர்று சூடிய தாழம்பூவின் மடல் கசங்கி கூந்தலிழைகளில் சிக்கி தொங்கியது. அம்மா இப்போதெல்லாம் தினமும் வெற்றிலையும் வாசனைப்புகையிலையும் போட்டுக் கொள்கிறாள். சுள்ளென்று வெயில் அடித்த மேட மாதத்தில் அம்மாவுக்கு ஒரே வாந்தி. பக்கத்து வீட்டில் தேங்காய்குழம்பு கொதித்தால்கூட குமட்டிக்கொண்டு கொல்லைப்பக்கமாக ஓடுவாள். அம்மிணி மாமிதான் தினமும் வந்து சமைத்துவிட்டுப்போவாள். தினமும் புளிக்காய்ச்சல், ரசம். மீன்கறியே இல்லை. மீனுக்கு தேங்காய் அரைத்தாலே அம்மாவுக்கு வாந்தி. ஆனால் ரோஸம்மா கொண்டுவரும் நெத்திலிக் கருவாட்டை பார்த்தால் ஓடிபோய் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வாள். கூடையிலிருந்தே எடுத்து பச்சையாக மென்று சாப்பிடுவாள். ஒன்றை தானும் தின்று பார்க்கலாமென்று அனந்தன் எடுத்தபோது ரோசம்மா தடுத்தாள். ”அப்பி என்ன பிள்ளைக்கு பாலா குடுக்கபோவுது? அங்கிண வையுங்க” என்று சொன்னாள்.
அம்மா ஒரு பிள்ளைக்குப் பால் கொடுக்கப்போகிறாள் என்ற விஷயம் அப்போதுதான் அனந்தனுக்குத் தெரிந்தது. எந்தப் பிள்ளைக்கு? அனந்தனுக்கு பாலெல்லாம் பிடிக்காது. அம்மாவும் அவன் பக்கத்திலேபடுத்து முலைகளை தொட்டால் அம்மா உடனே பிடித்து விலக்கிவிடுகிறாள். பிள்ளை எங்கே? யாருக்கு பால்கொடுக்கப்போகிறாள்? பத்மம்தான் விளக்கினாள். அம்மாவின் வயிற்றுக்குள் குழந்தை வளர்கிறது. சேவல்கோழி பெட்டைக்கோழியை அடக்கி ஏறி மிதித்து கொத்தினால் பெட்டைக்கோழி முட்டை போடும். அதிபோல அப்பா அம்மாவை பிடித்து மிதித்து ஒரு கடி கொடுத்திருக்கிறார். உடனே குழந்தை. ”அப்பா உன்னை கடிச்சதனால்தானே உனக்கு குழந்தை பிறக்குது? ” அனந்தன் அம்மாவிடம் கேட்டான். ”யாருடா சொன்னது?” .”எனக்குத்தெரியும். பத்மம் சொன்னா” அம்மா சிரித்தபடி பேசாமலிருந்தாள். ”அப்பா சீத்த அப்பா” என்றான் அனந்தன். ”பேசாம வா” என்றாள் அம்மா. அனந்தன் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான். அம்மாவின் விரல்கள் பார்க்கத்தான் சிவப்பாக இருக்கும், தொட்டால் மரம்போல நல்ல சொரசொரப்பு. பாத்திரம் தேய்த்து அம்மி அரைத்து காய்த்துவிட்டன.
வெற்றிலை போட்ட அம்மாவின் உதடுகள் நன்றாகச் சிவந்து கீழுதடு சற்று கனத்து மூச்சுவிடும்போது வெற்றிலை மணமும் வேறு ஒரு தழைவாசமும் சேர்ந்து அடித்தது. அனந்தனுக்கு சட்டை போட்டு ஊக்கு குத்திவிடும்போதுதான் அம்மாவின் மூச்சு அவன் மீது படும். அனந்தன் அம்மாவின் மூக்குத்தியை தொட்டுப்பார்ப்பதும் அப்போதுதான். அம்மா எழுந்து நின்று இடுப்பில் கையை வைத்து முதுகை நிமிர்த்தி ”ய்யம்மா”என்றாள். முகம் வியர்த்து நெற்றியிலும் மூக்குநுனியிலும் மேலுதட்டிலும் வியர்வை படர்ந்திருந்தது. முழங்கையால் நெற்றிமயிரை ஒதுக்கினாள். முகம் சிவந்து அடுப்பில் வைத்து சூடான செம்புத்தவலை போலிருந்தது. மூச்சுவாங்கியபடி நாவால் உதடுகளை வருடினாள். நேரியது விலகி இடமார்பு பெரிதாகத் தெரிந்தது. தங்கச்சிக்கு பால் கொடுப்பதற்காக என்று அனந்தன் நினைத்துக் கொண்டான். அம்மா மிச்சமிருக்கும் முற்றத்தைப் பார்த்தாள். பெருமூச்சுடன் மீண்டும் குனிந்து கூட்ட ஆரம்பித்தாள். அனந்தன் ஒரு பலாஇலையை எடுத்து சுருட்டி நுனியை சப்பி ஊதினான். ஊதல் ஒலி வரவில்லை. மெல்லிய சீறல் மட்டும் கேட்டது. அதை நேற்றிரவு கேட்ட காற்றின் ஓலமாக கற்பனைசெய்துகொண்டான்.
காலையில் அந்தக் காற்றெல்லாம் எங்கே போகிறது? வடக்கே மலையிலிருந்துதான் காற்று கிளம்பி வருகிறது. பெரிய ஆறுபோல பாய்ந்து வீட்டையும் மரங்களையும் கோயிலையும் மூழ்கடித்து தெற்குநோக்கிச்செல்கிறது. வடக்கே பேச்சிப்பாறை மலையடுக்குகளில் இருந்துதான் வள்ளியாறும் வருகிறது. மழைக்காலத்தில் செம்மண் கலங்கி பொங்கி எழுந்து , ஓரங்களில் நுரைத்து, உடலெங்கும் அலைசுழித்து முள்ளும் தடியும் காயும் குலைகளும் சுருட்டி அள்ளிக்கொண்டு வந்து மேலேபடிகள் வரை எழுந்து பறம்புங்களுக்குள் தென்னைகளை விலாவரை மூழ்கடித்து அடிமரங்களை மலைப்பாம்புகள் போல நெளியவைத்து இலைகளின் அடிப்பகுதிகளில் ஒளிநெளிய தெற்கே சென்றபடியே இருக்கிறது. அந்த நீரெல்லாம் தேங்காய்பட்டினத்து கடலுக்குச் சென்று சேர்கிறது என்று அம்மா சொன்னாள். கடல் முடிவில்லாத நீர் நிறைந்தது. காற்று சென்று சேரும் காற்றுக் கடல் ஒன்று இருக்கிறதா என்ன? எல்லா காற்றும் அங்கே சென்று சுழித்து உறைந்து நிற்குமா? பெரும்புயல்காற்றுகள் அசைவிழந்து தேங்கிய ஒரு வான் வெளியை அனந்தன் கற்பனைசெய்தான். அவனுக்கு குளிரில் உடல் உலுக்கியது.
அனந்தன் கொல்லைப்பக்க ஒட்டுத்திண்ணையில் ஏறி அமர்ந்து முட்டுகளை மடித்து மார்போடு சேர்த்து கைகளால் இறுக அணைத்து நத்தைபோல உடலை ஒடுக்கிக்கொண்டான்.ஈரமான அடிமரங்களும் சொட்டும் இலைகளுமாக நின்ற பறம்புத்தை கண்களை விரித்து அப்படியே பார்த்துகொண்டிருந்தான். ராமாயணக்கிளியின் நினைவு வந்தது. அது பாடுவதை நிறுத்திவிட்டு சென்றிருந்தது. கர்கிடகம் பஞ்ச மாதம். வயல்களில் வேலை இருக்காது. மிதுனத்திலேயே நடவு முடிந்துவிடும். கர்கிடகம் முழுக்க இளமழை பெய்து நாற்றுகள் தானே செடியாகும். எங்கு பார்த்தாலும் நம்மாட்டி வேலைக்காரர்கள் உடுத்த முண்டை உருவி போர்த்திக் கொண்டு பீடியை கன்னம் குழிய ஓங்கி இழுத்தபடி உட்கார்ந்திருப்பார்கள். பெரிய அரிவாள்களால் கால்நகங்களை வெட்டியும் குதிகால் காய்ப்பை சீவி எடுத்தும் சுருங்கிய கண்களால் மழையை பார்த்தபடி வெறுமே இருந்தும் நேரம் போக்குவார்கள். பீடி வாங்க பணமில்லாவிட்டால் நல்லமிளகு கொடியை உலரவைத்து இழுப்பார்கள்.
எல்லா வீட்டிலும் கிழங்குகளைச் சுட்டுத்தான் சாப்பாடு .காச்சில்கிழங்கு நன கிழங்கு முக்கிழங்கு சேம்பங்கிழங்கு… சருகுகளையும் சுள்ளிகளையும் தேடி கொண்டுவந்து வீட்டுக்குள் போட்டு காயவைத்து அடுப்புக்குள் போட்டு புகை எழ ஊதி ஊதி அதற்குள் போட்டு சுட்ட கிழங்குகளை கமுகுப்பாளையில் வைத்து கையால் அடித்து பிளந்து சுடச்சுட ஆவி பறக்க தின்பார்கள். அனந்தன் தங்கம்மை வீட்டில் நனகிழங்கு சாப்பிட்டான். நாவின் நுனிகளிலும் ஓரங்களிலும் நமநமவென்று வெகுநேரம் இருந்தது. உள்ளே குடல் ஏறி மார்பை முட்டுவதுபோலிருந்தது. அம்மா நல்ல மிளகு உப்புடன்சேர்த்து பொடிசெய்து கொடுத்தாள். சாரல் பரவி நின்ற விளைகளில் பெண்கள் தலைமீது ஓலைக் கும்மட்டத்தைப் போட்டபடி இளமழையில் நம்மாட்டியுடன் கிழங்குபிடுங்க பறம்புங்களிலும் வரப்புகளிலும் காடுகளிலும் அலைவார்கள். ஊரில் கிழங்குகள் தீர்ந்துபோனால் கூட்டம்கூட்டமாக தேரி ஏறி காட்டுக்குச் செல்வார்கள். காட்டிலிருந்து தலைச்சுமைக்கு எடை வரும் சேனைக்கிழங்கை ஒருமுறை எலிசாம்மை கொண்டுசெல்வதை அனந்தன் குடையுடன் தங்கம்மையைக் கூப்பிடச்சென்றுவிட்டு திரும்போது பார்த்தான்.
கர்கிடகம் நோயின் மாதம். சாவின் மாதம். வயிற்றுப்போக்கு வந்து குழந்தைகள் செத்துப் போவார்கள். அனந்தனுடன் படித்த குஞ்ஞிலெட்சுமி நாராயணன் ரோசப்பன் மூன்று பேரும் செத்துபோனார்கள். ரோசப்பனை புதைத்தபோது தேரியில் சிஎஸ்ஐ பள்ளியில் மணி அடித்தபடியே இருந்தது. விடாமல் மணி அடித்ததைக் கேட்டு ஒரு கட்டத்தில் அனந்தன் உடல் நடுங்க ஆரம்பித்தது. பத்மம் சொன்னாள், ஒவ்வொரு மணியும் ஒரு படியாக ஆகும், ரோசப்பன் படிகளில் ஏறி சொற்கத்துக்குப்போவான் என்று. அனந்தன் சாம்பல் நிறத்தில் மங்கலான ஒளியுடன் நீர்த்திவலைகளை கொட்டிக்கொண்டிருந்த வானத்தை அண்ணாந்து பார்த்தான். ரோசப்பன் வெளிறிய முகமும் பெரிய காதுகளும் கொண்ட சின்ன பையன். எப்போதும் அழுவது போல இருப்பான். தலையில் குளிரக் குளிர எண்ணை வைத்து ஊக்குபோட்ட அழுக்குச்சட்டையுடன் வருவான். உடைந்த சிலேட்டை எப்போதும் கையில் வைத்திருப்பான். அனந்தன் ரோசப்பனை நினைத்தபோது ஒரு ஏக்கம் எழுவதை உணர்ந்தான். ரோசப்பன் இப்போது எங்கே இருப்பான். ஈரம் நிறைந்து மங்கியிருக்கும் கர்க்கிடக வானத்தில் அவனுடன் யார் இருபபர்கள்?
கர்க்கிடகத்தில் பகலிலும் நல்ல குளிர் இருக்கும். வீட்டுக்குள் கொடியில் போட்ட துணிகளில் கூட மெல்லிய ஈரம் படிந்திருக்கும். பாட்டிகளும் தாத்தக்களும் எந்நேரமும் நடுங்கிக்கொண்டிருப்பார்கள். கொஞ்சம் வெயிலடித்தாலும் ஓடிவந்து கம்பை பக்கத்தில் சாய்த்து அமர்ந்து குளிர் காய்வார்கள். பாட்டிதாத்தாக்கள் சாகும் மாதம். ”கர்கிடகம் களிஞ்சா பின்ன ஒருவரியம் கணக்கில பற்றுகிட்டும் ” என்று வற்றி உலர்ந்த கைகளால் முகத்தையும் தலையையும் வருடியபடி கோருஆசான் டீக்கடையில் அமர்ந்து சொல்வார். ” போற வளியப்பாக்காம என்னத்துக்கு இஞ்ச பற்றில கெடந்து மாளுதீரு? எளவு, மேல போனா செத்துப்போன பளைய கூத்திச்சிமாரப் பாக்கலாமே” என்று நேசப்பன் சொன்னான். ” அதுசெரியாக்கும் நேசப்பா…ஆனா அங்கிண நம்ம கெட்டினவளும் இருப்பாளே…. ஆக்கம்கெட்ட மூதி போற நேரத்தில கூட மேல வாரும் உமக்கு வச்சிட்டுண்டு எண்ணு செல்லிட்டுல்லா போனா…” என்று ஆசான் குகைபோல இருண்ட வாய்க்குள் கரிய ஈறுகளை காட்டி சிரித்தார். இடுங்கிய கண்குழிகளுக்குள் விழிகள் மினுங்கின.
கர்கிடகத்தின் கெடுதிகளை விரட்ட கோயிலில் ராமாயணம் படிப்பார்கள். மேலேடத்து வீட்டிலும் குஞ்சுவீட்டிலும் பிரம்மபுரி மடத்திலும் கூட ராமாயணம் படிப்பதுண்டு. ராமாயணம் படிக்கவேண்டுமானால் ராமனின் பட்டாபிஷேகப்படத்தையும் கணபதி படத்தையும் அனுமான் படத்தையும் வைத்து நல்ல பூமாலையெல்லாம் போட்டு ஊதுவத்தி கொளுத்திவைக்கவேண்டும். எண்ணைவிளக்கு அணையவேகூடாது. ராத்திரியும் பகலும் அது எரிந்தபடியே இருக்கவேண்டும். வெற்றிலை, அடைக்காய், வாழைப்பழம் எல்லாம் பூசைக்குவைத்து எதிரே மணைமீது மஜ்சள்நிறப்பட்டை விரித்து வைத்து அதன் மீது பாராயணக்காரர் உட்கார்ந்து எதிரே விரிப்பலகை மீது ராமாயணப்புத்தகத்தை விரித்து வைத்து மூக்குக் கண்ணாடிபோட்டுக் கொண்டு உரக்கப் படிக்கவேண்டும். ”ஸாரிகப் பைதலே சாருசீ£லே பாடுக…” துஞ்சத்து எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டுதான் அடிக்கடி படிப்பது. சிலசமயம் கண்ணச்ச ராமாயணம். ஒரேஒருமுரை தோவாளை அழகியநம்பியாபிள்ளை வந்து கம்ப ராமாயணம் படித்தார். அது வேறுமாதிரி இருந்தது. அத்யாத்ம ராமாயணம் வயதான பாட்டி தனக்குள் பாடிக்கொள்வது போல. காணம் வாங்கவரும் காணிக்காரன் வாசிக்கும் கொக்கறை போல. கம்பராமாயணம் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதுபோல ஒலித்தது. அனந்தனுக்கு ஒன்றுமே புரியாவிட்டாலும் கம்பராமாயணம்தான் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எழுத்தச்ச ராமாயணம் படித்தால்தான் பஞ்சம் தீரும் என்று ஜோசியர் சொன்னார்.
துஞ்சத்து எழுத்தச்சன் காலையில் எழுந்து கோயிலுக்குப்போகும்போது ஒரு தாய்க்கிளி தன் குஞ்சுக்கு ராமா ராமா என்று சொல்லிக்கொடுப்பதைக் கேட்டார். அந்த மரத்தின் அடியில் போய் தவமிருந்தார். மனமிரங்கிய கிளி என்ன வேண்டுமென்று அவரிடம் கேட்டது. ராமனின் கதையைச் சொல்லும்படி கிளியிடம் கேட்டார் கிளி ராமாயணக் கதையை பாடியது. அதை எழுத்தச்சன் எழுத்தாணியால் ஓலையில் எழுதி எடுத்து புத்தகமாக அச்சடித்துவிட்டார். ராமாயணம் படிக்கும் இடங்களிலெல்லாம் பெண்களும் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். சர்க்கரைப்பாயசம் , சுண்டல் எல்லாம் கிடைக்கும். வாசிப்பு முடிந்து பிரசாதம் விளம்பும்போதுதான் கூட்டம்கூட்டமாக நிறைய பேர் வருவார்கள். எல்லாருக்கும் கொடுத்தாகவேண்டும். அம்மாகூட வீட்டிலே ராமாயணம் படிக்கலாமென்று அப்பாவிடம் சொன்னாள். ”வாறவனுக்கெல்லாம் வச்சு வெளம்ப உனக்க அப்பன்வீட்டு மொதலா வந்து குமிஞ்சிருக்கு? போடி உள்ள” என்றார் அப்பா. அம்மா பெருமூச்சுடன் உள்ளே வந்தாள். அனந்தனின் தலையை தடவியபடி புன்னகைசெய்தாள். அம்மா நன்றாக ராமாயணம் படிப்பாள். தமிழ் ராமாயணம் கூட படிப்பாள். கர்க்கிடக மாதம் முழுக்க தினமும் கோயிலுக்குப்போய் ராமாயணம் கேட்பதென்று அம்மா முடிவுசெய்தாள். டார்ச்சுடன் அண்ணாவும் கூடவே போவான். அனந்தனையும் அம்மா கூட்டிக் கொள்வாள். கோயிலில் பக்க மண்டபத்தில் பெருந்தூணில் அனுமன் சிலை உண்டு. அனுமனுக்கு மஞ்சள் பட்டு சுற்றி சந்தனப்பொட்டுவைத்து பூமாலை சூடி கீழே தட்டில் பூஜைப்பொருட்கள் வைத்து விளக்கேற்றி அங்கேயே ராமாயணம் படிப்பார்கள். நிறையப்பெண்கள் கூடியிருந்து கதை கேட்பார்கள். ராமாயணக்கிளி சொன்ன கதை.
”உள்ளதாட்டு பாத்தாக்க கிளி பாடினது ராமன் கதைய இல்ல. பாடத்தொடங்கினதுதான் ராமன் கதை. பாடி முடிச்சது சீதைக்க கதையை. அதுவும் பெண்ணடிதானே? பெண்ணுக்குத்தானே தெரியும் பெண்ணுக்க துக்கம், என்ன சொல்லுகியோ?ராமாயணம்னா என்ன? ராமனுக்க ஜெயமும் சீதைக்க துக்கமும்தானே? இல்ல மாத்திச் சொல்லணுமோ? சீதைக்க ஜெயமும் ராமனுக்க துக்கமும்னு சொன்னாத்தான் சரியா? எப்டியும் பாக்கலாம். நம்ம புண்ய பூமியில ராமாயணக்கதைய கவிகள் பாடத்தொடங்கி பல யுகங்கள் கழிஞாச்சு. இன்னும் இது சொல்லி தீரல்ல கேட்டுகிடுங்க. சொல்லிதீருத கதையுமில்ல ராமாயணம்… மனுச துக்கத்த பாடிதீருமா வேய்?” பாராயணத்துக்கு வந்த பள்ளியாடி கோலப்பன்பிள்ளை சார் சொன்னார்.
அனந்தன் அம்மா மடியில் படுத்திருந்தான். அவன் அவ்வப்போது விழிக்கும்போது மட்டும் அவர் சொன்ன சொற்கள் நெஞ்சில் பதிந்தன. நிமிர்ந்து பார்த்தபோது அம்மாவின் கண்கள் மெல்ல இமை சரிந்து கன்னங்களில் இமைமயிர் நிழல்கள் விழுந்து அவள் கனவுகண்டு அமர்ந்திருப்பது போலிருந்தாள். தூக்கத்திற்குள் நழுவியபோது கிளியைக் கண்டன். ”ஸாரிகப் பைதலே சாருசீலே” அனந்தன் அதன் முன் அமர்ந்து புத்தகம் வாசித்து பாடினான். ராமாயணக்கிளிக்கு ராமன் கதை முழுக்கத்தெரியும். சீதை அசோகவனத்தில் இருந்தபோது ஒரு கிளி சீதை அமர்ந்திருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது. அரக்கியர் தூங்கிய பிறகு சீதை இருட்டில் தனித்திருந்து மௌனமாக அழுதாள். கிளி இறங்கிவந்து சீதையின் தோளில் அமர்ந்து ஆறுதல் சொன்னது. சீதை தன் கதையை கிளிக்குச் சொன்னாள். அந்தக்கதையை கிளி தன் குஞ்சுகளுக்குச் சொன்னது. ராமனால் புறக்கணிக்கப்பட்டு வசிட்டரின் ஆசிரமத்தில் தனிமையில் சீதை அழுதுகொண்டிருக்கும்போது அந்தக்கிளிகளில் ஒன்று அவள் தோளில் அமர்ந்து ஆறுதல் சொன்னது. லவனும் குசனும் காட்டுக்குள் அலைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து களைப்பாறியபோது அந்தக் கிளையில் அமர்ந்த கிளி ஒன்று தன் குஞ்சுக்கு சீதையின் கதையைச் சொல்வதை அவர்கள் கேட்டார்கள். அதன் பின் கிளிகள் சீதையின் கதையை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தன. ராமாயணக்கிளி முட்டைக்குள் இருக்கும்போது சிறகுகள் ஒவ்வொன்றாக முளைக்கும்போதே சீதையின் கதை ஒவ்வொரு வார்த்தையாக அதற்கு தெரிந்துவிடும். ராமாயணக்கிளி என்ன பாடினாலும் அது சீதையின் கதையாக ஆகிவிடும்.
அனந்தன் இரவில் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்கும்போது பாராயணத்தில் சொன்னதையெல்லாம் நினைத்துக்கொள்வான். அவை சொல்லிக்கேட்டவையா அவனே நினைத்துக் கொண்டவையா என்று குழப்பமாக இருக்கும். அம்மாவின் அலக்குமுண்டில் வண்ணாத்தி போட்ட அவிகாரத்தின் மணமும் தேக்குபெட்டிக்குள் தாழம்பூக்குலை போட்டு அதை வைத்திருந்த மணமும் அம்மாவின் வயிற்றின் மென்மையான வியர்வையின் மணமும் சேர்ந்து மூக்கை தீண்டும். அம்மாவின் வயிற்றுக்குள் தங்கச்சியும் அந்த மணத்தை அறிகிறது. உள்ளே தங்கச்சி வெளியே அனந்தன். முன்னால் அண்ணா சின்ன டார்ச் லைட்டை தரையில் அடித்து வெளிச்சம் காட்டிக் கொண்டுசென்றான். வெளிச்சம் ஒரு தவளையின் கண்களை மின்னவைத்து சென்றது. மரமல்லியின் சிறிய இலைகளின் நிழலை புடவையை விரித்து வீசியதுபோல எதிர்பக்கம் விழச்செய்தது. தென்னைமீதிருந்து ஒரு பறவை சிறகடித்து எழுந்துசெல்ல ஓலைகள் சலசலத்தன. நல்ல குளிர். அண்ணா நிழல் போல சென்றான். அம்மா கனத்த கால்களை தூக்கிவைத்து மூச்சிளைத்தபடி நடந்தாள். கோயிலில் இருந்து கிழக்குபடி இறங்கி ஆனைப்பறம்பு தாண்டினால் அவர்களுடைய வீடு வரும். ஹரிக்கேன் விளக்கை அப்பா உத்தரத்துக் கம்பியில் தொங்கவிட்டிருந்தார். காற்றில் அது ஆடியாடி மரநிழல்களை வீட்டைச்சுற்றி பேய்களைப்போல கூத்தாட வைத்தது.
அப்பா திண்ணையில் ஈஸி சேரில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். அருகே கருப்பனின் கண்கள் தெரிந்தன. அம்மாவின் மணம் கிடைத்ததும் சிவப்பி எழுந்து குளம்பொலி எழ கால்மாற்றி நின்றது. சிவப்பி நின்றதும் சக்குவும் எழுந்து தொழுத்துப்பட்டைகளில் முகத்தை முட்டியது. காற்றில் முற்றத்து மாமரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து டார்ச் ஒளியில் தீச்சிறகுகள் கொண்ட பறவைகள் போல தரையில் விழுந்தன. அனந்தன் ராமாயணக்கிளியையே நினைத்துக் கொண்டிருந்தான். அது இரவில் என்ன செய்யும்? தூங்கிவிட்டிருக்கும். கோயிலில் நடைசாத்தும் மணியொலி கேட்டது. அம்மா திரும்பி நின்று கும்பிட்டாள். அப்பா திண்ணையில் இருந்தபடியே ”போரும் போரும் வந்து சேரு… ”என்றார். அம்மா பெருமூச்சுடன் ஒன்றும் பேசாமல் படலைத் திறந்து வீட்டுப்பறம்பில் நுழைந்தாள். அனந்தன் அதற்குள் தட்டுபடியில் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டதாக உணர்ந்தான். காலையில் ராமாயணக்கிளி கூவி அவனை எழுப்பியது.
[மேலும்]