வெண்கடல் [புதிய சிறுகதை]

’கடைக்கண்ணுன்னு ஏன் சொல்லுகான், அதைச்சொல்லிட்டு மேலே பேசுலே’ என்றார் கணேசமாமா.

காயத்திருமேனித்தைலம் சுண்டிவரும்போது நாக்கில் எச்சிலூறும் ஒரு தின்பண்ட வாசனை எழும். நான் அதில் முழுமையாக ஈடுபட்டு இருந்தேன். பச்சைநிறமான திரவம் ஏதோ ஒரு புள்ளியில் நல்லெண்ணைநிறமாக ஆகத்தொடங்கும். அப்போது கொட்டம் போடுவார்கள். உடனே அதை நாக்கு புறக்கணிக்க ஆரம்பிக்கும். அதனுடன் வாதக்கால்களும் வாதக்கைகளும் சதைவுகளும் ஒடிவுகளும் சம்பந்தப்பட ஆரம்பிக்கும்.

‘நீரு காயத்திருமேனி வேங்க வந்தீருண்ணா அந்தச்சோலியப்பாருமே’ என்றார் அப்பு அண்ணா காயத்திருமேனியைக் கிண்டியபடி. பெரிய உருளியில் தூளிபாசி படிந்த குட்டைத்தண்ணீர் போலத்தெரிந்த தைலம் கொப்பளித்து உடைந்து தெறித்தது. கனத்த மழைத்துளிகள் விழும் குளத்தின் பரப்பு போல.

‘நீ சொல்லு… நீ பகவதிக்க பக்தன்லா?’

‘பந்தயம் இல்ல பாத்துக்கிடும்…ஓசி எண்ணைக்குள்ள பிளானானா அந்த சட்டிய இப்பமே அடுப்பிலேருந்து வாங்கி வச்சுக்கிடும்’

‘செரி, பந்தயம் இல்ல…சொல்லு’

அப்பு அண்ணன் குமரேசனை ஓரக்கண்ணால் பார்த்து ‘அதிப்பம், பகவதிக்க பார்வ நேராட்டு நம்ம மேல பட்டா நாம கிறுக்குப் பிடிச்சு அலைவோம்லா…’

‘நம்ம கிறுக்கனாசாரி அந்த சேலாக்கும்னு பேச்சு இருக்கே’ என்று குமரேசன் கொட்டத்தைக் குழவியால் நுணுக்கியபடி சொன்னான்.

‘நீ சொல்லி மயிரப்புடுங்கினே…’ என்றார் கணேசமாமா ‘செரி, பந்தயம் இல்லாததனால நானே சொல்லுதேன்…லே, அம்மை அகில உலகத்தையும் காக்கப்பட்ட தெய்வமுல்லா? சிருட்டி திதி சம்மாரம் மூணும் அம்மையாக்குமே… இப்பம் ஆசாரி சில்பவேலை செய்யுதான்னு வச்சுக்கோ…அந்தால அவனுக்க பிள்ளை வந்து நிண்ணா எப்டிலே பாப்பான் ? உளிய நேராப்பாத்துக்கிட்டு கடைக்கண்ணால பிள்ளையப்பாத்து சிரிப்பான்…இல்லியா?… அதாக்கும் கத.. நீ ஒரு துடம் எண்ணை எனக்கு ஊத்து…நான் வைத்தியரிட்ட சொல்லிக்கிடுதேன்’

‘அந்தப்பேச்ச மேலேப்பள்ளியில போயி சொன்னாப்போரும்….வைத்தியரு சொல்லட்டு, நான் உம்ம இந்த உருளியில போட்டுக் காய்ச்சுதேன்’ என்றார் அப்பு அண்ணா.

‘வே வாத்தியாரே ,நான் சொல்லல்லேண்ணு வேண்டாம் கேட்டேரா? காயத்திருமேனிய தினமும் தலைக்குத்தேச்சுக் குளிக்கப்பிடாது….பின்ன அதில்லாம உறக்கம் வராது’ குமரேசன் சொன்னான்

‘தெரியுதுல்ல? பின்ன என்ன மயித்துக்குப் பேசுகே? ஒரு துடம் எண்ணைய ஊத்தினா உனக்கு என்ன கேடு? நீ சொர்க்கத்துக்குப் போறப்ப அங்க நல்ல–’ என்னைப்பார்த்துவிட்டு கணேசமாமா நிறுத்திக்கொண்டார்.

நான் ‘மாமா, பகவதி பொம்புளையில்லா?’ என்றேன்

‘நல்ல கேள்வி…பயலுக்கு இப்பம்தான் ஓரோ காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாட்டு மனசிலாகி வருது’ என்றார் அப்பு அண்ணா.

‘ஏம்லே?’ என்று கணேசமாமா கேட்டார்.

‘இல்லமாமா…இப்பம் பகவதி பொம்புளையா இருக்கப்பட்டதனாலே…’ எனக்கு சொற்கள் கைகொடுக்கவில்லை .’….ஆசாரிச்சி தாணம்மை அவளுக்க பிள்ளை அழுதப்ப சோலிய விட்டுட்டு எந்திரிச்சு வந்துல்லா அதை எடுத்து வச்சுக்கிட்டா? பிள்ளைய கொஞ்சிக்கிட்டு கடைக்கண்ணாலேதான் அடுக்களையிலே அடுப்பெரியுதத பாத்தா’

‘நீ அவளுக்க மூடு தாங்கினியாக்கும்? ‘ என்றார் கணேசமாமா கோபமாக ‘லே…போ…போய் புக்க எடுத்து படி…போலே’

’இல்ல கொச்சேமான் கேக்குதது நியாயமுல்லா?’ என்றார் குமரேசன்

”மயிரப்புடுங்கின நியாயம்.. லே, அவன் கணக்குல வாங்கின மார்க்கு என்ன தெரியுமாலே? வட்டப்பூச்சியம்….அவனுக்க அப்பன் தங்கப்பன் கண்ணில கண்ணீரா விடுதான்…இவன் வந்து பகவதிக்க தொட்டிலப்பத்திப் பேசுதான்…எந்திரிச்சு போலே’

நான் எழுந்து திண்ணையில் ஏறி ஓரமாக நின்றேன். காயத்திருமேனி சுண்டி வந்தது. தைலப்பரப்பில் சிறிய சிறிய வாய்கள் திறந்து மூடின. சரியாகக் கிண்டாவிட்டால் எண்ணை உடம்பில் தெறித்துவிடும்.

பெரியப்பா உள்ளிருந்து வந்தார். குளித்து முடித்து ஈரநெற்றியில் விபூதி பூசியிருந்தார். தோளில் கிடந்த துண்டில் ஈரம் பட்டு நீலம் தெரிந்தது. படிகளில் நின்று கண்களை மூடிக் கும்பிட்டார். குமரேசனும் அப்பு அண்ணாவும் வேட்டியைக் கீழிறக்கிவிட்டு நின்றார்கள். கணேசமாமா கொஞ்சம் விலகி நின்றார்

பெரியப்பா துண்டை எடுத்து முண்டாசாகக் கட்டிக்கொண்டு நேராக உருளியை நோக்கிச்சென்றார். கிழக்குநோக்கி நின்று அதைக் கும்பிட்டபின் கை நீட்டினார். கொட்டத்தூளை அப்பு அண்ணா எடுத்துக்கொடுக்க அதை எண்ணைப்பரப்பில் கொட்டி மெதுவாக அவரே கிளற ஆரம்பித்தார். தழைவாசனை மாறி மெல்லிய ரசாயனவாசனை வர ஆரம்பித்தது. பின்பு அது முறுகி காயத்திருமேனி வாசனையாக மாறியது.

‘நல்ல அசலு தைலமாக்கும்’ என்று வாசனையை இழுத்துப் பரவசத்துடன் கணேசமாமா சொன்னார்

பெரியப்பா அவரை ஒருமுறை பார்த்துவிட்டுக் கிளற ஆரம்பித்தார்

‘தைலத்தில வாசன வாறது பெண்ணு சமையுறதுக்குச் சமானமாக்கும்’ என்றார் கணேசமாமா

குமரேசன் சிரித்தான்

“ என்னல சிரிப்பு? லே, பெட்டக்குட்டிக சின்னப்பிள்ளைகளாட்டு வெளையாடி அலையுதாளுக. சட்டுண்ணாக்கும் அதுக சமைஞ்சு நெறையுதது….அதோட அதுகளுக்கு ஏளு ஐசரியமாக்கும் வந்து பொலியுதது… சமையுறதுண்ணா என்னலே? அதுகளுக்குள்ள முலைப்பாலு வந்து நெறையுததாக்கும் கேட்டுக்க… பின்ன அதுகளுக்க தேகம் முளுக்க ஓடுதது ரெத்தமில்ல, பாலாக்கும்…பிள்ளை குடிக்குததுக்காக ரெண்டுமுலையும் காம்பும் வளந்து வருது….என்ன சொல்லுதேன்னாக்க–’

பெரியப்பா” டேய் உனக்குத் தைலம்தானே வேணும்…தாறேன்…சும்மா போட்டு சலம்பாதே…ஓட்டமணிமாதிரி….’

‘இல்ல நான் சொல்லுகது….அதாகப்பட்டது….சாஸ்திரப்படி சரஸ்வதிதேவிக்க முலைகளாக்குமே சங்கீதமும் சாகித்யமும்…எண்ணு வச்சா-’

‘அந்தால மாறி நில்லு…’ என்றார் பெரியப்பா.

கணேசமாமா உதட்டைச் சுழித்தபின் அப்பால் தள்ளி நின்றார்

காயத்திருமேனி அதன் நிறத்தை அடைந்துவிட்டது. பச்சைபோலவும் பழுப்புபோலவும் ஒரேசமயம் தோன்றும் நிறம். பெரியப்பா கைகாட்ட அப்பு அண்ணா அதன் விறகைப் பின்னால் இழுத்தார். கனலை மட்டும் அப்படியே நிரவிவிட்டு நீளச் சட்டுவத்தால் எண்ணையை மெல்லக் கிளறிக்கொண்டிருந்தார்.

‘அண்ணா…எண்ணைக்க காரியம் ஒண்ணும் சொல்லல்ல’

‘லே…இவனுக்கு ஒரு ரெண்டு துடம் குடுத்தனுப்பு….பிச்சக்காரப்பய…’ என்றபின் பெரியப்பா திண்ணையில் ஏறி அமர்ந்தார்

செம்பு அகப்பையால் சூடான தைலத்தை அள்ளி கணேசமாமா கொண்டுவந்திருந்த குப்பியில் ஊற்றினார் அப்பு அண்ணா . வைச்சூற்றி எல்லாம் இல்லை. கம்பி போல மெழுமெழுமெழுவென்று தைலம் குப்பிக்குள் விழுந்து சத்தமில்லாமல் நிறைந்தது. குப்பி ஆவியாகப் பெருமூச்சு விட்டது.

‘ஒரு சொட்டு கூடவிட்டா செத்துப்போன உனக்க அப்பன் ராமையன் சபிக்கமாட்டான்லே’ என்றார் கணேசமாமா

‘போரும்போரும்… உயிரவிட்டு நாங்க காச்சணும்…நீரு சும்மா வாங்கிட்டுப்போயி நெத்தியில பொத்தணும்…போவும்வே’

‘லே, தைலம்ணு ஏன் பேரு வந்திருக்குண்ணு சொல்லு பாப்பம்’

‘உம்ம அப்பன் அனந்தப்பப்பனாவன் மடியிலவச்சுக் காதுகுத்திப் பேரு போட்டிருப்பாரு…போவும்வே’

‘திலம்னா சம்ஸ்கிருதத்திலே எள்ளு….மிச்சத்த நீ சிந்திச்சுக்கோ…நான் வாறேன்’

கணேசமாமா போவதைப்பார்த்து ‘நேரா ஒரு எண்ணைக்குளி. பெண்டாட்டி போகம். பின்ன ஒரு கும்பா நெறைய சோறும் சாளைப்புளிக்கறியும்…கிடந்து உறங்கினாருண்ணா இனி திங்கக்கிளம பள்ளிக்கூடத்தில பெல்லடிக்கிற நேரத்தில பாத்தாப்போறும்…’ என்றார் . குமரேசன் சிரித்தான்.

மண்பாதையில் ஏறிய கணேசமாமா நின்று ‘அண்ணா ஒரு நல்ல கோளுண்டுண்ணாக்கும் தோணுது… வில்லுவண்டி வருது….பாண்டிவண்டியாக்கும்’ என்றார்.

அவர் செல்லவும் பச்சைநிறத்தில் சாயமிட்ட கூண்டுள்ள ஒற்றைக்காளைவண்டி வந்து நின்றது. வண்டியை ஓட்டிவந்த இளைஞன் இறங்கித் தலையிலிருந்த முண்டாசை எடுத்து முகம் துடைத்து தோளில் போட்டபடி தயங்கி நின்றான். பழைய அம்மி போல பளபளப்பான கன்னங்கரிய உடல். வயிறு கட்டுக்கட்டாக இறுகியிருந்தது. வேட்டி நெகிழ்ந்து இறுக்கமான இடுப்பில் கட்டப்பட்டிருந்த கரிய அரைஞாண் சரடு தெரிந்தது. கூரிய மீசையும் பெரிய கண்களும் கொண்ட சதுர முகம்.

‘அய்யன் உண்டோ?’ என்றான்

‘ஆராக்கும்?’ என்றார் பெரியப்பா

‘நாங்க உண்ணாமலைக்கடையிலேருந்து வாறம்….’

‘கைப்பள்ளிமாரா?’

‘உள்ளதாக்கும்…’

‘பாஷை கேட்டாத் தெரியுதே….’ என்றார் பெரியப்பா ‘என்ன காரியம். நான்தான் வைத்தியரு’

‘அய்யன் நோக்கணும்… பதினாறுநாளாய் மரணவேதனைப்படுதா… ‘ என்றான்.அதற்குள் கண்கள் கலங்கிவிட்டன.‘ரண்டு வைத்தியரைக் காட்டினேன்…ஒரு பிரயோஜனமும் இல்ல…ஒண்ணு நோக்கணும்’

‘யாருக்கு தீனம்?’

‘என்னுடே கெட்டினவளுக்கு… ஒண்ணாம் பிரசவம்…’

‘ஓ…’ பெரியப்பா கண்கள் இடுங்கின ‘பிள்ள?’

‘சாபிள்ளயாக்கும்…அப்பம் கெட்டின பாலு…பளுத்து உருண்டு நிக்குது’

‘ஓர்மையுண்டா இப்ப?’

‘பெருங்கடை வைத்தியரு அபினு குடுத்தாரு…அதில உறங்கிட்டிருக்கா….கண்ணு திறந்நால் அலறி விளிச்சு துடிப்பா…பிடிச்சு நிறுத்த முடியாது’

‘டேய் உள்ள போயி நாராயணியையும் அம்முவையும் வரச்சொல்லு’

நான் உள்ளே சென்று சொன்னேன். நெல்குத்திக்கொண்டிருந்த அம்முவும் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த நாராயணியும் கைகளைக் கழுவி வேட்டிமுந்தியில் துடைத்துக்கொண்டு வந்தார்கள்.

‘ஏட்டி, வண்டியில இருக்கப்பட்டவள மெல்ல பொத்தி எடுத்துக் கொண்டு வந்து பெஞ்சில கெடத்து’ என்றபின் ‘துணைக்காராக்கும்?’ என்றார்

‘அவளுக்க அம்மை கூட உண்டு’

நாராயணியும் அம்முவும் சென்று வண்டிக்குப் பின்னால் நின்றார்கள். வண்டிக்குள் இருந்து குள்ளமான மெலிந்த கிழவி இறங்கி திகைத்துப்போனவள் போல பார்த்தாள். அதிகமாக வெளியே செல்லக்கூடியவளல்ல என்று தோன்றியது. வண்டிக்குள் இருந்து நீலநிறச்சேலை கட்டிய ஒரு பெண்ணை அவர்கள் மெல்ல இழுத்துத் தூக்கிக்கொள்வதைப் பார்த்தேன். கொஞ்சம் கனமான பெண். அவள்சேலை மேலேறி முழங்கால் தெரிந்தது. அவ்வளவு கனத்து உருண்ட முழங்காலை நான் பார்த்ததில்லை. கரிய சருமம் பளபளப்பாக இருந்தது. வெள்ளியாலான தண்டை கணுக்காலைச்சுற்றியிருந்தது.

அவளை அவர்கள் மெல்ல தூக்கி வந்தார்கள். நீண்ட கூந்தல் அவிழ்ந்து நாலைந்து சுருள்களாகத் தொங்கி ஆடியது. இரு கைகளும் துணியாலானவை போலத் தொங்கின. அவளுடைய சேலையை நன்றாகக் கழுத்தைச்சுற்றிக் கட்டியிருந்தார்கள்.

படி ஏறும்போது அவள் மெல்ல முனகுவதைக் கேட்டேன். பெஞ்சில் அவளைப்படுக்க வைத்தார்கள். பெரியப்பா வெற்றிலையை சுருட்டி வாய்க்குள் போட்டுவிட்டு அவர்கள் போகலாமென்று கையசைத்தார். அவள் தலையை மெல்ல இருபக்கமும் அசைத்துக்கொண்டு ஏதோ முனகினாள். கிழவி கையில் ஒரு துணிமூட்டையுடன் அருகே வந்து பதைத்து நின்றாள். அவள் கணவன் கீழே நின்றான்.

அவனிடம் ‘நீ போயி மாட்ட அவுத்துக்கட்டி வெள்ளங்கள குடுலே…நான் பாத்துக்கிடுதேன்’ என்றார் பெரியப்பா

நான் அவளைக் கண்வாங்காமல் பார்த்தேன். அப்படி ஒரு பெண்ணை நான் அவ்வளவு அருகே பார்த்ததில்லை. ஆறடி உயரமிருப்பாள். சுரைக்காய்க்குடுக்கை போலக் கன்னங்கரிய பளபளப்புள்ள சருமம். சுருண்ட கூந்தல் தார் போல பளபளப்பாக பெஞ்சிலிருந்து தரைநோக்கி வழிந்திருந்தது. உருண்டையான முகம். மெல்லிய புருவங்களுக்குக் கீழே பெரிய கண்கள். சிப்பிபோல இமைகள் மூடியிருக்க உள்ளே விழிகள் நிலையில்லாமல் அசைவது தெரிந்தது. கழுத்தில் அணிந்திருந்த கல்மாலை சரிந்து வலப்பக்கமாக பெஞ்சிலிருந்து தொங்கியது. வெங்காயத்தொல் போல மெல்லிய சிறிய உதடுகளுக்குள் சிறிய உப்புப்பரல் பற்கள்

நெற்றியிலும் புஜங்களிலும் பச்சைகுத்தியிருந்தாள். மூச்சில் மார்புகள் அசைந்தன. உள்ளங்கால்களை உள்நோக்கி குவித்து விரித்து பற்களை தாடைநெரிய இறுக்கி விட்டு மெல்லிய முனகல்களுடன் அவள் கனவுக்குள் ஏதோ வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

‘உனக்க மோளா?’

‘ஓம் அய்யனே’

‘தலைப்பிரசவமா?’

‘ஓம் அய்யனே….நல்ல பிள்ளயாக்கும்….அம்மிக்கொழவிமாதிரில்லா இருந்தது…கண்ணு தெரியாம வயற்றாட்டி களுத்தப்பிடிச்சு இளுத்துப்போட்டா….கையில வாறப்பமே குளைஞ்சுபோச்சு… பிள்ளை செத்துப்போட்டுண்ணு அறிஞ்சு எனக்க சாமியேண்ணு நெஞ்சில நாலஞ்சு அடி அடிச்சுட்டு மயங்கினவளாக்கும்…இப்பம் வரைக்கும் நல்ல போதம் இல்ல… ரெண்டாம்நாளு முதல் பாலுகெட்டிப்போச்சு…உள்ள மருந்தெல்லாம் அரைச்சு தேச்சாச்சு….உள்ள பாலுகெட்டிபுளுத்துப்போச்சு….பதினாறுநாளாட்டு நரகவேதனையாக்கும்…’

‘அப்பிடி ஆவும்…சாபிள்ளையானா அப்பமே வாய வச்சு உறிஞ்சி முலைத்துவாரத்த திறந்துபோடணும்…. நீ பெத்தவதானே? பிள்ளை வாய வைக்காம எப்டி முல திறக்கும்? உனக்குத் தெரியாதா?’

கிழவி வாயைத்திறந்து பேசாமல் நின்றாள்

’உன்னைப் பாத்தா ஏது கோரனும் சொல்லுவான், உனக்க தலையில மயக்கின மரச்சீனியாக்குமெண்ணு…’ பெரியப்பா வெற்றிலையை கோளாம்பி நோக்கித் துப்பினார். ‘துளையடைஞ்சுபோயி உள்ள பளுப்பும் வச்சா பின்ன சலம் வெளிய வாறதுக்கு வளியே இல்லல்லா? குடுக்காத பாலுமுளுக்க வெஷமாக்கும்…லே’

அவள் கணவன் வந்து நின்றான்

‘நல்ல வேதன இருக்கும்லே….மருந்தால ஒண்ணும் கேக்காது…’

‘ரெண்டையும் அறுத்து எறியுங்க அய்யனே…எனக்கு என் செல்லக்கிளிய மனுசியா கிட்டினா மதி…பிள்ளையும் வேண்டாம் ஒரு எளவும் வேண்டாம்….இவள இந்தப்பாடு படுத்துகதுக்குத்தான் வந்து பிறந்திருக்குண்ணா அதைப் புதைச்சிட்ட குளியில நாலு முள்ள வெட்டி நடுவேன் நான்….’

‘லே மாபாவி, பிள்ளைப்பத்தியாலே பேசுதே?’ என்றாள் கிழவி

‘பிள்ளையில்ல அது சனியனாக்கும்… குழிச்சுப் போட்டதத் தோண்டி எடுத்து ஆத்தில கொண்டு போடுவேன்….த்தூ’

‘லே எரப்பாளி…’

‘எல்லாம் ஒரு பிரேமையினாலே சொல்லுகதாக்கும்…நீ சும்மா கெடந்து தொண்ட தொறக்காதே…டேய்’

நான் ‘பெரியப்பா’ என்றேன்

‘இந்த இவனையும் கூட்டிக்கோ….அள்ளூர்கொளத்தில நம்ம எருமைக ரெண்டண்ணத்தைக் கூட்டிக்கிட்டு போயி எறக்கு… அதில ஒட்டிவாற கொளவட்டையப் பிடிச்சுக் கொண்டு வா….ஒரு பத்திருநூறு கொளவட்டை வேணும்…கேட்டியாலே?’

நான் தலையசைத்தேன். எனக்கு ஏதும்புரியவில்லை. ஆனால் பெரியப்பா எப்போதும் விசித்திரமாக எதையாவது கேட்கக்கூடியவர். போனவாரம்தான் காடுமுழுக்கத் தேடி அலைந்து காக்கா இறகுகளைச் சேகரித்துக்கொண்டுவந்தோம்.

நான் தொழுவத்துக்குப்போனபோது அவனும் கூடவந்தான்.

‘கொச்சய்யனுக்க பேரு என்ன?’

‘ஜெயன்’

எனக்கபேரு செல்லன்…’

‘ஓ’

‘அய்யன் என்னத்துக்கு அட்டை கேக்குதாரு?’

‘மருந்துக்கு’

‘அரைச்சு கெட்டுகதுக்கா?’

‘இப்பம் சொல்லமுடியாது’ என்றேன் ‘அந்தக் கோணக்கொம்ப அவுரும்’

நான் மூடிக் கொண்ட பித்தளைத் தூக்குவாளியை எடுத்துக்கொண்டேன். சின்னச் சம்புடத்தில் சுண்ணாம்பும். காளியும் கோணக்கொம்பியும் அசைபோட்டபடி வந்தார்கள். காளி வழியில் வேலியில் படர்ந்திருந்த காய்ச்சில்கொடியைத் தின்ன ஆசைப்பட்டாள். நான் கயிறு நுனியால் அவளை அடித்தேன். காதை மட்டும் அலட்சியமாக அசைத்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

குளம் அள்ளூர் பகவதிகோயிலுக்கு அருகே கிடப்பது. சுற்றிலும் பச்சைகனத்த தோப்புகள். ஆகவே தண்ணீரில் எப்போதும் பச்சைநிழல். குளிர்ந்த நீருக்கு அடியில் கிடக்கும் சேற்றுப்பரப்பு துல்லியமாகத் தெரியும். அங்கே விழுந்து பாதிபுதைந்த சருகுகள் எல்லாம் தங்கநிறமாக ஒளியில் மெல்ல அலைபாய்ந்தபடி தெரியும். பெரியபெரிய பொத்தை, கெண்டை ,கெளுத்தி, ஆரை, தூலை மீன்கள் உண்டு. மெதுவாகச்சென்று நம் நிழல் நீரில் விழாமல் பார்த்தால் நீர்ப்பரப்பு முழுக்க மீன்கூட்டங்களாக இருக்கும், கொல்லங்கோடு தூக்கவிழாவை ஆலமரத்தின் மீதிருந்து பார்ப்பதுபோல தெரியும். நிழல் விழுந்ததும் ,குளம் ஒருமுறை கண்சிமிட்டுவதுபோலிருக்கும்,ஒரே கணத்தில் மீன்கள் எல்லாம் மறையும்.

செல்லன் குந்தி அமர்ந்து நீரை அள்ளி முகம் கழுவப்போனான்.

‘அய்யோ’ என்றேன். ‘தொடாதே’.

‘ஏன்?’

‘அம்பிடும் அட்டையாக்கும்…இதுக்க பேரு அட்டைக்கொளம்….இதில ஆரும் இறங்கமாட்டாவ’

’ஓ’ என எழுந்துகொண்டான்.

நான் காளியைத் தள்ளி நீரை நோக்கிச் செலுத்தினேன். அவள் குனிந்து நீரை முகர்ந்தாள். நீரில் வளையங்கள் விரிந்தன. இழுத்துக்குடித்து மீசையில் துளிகளுடன் அண்ணாந்தாள். சருமம் குளிரில் அதிர்ந்தது. நான் அவள் வாலைப் பிடித்து முறுக்கி உள்ளே தள்ளினேன். கொஞ்சம் தயங்கியபின் நீருக்குள் பாய்ந்து இறங்கினாள். நான் அவள் கயிறைக் கரையில் நின்ற குட்டித்தென்னையில் கட்டினேன். அதற்குள் கோணக்கொம்பி பாய்ந்து காளியை நோக்கி நீந்தினாள். நான் ஓடிப்போய் சாரைப்பாம்புபோல ஓடிய அவள் கயிறைப் பிடித்துக் கட்டினேன்.

‘இது என்ன கோயிலு?’

’அள்ளூர் பகவதி…விளிச்சா விளிகேக்குத சாமியாக்கும்’ அவன் பார்வையை சந்தித்தபின் ‘… அம்மா சொன்னா’ என்றேன்.

அவன் எழுந்து கோயிலைப்பார்த்தான்

‘இடிஞ்சு விளுந்துபோட்டு’

‘அறைக்கல் மாடம்பிக்க கோயிலு…அவ்வோ இப்பம் திருவனந்தபுரத்திலயாக்கும்’

அங்கிருந்து பார்த்தபோது வெளியே ஆலமரத்தடியில் குவிக்கப்பட்ட உடைந்த மண்சிலைகள் தெரிந்தன. நேர்ச்சைக்காக சிலைசெய்து வைப்பார்கள். உடைந்ததும் கொண்டுவந்து ஆலமரத்தடியில் போடுவார்கள். இடுப்பில் குழந்தையுடன் கூடிய அம்மன்சிலைகள் கோரைப்பற்களும் முட்டைக்கண்களுமாக சாயம்போன உடல்களுடன் சரிந்துகிடந்தன.

‘ரண்டு சன்னிதி உண்டா?’ என்றான் செல்லன்

‘மூத்தம்மையும் இளையம்மையும் உண்டு. மூத்தம்மை இடுப்பில பிள்ளை வச்சிருப்பா. இளையம்மை பிள்ளைய வாயில கடிச்சு தின்னிட்டிருப்பா’ என்றேன். ‘மூத்தம்மைக்கு மஞ்சணமும் கும்பளங்காயும் வெட்டுவாவ. இளையம்மைக்கு முட்டன்கோளி வெட்டுவாவ’

செல்லன் மேலேறிச்சென்று ஆலமரத்தடியில் கிடந்த சிலைகளைப் பார்த்தான். பீடமும் சிலையும் எல்லாம் ஒன்றாகவே செய்யப்பட்டு சூளையில் சுடப்பட்டிருக்கும். உடைந்த கைகள் பப்பாளித்தண்டுபோல உட்குடைவாக இருந்தன. பிள்ளையை ரத்தம் கசியக் கடித்துப் பிடித்திருக்கும் சிலையை அவன் குனிந்துபார்த்தான். அதன்மேல் காய்ச்சில்கொடி படர்ந்திருந்தது.

நான் காளியைக் கரைக்கு இழுத்தேன். அவள் வரத்தயங்கினாள். மேலும் இழுத்தேன். என்னை உள்ளே இழுத்துவிடுவாள் என்று தோன்றியது. பக்கத்தில் நின்ற தழைகளைப் பறித்து ஆட்டிக்காட்டினேன். பாறைக்குழியில் தேங்கிய மழைநீர் போல இருந்தன அவள் கண்கள். நீருக்குள் மூழ்கி எழுந்து பெருமூச்சு விட்டாள். நான் மீண்டும் தழையை ஆட்டிக்காட்டினேன். காளி நீரில் மூழ்க கோணக்கொம்பி ஆவலாக நீந்திக் கரையை அணுகினாள். அவளுடைய பெரிய உடல் நீர் நலுங்காமல் காற்றில் அலைவருவதுபோல வந்தது. கரையில் ஏறிப் பெருமூச்சுடன் கைக்குழந்தை கைநீட்டி வாங்குவதுபோல கனத்த நாக்கை நீட்டித் தழையை வாங்கிச் சுருட்டி வாய்க்குள்ளே கொண்டுசென்றாள்

அவளைத் தென்னைமரத்தில் கட்டியபோது காளியும் ஏறி வந்துவிட்டாள். நான் சுண்ணாம்புச் சம்புடத்திற்குள் நீர் விட்டு நன்றாகக் கலக்கினேன். கோணக்கொம்பியின் அடிவயிறெங்கும் அப்பியிருந்த குளவட்டைகள் மீது சுண்ணாம்புக் கரைசலைத் தெறித்தேன். அவை துடித்து பிடிவிட்டு உதிர்ந்து சோம்பல் முறிப்பதுபோல நெளிந்தன. சின்ன அட்டைகள். ஒச்சுக்குஞ்சுகள் போல. ஆனால் இன்னும் அரைமணிநேரம் கழித்தால் அவை விரல் அளவுக்குக் கனத்து பெரிய உதடுகள் போல ஆகிவிடும்.ஒவ்வொன்றுக்குள்ளும் அரைத்துடம் ரத்தம் இருக்கும்.

நான் அட்டைகளைப்பொறுக்கிப் பித்தளைப்போணிக்குள் போட்டேன். செல்லன் வந்து ‘என்ன செய்யணும்?’ என்றான்

‘அட்டையப் பிடிச்சு இதுக்குள்ள போடு’ என்றேன்

‘யம்மா…இம்பிடு அட்டையா?’

’அர மணிக்கூர் விட்டா எருமைக்க தேகம் முளுக்க அட்டையா இருக்கும்… ரெத்தம்போயி அது நீந்தமுடியாம கெடக்கும்’ என்றேன். காளியின் மடி முழுக்க அட்டைகள் செறிந்திருந்தன. நான் அவள் காம்புகளைப்பிடித்து அட்டைகளை எடுத்தபோது ஒரு காம்பிலிருந்து பால் ஊறி சொட்ட ஆரம்பித்தது. இலைக்கள்ளிச்செடியின் தண்டை முறித்ததுபோல

‘கறக்குதியண்ணாக்கும் நினைக்குது’ என்றான் செல்லன்

’நான் எப்பம் தொட்டாலும் கறக்கும்’ என்றேன். நான்கு காம்புகளிலும் பால் ஊறிச்சொட்டியது.

கோணக்கொம்பு ஏழுமாத கர்ப்பம். அதற்குப் பால் இல்லை. மீண்டும் காளியையும் கோணக்கொம்பியையும் நீரில் இறக்கினேன்.

‘இம்பிடு அட்டை எதுக்கு?’

நான் பதில் சொல்லவில்லை. செல்லன் என்னைப்பார்த்துவிட்டுப் பெருமூச்சுடன் ‘நரகவேதனையாக்கும்….கிட்டபோனா நம்ம முடியயும் மூக்கையும் பிடிச்சு பிச்சு எடுத்துப்போடுவா…’ என்றான்.

நான் அவனைப்பார்த்தேன்

‘நான் உறங்கி எட்டுநாளாவுது….எல்லாத்துக்கும் நானாக்கும் காரணம்னு நினைக்கும்பம் நெஞ்சில தீயாக்கும்’

‘நீரு என்ன செய்தீரு?’

செல்லன் பெருமூச்சு விட்டான்.

மீண்டும் அட்டைகளைப் பொறுக்கிப் போணியில் போட்டோம். முக்கால் போணி நிறைய அட்டை. குளுகுளுவென்று சேறு நிறைந்திருப்பதுபோல. அவை நெளிந்தபோது சதைப்பரப்பு போலவும் தோன்றியது

பெரியப்பா போணியைத் திறந்து அட்டைகளைப் பார்த்தார். அவற்றை ஒரு ஈரிழைத்துண்டில் கொட்டி மூட்டையாகக் கட்டி முறுக்கிப்பிழிந்தார். பின்பு அந்த மூட்டையை அப்பு அண்ணா கையில் கொடுத்து வேகமாக சுழற்றச்சொன்னார். கடைசித்துளி தண்ணீர் வரை அதிலிருந்து தெறித்தபின் அப்படியே வெயிலில் கொண்டுசென்று வைக்கச்சொன்னார்

நான் காளியையும் கோணக்கொம்பியையும் தொழுவில் கட்டினேன். மஞ்சள்தூளையும் வேப்பெண்ணையையும் குழைத்து அவற்றின் அடிப்பக்கம் முழுக்கத் தடவி விட்டேன். குனிந்து காளியின் அடிப்பக்கத்தில் எண்ணைபூசியபோது அது என் முதுகை நக்கியது. உப்புத்தாள்போன்ற நாக்கு. நான் அலறியபடி எழுந்துவிட்டேன். ‘மோறையப்பாரு….கருப்பி…அடிச்சு பேத்திருவேன்…சவமே’என்றேன்.

ஐந்துநிமிடம் வெயிலில் வைத்தபின் அட்டைகளை எடுத்துப் பிரித்தார் பெரியப்பா. அட்டைகளை அள்ளி அள்ளி இன்னொரு ஈரிழைத்துவர்த்தில் பரப்பினார்.

‘அவள எளுப்பி உக்கார வை’ என்றார் பெரியப்பா

கிழவி அந்தப்பெண்ணை மெல்லத்தூக்கி அமரச்செய்தாள். அவள் மெதுவாக எழுந்தாள். வாயிலிருந்து வழிந்த எச்சிலைப் புறங்கையால் துடைத்தாள். தலையைச் சொறிந்தபடி சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். எருமைக்கண்கள்போல பெரிய விழிகள் சிவப்போடியிருந்தன. சட்டென்று தன்மார்பைப்பிடித்தாள். ‘எனக்க அம்மோ என்னைக் கொல்லடியே’ என்று வீறிட்டு மார்புகளை இறுகப்பிடித்துக்கொண்டாள். ’அம்மோ அம்மோ…’ என்று வீறிட்டபடி வலது கையால் பெஞ்சை அறைந்தாள். சாமி வந்தவள் போல தலையைப் புரட்டிப்புரட்டி அலறினாள்

நான் கைகள் நடுங்க பின்னால் நகர்ந்தேன். செல்லன் தூரமாக ஓடிப்போய் தென்னைமரத்தடியில் நின்று இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டான். அவன் உடம்பு குறுகி அதிர்ந்தது

நான் அசப்பில் திரும்பியபோது அவள் மார்புகளைக் கண்டேன். உடனே பார்வையைத்திருப்பிக்கொண்டேன். இரு கைக்குழந்தைகள் போல அவை அவள் மார்பில் தொங்கி அசைந்தன. அவளை அள்ளிக்கவ்வித்தின்னும், அவளுக்குள் துளைத்து நுழையமுயலும் இரு பெருச்சாளிகள்…. நான் ஓடிப்போய்க் கிணற்றடியில் நின்று கொண்டேன். அங்கும் அவள் அலறல் கேட்டுக்கொண்டிருந்தது.

குமரேசன் அங்கே வந்தான் ‘அங்க நிக்கப்பளுதில்ல கேட்டுதா?’ என்றான்.

‘பயங்கர வேதனை இருக்கும் இல்லியா?’ என்றேன்

‘வேதனையா?கொள்ளாம், ஏமான் என்ன கண்டுது? ஸ்திரீஜென்மத்துக்குண்டான வலியிலே பாதிகூட ஆம்பிளைக்கு இல்லை…’
,
‘ஏன்?’

‘அது பகவதிக்க வெளையாட்டு…ஏன் வே?’

அப்பு அண்ணா வந்து ‘சிலசமயம் இந்த வேலைக்கு ஏன் வந்தோம்ணு தோணிடும்லே’ என்றபடி கிணற்றுமதில் மேல் ஏறி அமர்ந்தார்.

‘பெண்ணடியாளுக்க வலியக் கண்டா ஆணாப்பிறந்ததே பாவம்ணு தோணிப்போயிரும்’ என்றான் குமரேசன்

‘ஆணுக்கு அந்தமாதிரி வலி இல்லியா?’ என்றேன்.

‘இல்லியே… இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக்கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே’ என்றார் அப்பு அண்ணா.

‘என்ன செய்யுதாரு?’ என்றேன்

’அட்டைகள முலைக்குமேலே வச்சுக் கெட்டுதாரு…அட்டை அந்தப் பாலையும் ரெத்தத்தையும் சலத்தையும் எல்லாம் உறிஞ்சிப்போடும்….’

‘நோவுமா?’

‘நோவாம கடிக்குததுக்குண்டான கோப்பு அதுக்க கையில உண்டு… அது இருக்கதும் தெரியாது வலிக்கதும் தெரியாது… உறிஞ்சிக்குடிச்சு பக்கறை மாதிரி உப்பின பிறவு அது தானா விளுந்திரும். நல்ல புளியம்பளம் கணக்கா இருக்கும்…..’

சட்டென்று அலறல் நின்றுவிட்டதை உணர்ந்தேன்

‘அட்டை உறிஞ்சத் தொடங்கினதும் வலி இந்நா இந்நான்னு நின்னுபோயிரும்…’ என்றார் அப்பு அண்ணா

நான் பெருமூச்சுவிட்டேன்

’பிள்ளைக்கு இந்த நாத்தம்பிடிச்ச தொளிலு வேண்டாம் கேட்டுதா? பிள்ளை படிச்சுகேறி நல்ல சட்டையும் கால்நிக்கரும் இட்டு வாத்தியாராட்டு போகணும்’ என்றார் அப்பு அண்ணா

‘ஏன்?’ என்றேன்

‘இந்தத் தொளிலும் புண்ணியமுள்ளதாக்கும். மேலே போனா சித்திரபுத்தன் ஓடிவந்து கெட்டிப்பிடிச்சு கூட்டிட்டுப்போவான்…ஆனா இங்க இருக்கப்பட்ட நாளிலே எப்பமும் கண்ணீரும் ரெத்தமும்தானே கண்ணில படும்…சீவிதத்துக்குமேலே ஒரு வெறுப்பு வந்துபோடும் பிள்ளே’

‘டேய் ஜெயா’ என்று பெரியம்மா அழைத்தாள் ‘வாடா வந்து கஞ்சி குடி’

நான் உள்ளே சென்று அமர்ந்து மௌனமாகக் கஞ்சி குடித்தேன்

‘ஏன் ஒருமாதிரி இருக்கே?’ என்றாள் பெரியம்மா

‘ஒண்ணுமில்ல’

‘உப்புமாங்கா வேணுமா?’

‘வேண்டாம்’

நான் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது இருவரும் பீடி பிடித்துக்கொண்டிருந்தார்கள். நான் அருகே வந்து பேசாமல் அமர்ந்துகொண்டேன்

‘டேய்…’ என்றார் பெரியப்பா ‘எங்கடா அவன்?’

‘பெரியப்பா’ என்று சென்று நின்றேன்

பெரியப்பா அவள் மார்பில் இன்னொரு வெள்ளைத்துண்டை சுற்றிக்கட்டியிருந்தார். அவள் முகம் தெளிந்திருந்தது. கன்னத்தில் சுருண்ட தலைமயிர் ஒட்டியிருந்தது.

‘இதாரு அய்யனே, மகனா?’ என்றாள் . பெரிய கண்களின் நுனியே என்னைப்பார்க்க போதுமானதாக இருந்தது. பாளையரிவாளின் கூர்மையின் ஒளி அதற்கு இருந்தது. சிறிய உதடுகளுக்குள் வெண்ணிறப்பற்கள் தெரிய சிரித்து ‘நல்ல சொடியாட்டுல்ல இருக்காரு’ என்றாள்

‘என் தம்பிக்க பயலாக்கும்… ஏளாம்கிளாசு படிக்கான்…. நல்ல ரெசமுள்ள பய…’ என்றார் பெரியப்பா

அவள் என்னைப்பார்த்து இன்னும் பெரிதாகச் சிரித்தாள். உதடுகளுக்கு இருபக்கமும் கனத்த கன்னம் மடிய அந்தச்சிரிப்பு மிக அழகாக இருந்தது. சற்றுமுன் அலறியவள் அவளா என்று சந்தேகம் வந்தது

‘இப்பம் வேதன இல்லியா?’ என்றேன்

’இல்ல…’ என்று புன்னகைத்துவிட்டு ‘ஆனா நல்ல ஷீணம் உண்டு’

‘அது அபினுக்க தலசுத்தலாக்கும்’ என்றார் பெரியப்பா . கீழே சுருண்டு கிடந்த ஈரிழைத்துவர்த்தின் வெள்ளைப்பரப்பு முழுக்க புதியரத்தமும் சலமும் ஆங்காங்கே திட்டுத்திட்டாகத் தெரிந்தன. ‘டேய் இந்த அட்டைகளைக் கொண்டுபோயி கோளிக்குப் போடு…’

அவள் திடுக்கிட்டு ‘அய்யோ…வேண்டாம் அய்யனே….கொல்லவேண்டாம் அய்யனே’ என்றாள். சட்டென்று குரல் தழைய ‘எனக்க பாலுகுடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்…’

பெரியப்பா அவளை நிமிர்ந்து சில கணங்கள் பார்த்தபின் என்னை நோக்கி ‘செரியாக்கும்…கொண்டுபோயி அந்தக்குளத்திலேயே எறிஞ்சிட்டு வா’ என்றார். நான் குனிந்து அந்தத் துண்டை எடுத்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

தென்னைமரத்தடியில் கைகூப்பியபடி வீட்டை நோக்கியவனாக செல்லன் நின்றிருந்தான். நான் திரும்பிப்பார்த்தபோது அவள் சுவரில் தலைசாய்த்து கண்மூடி ஆழ்ந்திருப்பதைப்பார்த்தேன்.

முந்தைய கட்டுரைஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…
அடுத்த கட்டுரைவெண்கடல்- கடிதங்கள்