சென்ற 2012 ஆம் வருடத்திற்கான ’கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் அவார்ட்ஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டுவரும் இந்த விருது கேரள அரசு விருகளுக்கு நிகரான முக்கியத்துவம் கொண்டது. கேரளத் திரைவிமர்சகர்களின் கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம் அமைப்புகள் கூட்டு சேர்ந்து இதை வழங்குகின்றன.
நெடுங்காலம் விருதுகளை அறிவிப்பது மட்டுமே நிகழ்ந்தது. விழாவோ ரொக்கப்பரிசோ ஏதும் இல்லை. ஆனால் அது கறாரான விமர்சக அளவுகோல்களின் படி வழங்கப்பட்டதனால் அதற்குப் பெரும் மதிப்பு உருவானது. சமீபகாலமாக தொலைக்காட்சிகள் மூலம் எல்லா நிகழ்ச்சிகளும் பெரிதாக ஆனமையால் இப்போது இவ்விருதுடன் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. அட்லஸ் ஜுவல்லரி நிறுவனம் செலவுகளை ஏற்றுக்கொள்கிறது.
வழக்கமாக ஃபிலிம் கிரிடிக்ஸ் விருது பிப்ரவரியில் கேரள அரசு விருதுகள் வழங்கப்படுவதற்கு ஒருவாரம் முன்னால் அறிவிக்கப்படும். கேரள அரசுவிருதுகளில் இவ்விருதுகள் பெரிய செல்வாக்கு செலுத்தும் என்பார்கள். இவ்வருடம் தாமதமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கேரள அரசுவிருதுகளையே இவ்விருதுகளும் ஏறத்தாழ எதிரொலிக்கின்றன
மிகச்சிறந்த படம் எதிர்பார்த்தது போலவே ’செலுலாய்டு’தான். மிகச்சிறந்த இயக்குநர் செல்லுலாய்டுக்காக கமல். ஒழிமுறி மிகச்சிறந்த இரண்டாவது திரைப்படம்
ஆனால் ஒழிமுறி எண்ணிக்கையில் அதிக விருதுகளை வென்றுள்ளது. மிகச்சிறந்த இரண்டாவதுபடத்துக்காக தயரிப்பாளர் பி.என்.வேணுகோபால் விருதுபெறுகிறார். ஒழிமுறியில் தாணுப்பிள்ளையாக நடித்த லால் மிகச்சிறந்த நடிகருக்கான விருதைப்பெறுகிறார்.
மிகச்சிறந்த நடிகைக்காக ஒழிமுறியில் காளிப்பிள்ளை என்ற கதாபாத்திரத்தை நடித்த ஸ்வேதாமேனன் பெறுகிறார்
மிகச்சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது ஒழிமுறிக்காக அழகப்பனுக்கு வழங்கப்படுகிறது. ஃபிலிம் கிரிடிக்ஸ் விருது டிஜிட்டல் இம்ப்ரூவிங் செய்யப்படாத படங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. இயற்கைஒளியைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பாகப் பரிசீலிக்கப்படுகிறது. துணைக்கதாபாத்திரத்துக்கான விருது ஒழிமுறிக்காக ஜெகதீஷுக்கு அளிக்கப்படுகிறது.
சிறந்த திரைக்கதைக்கான விருது ஒழிமுறிக்காக எனக்கு.நான் பங்களிப்பாற்றிய படங்களெல்லாமே விருதுக்குரியவையாக இருந்துள்ளன. தேசியவிருதுகளைக்கூட வென்றுள்ளன. ஆனால் எனக்கு சினிமாவுக்காகக் கிடைக்கும் முதல் விருது இது. அவ்வகையில் நிறைவுதான்.
நான் இதுவரை பங்களிப்பாற்றிய எல்லாப் படங்களும் மனநிறைவூட்டுவனவே. சங்கடப்படும்படி எந்தப்படமும் வந்ததில்லை என்பது வெறும் அதிருஷ்டம்தான். கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு ,ஒழிமுறி, நீர்ப்பறவை, கடல் ஆகியவற்றில் கஸ்தூரிமான், கடல் இரண்டும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. பிற எல்லாமே வணிகவெற்றிகளே. அங்காடித்தெரு அவ்வருடத்தின் முதன்மையான வெற்றிப்படமாக இருந்தது. கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு ஆகியவை விருதுகள் பெற்றன. கடலும் நீர்ப்பறவையும் விருதுகள் பெறுமென நினைக்கிறேன்.
ஒழிமுறி மலையாளத்தில் நிலையான ஒரு ரசிகர்குழாமை உருவாக்கியிருப்பதை உணர்கிறேன். மிகச்சிறந்த தொடக்கத்தையும் அமைத்துள்ளது. அது தொடருமென நம்புகிறேன்.