குருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
குருதி கதை வரை உங்கள் சமீபத்திய கதைகளைப் படித்து விட்டேன். இந்த கதைகளை
நான் இன்னொருவரிடம் சொல்வதென்றால் இருவரிகளில் சொல்லி விடலாம். இந்தக்
கதைகள் நுண்நோக்கி வழியாகக் காண்பது போன்று இருந்தது. மிக மெதுவாக அதே
சமயம் மிக இயல்பாக. உங்கள் பழைய கதைகளைத் திரும்ப திரும்ப
வாசித்திருக்கிறேன், இன்னும் பல கதைகள் எனக்கு அந்தரத்தில்தான்
நிற்கின்றன, ஆனால் இந்தக் கதைகள் அப்படி அல்ல. நிலம் கதையும் குருதியும்
மண்ணில் தன்னை நிறுத்திக் கொள்ளும் மாந்தர்களின் கதை ,இதை ஒரு இளைஞன் எழுதி
விட முடியாது ,அவன் கனவுக்கும் கேள்விகளுக்கும் இந்த சரீரம் போதாது
,அனுபவஸ்தனுக்கு அவன் நின்ற நிலமும் உடலும் இறைவன் அளித்த பெரும் கொடை.
அவன், தான் வாழ்ந்த ஒவ்வொரு துளியிலும் அதிலிருந்த மகத்துவத்தைக் கண்டு
மகிழ்வான். உங்கள் சமீபத்திய கதைகளை அவ்வாறே பார்க்கிறேன்.

ராதாகிருஷ்ணன்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் நீரும்நெருப்பும் என்ற தலைப்பில் வந்துள்ள கதையைப் படித்தேன்.நான் அனுபவித்த உணர்வுகளை என்னால் விளக்க முடியவில்லை.அதில் குறிப்பாக ‘பா’ சொல்லும் வார்த்தைகள் ” அவரை வாழவைப்பவை நிறைய இருக்கின்றன. அவற்றுடன்தான் அவர் எவ்வளவோ வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறார்”
அதற்கு மேல் இந்த வரிகளைப் படித்தவுடன் கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.

‘அவரால் ஒருபோதும் விரும்பி சாகமுடியாது…கடைசிக்கணம் வரை அவர் சலிப்படையவும் போவதில்லை’.

நன்றி

சேஷகிரி

அன்பான ஜெயமோகன்

வாசகர்கள் எல்லாக் கதைகளுக்கும் கருத்து எழுதி விட்டார்கள், தீபம் தவிர. அது என்னவொரு அற்புதமான கதை.

கூழாங்கல் போன்ற கண்களை மூடித் திறந்து, லட்சுமி வளர்வதைப் போல் வீடும் வளர்கிறது, பிறந்து இறந்து கொண்டே இருந்தான் முருகேசன்.,அவள் பார்வை விரிந்த மண், அழகுச் சொற்றொடர்கள்.

“சாமியைக் கூட இருட்டில்தான் பாக்கிறீய” அவள் எப்படி அந்த உரையாடலை அவள் விரும்பும் திசைக்கு நகர்த்துகிறாள்.

கிடாவும் அருமையான கதை. நுண்ணிய உணர்வுகளை அழுத்தமாகச் சொல்லும் மென்மையான கதைகள்.

ஒவ்வொரு முறையும் சொல்வதுதான். உங்களுக்கு நன்றி, புதுப் புது உலகங்கள் அழைத்துச் செல்கிறீர்கள்..

கடல் இன்னும் பார்க்கவில்லை. பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு மூங்கில் தோட்டம். ஆனால் சித்திரை நிலாவும், அன்பின் வாசலிலேயும் மனதைப் பாதிக்கப் போகிறது. தெரிகிறது.

அன்புடன்

ரவிச்சந்திரிகா

முந்தைய கட்டுரைஆழ்நதியைத்தேடி-மதிப்புரை
அடுத்த கட்டுரைவெறும்முள் [புதிய சிறுகதை]