நீரும் நெருப்பும் [புதிய கதை]

இரவு பன்னிரண்டரை மணிவாக்கில் பூல்சந்திரர் பாபுவின் மலச்சட்டியுடன் வெளியே வந்து ஆசிரமத்தின் தெற்குமூலையில் வெட்டப்பட்டிருந்த குழியை நோக்கிச் சென்றபோதுதான் அவரைப் பார்த்தார். ஆசிரமத்தின் நுழைவாயிலில் நடப்பட்டிருந்த மூங்கில் கழியில் தொங்கிய அரிக்கேன் விளக்கின் ஒளி அவருக்குப் பின்னால் இருந்ததனால் நிழலுருவமாகவே அவரைப் பார்க்க முடிந்தது. தோளில் புரண்ட தலைமுடியிலும் தாடியிலும் விளக்கின் செவ்வொளி பரவி மின்னிக் கொண்டிருந்தது.

‘யார்?’ என்றார் பூல்சந்திரர் .

அவர் ‘சிவோஹம்!’ என்றார்.

யாரோ பைராகி. அபூர்வமாக அப்படி சிலர் வந்துவிடுவதுண்டு. சபர்மதியின் கரையிலிருக்கும் ஏதேனும் கோயில்களுக்கு வருபவர்கள் அங்கே எவரிடமாவது தங்குமிடம் பற்றி கேட்பார்கள். கிராமவாசிகளுக்கு இன்னும் இந்த ஆசிரமத்துக்கும் சாமியார்களின் ஆசிரமத்துக்கும் வேறுபாடு தெரியாது. கைகாட்டிவிடுவார்கள்.

பூல்சந்திரர் ‘இது துறவிகளின் ஆசிரமம் இல்லை’ என்று சொன்னார். முன்பெல்லாம் வருபவர்கள் அனைவரையும் தங்கவைக்கும் வழக்கமிருந்தது. ஆனால் பெரும்பாலான பைராகிகளும் துறவிகளும் கஞ்சா இழுப்பவர்கள். மேலும் ஆசிரமத்தில் தங்களுக்குத் துறவிகளுக்கான சிறப்பு மரியாதைகள் செய்யப்படவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பாபு அவ்விஷயத்தில் மிகமிக கறரானவர். அவருக்கு அலைந்து திரியும் சாமியார்கள் மேல் உள்ளூர வெறுப்பிருந்தது. அவர்களின் வாழ்க்கையும் ஆன்மீகமும் அவருக்குப் புரியவில்லை. ஒருமனிதன் தன்னுடைய புலன்வாயில்களை மூடிப் புறவுலகை அணைத்துத் தன்னைத் துண்டித்துக் கொள்வதை பாபு ஒரு பாவமென்றே எண்ணினார்

‘தெரியும்’ என்றார் பைராகி ‘நான் திருவாளர் காந்தியைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்’ அவர் சரளமான ஆங்கிலத்தில் பேசியது பூல்சந்திரை ஆச்சரியப்படுத்தியது

பூல்சந்திரர் ‘எங்கிருந்து?’ என்றார்.

‘தொலைவிலிருந்து’

சட்டென்று அது வந்தவரின் மாறுவேடமா என்ற எண்ணம் ஏற்பட்டது. தலைமறைவாகச் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கும் வேடம் பைராகிதான். இந்தியாவில் பைராகிகளிடம் எந்தக் கேள்வியையும் கேட்க முடியாது, எவரிடமும் எந்த ஆதாரமும் இருப்பதில்லை. சாமியார்களிடம் போலீஸ் அத்துமீறினால் பொதுமக்கள் துணைக்கு வருவார்கள். ஒருமாதம் முன்புகூட ஒருவர் பைராகி வேடமிட்டு வந்து பாபுவிடம் அதியுக்கிரமாக வாதிட்டுவிட்டுச் சென்றிருந்தார்

‘அவர் நோயுற்றிருக்கிறார்’ என்றார் பூல்சந்திரர் .

‘தெரியும். நான் அதைக் கேள்விப்பட்டுத்தான் அவரைச் சந்திக்க வந்தேன்..’

பூல்சந்திரர் பெருமூச்சுவிட்டார். சரிதான், இன்னொரு வைத்தியர். கடந்த பன்னிரண்டு நாட்களாகவே பாபு உடல்நலமில்லாமல் இருக்கிறார். சுற்றுப்புறங்களிலிருந்தெல்லாம் நாட்டுவைத்தியர்களும் பூசாரி வைத்தியர்களும் மந்திரவாதிகளும் ஆசிரமத்திற்குத் தேடி வந்துகொண்டிருக்கிறார்கள். அனைவரிடமும் பாபுவைக் காப்பாற்றும் ஏதோ ஒரு சஞ்சீவிமருந்து இருந்தது.

‘ஒரு நிமிடம்’ என்றார் பூல்சந்திரர் . குழியை அணுகி உமியும் மண்ணும் மலமும் கலந்த கலவையை அதில் கொட்டிவிட்டு தொட்டியைக் கழுவி உள்ளே ஊற்றியபின் மண்வெட்டியால் மண்ணை வெட்டி உள்ளே கொட்டி மூடினார். சாமியார் அங்கேயே அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றார்

பூல்சந்திரர் தொட்டியுடன் சாமியார் அருகே வந்து ‘உள்ளே வாருங்கள். சற்றுநேரம் அமர்ந்துகொள்ளுங்கள். நான் இதோ வருகிறேன்’ என்றார். சாமியார் தலையை அசைத்தாலும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

பூல்சந்திரர் உள்ளே சென்றார். ஆசிரமத்தின் எளிய மூங்கில் குடிலுக்குள் நாட்டுமரப் பலகைகளை அடுக்கிச் செய்த கட்டில்மீது பாபு படுத்திருந்தார். அவர் தூங்கவில்லை என்பது பூல்சந்திரரின் காலடியோசை கேட்டு அவரது மூடிய இமைகள் அசைந்த விதத்தில் இருந்து தெரிந்தது. பன்னிரண்டு நாட்களில் பாபுஜி மிக மிக மெலிந்துவிட்டார். சதையே இல்லாத மெலிந்த உறுதியான உடல் அவருடையது. காட்டுத்தீக்குப் பின்னர் வைரம் மட்டும் எஞ்சும் சுள்ளி போன்றது அவரது உடல் என பூல்சந்திரர் நினைப்பதுண்டு. அவரது ஊரில் அத்தகைய கழிகளைத் தேடி எடுத்துவந்து வயலில் சேற்றிலிறங்கி வேலை செய்யும்போது ஊன்றி நடக்கப் பயன்படுத்துவார்கள். வங்காளத்தின் சேற்றுச்சூழலில் எந்தக் கழியும் ஒருவருடம் கூடத் தாக்குப் பிடிக்காது. காட்டுத்தீயில் கிடைக்கும் கழிகள் தலைமுறைகளைத் தாண்டிப் பயன்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் பாபு சட்டென்று கட்டுத் தளர்ந்த சுள்ளிக்கட்டு போல ஆகிவிட்டார். கிருஷ்ண ஜெயந்தியன்று காலையில்தான் அவர் ஆசிரமத்துக்கு வந்தார். அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை. நிலக்கடலை நெய்யும் எலுமிச்சம் பழமும் பழங்களும் மட்டுமே அவர் அப்போது உணவாகக் கொண்டிருந்தார். நிலக்கடலை நெய்யை ஒருவர் இரண்டு கரண்டிகளுக்கு மேல் சாப்பிட்டு பூல்சந்திரர் பார்த்ததில்லை. வயிறுகலங்கும்போது பாபு சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வார். ஒருநாள் உபவாசத்தில் குடல்சுருங்கி வயிறு அமைதியானதும் மீண்டும் அதே உணவு.

கிருஷ்ண ஜெயந்திக்குப் பாகும் பாயசமும் செய்யவேண்டுமென ஆசிரமத்தின் குழந்தைகள் ஆசைப்பட்டார்கள். குழந்தைகள் சார்பில் ரேணு சென்று கஸ்தூர்பாவிடம் சொன்னார். ஆசிரம நிதியை நிர்வாகம் செய்துவந்த பேராசிரியர் கோஸாம்பி அவ்வாரு ஒரு சிறப்பு உணவுக்கு ஆசிரம விதிகளில் அனுமதியில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் கஸ்தூர்பா அந்தச் செலவை நான்குநாள் உபவாசமிருந்து தான் சரிக்கட்டி விடுவதாகச் சொன்னபோது கோஸாம்பியால் ஏதும் சொல்ல முடியவில்லை. அவர் குழம்பிப் போனவராகத் தலையைப் பென்சிலால் நீவிக்கொண்டார்.

பாபு இரவில்தான் வந்தார். களைத்துப் போயிருந்தார். பா அவருக்கு வெந்நீர் போட்டுக்கொடுத்தார். நெடுந்தூரம் நடந்த கால்கள் மண்ணும் புழுதியும் படிந்து அகழ்ந்தெடுத்த கிழங்குகள் போலிருந்தன. பா அவற்றை ஆவி பறக்கும் வெந்நீர் விட்டு தேய்த்துக் கழுவினார். பாபு தன் பலகையில் அமர்ந்ததும் பா சூடாகப் பயறுப் பாயசத்தைக் கொண்டுசென்று அவருக்குக் கொடுத்தார். பாபு புருவம் சுருங்க ஏறிட்டுப் பார்த்ததுமே ‘இது குழந்தைகளுக்காகச் செய்தது…இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி. இதன் செலவுகளை நான் உபவாசமிருந்து சரிக்கட்டுவதாக கோஸாம்பியிடம் சொல்லியிருக்கிறேன்’ என்றார்.

புன்னகையுடன் பாபு அந்தக் கோப்பையை வாங்கிக் குடித்தார். அவரது முகம் மலர்வதை பூல்சந்திரர் கண்டார். அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறது. அது இன்னும் விளையாடவும் தின்பண்டங்கள் சாப்பிடவும் இலக்கில்லாமல் அலையவும் ஆசைப்படுகிறது. பாபுவின் ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக் குழந்தையுடன்தான்

‘இன்னும் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா?’ என்றார் பா. பாபு மலர்ந்த முகத்துடன் தலையசைத்தார். அவர் இரண்டு கோப்பை உணவுண்பதை பூல்சந்திரர் முதல்முறையாகப் பார்த்தார். அவருக்கு அப்போதே ஏதோ உறுத்தியது. ஒருமணிநேரத்திலேயே பாபுவின் உடல்நிலை மோசமடைந்தது. கடுமையான சீதபேதி. பா அவரை ஆசிரமத்திலேயே தங்கும்படி சொன்னார். ஆனால் வேலையை நிறுத்தமுடியாது என்று மறுநாள் காலை பாபு கிளம்பிச் சென்றார்.

நதியாத்தில் ஹிந்து ஆதரவற்றோர் விடுதியில் அவர் படுக்கையில் கிடப்பதாகச் செய்திவந்தது. பா உடனே கிளம்பி அங்கே சென்றபோது பூல்சந்திரரும் கூடவே சென்றார். பாபுவை கவனித்துக் கொண்ட டாக்டர் கனுகா அவர் அலோபதி மருந்துகள் சாப்பிடுவதுடன் உணவு முறையை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும் என்று கோரினார். பாபு எந்த மருந்தும் சாப்பிடமாட்டேன் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். உடம்பின் அமைப்பில் வரும் சிக்கல்களை உடம்பேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும், மருந்துமூலம் சரி செய்யக்கூடாதென்று வாதிட்டார். டாக்டர் கனுகா பாலாவது அருந்தும்படி மன்றாடினார். மிருகங்களிடமிருந்து பெறப்படும் எந்த உணவையும் ஏற்றுக் கொள்வதில்லை என பாபு உறுதியாக மறுத்துவிட்டார். பாலைக் குட்டிகளுக்காகத்தான் அந்த மிருகம் சுரக்கிறது, மனிதர்களுக்காக அல்ல. அது திருட்டு.

‘இதோ பாருங்கள் டாக்டர், என்னுடைய கொள்கைகளைக் கடைசி எல்லை வரை பரிசோதனை செய்துபார்க்க இது ஒரு சந்தர்ப்பம். நான் உயிருடன் மீண்டுவிட்டால் என் சோதனைகள் வெற்றி எனஆகிவிடும். அப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியும் நிறைவும் கிடைக்கும்…அதை நான் ஏன் இழக்கவேண்டும்?’ என்றார் பாபு

‘ஆனால் உங்கள் உடல் அதைத் தாங்காது… நீங்கள் எனக்கு முக்கியமானவர்’

‘நான் நம்பும் விஷயங்களை என் ஆன்மாவைக் கொண்டும் என் உடலைக் கொண்டும்தான் நான் பரிசோதனை செய்யமுடியும்….என் உயிரையே எதன்பொருட்டுக் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேனோ அதைத்தான் நான் இன்னொருவருக்கு பரிந்துரைக்கமுடியும்’

கனுகா கோபத்துடன் தலையை ஆட்டினார். பாபு புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டார். கனுகா சோர்வுடன் பெருமூச்சுவிட்டு எழுந்து சென்றார்.

நான்கு நாட்களில் நிலைமை மேலும் மோசமானது. சேத் அம்பாலாலின் மிர்ஜாபூர் பங்களாவுக்கு பாபுவைக் கொண்டு சென்றார்கள். அங்கே அவருக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது .இலை போல அவரது உடம்பு நடுங்கிக் கொண்டே இருந்தது.. ஆனால் எந்த மருத்துவமுறைக்கும் ஆட்பட மறுத்துவிட்டார். நோய் ஒரு உச்சநிலையை அடைந்தபோது அவர் தன்னினைவை இழந்து எப்போதும் ஒரு தியான நிலையில் இருந்தார். தூங்குவதில்லை. சூழலைப் பற்றிய நல்ல பிரக்ஞை உடலில் இருந்தது. ஆனால் மனம் வேறெங்கோ இருந்தது

இரண்டு நாட்கள் முன் பாவிடம் தன்னை சபர்மதிக்குக் கொண்டு செல்லும்படி சொன்னார். கனுகாவிடம் ஆலோசனை கேட்டபோது விரக்தியுடன் ‘எங்கிருந்தால் என்ன?’ என்றார். பா பாபுவின் பாதங்களை வருடியபடி அருகே இருந்தார். பாபு புன்னகையுடன் ‘ஒருவேளை அது நிகழ்ந்தால் சபர்மதிதான் நல்ல இடம்…’ என்றார். பா ஒரு துளி கண்ணீர் கன்னங்களில் உதிர முகத்திரையை இழுத்துவிட்டுக் கொண்டார்.

சபர்மதிக்கு வந்தபின் அனேகமாக பாபு பேசவேயில்லை. அஹமதாபாதிலிருந்து டாக்டர் தல்வல்கர் வந்து பாபுவை கவனித்துக் கொண்டார். ஆசிரமத்திற்கு வெளியே மரத்தடியில் நின்றபோது ‘இது ஒருவகையில் புரோகிதர் வேலைதான்…’ என்று கசப்புடன் தல்வல்கர் சொன்னார். ’அவர் முடிவு செய்துவிட்டார்…’

ஆசிரமத்தில் அனைவருமே அதை உள்ளூர உணர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் வந்து சன்னல்வழியாக பாபுவைப் பார்த்துவிட்டுப் பெருமூச்சுடன் திரும்பிச் சென்றார்கள். மெல்ல அணைந்து கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் தெரிந்தது. இருந்தாலும் தல்வல்கர் அப்படிச் சொன்னது பூல்சந்திரரை அதிர்ச்சியடையச் செய்தது. ‘என்ன சொல்கிறீர்கள்?’ என்றார் பூல்சந்திரர்

தல்வல்கர் “எந்நேரமும் ஆவேசமாக வேலை செய்யும் இன்னொரு மனிதரை நான் கண்டதில்லை. இன்னும் கொஞ்சம் கடுமையாக உழைத்தால் உலகை மாற்றிவிடலாம் என்று நம்புகிறார் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் அவருக்குள் எப்போதும் ஒரு சலிப்பும் இருந்து கொண்டிருக்கிறது. உள்ளே, வெகு ஆழத்தில். அது அவருக்கு மனிதர்களின் ஆழம் உண்மையில் என்ன என்று நன்றாகவே தெரியும் என்பதனால்தான். உலகப்போக்கை அறிந்த ஞானிகள் அனைவருக்கும் அந்தச் சலிப்பு இருந்து கொண்டிருக்கும். அவர்கள் கனிந்த பழம்போல எப்போதும் விடைபெற்றுச் செல்லத் தயாராக இருப்பார்கள்…’ என்றார்

பாபு கண்விழித்து பூல்சந்திரரைப் பார்த்தார். என்ன என்பதுபோல. பூல்சந்திரர் மலச்சட்டியை வைத்துவிட்டு மெல்ல வெளியேறினார்.

வெளியே அந்தச்சாமியார் அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தார். பூல்சந்திரர் ‘வணங்குகிறேன் மகாராஜ்… இன்றிரவு நீங்கள் பாபுவைப் பார்க்கமுடியாது. டாக்டர் தல்வல்கர்தான் இப்போது–’

‘நான் டாக்டர் தல்வல்கர் அனுப்பி வந்தவன்’

‘அவர்…’

‘என் மருத்துவ முறைகளைப்பற்றி நான் அவரிடம் விரிவாகப் பேசியிருக்கிறேன்..’

‘தல்வல்கர் என்ன சொன்னார்?’

‘நான் ஒரு கிறுக்கன் என நினைக்கிறார். ஆகவே என்னைப் பார்க்கவும் என் மருத்துவத்துக்குள் வரவும் திரு. காந்தி உடன்படக்கூடும் என்றார்’

‘ஓ’ என்றார் பூல்சந்திரர்

‘நான் பொதுவாகக் கிறுக்கர்களை மட்டும்தான் சிகிழ்ச்சை செய்து காப்பாற்றுகிறேன்… அவர்கள்தான் இந்த உலகுக்குத் தேவை…’

திடுக்கிட்டவராக ‘ஏன்?’ என்றார் பூல்சந்திரர்

‘ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் மிகமிகக் கிறுக்குத்தனமான விதிகளாலானது. கிறுக்கர்கள் தங்கள் கிறுக்குப் போக்கில் சென்றால்தான் அதைத் தொட்டறிய முடியும்…’ பைராகி முன்னால் வந்து ‘நான் ஜெர்மனியில் எட்டுவருடம் அலோபதி முறைகளையும் கற்றிருக்கிறேன். கேரளத்தில் நான்குவருடம் ஆயுர்வேதம். அதன்பின் இந்தப் பன்னிரண்டு வருடங்களாக பாரதவர்ஷத்தை அளந்து கொண்டிருக்கிறேன்…நான் இந்த அலையாத பைராகியைப் பார்க்கவேண்டும்’

’வாருங்கள்’ என்றார் பூல்சந்திரர். அந்த முடிவை ஏன் எடுத்தோம் என்று அவருக்கு ஐயமாக இருந்தது. ஆனால் பலசமயம் முடிவுகள் அப்படித்தான் அனிச்சையாக எடுக்கப்படுகின்றன.

பைராகி பாபுவின் அருகே அமர்ந்தார். பாபு கண்விழித்து அவரைப் பார்த்தார். முகம் மலர்ந்து சுருங்கிய வாய்க்குள் இருந்து பற்கள் வெளியே வந்தன. ‘சிவோகம்’ என்றார் பைராகி

பாபு “ராம் ராம்’ என்றார்

பைராகி ‘நான் உங்கள் நாடியைப் பார்க்கலாமல்லவா?’ என்றார். பாபு புன்னகைசெய்தார்

பூல்சந்திரர் நாடியைப் பிடித்ததுமே ‘நெருப்பு இருக்கிறது… ஆனால் அணைந்து கொண்டிருக்கிறது’ என்றார்

பாபு புன்னகை செய்தார்

‘நெருப்பை அணைக்க முயன்று கொண்டிருக்கிறீர்கள். எல்லாவகையிலும்…ஆனால் தைலமரத்தில் பற்றிக் கொண்ட நெருப்பு அணைய விரும்புவதில்லை’

‘உங்கள் சிகிழ்ச்சை முறை என்ன?’

‘நெருப்புமுறை என்று நான் அதை விளக்குவேன்’ என்றார் பைராகி. ’இந்தப் பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக நெருப்பு என்று நான் நினைக்கிறேன் .நான் சாங்கியதர்சி. நான்கு பூதங்களால் ஆனது இப்பிரபஞ்சம் என்பது எங்கள் கொள்கை. ஆனால் நெருப்பு மட்டுமே முதற்பெரும் பூதம். நெருப்பின் வெவ்வேறு வடிவங்கள்தான் நீரும் நிலமும் காற்றும். அவையும் நெருப்பாலானவை…’

‘நீர்கூடவா?’ என்றார் பாபு

‘ஆமாம்…என்ன ஐயம்? நீருக்குள்ளும் நெருப்பு இருக்கிறது…அதை ஒருவேளை நாளைய இயற்பியலாளர்கள் வெளியே எடுக்கக்கூடும்…. நிலத்துக்குள் ஒவ்வொரு துகளும் நெருப்பே என்று அவர்கள் இன்று கண்டுபிடித்துவிட்டார்கள்… ஒரு துகளில் உள்ள நெருப்பால் ஒரு உலகை அழிக்கமுடியும் என்கிறார்கள். உங்களுக்கு நவீன இயற்பியல் அறிமுகம் இருக்கலாம்’

‘கேள்விப்பட்டிருக்கிறேன்…’ என்றார் பாபு

‘இந்த உடலும் நெருப்பாலானதே. காய்ச்சல் என்பது நெருப்பு வெளிவரும் விதம்தான்…’ பைராகி சொன்னார். ‘உங்கள் உடம்புக்குள் இருக்கும் நெருப்பை நீங்கள் அணையச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊதிப் பற்றவைக்கிறேன். அதைப் பெருக்குகிறேன். உங்கள் உடலை ஓர் யாக குண்டமாக ஆக்குகிறேன்… நீங்கள் விரும்பினால் நாளையே’

‘நான் யோசிக்கிறேன்’

‘யோசனைக்கு ஒன்றுமில்லை… இந்தக்காய்ச்சல் நாட்களில் நீங்கள் என்ன சிந்தனை செய்து கொண்டிருந்தீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும்… சலிப்பாக இருப்பதனால் கிளம்பிவிடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால் கிளம்ப முடியவில்லை. பிடித்து வைத்திருப்பது எது என்று தெரியவில்லை. அதைத்தான் உங்களுக்குள் தேடிக்கொண்டே இருந்தீர்கள். அதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்…’

‘இல்லை…அதை என்னால் விளக்க முடியவில்லை’

‘ஆனால் கண்டுபிடித்துவிட்டீர்கள்… நான் உங்கள் நாடிகளைத் தொடும்போது அவை மீண்டும் உறுதியாகத் துடிப்பதைக் கண்டேன். நாங்கள் அதை இச்சாநாடி என்போம். நீங்கள் வாழ விரும்புகிறீர்கள்’

’எனக்குத்தெரியவில்லை’ என்றார் பாபு. ‘ஆனால் நேற்றிரவு நான் முடிவெடுத்தேன். போதும் என்று …. அந்த முடிவுடன் கண்ணை மூடினேன். காலையில் நான் கண்களைத் திறக்கப் போவதில்லை என்றுதான் நினைத்தேன். என் உடம்பு முழுக்க எடையிழந்து பஞ்சுபோல காற்றில் அலைவதாக உணர்ந்தேன். ஆனால் சற்றுமுன் ஒரு கனவு’

பைராகி பார்த்துக்கொண்டிருந்தார்

‘ஒரு குழந்தை பெரிய ஒரு மண்சட்டியுடன் சாலையோரமாக அமர்ந்திருக்கிறது… வற்றி உலர்ந்த கிராமப்புறக் குழந்தை… அனேகமாக அது ஒரு ஹரிஜனக் குழந்தை.. அந்த வெற்றுச்சட்டியில் இருந்து அது எதையோ எடுத்து தின்று கொண்டிருந்தது. நான் சட்டிக்குள் பார்க்கிறேன். ஒன்றுமே இல்லை. அது வெறுமையைத்தான் தின்று கொண்டிருந்தது. நான் திடுக்கிட்டுக் குழந்தையைப் பார்த்தேன். அது குழந்தையே இல்லை. ஒரு கிழவன்…மூன்றுவயது குழந்தை அளவே உள்ள படுகிழவன்… அவ்வளவுதான். விழிப்பு வந்துவிட்டது….’ பாபு பெருமூச்சு விட்டார். ‘கொடூரமான கனவு… ஆனால் அது வந்ததுமே மனம் தெளிவடைந்துவிட்டது’

‘அந்தக்காட்சியை நீங்கள் கைக்குழந்தையாக இருக்கும்போது உண்மையிலேயே கண்டிருக்கலாம்…’ என்றார் பைராகி. சென்ற நூறு வருடங்களாக அன்னியர் ஆட்சியில் இந்த தேசம் பஞ்சத்தால் அழிந்து கொண்டிருக்கிறது. இந்த தேசத்து மக்கள் கோடிக்கணக்கில் செத்து சருகுபோலக் குவிந்து மட்கி அழிந்துகொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அடித்தளச் சாதிமக்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டார்கள்…’

பாபு பெருமூச்சுவிட்டார்

‘அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை மிச்சமிருக்கிறது… நீங்கள் உங்கள் உத்தரவைப் பெற்றது லண்டனிலோ தென்னாப்ரிக்காவிலோ அல்ல. போர்பந்தரில்தான். அதை உணர்வதற்குத்தான் மேலும் பலவருடங்கள் ஆயின’

‘ஆம்’

பைராகி ‘கனவு அதைத்தான் சொல்கிறது. ஆனால்–’

’ஆனால்?’

‘மேலும் சொல்கிறது. அதை பிறகு அறிவீர்கள்… எப்படியோ உங்கள் பிறவி நோக்கத்தை உணர்ந்துவிட்டீர்கள். நீங்கள் செய்யவேண்டியவை நிறையவே மிச்சமிருக்கின்றன. நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்’

‘ஆமாம்’

‘நாளை முதல் உங்கள் உடலை எனக்குக் கொடுங்கள்… வெறும் ஏழுநாட்கள். அதில் உள்ள நெருப்பை நான் மீட்டு எடுக்கிறேன். வளரச் செய்கிறேன்’

‘என்ன செய்வீர்கள் என நான் அறியலாமா? ஏனென்றால் நான் ரசாயனங்களையோ மாமிச உணவுகளையோ உண்ண விரும்பவில்லை’

‘அவை ஏதும் தேவை இல்லை…. என் வழிகள் வேறு…’ பைராகி சொன்னார் ‘ஒரு அணையப்போகும் யாக குண்டத்தை மீட்பதுதான் நான் செய்யப்போவது’

பாபு பார்த்துக் கொண்டிருந்தார்.

‘அக்கினியே உண்ணுக! அக்கினியே எழுக!’ என்றார் பைராகி சம்ஸ்கிருதத்தில். உரக்க, மந்திர கோஷமிடுவதுபோல. ‘வேதங்கள் அதைத்தான் சொல்கின்றன. அக்கினி உண்மையில் உண்பது எதை? அந்த யாககுண்டத்தையேதான். உண்ணும் எதையும் அது தன்னிடம் வைத்திருப்பதில்லை. தன்னில் விழும் அனைத்தையும் அது பூர்வ வடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறது….மீண்டும் பிரபஞ்சவெளியில் கலக்கச் செய்துவிடுகிறது’

பானீஸ் விளக்கு ஒளியில் பைராகியின் கண்கள் இரு சிறிய கனல்களாக ஒளிவிட்டன. ‘நான் உங்களுக்குச் சொல்லித் தருவது சில மந்திரங்களைத்தான். அந்த மந்திரங்களுக்கு வலுவூட்ட சில உணவுகள்… நெருப்புக்குப் பிரியமான சில உணவுகள்…அவ்வளவுதான். நாளைக் காலை பார்ப்போம்’

பைராகி திரும்பியதும் பாபு மெலிந்த குரலில் ‘மகராஜ்’ என்றார். பைராகி திரும்பினார்.

‘இந்த தேசமும் என்னைப் போலத்தான் கிடக்கிறது. மரண விளிம்பில்… அதை அழியாமல் வைத்திருப்பது ஒரு மெல்லிய ஏக்கம் மட்டும்தான். அல்லது ஒரு மங்கலான கனவு’

‘ஆம்…அதை சாம்பல் மூடிய நெருப்பு என்று சொல்வேன்’ என்றார் பைராகி ‘இங்கே எழவேண்டியது நெருப்புதான்… இந்த தேசம் ஒரு வேள்விக்குண்டமாக எழுந்து எரிய வேண்டும்… இங்குள்ள அனைத்துக் கீழ்மைகளையும் தின்று தழல்கள் ஓங்கவேண்டும்…’ சட்டென்று அவர் கைகளைத்தூக்கினார்

‘அக்கினியே எழுக!
தன்னொளியால் துலங்குகிறாய்
செம்புரவிகளில் பாய்கிறாய்
எங்கும் துதிக்கப்படுகிறாய்
உன்னைச்சேர்பவை எல்லாமே
நீயாக ஆகின்றன
உன்னை அழிக்க நினைப்பவற்றை
உண்டுதான் நீ மதம் கொண்டு கூத்தாடுகிறாய்
அக்னியே நீ மகத்தானவன்!’

வேதகோஷம் எழுப்பியபின் கூர்ந்து பாபுவைப் பார்த்தார் ‘ரிஷி வசுகிருதன்…. ஏழாயிரம் வருடம் முன்பு பாடியது…. நம் பிதாமகன். நமக்கெல்லாம் குரு… அக்கினியில் நமக்கு முன்னரே எரிந்தவன்’

அடுத்த சொல் பேசாமல் பைராகி வெளியே சென்றார். பாபு பார்த்துக் கொண்டே இருந்தார். பின்பு கண்களை மூடிக் கொண்டார்.

பூல்சந்திரர் கொஞ்சம் தயங்கிவிட்டு பைராகியைப் பின் தொடர்ந்து சென்றார்.

பைராகி நேராகச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.

‘மகராஜ், உங்கள் உணவு மற்றும்–’

‘சூரியன் உதயமானதும் நானே எழுந்து ஓடும் நீரில் குளிப்பேன்… அப்போது எனக்குத் தேவையான உணவை நானே தேடிக்கொள்வேன்’

‘சபர்மதி அருகேதான் ஓடுகிறது’

‘ஆமாம்…அங்கே சிறிய பிராணிகளும் உண்டு’

பூல்சந்திரர் திடுக்கிட்டார்.

பைராகி கண்களை மூடிக்கொண்டார். அதன் பின்னரும் பூல்சந்திரர் நின்று கொண்டிருந்தார். பின்னர் மெல்ல திரும்பி நடந்தார். இன்றிரவு இனிமேல் என்னால் தூங்க முடியாது என்று சொல்லிக்கொண்டார். என்ன நடந்தது என்று யாரிடமாவது சொல்லவேண்டுமா? ஆனால் எல்லாமே ஒரு கிறுக்குத்தனமான நாடகம் போலத்தான் தோன்றியது.

தன் குடிசைக்குள் படுத்துக் கண்களை மூடிக் கொண்டார் பூல்சந்திரர். கண்களுக்குள் ஓடிக் கொண்டே இருந்த ஒளியை கவனித்தார். தீயைப் பார்ப்பது போலத்தான் இருந்தது. உடலுக்குள்ளும் தீ எரிகிறதா என்ன? சிதையில் எரிகையில் வெளியே இருக்கும் தீயுடன் உள்ளே இருக்கும் தீ இணைந்து கொள்கிறதா? என்ன கிறுக்குத்தனமான சிந்தனைகள். கிறுக்குச் சிந்தனை ஒரு அன்னியத் தேனீ போல. மூளையின் தேனீக்கூட்டை அது கலைத்து விடுகிறது.

விடிகாலையில் பூல்சந்திரர் எழுந்து கொண்டார். நல்லவேளையாக விடியவில்லை. அவசரமாக எழுந்து மேல்துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு பின்பக்கமாக ஓடினார். சமையலறையில் பா வந்திருந்தார். குளித்து உடைமாற்றியிருந்தார். கூந்தல்நுனி நீர் சொட்ட வெள்ளை சேலைக்கு மேல் படிந்திருந்தது. சமையலைக் கவனிக்கும் சோட்டுவும் சியாம்லாலும் வந்திருந்தார்கள். மணி என்ன?

மணி நான்கரைதான். பா வழக்கமாக ஐந்துமணிக்குத்தான் எழுவது வழக்கம். பெரிய கடாய் அடுப்பில் ஏற்றப்பட்டிருந்தது. சோட்டு அதற்குள் எண்ணையில் முக்கிய துணிச்சுருளைப் போட்டு இரும்புக்குழாயால் ஊதினான். மெல்ல தீ எழுந்து விறகைப் பற்றிக்கொண்டது. தாய்முலைக்குக் கைநீட்டும் சிவந்த குழந்தை. காலைக் கவ்வும் சிவந்த பாம்பு. நக்கி உண்ணும் நாயின் நாக்கு.

பாவின் முகம் சிலை போலிருந்தது. பாபு இருக்கும் நிலை பிற அனைவரையும் விட பாவுக்குத் தெரியும். ஆனால் ஆசிரமத்திலேயே அவர் ஒருவர்தான் நிதானமாக இருந்தார். சிலசமயம் தோன்றுவதுண்டு, பா முகமளவுக்கு நிதானமும் முழுமையும் கொண்டதாக ஒருபோதும் பாபுவின் முகம் இருந்ததில்லை என்று. என்ன இருந்தாலும் பாபு குழந்தைகளை வயிற்றில் சுமந்ததில்லை, ரத்ததை முலைப்பாலாக ஆக்கியதில்லை.

பூல்சந்திரரைப் பார்த்ததும் பா நிதானமான குரலில் ‘பாபு எழுந்துவிட்டார்…. இன்று ஏதோ புதிய சிகிழ்ச்சை செய்துகொள்ளப் போகிறார்’

‘ஆமாம்’ என்றார் பூல்சந்திரர்

‘களிமண், குளிர்ந்த தண்ணீர் எல்லாம் கேட்டார். சிமன்பாய் கொண்டு சென்றார். நீங்களும் போய்ப் பாருங்கள்’

களிமண்ணா. என்ன இது புதிய விஷயமாக இருக்கிறது. நெருப்பை வரவழைக்கும் பைராகி களிமண்ணை எதற்காகக் கேட்கிறார்? பூல்சந்திரர் பாபுவின் அறைக்குச் சென்ற போது உள்ளே சிமன்பாய் மட்டும்தான் இருந்தார். ஒரு கலுவத்தில் சந்தனம் போல எதையோ அரைத்துக் கொண்டிருந்தார்

‘என்ன?’ என்று ஓசையில்லாமல் கேட்டார்பூல்சந்திரர்

‘களிமண்…சபர்மதியில் இருந்து கொண்டுவந்தேன்’

அறைக்குள் ஒரு மரத்தட்டில் சணல்நூல் சுருள்கள் இருந்தன. செம்பு அண்டாவில் குளிர்ந்த நீர். ‘ஓடும் நீர் கேட்டார்… நானே சபர்மதிக்குச் சென்று பிடித்துவந்தேன்’

‘பைராகி எங்கே?’

‘எந்த பைராகி?’

பூல்சந்திரர் புரியாமல் பேசாமல் பார்த்தார். மெல்லிய முனகலுடன் பாபு கண்களைத் திறந்தார். உதடுகள் அசைந்தன ‘பூல்’

’பாபு’

’அந்த சணலை நீரில் நனைத்து என்னுடைய தலையில் சமமாகப் போடு.’

‘காய்ச்சல் இருக்கிறது…’

‘காய்ச்சலுக்குத்தான்…’

பூல்சந்திரர் சணல்நூல்பிரிகளை நீரில் நனைத்து பாபுவின் நெற்றியில் போட்டார். பாபு ’ம்ம் ம்ம்’ என முனகிக்கொண்டார். பின்பு மெல்லியகுரலில் ‘அந்தக் களிமண் விழுதை என் நெற்றியிலும் வயிற்றிலும் பூசு…’ என்றார்

பூல்சந்திரர் களிமண் பூசிக் கொண்டிருந்தபோது பா வந்தார். கையில் மரக்குடுவையில் பழச்சாறு இருந்தது.

‘என்ன அது?’ என்றார் பாபு

‘பழச்சாறு கேட்டீர்களே’

‘ஆம்… அதை அங்கே வை. ஒருமணிநேரம் கழித்துதான் குடிக்க வேண்டும்’

பா அதை வைத்துவிட்டு வெளியே சென்றார். பாபு ‘பூல் நீ போகலாம்…’ என்றார்

’பாபு’

’யாரும் இங்கே இருக்க வேண்டியதில்லை’

பூல்சந்திரர் வெளியே சென்றார். கன்றுக் குட்டியை அவிழ்த்துக் கொண்டு பா சென்று கொண்டிருந்தார். குளிருக்குக் கைகளைக் கட்டிக்கொண்டு கோஸாம்பி வந்து நின்றார்

’பாபு எப்படி இருக்கிறார்?’

‘புதிய மருத்துவம் எதையோ ஆரம்பிக்கிறார்’ என்றார் பூல்சந்திரர்

கோஸாம்பி முகம் மலர்ந்து ‘நல்லது….’ என்றார்

‘கிறுக்குத்தனமான வைத்தியமாக இருக்கிறது’

‘ஆமாம்…அவருடைய எல்லாமே கிறுக்குத்தனம்தான்… ஆனால் அவர் வாழ முடிவு செய்துவிட்டார் என்று தெரிகிறது… இனிமேல் பயமில்லை’ கோஸாம்பி அலுவலகக் கட்டிடம் நோக்கிச் சென்றார்.

பூல்சந்திரர் சமையலறைக்குச் சென்றார். பா அடுப்பருகே இருந்தார். மாவு அளந்து பெரிய தடுக்கில் கொட்டிக் கொண்டிருந்தார். அருகே சோட்டு. ஆசிரமத்தில் எப்படியும் நாற்பது பேர் காலையில் சாப்பிடுவார்கள்

பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்று பூல்சந்திரர் நினைத்தார். ஆனால் எங்கே தொடங்குவது? ‘பா’

‘என்ன குழந்தை?’

‘நேற்று ஒரு பைராகி வந்தார்…’

சொல்லி முடித்தபோது பூல்சந்திரர் ஆறுதலாக உணர்ந்தார். எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லி முடித்த சின்னக் குழந்தை போல. ஆனால் அவர் பாவின் சலனமில்லாத தெளிந்த முகத்தைப் பார்த்தபோது மேலும் சற்று எதிர்பார்த்தார் ‘எனக்கு பயமாக இருக்கிறது அம்மா’

பா ‘பயம் வேண்டாம்’ என்றார் ‘அவர் அப்படி ஒன்றும் சாகமாட்டார்… அவரை வாழ வைப்பவை நிறைய இருக்கின்றன. அவற்றுடன் தான் அவர் எவ்வளவோ வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்’ சட்டென்று குளத்தில் வெயில்பட்டது போல புன்னகையால் பா முகம் மலர்ந்தது ‘அவரால் ஒருபோதும் விரும்பி சாகமுடியாது… கடைசிக்கணம் வரை அவர் சலிப்படையவும் போவதில்லை’

சிமன்லால் ஓடிவந்தான் ‘ஒரு பைராகி வந்து நிற்கிறார்… கோபமாக ஏதோ சொல்கிறார். நான் அவரை வெளியே நிற்கச் சொன்னேன்’

பூல்சந்திரர் ஓடிச் சென்றபோது பைராகி எரிபவர் போலக் குடிசை வாசலில் நின்றிருந்தார். பூல்சந்திரர் அருகே போனதும் ‘யார் இதைச் செய்யச்சொன்னது? என்ன இதெல்லாம்?’ என்றார். குரல் நடுங்கியது. தாடை அசைய தாடி ஆடியது.

‘பாபுதான்’

‘நான் அவரை இப்போதே பார்க்க வேண்டும்’

‘தாரளமாகப் பார்க்கலாம்’ என்றார் பூல்சந்திரர் ‘வாருங்கள்’

பைராகி உள்ளே சென்றதும் பாபுவைப் பார்த்துத் திகைத்து நின்றார். பாபு சேற்றுப் பூச்சும் சணல்நூலுமாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பெரிய கிழங்கு போல கிடந்தார்.

‘என்ன இதெல்லாம்?’ என்றார் பைராகி

‘மகராஜ்.. நீங்கள்தான் என் கண்களைத் திறந்தீர்கள்…நேற்று சொன்னீர்களே, எல்லாம் நெருப்புதான் என்று’

’ஆமாம்’

’உடனே எனக்குத் தோன்றியது, என் வழி நீரின் வழிதான் என்று..’ பாபு சொன்னார் ‘இந்த தேசம் நெருப்புக் குண்டமாக ஆகவேண்டாம். இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்…’

‘முட்டாள்தனம்’ என்றார் பைராகி.

‘மகராஜ்… நீங்களே நேற்று சொன்னீர்கள். நீருக்குள்ளும் நெருப்புதான் இருக்கிறது என்று…. அப்படிச் சொல்லும் ஒரு வேதமந்திரம் கண்டிப்பாக இருக்கும்’

’ஆமாம்’என்றார் பைராகி

‘அந்த நெருப்பு நம்மை ஆசீர்வதிக்கட்டும் மகராஜ்…’

சிலகணங்கள் பார்த்துக்கொண்டே நின்றபின் பைராகி மெல்ல முகம் மலர்ந்தார். சிரிக்க ஆரம்பித்தார்.

‘நான் ஏதாவது முட்டாள்தனமாகச் சொல்லிவிட்டேனா மகராஜ்?’

‘இல்லை’ என்றபின் பைராகி கைகளைத் தூக்கி ‘ஆயுஷ்மான் பவ’ என்றார். வெளியே சென்றுவிட்டார்.

’சணலை நனைத்து மீண்டும் என் நெற்றியில் போடு’ என்றார் பாபு ‘வெயில் வந்தபின் என் உடம்பை நீரில் கழுவவேண்டும்’

***

முந்தைய கட்டுரைஒரு பாடல்
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன் கவிதைகள்