அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். நேற்று முன்தினம் புதிய தலைமுறை டிவி யில் நேர் படப் பேசுவில் பூரண மதுவிலக்கு பற்றிப் பேசப்பட்டது . அப்போது நோர்வேயில் என்னுடன் வேலை செய்யும் நோர்வே நண்பர் ஒருவர் இது personal விஷயம் . இதில் எப்படி அடுத்தவர் தலையிட முடியும் என்றார் . நானும் பார்த்திருக்கிறேன் ஜெ இங்கெல்லாம் malls மற்றும் சாதாரணக் கடைகளில் கூட மது விற்கிறார்கள் .
எனக்கும் பூரண மது விலக்கில் ஆசைதான். நிச்சயம் அவர்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் அவர்களின் தனி மனித சுதந்திரத்தில் அடுத்தவர் தலையிட முற்படுவது போலத்தான் . இதில் உங்கள் கருத்தை அறிய ஆசை . ?
இன்னொன்று ஜெ இந்தப் போராட்டங்களை உச்ச கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்கிற காந்தியப் போராளிகள் ஆன சசிபெருமாள் மற்றும் தமிழ் அருவி மணியன் போன்றவர்களைப் பார்க்கும் போதும் இன்னும் காந்தியம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று எங்களைப் போன்ற இளைய தலைமுறைக்கு நம்பிக்கை வருகிறது .
நாம் கொஞ்சம் இந்தப் போராட்டத்தை முன்னரே தொடங்கி இருக்க வேண்டுமோ ?. ருசிகண்ட பூனை போல அரசு இதில் சரியான பணத்தைப் பார்த்து விட்டது .
அன்புடன்
பன்னீர் செல்வம்
அன்புள்ள பன்னீர்
சிக்கலான கேள்வி
ஆனால் பதிலை இப்படிக்கேட்டால் என்ன செய்வீர்கள்? கஞ்சாவை ஏன் தடை செய்யவேண்டும்? அதைப் புகைப்பதும் தனிமனித சுதந்திரம் அல்லவா? அது நம் நாட்டுப்பயிர். 300 வருடமாக உபயோகத்திலும் உள்ளதே
சிலநாடுகளில், சில பண்பாடுகளில் மது உணவு. இந்தியாவில் அது என்றுமே போதைப்பொருள்தான். தமிழகத்தின் பொருளியலில், குடும்பச்சூழலில் குடி உருவாக்கும் பிரச்சினைகளைக் கொஞ்சமேனும் உணர்ந்தவர் பூரண மதுவிலக்குபற்றி சாதகமாகவே சிந்திப்பார்
ஜெ