ஜெமோ,
ரிச்சர்ட் டாக்கின்ஸும் லாரன்ஸ் கிராசும் நடத்தும் இந்த உரையாடல் நன்றாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=CXGyesfHzew
சூனியத்தில் இருந்து அனைத்தும் தோன்றியது என்று நவீன இயற்பியல் சொல்வதை ஒரு 25 நூற்றாண்டுகளுக்கு முன்பே கிழக்கின் ஞானிகள் கண்டு கொண்டது மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகப்படுகிறது.
இவர்கள் இருவரும் ‘Nothingness’ ஒரு தத்துவ மதிப்பீடு அல்ல அது ஒரு இயற்பியல் ரியாலிட்டி என்று நிறுவுவதில் மிகவும் முனைப்பாக இருகிறார்கள். இவர்கள் தத்துவம் என்றால் தர்க்கம் சாஸ்திரம் மட்டுமே என்றும், மதம் என்றால் கிருஸ்துவ இறையியல் மட்டுமே என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் இயற்பியல் ரியாலிட்டியில் இறையியலுக்கும், தத்துவதிற்கும் எந்தவிதமான வேலையும் இல்லை என்ற கருத்தை உருவாக்குவதில் ஒரு விதமான இன்பத்தை அடைகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நான் ஒரு இயற்பியல் காதலன், ஆனால் இந்த உலகம் வெறும் இயற்பியல் ரியாலிட்டி மட்டுமே என்றால் அது தன்னுடைய சாராம்சம் அனைத்தையும் இழந்து விடும் என்று நினைக்கிறன்.
மனோதத்துவ மேதையான Carl Gustav Jung இந்தியாவிற்கு இந்திய மரபையும், இந்திய மறையியல் மற்றும் மனோவியல் குறியீடுகளையும் ஆராய வந்து விட்டு ரமணரை சந்திக்காமல் சென்றது [பலர் சந்திக்க சொல்லியும் அவர் ரமணரைத் தவிர்த்து விட்டார்] எனக்கு நியாபகம் வருகிறது.
இந்த இருவரும் ஆன்மிகமான ‘dimension’னை மறுப்பதற்கு முன்னால் கிழக்கின் ஆன்மிக மரபை கிருஸ்துவ இறையியலுடன் ‘compare’ செய்யாமல் படித்தால் நன்றாக இருக்கும் (ஆனால் செய்ய மாட்டார்கள்).
நவீன இயற்பியல் புத்தரிடமும் லாவொட்செவிடமும் இன்னமும் நிறைய கற்றுகொள்லலாம் என்று தோன்றுகிறது. அப்படி கற்றுக் கொண்டால் அது ஆழத்தையும், நிறைவையும் அடையும் என்று நினைகிறேன்.
நன்றி
சு செல்வபாரதி
அன்புள்ள செல்வபாரதி
இதை நான் முன்னரே சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். டாக்கின்ஸ் எப்போதுமே மதம் என்னும்போது கிறித்தவ -இஸ்லாமிய மதங்களை மட்டுமே உத்தேசிக்கிறார். அவர் மதங்களைப்பற்றிச் சொல்லும் பல குற்றச்சாட்டுகளுக்கு இந்து, பௌத்த மதங்கள் ஆளாகாது. அவர் சொல்லும் பலவற்றுடன் அவை ஒத்தும் போகும்
ஆனால் அவருக்கு இந்த மதங்களைப்பற்றித் தெரியாமலில்லை. அமெரிக்க- ஐரோப்பியர்கள் பொதுவாக இந்துமதம் பற்றி அதிகம் தெரியாமலிருக்க வாய்ப்பிருந்தாலும் பௌத்தம் பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள். டாக்கின்ஸுடையது ஓர் வெள்ளையர் மைய நோக்கு. அங்கே உள்ள, அவர்களைப் பாதிக்கிற விஷயங்களை மட்டுமே அவர் பொருட்டாகக் கருதுகிறார்
இந்த நோக்கு பல சிந்தனையாளர்களுக்கு இருந்திருக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் உலக தத்துவ வரலாற்றை எழுதிய வில் துரந்த் தம்பதியினர். அவர்களின் நோக்கில் ஒரு சராசரி ஐரோப்பிய சிந்தனையாளரில் பாதிப்பங்கு முக்கியத்துவம்கூட வேதாந்தம் அல்லது சூனியவாத பௌத்தம் போன்ற ஒரு சிந்தனைமரபுக்குக் கிடையாது. அவர்கள் எழுத்தில் உள்ள அலட்சியம் எந்தக் கீழைநாட்டவனையும் கசப்படையச்செய்வது
பிற நிலப்பகுதியின் மனிதர்களையும் சிந்தனைகளையும் கண்ணுக்குத்தெரியாதபடி சின்னதாக ஆக்கிவிடுகிறது இந்த வெள்ளையமையநோக்கு. டாக்கின்ஸ் அதனுள் இருக்கிறார். இந்த வயதில் இனிமேல் அதிலிருந்து வெளியே வரவும் அவரால் முடியாது. [ஆனால் பொதுவாக வெள்ளையர்களுக்கு இந்த வெள்ளையமையநோக்கை மென்மையாக பூடகமாக அறிவியல் நோக்குடன் மனிதாபிமானத்துடன் முன்வைக்கத் தெரியும்]
ஜெ