காந்தி–ஈழம் வாசித்தேன்.இந்த சமயத்தில் இதுமிக முக்கியமான ,அத்தியாவசியமான விளக்கம்.நேர்மையாக, நடுநிலைமையாக எழுதி இருக்கிறீர்கள்.
நம் எதிரிகள் கூட அந்தரங்கமாக நம் நியாயங்களைப் புரிந்துகொண்டாகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது. காந்தியவழி அதுதான் .//
மிகவும் பிடித்த வரிகள்,நன்றி ஜெ.
சரவணக்குமார்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
உங்களது பதில் காந்தியும் ஈழமும் படித்தேன் . பின் அந்த சுட்டிக்குத் தொடர்பான அனைத்து ஈழம் சம்பந்தமான சுட்டிகளையும் படித்தேன் . மிக சுருக்கமான பதில் . (உங்களது பெரிய கட்டுரைகளை எல்லாம் படித்துப் பழக்கமானதால் என்னவோ ). பிரபாகரனை நினைத்தால் சுபாஷ் சந்திரபோஸ் தமிழருக்கு ஏற்படுத்திய அழிவைப் போலவே இருப்பதாக எனக்குப் படுகிறது .
நான் நோர்வேயில் நண்பரை சந்திப்பதற்காக stavanger Radisson ஹோடேல்லுக்கு சென்றேன் . அங்கு காலை உணவு சாப்பிடும்போது ராஜ் என்ற இலங்கைத் தமிழரை சந்தித்தேன். இலங்கையை விட்டு வந்து 18 வருடங்கள் ஆகிறதாம் . அவர் பிரபாகரனைப் பற்றி சொல்லும் பொது சுபாஷ் சந்திரபோஸை ஜப்பான் எப்படி அலைக்கழித்ததோ அது போலதான் என்று எனக்கு தோன்றியது . அவரை அடுத்தநாடு அலைக்கழித்தது , இவரைத் தமிழ்க் கட்சி வளர்க்கும் அரசியல்வாதிகள்.
ராஜ் கடைசியாக சொன்னது இனி தமிழ் அரசியல்வாதிகள் தலையிடாமல் இருந்தால் எங்களது ஈழப் பிரச்சனையை நாங்கள் பார்த்துகொள்வோம் என்றார் . ஆனால் நிச்சயம் நம் தமிழ் அரசியல்வாதிகள் அதை செய்யப் போவதில்லை . ஏன் என்றால் கார்கியைப் பற்றி நித்யா சொன்னது தான் நியாபகம் வருகிறது . இவர்கள் அஞ்சுவது இவர்கள் உருவாக்கி இருக்கும் பிம்பம் அழியும் . (இன்னும்சிலர் உணர்வதே இல்லை. அவர்களுக்குச் சிந்தனையோ அதன் விளைவுகளோ முக்கியமல்ல. அவர்களின் ஆளுமையைப்பற்றிய பிம்பம் மட்டுமே முக்கியம். புரட்சியாளன் என்ற பிம்பம். கோபம்கொண்டவன் என்ற பிம்பம்.
இப்பொது கொஞ்சம் நிலைமை சரியாகிவிட்டதாக ராஜ் தொலைபேசியில் சொன்னார் .
நிச்சயம் அங்கு அமைதியான முறையில் கூட்டு ஆட்சி நடக்கும் என்ற அவரது ஆசைக்கு வாழ்த்துக்களுடன் விடைபெற்றேன்
காந்தியம்பற்றி உங்கள் பதிலின் சுட்டியை அவருக்கு அனுப்பிவைத்தேன் . உருவமும் அருவமும் என்ற உங்களது சுட்டி மூலம் நித்யாவின் எழுத்துகளை அடைந்து அதில் நித்யா அவர்கள் காந்திஜியுடன் நடந்த உரையாடலில் உண்மை வைரம் போல் அதற்கும் பல முகங்கள் இருக்கிறது என்ற காந்தி கூற்றை படித்தேன் எவ்வளவு உண்மை .
நிச்சயம் அங்கு இருக்கும் தமிழர் போரட்டத்திற்கு சிங்களர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை (காந்திக்கு உலகிலேயே அதிக ஆதரவாளர்கள் லண்டனில்தான் இருந்தார்கள் என்று ஒரு கூற்று உண்டு- . http://www.jeyamohan.in/?p=34598)
ஜெ நீங்கள் google செய்து பாருங்கள் கடைசியாக விடுதலைப் புலிகள் தங்களது பொருளாதார ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டவுடன் பல விதமான கடத்தல் மற்றும் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறுகிறது பல வலைத்தளங்கள். ethnic cleansing என்ற முறையில் விடுதலைப் புலிகள் தாங்கள் கைப்பற்றிய இடத்தில இருக்கும் சிங்களரையும் , ஒத்துழைக்காத முஸ்லிம்களையும் துரத்தி இருக்கிறதாக wikipedia செய்தி சொல்கிறது .
தீவிரவாதத்தின் இன்னொரு முகம் இதுதானோ ?.
பன்னீர்செல்வம் ஈஸ்வரன்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
இலங்கையில் சத்தியாக்கிரக அறப்போராட்டத்திற்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது என்ற உங்களின் நம்பிக்கையைப் பூரணமாக ஏற்கிறேன். அதேசமயம், தமிழர்கள் அனைவரும் “ஒன்றிணைந்து” செய்யும் அறப்போராட்டம் இலங்கையில் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்.
ஒரு இந்தியனாக நான் இதுவரை படித்து, கேட்டு அறிந்தவரை இலங்கைத் தமிழர்களைக் கீழ்க்கண்ட வகையில் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன்,
யாழ்ப்பாணத் தமிழர்கள்
மன்னார்-வவுனியா தமிழர்கள்
கிழக்கு மாவட்ட – மட்டக்களப்பு தமிழர்கள்
அம்பாறை முஸ்லிம் தமிழர்கள்
இந்திய வம்சாவளித் தமிழர்கள்
இலங்கையில் அங்குமிங்கும் சிதறி வாழும் தமிழர்களை இதில் கணக்கிலெடுக்க வேண்டாம்.
இவர்களில்,
மன்னார்-வவுனியா தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் ஆகாது.
கிழக்கு மாவட்ட-மட்டக்களப்பு தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் சேராது.
அம்பாறை முஸ்லிம் தமிழர்களும் யாழ்ப்பாணத் தமிழர்களும் இருதுருவங்கள்.
மேற்கண்ட மூவருக்கும் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிடிக்காது.
இவர்கள் அத்தனை பேருடனும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ஒட்டுதல் இல்லை.
அதே சமயம், சிங்களவர்களில், கரையோர சிங்களர் மற்றும் மலையக சிங்களர் என்று இரு பிரிவே இருந்தது. அந்தப் பிரிவும் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலேயே அகற்றப்பட்டு, அனைத்து சிங்களவர்களும் ஒருவராகிவிட்டனர். தங்களுக்குள் எத்தனை பூசல்கள் இருந்தாலும், மற்றவர்களுக்கு எதிராக அணிதிரண்டு ஒரே குரலில் பேசுவதே அவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஏறக்குறைய இந்திய மலையாளிகளைப் போல.
என் புரிதலில் இதுதான் நிலமை. இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி, யாழ்ப்பாணத் தமிழர்கள், தங்களுக்கு வரவேண்டிய நன்மைகளையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்பதுதான் பிறபகுதியில் வாழும் தமிழர்களுடைய மனக் குமுறல். அது ஒருவகையில் உண்மையும் கூட. இலங்கையின் அதிகார பீடங்களுக்கு அருகில் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள், பிற பகுதித் தமிழர்கள் மீது தங்களின் மேலாண்மையைத் தொடர்ச்சியாக நிறுவி வந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு. அது கைவிட்டுப் போவதை ஒருபோதும் அவர்கள் விரும்பியதில்லை. அவர்களின் வெள்ளாள உயர்சாதி மனோபாவமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் ஒரு ஆரம்பமாக, யாழ்ப்பாணத்தமிழர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து மற்ற தமிழர்களை அரவணைத்துச் செல்லும்வரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டாக்கனிதான்.
இப்படி எழுதுவதால் நான் வெறுக்கப்படுவேன் என்று அறிவேன். ஆனால் யாரேனும் இதனை சுட்டிக்காட்டித்தானே ஆக வேண்டும்?
இணைய விவாதங்களில் இலங்கைத் தமிழர்களின் விவாதங்களைக் கூர்ந்து கவனித்து வருபவன் நான். ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்று விதண்டா வாதம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது என் முடிவு.
குறிப்பு : இனப்பிரச்சினையால் இறந்தவர்கள் குறித்தான துயரம் என் மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது. என் வாழ் நாள் முடியும் வரை அந்த ரணம் ஆறும் என்று நான் நினைக்கவில்லை. அவர்களைக் கேவலப்படுத்துவது என்பதை என் கனவிலும் நினக்க மாட்டேன். இங்கு நான் எழுதியிருப்பது அனைத்துமே முடிவில்லாத இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வராதா என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
*
இனப் பிரச்சினைக்கு ஆயுதப் போராட்டம் ஒரு தீர்வாக இருக்க இயலாது என்பதே எனது நம்பிக்கை. ஆயுதப் போராட்டம் வெற்றி பெற்ற ஒவ்வொரு நாட்டிலும் அதன் பிரஜைகள் சொல்லவொன்னாத் துன்பம் அனுபவித்தே வந்திருக்கிறார்கள்.
தென் கிழக்கு ஆசியாவில் கம்போடியாவை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். கம்போடிய வரலாற்றைப் படிக்கிற எந்தவொரு மனிதனும் ஒருபோதும் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்கவே மாட்டான். இலட்சியவாதம் கற்பனைக்கு மட்டுமே உகந்தது. அது நடைமுறைப்படுகையில் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. மார்க்சியப் பொதுவுடமைத் தத்துவத்தைப் பின்னணியாகக் கொண்டு நடைபெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற அத்தனை ஆயுதப் போராட்டங்களும் படுகொலைகளிலேயே முடிந்திருக்கின்றன. அப்போராட்டங்களிலின் பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் மனிதத் தன்மையே அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். கம்போடியாவின் போல்பாட்டைப் போல.
ஆயுதப் போராட்டங்களின் ஒன்றுமறியா சிறார்களும், பெண்களுமே பெருமளவு பலியாக்கப்படுகிறார்கள். இலங்கை இனப்போராட்டமும் இதற்கு விதிவிலக்கில்லை.
இன்றைக்கு தமிழ் நாட்டில் “மாவீரர்களாக” அறியப்படுகிற இலங்கைப் போராளித் தலைவர்கள் அத்தனைபேருமே குலை நடுங்கச் செய்யும் கொலைகாரர்களாக இருந்திருக்கிறார்கள். வே. பிரபாகரனிலிருந்து, மாத்தையா, கிட்டு, உமா மகேஸ்வரன், சிறீ சபாரத்தினம் போன்றவர்கள் குறித்து இன்றைக்கு அறியவரும் தகவல்கள் சிறிதும் ஈவு இரக்கமற்ற மனிதர்களையே அடையாளம் காட்டுகின்றன. சொந்தச் சகோதரர்களையே சளைக்காமல் ஒருவருக்கொருவர் கொன்று குவித்தவர்கள் அவர்கள். இறுதியில் தாங்கள் பின்னிய வலையிலேயே விழுந்து மரித்தார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் குறித்தான பிம்பங்கள் கட்டுடையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்படுகின்றன. வரலாறு நமக்கு இன்னும் படிப்பினையைத் தரவில்லை. போகட்டும்.
*
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, தமிழர்கள் முழுமையாக தங்களை சிங்களக் கலாச்சாரத்துடன் இணைத்துக் கொள்வதும் ஒரு தீர்வாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அது தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தைத் துறப்பதாகக் கூட இருக்கலாம். இது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத யோசனைதான். ஆனால், இனத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் தாங்கள் நசுக்கப்படும்போது, அதனை எதிர்த்துப் போராட வலிமையற்றிருக்கும்போது, தங்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் செவியில் விழாதபோது, இறுதியில் வாழ்வது ஒன்றே போதும் என்ற நிலை வருகையில் மொழியாவது, இனமாவது, மண்ணாவது என்பதே என்னுடைய வாதம்.
தற்போது, இலங்கையின் கல்ஹின்னை போன்ற பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் சிங்களம் ஒன்றை மட்டுமே பயில்வதாக அறிகிறேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு புத்திசாலித்தனமான செயல் என்றே கூறுவேன். தமிழர்கள் தங்களை முழுமையாக வேறொரு இனக்குழுவாக மாற்றிக் கொண்ட வரலாற்று நிகழ்வுகள் இலங்கையில் ஏற்கனவே நடந்திருக்கின்றன.
உதாரணமாக, பதினாறாம் நூற்றாண்டில் இலங்கையின் மன்னார் வளைகுடாப் பகுதியில் முக்குவர் என்ற சாதியினர் இருந்தார்கள். மன்னார்ப் பகுதிக் கடலில் கிடைக்கும் முத்துக்களை கடலில் மூழ்கி எடுப்பது அவர்களின் குலத் தொழில். அதனால் அவர்கள் முக்குவரானார்கள். அந்த நேரத்தில் இலங்கையின் வடபகுதி கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளான போர்ச்சுக்கீசியர்களின் கீழ் இருந்தது. மதத்தின் பெயரால் இந்தியாவிலும், இலங்கையில் பல கொடூரங்களை செய்தவர்கள் அவர்கள். ஏராளமான ஆலயங்கள் இடிக்கப்பட்டு, பிறமதத்தவர்கள் துன்புற்று இருந்த நேரம் அது. மதத்தின் பெயரால் கொடூரக் கொலைகள் செய்யவும் அவர்கள் அஞ்சவில்லை. ஏறக்குறைய தென்னமெரிக்காவில் இன ஒழிப்பு செய்த ஸ்பானிஷ் Conquistator-களுக்கு இணையானவர்கள் போர்ச்சுகீசியர்கள் எனலாம்.
முத்தெடுக்கும் தொழிலை தமிழ் அரசர்களிடமிருந்து கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்களால் பல வித அழுத்தங்களுக்கு ஆளான முக்குவர்கள் வடகேரளம் (இன்றைய மலப்புரம் பகுதி) சென்று குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்கள் பின்னாட்களில் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள். இன்றைக்கு மலப்புரம் முஸ்லிம்களிடத்தில் உங்கள் முன்னோர்கள் தமிழர்கள் என்று சொன்னால் நம்மை அடிக்க வருவார்கள். ஆம்; காலத்தின் கட்டாயத்தால் அவர்கள் மலையாளிகளாக மாறிப் போனார்கள்.
அதே நிலைமை மிகச் சமீப காலத்தில் இலங்கையில் குடியேறிய மலையாளிகளுக்கும் நிகழ்ந்திருக்கிறது. 1930-40களில் ஏராளமான மலையாளிகள் இலங்கைக்கு வேலை தேடிப் போனார்கள். அவர்களில் பலர் சிங்களப் பெண்களை மணந்து முழுச்சிங்களவர்களாக மாறிப்போனார்கள் (இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள் – குமாரி ஜெயவர்த்தன).
*
இனப்பிரச்சினையில் அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்கள் இந்திய வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் பின்னணி குறித்து சிறிதளவு தெரிந்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.
இன்றைக்கு இலங்கையின் 60% அன்னிய செலாவாணி (foreign exchange) தேயிலை ஏற்றுமதியில் இருந்து கிடைக்கிறது. அதன் பின்னணியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்வில் இன்றும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. கல்வியும், மருத்துவ உதவியும், நல்ல இருப்பிடங்களும் இல்லாமல் வறுமையிலும், அறியாமையிலும் உழலும், அடிமைகளைப் போல வாழும் அந்த மக்களைப் பற்றி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த சும்பனாவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நான் கேட்டதில்லை.
இதற்கு அவர்களின் சாதியப் பின்புலம் காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து சென்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள். இதனை ஒரு தகவலுக்காக மட்டுமே கூறுகிறேன். அடிப்படையில் சாதி வேறுபாடுகளை அறவே வெறுப்பவன் நான்,
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சம் குறித்து நீங்கள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். மிகக் கொடுமையான பஞ்சம் அது. உண்ண உணவு இல்லாமல் இந்தியர்கள் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டு பல நாடுகளுக்கும் கப்பலேறினார்கள். அன்றைக்கு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் பெயரளவிற்கு நிவாரணம் அளித்தாலும், அந்த நிவாரணம் அடித்தள மக்களாக இருந்த தாழ்த்தப்பட்ட இன மக்களைச் சென்றடையவில்லை. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தார்கள்.
அந்நேரத்தில், பிரிட்டிஷ்காரர்கள், இலங்கையின் கண்டி மலைப்பகுதிகளில் சோதனை முயற்சியாகப் பயிரிட்ட காப்பி, மற்றும் தேயிலைத் தோட்டங்கள் மிகப் பெரும் இலாபத்தை அள்ளித்தர, அதில் வேலை செய்வதற்குத் தமிழ் நாட்டிலிருந்து ஆட்களை வரவழைக்க ஆரம்பித்தார்கள். பஞ்சத்தின் உச்சத்தில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த திருச்சி மாவட்டத்து தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றார்கள். ஆனால் அங்கு சென்றடைவது மிக எளிதான ஒன்றாக இருக்கவில்லை.
இன்றைக்கு இருப்பது போல வாகன வசதிகளோ, கடலைத் தாண்டும் கப்பல்களோ இல்லாத காலம் அது. கண்டி தோட்ட முதலாளிகள் அவர்களின் பயண உதவிக்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடவில்லை. இலங்கைக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் தாங்களே தங்களின் பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளவேண்டும் (ஒப்பந்தக்காரர்களாக செயல்பட்ட கங்காணிகள் மூலம் அவர்களுக்கு சிறிது பண உதவி அளிக்கப்பட்டது). அதன்படி ஜனங்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் நடந்தே ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அங்கிருந்து தோணிகளிலோ, கட்டுமரங்களிலோ ஏறி தலைமன்னாரை அடைவார்கள். பின்னர் காட்டுவழியே நடந்து கண்டியை அடைய வேண்டும்.
கணக்கில்லாதவர்கள் ராமேஸ்வரத்தை அடையுமுன்பே இறந்து போனார்கள். இரக்கமற்ற முறையில் தோணி, கட்டுமரக்காரர்கள் நடுக்கடலில் அவர்களின் உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டு அவர்களைக் கடலில் தள்ளிக் கொன்றார்கள். அதனையும் சமாளித்து தலைமன்னாரை அடைந்தவர்கள் கொடிய காட்டு மிருகங்கள் உலவும் காடுகள் வாயிலாகப் பல நாட்கள் நடக்க வேண்டும். காட்டு மிருகங்களால் கொல்லப்பட்டவர்கள் அனேகர். இலங்கையின் குடிமக்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் இன்னும் பலர். திசை தவறி காட்டுக்குள் அலைந்து திரிந்து பைத்தியங்களானவர்கள், தண்ணீரின்றி நாவறண்டு செத்தவர்கள், பட்டினியால் இறந்தவர்கள் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இத்தனை தடங்கல்களையும் கடந்து சென்றவர்கள் தங்களாலும், தங்கள் சந்ததிகளாலும் திரும்ப செலுத்த இயலவே இயலாத கடனாளிகளாக மாறியிருப்பதை உணர்ந்தார்கள். அடிமைகளான தாங்கள், தங்கள் பிறந்த தேசத்தை இனிக் காணவே முடியாது என்ற இயலாமை எத்தனை கொடியது?
ஆம்; இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் துயரம் அன்று ஆரம்பமானதுதான். இன்றுவரை அது முடியவே இல்லை. ஒருவகையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அது குறித்துப் பேசாமல் இருப்பதே நல்லது என்பேன். கோமாளிகளால் மற்றவர்களைப் பழிப்புக் காட்டி கோபம் கொள்ளத்தான் செய்ய முடியுமே அன்றி, உருப்படியாய் எதனை சாதிக்க முடியும்?
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் இலங்கையின் தோட்டங்களில் உழன்ற தமிழர்களின் பெரும்பகுதியினரை, சிரிமாவோ பண்டாரநாயக மிகத் தந்திரமாக இலங்கையை விட்டு வெளியேற்றினார். இந்திய அரசாங்கம் செய்வித்த இந்த ஒப்பந்தம் ஒரு மன்னிக்க முடியாத மூடத்தனம் என்பேன். இந்தியாவுடன் நூறு வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான தொடர்பும் இல்லாம் இருந்த ஒரு பெரும் மக்கள் கூட்டம், வேரறுக்கப்பட்டுத் தங்களுக்கு மிகவும் அன்னியமான வேறொரு மண்ணுக்கு இடம் பெயருமாறு பணிக்கப்படுவது எத்தனை பெரிய வரலாற்று அபத்தம்? நாமே ஒரு இடத்தைவிட்டு நான்கைந்து ஆண்டுகள் தள்ளியிருந்துவிட்டு சென்றால், அந்த இடமே நமக்கு அன்னியமாகத் தோன்றாதா? ஆனால் அதைத்தான் அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு நமது மாண்புமிகு தலைவர்கள் செய்தார்கள்.
சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி நாடிழந்த தமிழர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு, கண்ணீருடன் கண்டியிலிருந்து தலைமன்னாருக்கு சாரி சாரியாகச் சென்றார்கள். அன்று அவர்கள் சிந்திய கண்ணீரின் காரணமாக மன்னார் வளைகுடாவில் உப்பின் அளவு அதிகரித்துப் போனதாக துயருடன் எழுதுகிறார் மாத்தளை சோமு.
அன்றைய தமிழர் தலைவர்களான ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்கள் அதனைத்தான் விரும்பியிருக்கக் கூடுமோ என்னவோ?
விடுதலைப் புலிகள் விரும்பியபடி தனித் தமிழ் ஈழம் கிட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? தோட்டத் தொழிலாளர்கள் அனாதைகளாகக் கைவிடப்பட்டிருப்பார்கள். சிங்களர்கள் மத்தியில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வாழும் அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு படுகொலைகள் நிகழ்ந்திருக்கும். கொல்லப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் வங்காள விரிகுடாவில் குதித்து இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ் நாட்டு அரசியல்வதிகளோ, அறிவுஜீவிகள் என அறியப்படுகிறவர்களோ, இந்திய அரசாங்கமோ அவர்களுக்கு எதுவும் செய்திருக்கமாட்டார்கள். இதுவரை என்ன செய்திருக்கிறார்கள், இனிமேலும் எதிர்பார்ப்பதற்கு?
“தேசியத் தலைவர்” தலைமறைவாகத்தான் ஈழத்தை ஆண்டு கொண்டிருக்க முடியும். அத்தனை எதிரிகள் அவரைச் சுற்றி. கிழக்கு மாகாணத் தமிழர்களும், முஸ்லிம்களும் அவரை ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். தொடர் உள்நாட்டுக் கலவரம் நடந்து ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக் கொண்டிருப்பார்கள். கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சிங்களவர் நடுவே வாழ்கிற தமிழர்கள் எவரும் உயிருடன் பிழைத்திருக்க மாட்டார்கள்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னொரு மினி போல் பாட்டாக மாறியிருப்பார். அவர் உயிருடன் இருந்தவரை அப்படித்தானே இருந்தார்? உண்டா இல்லையா?
இறந்தவரைப் பற்றி இப்படிப் பேசுவது தவறுதான். ஆனால் வராற்றின் அத்தனை பக்கங்களையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும் அல்லவா? நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்.
*
கால ஓட்டத்தில், வரலாறு அதன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவ்வப்போது முன் வைக்கிறது. அதனைப் புரிந்து கொண்டு, அந்தத் தீர்வுகளைக் கணக்கில் கொள்கிறவர்களே வெற்றிகரமான தலைவர்களாகிறார்கள். எந்த ஆயுதப்புரட்சியும் ஒரு கட்டத்தில் சமரசம் செய்து கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் அது வரலாற்றில் ஒரு பெரும் துயரமாக முடிவு பெறும். இயற்கையின் நியதி இது.
ஒரு வெளியனாக, பார்வையாளனாக, இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு, நான்கு சந்தர்ப்பங்களில் அளிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன்.
ஒன்று, இலங்கை விடுதலைக்கு முன்னர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முன்னிலையில், சிங்கள அரசியல்வாதிகள், அதிகாரப் பகிர்வில் தமிழர்களுக்கு 43% தருவதற்கு ஒப்புக் கொண்ட தருணத்தில், தமிழர்களின் பிரதிநிதியாக அமர்ந்திருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் நியாயமற்ற முறையில் ஐம்பது சதவீத அதிகாரப்பகிர்வு கேட்டு அங்கிருந்து அகன்று சென்றார். அன்றைக்கு அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தால் இலங்கைத் தமிழர்களின் இந்த அவல வாழ்வு நிகழ்ந்தே இருக்காது.
இரண்டு, 1950களில் இலங்கை அரசு இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அது ஒட்டுமொத்தமாக தமிழர்களை பலவீனர்களாக்கும் என்று தமிழர் தலைவர்களில் ஒருவரான செல்வநாயகம் அதனை எதிர்த்தார். ஆனால், ஜி. ஜி. பொன்னம்பலம் அதனை ஆதரித்து வாக்களித்ததால் அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
ஜி.ஜி. பொன்னம்பலத்தாரின் இந்த முடிவு யாழ்ப்பணத்து உயர்சாதிக் காழ்ப்புடன் எடுக்கப்பட்ட முடிவாகவே நான் கருதுகிறேன். இலங்கை அரசாங்க அதிகார பீடத்தில் தங்களின் மேலாண்மையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் எடுக்கப்பட்ட, அநீதியான இந்த முடிவே இறுதியில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் இலங்கையில் பலவீனப்படுத்தியது என்றே சொல்வேன்.
விடுதலை அடைவதற்கு முன்பு, இலங்கையில் சிங்களவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக இருந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்கள். 1940களில் நடந்த தேர்தல்களில் பத்திற்கும் மேற்பட்டவர்களை தங்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள் அவர்கள். இந்தியா மற்றும் இந்தியர்களைக் குறித்தான அச்சத்துடன் இருந்த சிங்கள அரசியல்வாதிகள், சுய நலமிகளான ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றவர்களின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களை நாடற்ற அகதிகளாக்கினார்கள்.
இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையை மூன்றாவது சந்தர்ப்பம் என்று சொல்லலாம். இனப்படுகொலைகளின் மூலம் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகியிருந்த இலங்கை அரசாங்கம், தமிழர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த, ஆயுதப்புரட்சியில் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களான பிரபாகரனும், உமா மகேஸ்வரனும், சபாரத்தினமும், பத்மனாபாவும், பாலகுமாரும் அதனை ஏற்கவில்லை. மிதவாதியென அறியப்பட்ட அமிதலிங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தார். அத்தகைய சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை இலங்கைத் தமிழர்களுக்கு வாய்க்கவே இல்லை.
நான்காவது வாய்ப்பு விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த தொண்ணூறுகளில். புலிகள் அந்த வாய்ப்பைத் தவற விட்டார்கள். பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தால் அவர்களால் ஒரளவிற்கு நினைத்ததை அடைந்திருக்க முடியும் என்றே நம்புகிறேன்.
இவையெல்லாம் நீங்களும் அறிந்த தகவல்கள்தான். ஒரு நினைவூட்டலுக்காக இதனை எழுதுகிறேன்.
*
மிகத் தந்திரசாலிகளான சிங்கள அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தமிழர்களை ஏமாற்றினார்கள். ஏமாற்றி வருகிறார்கள். இனப்பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது போலப் பேசிவந்த கெல்வின் சில்வா போன்ற இலங்கை இடதுசாரிகள், சிறிதளவு அதிகாரம் கிடைத்தது தமிழர்களுக்கு எதிரானவர்களாக மாறினார்கள். இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பளிக்கும் சட்ட வரைமுறையை 1970களில் நீக்கியபோது, அதற்கு ஆதரவளித்து இடதுசாரியான கெல்வின் சில்வா தமிழர்களை புள்காங்கிதம் அடைய வைத்தார் என்பது வரலாறு.
விடுதலையடைந்த நாள் முதல் இன்றுவரை, மலையக கண்டி அரச பரம்பரையைச் சேர்ந்த, பண்டாரநாயக மற்றும் சேனநாயக குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் மட்டுமே இலங்கை மீண்டும், மீண்டும் ஆளப்பட்டு வருகிறது (பிரேமதாச ஒருவர் மட்டும்தான் இதற்கு விலக்கானவர் என்று நினைக்கிறேன்). தமிழர்களை அதிகமாக நசுக்குபவர்கள் யார் என்ற போட்டியே இவர்களின் அதிகாரத்திற்கு வரும் ஒரு பாதையாக இன்றுவரை இருக்கிறது. இது மாறாத வரை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரப்போவதில்லை.
அதற்கும் மேலாக இனப்பிரச்சினைக்கான தீர்வு அங்கு வாழும் அனைத்து தமிழர்களின் கையிலேயே இருக்கிறது. தங்களின் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்று கூடிப் போராடுவதுதான் சரியான வழியாக இருக்க முடியும். துரதிருஷ்டவசமாக தமிழர்களிடயே அவர்களை ஒன்றிணைக்கும், தூரப்பார்வையுள்ள தலைவர்கள் இல்லை. இருந்தவர்களையும் கொன்று குவித்துவிட்டார்கள்.
இன்னொன்று, இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவின் உதவியை, மத்தியஸ்தத்தை எதிர்பார்ப்தை நிறுத்திக் கொள்ளவேண்டும். தொலைநோக்குள்ள தலைவர்கள் இந்தியாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ இன்று இல்லவே இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா வகையறாக்களால் உங்களுக்கு உபயோகம் எதுவும் இருக்கப்போவதில்லை. மாறாக அவர்களால் உங்களுக்குத் தொல்லைகள்தான் வர வாய்ப்பு இருக்கிறது.
இனப்பிரச்சினை உங்களுடையது. நீங்கள்தான் அதனின் அத்தனை பரிணாமங்களையும் அறிந்தவர்கள். எனவே, நீங்கள்தான் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் உணர்வுபூர்வமாக அணுகப்படும் எந்தப் பிரச்சினையும் எளிதில் தீர்வதில்லை என்பதனை நீங்கள் உணரவேண்டும்.
வை. கோபாலசாமி, திருமாவளவன், சீமான் போன்றவர்களுக்கு நீங்கள் அளிக்கும் பணம் விழலுக்கிறைக்கிற நீர்தானே தவிர அவர்களால் உங்களுக்கு எந்தவிதமான பயனும் இருக்கப் போவதில்லை. வரலாற்றில் கோமாளிகளுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடம்தான் அவர்களுக்கும். Just don’t take them seriously.
என்றாவது ஒருநாள் இனப்பிரச்சினை தீர்ந்து இலங்கைத் தமிழர்கள் அனைவரும் சமாதானத்துடன் வாழவேண்டும். வாழ்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.
நரேந்திரன்