அன்பு ஜெ ,
http://www.youtube.com/watch?v=p5BqtpzVJaA&feature=share
சுகாவின் முகப் பக்கத்திலிருந்து இந்தப் பாடலின் பதிவு படத்தொகுப்பைக் கண்டேன். பாடல் ஒரு கால கட்டத்திற்கே நம்மைத் தூக்கிச் செல்கிறது என்றால் அந்த பெண்மணியின் முகபாவனைகள் எவ்வளவு உணர்த்துகின்றன. பாடல் முழுதும் அந்த பெண்ணின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பாடும் நேரத்தில் , இசையின் லயிப்பில் அந்தப் பெண்தான் எப்படி இந்த உடலின் குறைகளை உந்தி மீறி, மறந்து தனக்கான சொர்கத்தில் திளைக்கிறார். பாடலின் இறுதி அடியின் போது அவர் முகத்தில் காட்சி உறைகையில் …. சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு கலை அதில் ஈடுபடுபவரை எவ்வளவு பூரணமாக்கி விடுகிறது. கலையில் ஈடுபட்டிருக்கையில் அவர்கள் சஞ்சரிக்கும் உலகத்திற்கு ஈடாக சொர்கத்தைக் கொடுத்தாலும் “அப்பாலே போ தேவனே!” என்று சொல்லிவிடுவார்களோ?
செல்லுலாய்ட் திரைப்படத்தின் மொத்த உணர்வுகளும் அந்தப் பெண்ணின் (வைக்கம் விஜயலட்சுமி) முகத்தில் மின்னி மறைந்தது போன்ற உணர்வு. அவரது பேட்டியில் அவரைப் பார்க்கும்போது வேறொருவராகத் தெரிகிறார். கலையால் ஆசீர்வதிக்கப்பட்ட கணத்தில் மட்டும்தான் கலைஞர்கள் முழுமை அடைகிறார்கள் போல?
அன்புடன்,
ராஜகோபாலன் ஜா சென்னை
அன்புள்ள ராஜகோபாலன்
செல்லுலாய்டில் வந்த அந்தப்பாடல் மலையாளிகளுக்கு மேலும் பொருள் உடையது. சுலோசனா- ஜார்ஜ் இருவரும் ஐம்பதுகளில் கெ.பி.ஏ.சி நாடகங்களுக்காக நிறைய பாடல்கள் பாடினார்கள். அவை மலையாள மனதில் ஒரு பழங்கால ஏக்கநினைவுகளாக நிறைந்துள்ளன. இவ்விரு குரல்களும் அப்படியே சுலோசனா- ஜார்ஜ் குரல்களைப்போலவே உள்ளன
ஜெ