அன்புள்ள ஜெ,
இன்று காலை ஒரு நண்பரைப்பார்க்க மதுரையில் ஒரு தொழிலகத்துக்குச் சென்றிருந்தேன், அது எந்திரங்கள் மூலம் மர வேலைப்பாடுகள் செய்யபடும் தொழிலகம். எனது சிறிய வயதில் எனது தாத்தா மர வேலைப்பாடுகள் செய்வதை அருகிலிருந்து மணிக்கணக்கில் ஆர்வத்துடன் பார்த்ததுண்டு. அதில் பயன்படும் உளி, ரசமட்டம் போன்ற பல கருவிகளை ஆச்சர்யமாகப் பார்ப்பதுண்டு. மரத்தில் ஒட்டைபோடும் கருவியில் கயிறு இழுப்பது போன்ற சிறு உதவிகளும் செய்ததுண்டு. உற்சாகமாகப் பேசிக்கொண்டு வேலை செய்யும் அவருடன் இருப்பது மிக சந்தோஷமான நேரம்.
ஆனால் ஒரு எந்திரம் பெயிண்ட் அடிப்பது போல சீராக முன்னும் பின்னும் நகர்ந்து மரத்திலிருந்து துல்லியமான உருவங்களை உருவாக்குவதைப் பார்ப்பது இன்றுதான் முதல் முறை. ஆனால் ஆரம்ப ஆச்சர்யம் போனபின் இதில் வேடிக்கை பார்க்க ஏதுமில்லை, குறிப்பாகக் குழந்தைகள் யாரும் அதைக் கவனிப்பதாக் கூடத் தெரியவில்லை. ஒரு கலைஞன் அவனை மீறிப் படைக்கும் படைப்புக்குத் தேவையே இல்லாத இடம் நோக்கி நமது நுகர்வு வாழ்க்கைமுறை நம்மைக் கொண்டு செல்கிறதோ என்ற எண்ணம்தான் தோன்றியது
இந்தக் கதையில் வரும் ஆசாரி கிறுக்கன் எனத் தோன்றுவது அவர் மற்றவர்களின் நுகர்வுத்தேவைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள இயலாததனால்தானோ. அதனால் தான் அவரால் ஒரு எதிர்பார்ப்பில்லா சிறுவன் முன் ஒரு கலை வெற்றியை அடைய முடிகிறது. அந்தக் கலை வெற்றிக்கு, தனித்துவப் படைப்புகளின் சுவையை அறிந்த சிறுவனும் ஒரு காரண கர்த்தாவாக இருக்கிறான்.
எனது செல்பேசியில்தான் வலைத்தளங்களைப் படிப்பது எனது வழக்கம். தற்செயலாக நான் இந்தக் கதையை இந்த இயந்திரத் தொழிலகத்தில் இருந்து படிக்கும்போது ஒருவித ஏக்கம் ஏற்பட்டது
அன்புடன்
சுரேஷ் பாபு
அன்புள்ள ஜெ,
அம்மையப்பம் கதையைப் பலமுறை வாசித்தேன். எங்கோ ஒரு இடத்திலே அந்தக்கதை என்னைப்பற்றியது என்று எனக்குத் தோன்றியது. நான் படைப்புத்தாயின் கால் கட்டைவிரல் அடையாளம் உடையவனாக இல்லாமலிருக்கலாம். [காளிதாசனின் கதையை நினைவுகூர்ந்தேன்] ஆனால் ஏணிகூட்டக்கூடிய சாதாரண ஆசாரி அல்ல. நான் ஒரு கலைஞன். ஆனால் ஏணிகூட்டினால்தான் வாழ்க்கை என்று அமைந்துவிட்டது. ஏணிதான் சோறு போடும், சிற்பம் சோறுபோடாது என்று அப்பா அம்மா சுற்றம் எல்லாமே என்னை சொல்லிச்சொல்லி வளர்த்தார்கள். இப்போது நன்றாக ஏணி கூட்டுகிறாயே, கைநிறைய சம்பாதிக்கிறாயே உனக்கு என்ன குறை என்று என்னிடம் கேட்கிறார்கள். என்னுடைய மனதை நான் சொல்லமுடியாது. சொன்னால் நானும் கிறுக்கனாக ஆக்கப்பட்டுவிடுவேன். ஆசாரி ஏணியைப்போட்டுவிட்டு வேலிதாண்டி ஓடுவதை முதலில் வாசித்துப்பார்த்தபோது நான் சிரித்தேன். இப்போது ஒவ்வொருமுறையும் அந்த நினைப்பு வரும்போது அழுகைதான் வருகிறது
குமார் அருணாச்சலம்