அஞ்சலி: மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன்

கடம்மனிட்ட என்று மலையாளிகளால் பிரியமாக அழைக்கபப்ட்ட மலையாளக் கவிஞர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் மார்ச் 31,2008 அன்று கேரளத்தில் பத்தனம்திட்டாவில் காலமானார்.

பத்தனம்திட்டா அருகே கடம்மனிட்டா என்ற கிராமத்தில் மார்ச் 22, 1935ல் பிறந்தவர் ராமகிருஷ்ணப் பணிக்கர் என்ற கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். அப்பகுதி தமிழ்நாட்டுப் பண்பாட்டுடன் நெருக்கமான உறவுள்ளது. படையணிப்பாடல் போன்ற பல நாட்டார் பாடல்முறைகளால் செழுமைகொண்டது. அம்மரபில் பிறந்து வளர்ந்தவர் கடம்மனிட்ட. கடைசிவரை அந்த கிராமிய இயல்பு அவரிடம் இருந்தது.

இளமைக்காலம் முதல் கடைசி வரைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் அக்ட்சியின் உறுப்பினராகவும் செயலாளியாகவும் கடம்மனிட்டா இருந்தார். இளமையில் மாணவர்சங்கத்தில் பொறுப்பிலிருந்தார். தொழிற்சங்கப்பணி ஆற்றியிருக்கிறார். 1992ல் கேரள புரோகமன சாகித்ய சங்கம் [ முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 2002 ல் அதன் தலைவராக ஆனார். 1996ல் ஆறன்முள தொகுதியிலிருந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராக சட்டசபைக்கு தேர்வுசெய்யபப்ட்டார். 1982ல் அவருக்கு கேரள சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

1960களில் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார்பப்போது மார்க்ஸியர்களுக்கு எதிரான சக்தியாக விளங்கியவரும் எம்.என்.ராயின் மாணவருமான எம்.கோவிந்தனின் தொடர்பு கிடைத்தது. அது அவரை நவீன இலக்கியத்தின்பக்கம் கொண்டுவந்து சேர்த்தது. முரண்பாடுகளுடன் அவர் கோவிந்தனின் நெருக்கமான மாணவராகவும் இருந்தார். கேரளத்தில் புதுக்கவிதையை கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் கடம்மனிட்டா. முன்னோடிகள் அனைவருமே எம்.கோவிந்தனுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது [கெ.அய்யப்ப பணிக்கர், கெ.பாலூர், என்.என்.கக்காடு, ஆற்றூர் ரவிவர்மா, கெ.சச்சிதானந்தன், சுகத குமாரி, ஆர்.ராமசந்திரன் ஆகியோர் பிறர்]

ஆனால் கடம்மனிட்டாவின் பங்களிப்பு கேரள கவிதையில் அவர் கொண்டுவந்த ஆவேசமான நாட்டார்தன்மைதான். படையணிப்பாடல் போன்ற நாட்டார் மெட்டுகளுள்ள அவரது ஆக்ரோஷமான கவிதைகள் எழுபதுகளின் இடதுசாரி எழுச்சிகளின் முகப்புக்குரலாக மாறின.கடம்மனிட்ட கனத்த குரலும் தாளக்கட்டுள்ள பாடும் முறையும் கொண்டவர். ஒருவகையில் இன்று ஆந்திராவில் புகழ்பெற்றிருந்த கத்தாருக்கு முன்னோடி அவரே. மேடையில் மிக உக்கிரமாக அவற்றை அவர் வெளிப்படுத்துவார். எழுபதுகளில் அவரது கவிநிகழ்ச்சிகளுக்கு பத்தாயிரம்பேர் கூடுவது சாதாரணமாக இருந்தது. அவரது கவிதைவெளிப்பாட்டு நிகழ்ச்சி மங்கட ரவிவர்மா இயக்கிய நோக்குகுத்தி என்ற படத்தில் உள்ளது. ஞெரளத்து ராமப்பொதுவாளின் இடைக்காவுடன் இணைந்து அதில் அவர் பாடுகிறார்.

அங்கதம் கொண்ட வசன கவிதைகளையும் கடம்மனிட்டா எழுதியிருந்தாலும் அவரது இசைக்கவிதைகளுக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு அங்கே நவீனக் கவிதை வசனநடைக்கு வர முடியாமல் ஆக்கியது. மாற்றம் தொண்ணூறுகளில்தான் நிகழ்ந்தது.

கடம்மனிட்டாவின் நல்ல கவிதைகள் அப்போதே தமிழில் வெளிவந்தன. வானம்பாடி இதழ் அவரது கவிதைகளுக்காக ஒரு சிறப்புமலர் வெளியிட்டது. அவரது குறத்தி போன்ற கவிதைகளை சிற்பி மொழியாக்கம் செய்திருந்தார். கண்ணூர் கோட்டை முதலிய கவிதைகளை சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார். என்னுடைய ‘தற்கால மலையாளக் கவிதைகள்’ நூலில் அவரது முக்கியமான கவிதைகள் உள்ளன.

மிக எளிமையான நாட்டுப்புறத்துக்காரரைப்போல பிரியமாகப் பேசக்கூடியவர் கடம்மனிட்டா. நான் ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன். எல்லா தரப்பினருக்கும் விருப்பமானவராக இருந்தார். அவர் கேரள கவிதையில் ஒரு காலகட்டத்தின் முகம்.

காட்டாளன்
=========

வேங்கைப்புலி காத்துகிடக்கும்
ஈரக்கண்கள் திறந்தும்,
கருநாகம் நுனியில் நெளியும்
புருவம் பாதி வளைத்தும்,
கருகியதோர் காட்டின் நடுவே
நிற்பான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு
நிற்பான் காட்டாளன்!

ஆகாயத்தில் அப்பன் செத்து
கிடப்பதுகண்டு நடுங்கி,
மலையோரத்தில் அம்மை இருந்து
தகிப்பது கண்டு கலங்கி,
முலைபாதி அறுத்தவள் ஆற்றின்
கரையில் கனலாய் அழைக்க,
கனலின்குரல் வீசுளிபோலே
நெஞ்சில்பாய்ந்து துளைக்க,
கணையேற்ற கரும்புலி போல
பிளந்துசரியும் பெருமலைபோல
உலகெல்லாம் நடுங்கும்வண்ணம்
அலறினான் காட்டாளன்!
ஒருகணம் விம்மியழுதிடும்
சாதகப்பறவையைபோல
மனைநீர் கேட்டு வானம் நோக்கி
நின்றான் காட்டாளன்!
வானுக்கோ மௌனம் வெறிக்
காதலுக்கு தகாம் பெருக
மாந்தோப்புகள் உருகும் மண்ணில்
அமர்ந்தான் காட்டாளன்!

கருமேகம் செத்துகிடக்கும்
கடும்விஷக் கடலோ வானம்?
கருமரணம் காவலிருக்கும்
சுடுநோவின் கோட்டையிலாநான்?
எங்கென்றன் கனவுகள் பாவிய
இடிமின்னல் பூக்கும் வானம்?
எங்கென்றன் துளசிக்காடுகள்?
ஈரக்கூந்தல் ஆற்றிய அந்திகள்?
பச்சைப்புழு துள்ளி நடக்கும்
இஞ்சிப்புல் வெளிகள் இன்று எங்கே?
அருகம்புல் நுனியில் அம்புலி
படமெழுதிப் பாடிய இரவுகள்?
காட்டின் கைவளைகள் ஒலிக்க,
காட்டாற்றின் சதங்கைகள் கொஞ்ச,
காடத்திகள் சோலைமரத்தின்
நிழலில் குதித்தாட;
கருவீட்டி அழகுடல் நெளிய,
கண்ணிமைக் காடுகள் விரிய,
பூங்கூந்தல் கட்டுகள் அவிழ,
உடலசைய, மெல்லிடைய¨சைய,
முலையசைய, கார்முடிசிதற,
காடத்திகள் சோலைமரத்தின்
நிழலில் குதித்தாட;
மூங்கிற்குழல் தளும்பும் மதுவை
ஒரேமுச்சில் உண்டு அப்போதையில்
மரத்தடியில் தாளம் தட்டித்
தலையாட்டிய நான் இன்று எங்கே?

எங்கு மறைந்த என்றன் மகவுகள்?
தேன்கூடு தேடிப்போன
ஆண்குழந்தைகள், என் மைந்தர்கள்?
பூக்கூடை நிறைக்கப்போன
என் கண்கள், பெண் குழந்தைகள்?
தாய்ப்பால் உதட்டில் மணக்கும்
ஆம்பல்பூ மொட்டுகள் எங்கே?
குருத்தெலும்புகள் கருகும் நெடியோ
அறைகிறதென் நாசிகளில்?
வேங்கைப்புலி உறுமும் கண்ணில்
ஊறி வரும் ஒரு தீச்சொட்டு!

காட்டாளன் தன் நெஞ்சுள் உடைந்த
முதுகெலும்பு நிமிர்த்து எழுந்தான்!
தரையுதைத்து எழுந்த விசையில்
தூசுத்திரைகள் பொங்கியெழுந்தன.
வேட்டைக்காரர் கைகளையெல்லாம்
வெட்டுவேன் இக்கல்மழுவேந்தி!
ம¨ந்தீண்டி அசுத்தம் செய்தவர்
தலையறுந்து மிதப்பார் ஆற்றில்!
மரம் வெட்டி அழித்தவர், எந்தன்
குலம் முழுதுமழித்தவர், அவர்கள்
குடல்மாலைகளால் இந்நிலத்தில்
தோரணங்கள் சமைப்பேன்!
குடலுருவியெடுப்பேன், நான் என்
குழலூதி விளிப்பேன்ம் மீண்டும்
மதம் கொண்ட பாகதர் குழுக்கள்
வரும் என் வில் நாணேற!
வில்லுக்கு என் ஜீவ நரம்புகள்
முறுக்கிக்கட்டி ஒரு நாணேற்றிடுவேன்!
இடிமின்னல் ஒடித்து அம்பு! அக்கினி
அலையலையாய் கருமுகிலில் சென்று
உரசும்! பொறி பேய்மழையெனப்
பொழியும்! சிறு வேர்கள் போலப்
படரும்! முளைவிட்டுத் தழைக்கும்–

கதிர்கள்!!!

ஒரு சூரியன் உதிக்கும்!
நிழல்போல் அம்புலி வளரும்!
கானகப்பொலிவுகள் எங்கும் விரியும்!
வனவேகத்தில் என் துயரம் தெளியும்!
நான் அன்று சிரிப்பேன்!

கருகித்தோர் காட்டின் நடுவில்
நிற்பான் காட்டாளன்!
நெஞ்சில் ஒரு பந்தம் நட்டு
நிற்பான் காட்டாளன்!

குறிப்பு:

மூலப்பெயர் ‘கிராத விருத்தம்’

காட்டாளன் என்ற பழைய சொல் காட்டை ஆள்பவன் என்றும் காட்டுமனிதன் என்றும் பொருள் தருகிறது

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

சில மலையாளக் கவிதைகள்

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

மலையாளக்கவிதை பற்றி

மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது?

பத்து மலையாளக் கவிதைகள்

பத்து மலையாளக் கவிதைகள்

பி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்

மலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…

முந்தைய கட்டுரைஅவதூறு–ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஹரிதகம் ஓர் இணையதளம்