எழுத்தும் விளைவும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு

தலைமுறைகளைக் கடந்து பயணிக்கிறது தங்களது எழுத்துக்கள். அதற்கு நீங்கள் செய்யும் வாசிப்பின் முயற்சியும், பிரயாணங்களும், திறந்தே வைத்திருக்கும் மனமும் செவிகளும் வெகுவாகத் துணைபுரிவதை அறிகிறேன். தொடர்ந்து படைக்கும் படைப்புகள் வாசகனை ஒருவித மாற்று சூழலுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. சொற்களை கோர்ப்பதிலும், எழுத்துக்களில் உணர்வின் சாரத்தை வன்மையாகத் திணிப்பதிலும் உங்களுக்கென்று ஒரு புதுப் பாதையும், புது உலகையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளீர்கள். அதன் பலனே தற்கால மாற்றுக் கலாச்சார சமூகத்திலும் கூட உங்களை எழுத்தால் கண்டுகொண்டவன், தான் இதுவரையில் தொலைத்த அத்தனை காதல், அத்தனை காமம், அத்தனை மனிதம், அத்தனை மரபு, தெய்வீகம், கற்பனை, ஓலம் எனப் பலதரப்பட்ட உணரா உணர்வுகளை, ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் கண்டுகொள்கிறான். இது ஒரு எழுத்தாளனால் மட்டுமே முடியும். சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எப்போதும் உண்டு அத்தகைய எழுத்தின் ஜீவ ஊற்றான ஜெயமோகனுக்கு.

உங்களிடம் ஒரு கேள்வி. என் தலைமுறை என்ற சுயநலத்துடன் கேட்கப்படும் கேள்வி. இன்று ஆயிரமாயிரம் எழுத்துக்கள் திக்கெட்டும் இருந்து புறப்பட்டு வந்து திசையறியாமல் கரைந்து போகின்றது. முனைப்புடன் எழுத நினைத்தோர் எல்லாம் ஒரு நிலையில் அதனைக் கைவிட்டு விடுகின்றனர். தொடர்ந்து எழுத பயிற்சியும், உத்வேகமும், லகரியும் முக்கியமான ஒன்று. நீங்கள் எழுதிப் பழகிய இந்தத் தலைமுறையில் ஒரு சிலரையாவது உங்களைப் போன்று வல்லமை பொருந்திய எழுத்தாளனாக உருவாக்கும் கடமை உங்களுக்கிருப்பதாக உணர்கிறேன். அத்தகைய முயற்சிகள் தோற்றாலும் அதில் ஒருவித நியாயம் இருப்பதாகத் தோன்றுகிறது. பயிற்சிப் பட்டறைகள் அளவிற்கு இல்லா விட்டாலும், உங்களின் சிறிய திருத்தும் கூட, அவர்தம் பாதையை சீராக்க உதவும் கூர்மையான ஆயுதமாக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். என்கேள்வி புரிந்திருக்கும் என்ற நிம்மதியுடன் முடித்துக் கொள்கிறேன். உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள்.

திருநெல்வேலியிலிருந்து

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்

எழுத்து என்பது ஒருவகையில் தன்னை சமகாலம் முன்னால் சிதறடித்துக்கொள்வதுதான். ஒரு மனிதவெடிகுண்டுபோல என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தரங்கம் என அதன்பின் ஏதுமில்லை

அந்த செயலின் விளைவு நம் கையில் இல்லை என்பதே உண்மை. நாம் திட்டமிட்டு எதையும் நிகழ்த்திவிடமுடியாது. அரசியல் சமூகவியல் தளங்களில்கூட ஒரு செயல்மூலம் அதற்கு நிகரான விளைவை நிகழ்த்திவிடமுடியாது. இலக்கியத்தில் இன்னும்கூட அது சாத்தியமில்லை. நாம் செய்வதைச் செய்துவிட்டு நம் கடமை முடிந்தது என நினைப்பதே ஒரே வழி

என் வரையில் நான் இலக்கியத்தை ஒரு ஒட்டுமொத்தக் கருத்தியக்கமாக, முழுமையான ஒரு அக-புறச் செயல்பாடாக ஓய்வில்லாமல் செய்துவருகிறேன். அதன் விளைவு ஒன்றுமில்லாமலானால்கூட, நான் ஒட்டுமொத்தமாக இல்லாமலானால்கூட ஒன்றும் செய்யமுடியாது

என் எழுத்தால் பலர் எழுதிவருகிறார்கள் என்றே நினைக்கிறேன். ஈடுபாட்டுடனும் அர்ப்பணத்துடனும் எழுதக்கூடிய, கருத்துச்செயல்பாடுகளில் ஈடுபடக்கூடிய ஒரு கூட்டம் உருவாகி வந்திருக்கிறது. அவர்கள் தங்கள் செயல்களால் வரும்காலத்தில் அறியப்படுவார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபூரண மதுவிலக்கு
அடுத்த கட்டுரைசூரியநெல்லி- கடிதங்கள்