அறம்-ஒரு கடிதம்

அன்பார்ந்த ஜெயமோகன் ,

முதலில் எனது தற்போதைய வைரஸ் காய்ச்சலுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இல்லாவிட்டால் மூன்று நாள் கட்டாய ஓய்வு கிடைத்திருக்குமா? அதிலும், மிக அமைதியான சூழலில் ‘அறம்’ படித்திருக்கத்தான் முடியுமா?

யானை பற்றி அடுத்தடுத்து இரண்டு கதைகள்… வணங்கான் & யானை டாக்டர். அதென்னவோ யானை மேல் ஏறுவதென்பது அலாதிதான். தென் மாவட்டக்காரர்களும், மலையாளிகளும் அதிகம் ரசிக்கும் ஒரு விலங்கு யானை. குலசேகர ஆழ்வாரையே அது ஈர்க்கவில்லையா? அவர் ராஜா, அதுவும் கேரளத்து ராஜா “கம்ப மதயானைக் கழுத்தகத்து மேலிருந்து” அனுபவிக்கும் செல்வம் சாமனியமானதா?. அதைத் திருமலையில் பிறக்கத் தியாகம் செய்கிறேன் என்பது அவர் சொன்னால் நியாயம்தான். அந்த அனுபவத்தை நேசமணி, ஆனைக்கருத்தானுக்குக் கொடுத்திருக்கிறாரே? யானை டாக்டரில் பீர்பாட்டில்கள் எப்படி அவற்றைக் கொல்கின்றன என்பதைப் படிக்கப்படிக்க என்னவோ செய்கிறது. உடலெங்கும் புழுக்கள் நெளிவதைப்போல. பீரும் புளித்தால் புழு நெளியும். புழு நெளியும் மூளைகள்தான், பீர்ப்புட்டிகளைக் காடுகளில் வீசிச் செல்கின்றன.

அறம்பாடும் அந்தப் பெரியவருக்கு நிகழ்ந்த அநியாயத்தை, தான் காக்கும் அறத்தால் வெல்கிறாள் அந்தச் செட்டிப்பெண்பிள்ளை என்பதை அறியும்போது சற்றே உடல் குலைகிறது. ’யாத்தீ… என்ன பொம்பளை?’ என வியக்க வைக்கிறது. முன்னே இருந்திருந்தால், அவளைச் சேவித்திருப்பேனோ? இது மிகையில்லை.

எல்லாக்கதைகளும் அறம் சேர்ந்தது என்பதால் சில முன்முடிவுகளை நான் எடுத்துவிட்டது சற்றே தொய்வைத் தருகிறது. இது உங்களது குறையில்லை. படிக்கும் எனது முன் ஆயத்தங்களும், அவதானிப்புகளும் மட்டும். ஆனாலும், வார்த்தைகள் தொய்வை வெல்கின்றன. அதுவும் குமரிமாவட்ட வட்டார வழக்கு…

சோற்றுக்கணக்குப் படித்துவிட்டு, கண்களில் சூடாக நீர் பொங்குகிறது. ‘காய்ச்சல் கூடிப்போச்சோ? டாக்டர்கிட்ட போயிட்டு வந்துருவமா?’ என்கிறாள் என் மனைவி. ‘வேண்டா. கொஞ்சம் பாப்பம்’ என்கிறேன் நான். நேரம் கூடக்கூட உணர்வுகள் ஆறிப்போகவும் சிந்தனைத் தெளிவு அதனை ஆளுமை செய்யவும் சாத்தியமிருக்கிறது. உடலில் பரவும் காய்ச்சல் போல.
அன்புடன்
க.சுதாகர்

அன்புள்ள சுதாகர்

இலக்கியத்தை வாசிக்கவும் இசைகேட்கவும் காய்ச்சல் ஒரு நல்ல சூழ்நிலை. ஒருவகையான தளர்ந்த மனநிலை அகத்தை இன்னும்கொஞ்சம் திறக்கச்செய்கிறது

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைமாடன் மோட்சம்
அடுத்த கட்டுரைகாந்தி-கடிதம்