அம்மா இங்கே வா வா

பெரும்மதிபிற்குரிய ஜெ அவர்களுக்கு,

உங்களின் இணையத்தை வாசிக்கும் அனேக ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் வார்த்தைகளுக்கும், படைப்புகளுக்கும் நன்றி!

என்னுள் சில நாட்களாய் வருடிக் கொண்டிருக்கும் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது.

என் ஒரு வயது மகனுக்காக இணையத்தில் “Tamil Rhymes” தேடிக்கொண்டிருந்தேன்.

அவன் விரும்பும் பொம்மைகள்(Cartoon) அதில் ஆடிப்பாடுகின்றன. அவன் தன் மழலை மொழியில் அவற்றைத் திரும்பி சொல்லும்போது மெய்சிலிர்த்துப் போகிறேன்.

ஆனால், என்னை ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் என்று பிள்ளைகளுக்கு அறம் சொல்லிக் கொடுத்த நாம்,

அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி, ஈகைத் திறன்

என மிகச்சிறந்த சீரிய பண்புகளை போற்றிய பாரதியையும் மறந்து

அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா, இலையில் சோறு போட்டு, ஈயை தூர ஓட்டு (சோத்தப் போட்டு திங்க சொன்னா கூட பரவால்ல..)

என அற்ப விசயங்களைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டோம் என்பதே என் வருத்தம்.

இணையம் முழுதும் “அம்மா இங்கே வா வா.. ” ஆக்கிரமித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதையும் தாண்டி, பழைய, புதிய ஆத்திசூடியை எடுத்து செல்வது எனக்கு சிரமமாகவே இருக்கிறது. அம்மா இங்கே வா வா, எளிதாகத் தோன்றினாலும், அறத்தைத் தொலைத்து விட்டதைப் போல் தோன்றுகிறது. சில நாட்களில், அகநானூறு, புறநானூறு போல், ஆத்திச்சூடியும் மனப்பாடப் பகுதியாக மட்டுமே ஆகி விடும் போல் இருக்கிறது.

இது நீங்கள் முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியது போல், அரண்மனையின் உண்மையான வரலாற்றினை மறந்து, குஷ்பு குளித்த பெருமையினைத் தம்பட்டம் அடிக்கும் கூட்டமாக மாறுவது போல எனக்கு தோன்றுகிறது.

“அம்மா இங்கே வா வா” விற்கு வரலாறு ஏதேனும் உண்டா?

இதை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆசைப்படுகிறேன்.

இப்படிக்கு நன்றியுடன் ரசிகன்,

ஓம்பிரகாஷ் பாலையா

அன்புள்ள பாலையா

அம்மா இங்கே வா வா என்ற குழந்தைப்பாடல் குழந்தைக்கவிஞர் என்று அழைக்கப்பட்ட மே.வீ.கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்டது. வள்ளியப்பாவின் குழந்தைக்கவிதைகள்  மிகப்பிரபலமானவை,

அப்பாடலில் அகரவரிசை உள்ளதனால் குழந்தைகளுக்குக் கற்பிக்க இலகுவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் எண்ணினார்கள். அதனால் பள்ளிகளில் இக்கவிதை அதிகமுக்கியத்துவம் பெற்றது,

ஆனால் அதை விட குழந்தைப்பாடல்களைக் குழந்தைகளே தீர்மானிக்கின்றன. எப்படியோ குழந்தைகளுக்கு இப்பாடல் பிடித்துப்போய்விட்டது. இன்றும் கூட பள்ளிகளில் பல கவிதைகளைச் சொல்லிக்கொடுத்தாலும்கூட இப்பாடலே குட்டிநாக்குகளில் உடனடியாக எதிரொலிக்கிறது. குட்டிசைதன்யா வாயில் இக்கவிதை அவளறியாமல் எச்சில்போல சொட்டிக்கொண்டே இருக்கும் அந்நாளில்.

ஏன்? குழந்தையின் உள்ளம், அம்மாவுக்கான ஏக்கம் இதில் இருப்பதனாலா? அம்மாவைப்பிரிந்து பள்ளிக்குச் சென்ற பிள்ளையின் உள்ளம் அம்மாவை அழைக்கிறதா? அம்மா, சாப்பாடு என குழந்தைக்குப் பிரியமான விஷயங்கள் வரிசையாக இருப்பதனாலா? அதை சொல்லவே முடியாது.

அகரவரிசைக்காக ஈயை தூர ஓட்டு என்பது போன்ற வரிகளை வைத்திருக்கிறார். அது இப்போது கொஞ்சம் ஒவ்வாமல் இருப்பதாக நீங்கள் நினைப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் உலகமெங்குமே குழந்தைக் கவிதைகளில் நல்லொழுக்கம், உயர்கருத்துக்கள் எவையும் இருப்பதில்லை. அவை சொல்விளையாட்டுகளாக, எளிய நேரடி வெளிப்பாடுகளாகவே இருக்கும்.

உதாரணமாக ‘humpty dumpty sat on a wall’ அல்லது ‘rain rain go away’ போன்ற பாடல்களில் என்ன கவித்துவமும் உயர்கருத்தும் உள்ளன? குழந்தைப்பாடல் குழந்தையின் வாயில் நிற்கவேண்டும். குழந்தை நாக்கு அவற்றைச் சொல்வதன் வழியாக மொழியின் சாத்தியக்கூறுகளைக் கற்கவேண்டும்,அவ்வளவுதான்.

அவற்றில் கண்டிப்பாகக் குழந்தையின் உள்மனம் புரிந்துகொள்ளும் ஒரு அர்த்தம் உள்ளது. அதை வேண்டுமென்றால் குழந்தை அவற்றை ஏற்றுக்கொண்டபின் நாம் அலசி ஆராயலாம். ஆனால் அதைத் திட்டமிட்டு உருவாக்கிவிடமுடியாது. அம்மா இங்கே வா வா ஓர் இந்திய யதார்த்தம். இங்குள்ள நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பண்பாட்டுக்கூறுகளின் சந்திப்புப் புள்ளியில் அது நிகழ்ந்தது,அவ்வளவுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் ஈழமும்
அடுத்த கட்டுரைகடல் இரு மாற்றுப்பார்வைகள்