குருதி [சிறுகதை]

சேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா? மாடு தரகு பாப்பாரே?’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார்

சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார்

‘வயசுண்ணா?’

‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’

‘இந்தூரா?’

‘ஆமாங்க..’

‘அப்டி யாரு நம்மூரிலே?’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்?’ என்றார்

சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார்

கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா?’ என்றார். சுடலை மேலே பேசுவதற்கு முன் அவர் சென்றுவிட்டார்

சுடலைக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி அந்த மண்ணில் அத்தனை வருடம் வாழ்ந்த ஒருவரை ஊரே மறந்திருக்க முடியும்? வேற்றூர்க்காரர் ஒன்றும் இல்லை. அதே ஊரில் பிறந்து வளர்ந்து விவசாயம் பார்த்துப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சம்சாரி. ஒருவேளை செத்துப்போய்விட்டாரோ. செத்தாலும் எப்படி தடமில்லாமல் ஆக முடியும்?

சேத்துக்காட்டார் என்றால் ஜெயிலில் எல்லாருக்கும் ஒருபயம்தான். இரட்டைக்கொலை. இரண்டுதலைகளையும் இரு கைகளிலாக எடுத்துக்கொண்டு எட்டு மைல் நடந்துசென்று போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். தூக்கு கிடைத்தது. பிறகு விதவிதமான மறுபரிசீலனைகள் கருணைமனுக்கள். குற்றம் நடக்கும்போது சேத்துக்காட்டாருக்கு வயது அறுபத்திரண்டு. அதுதான் அவருக்குக் கைகொடுத்தது. இரட்டை ஆயுள்தண்டனையாக முடிந்தது.

சுடலை கைதாகி உள்ளே போனபோது சேத்துக்காட்டார் ஏற்கனவே பதிமூன்று ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டார். நரைத்த தலைமுடி. புருவம்கூட நரைத்திருந்தது. ஓங்குதாங்கான உருவம். மண்ணில் வேரோடிய கருவேலமரம் மாதிரி உடம்பு. அதிகம் பேசமாட்டார்.

ஜெயிலில் மரியாதையே ஒருவர் செய்த குற்றத்தை வைத்துதான். ஆனால் அதற்கும் மேலாகவே சேத்துக்காட்டாருக்கு ஒரு இடம் இருந்தது. அது ஏன் என்பது அவர் ஜெயிலுக்குச் சென்ற எட்டாம்நாள் தெரிந்தது. சில்லறைத்திருட்டும் அடிதடியுமாக ஜெயிலுக்கு வந்த சங்கரப்பாண்டியை பார்த்தாலே பெரிய கரைச்சல்காரன் என்று தெரிந்தது. சுடலை சாப்பாட்டை வாங்கிக்கொண்டு சென்று அமர்ந்ததும் அவன் அருகே வந்தான். ’மாமா, தட்ட இந்தப்பக்கமா நீட்டுறது…. மருமான் பசியால துடிக்கிறேன்ல?’ என்றான்

‘இம்புட்டுதானேய்யா இருக்கு?’ என்றார் சுடலை. முதல்நாள் தட்டில் களியாக வேகவைத்து உருட்டிய சோற்றை அவர்கள் போட்டபோது உண்மையிலேயே அவருக்குத் துணுக்கென்றது. இவ்வளவு சோற்றையும் தின்று எப்படி வாழ்வது? ஊரில் அவர் படிப்படியாக சோறு போட்டுக்கொள்ளமாட்டார், கூம்பாரமாக சோற்றைக் குவித்து நுனியில் குழி எடுத்து அதில் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால்தான் நிறைவாக இருக்கும்.

‘குடுங்க மாமா..பெரியபேச்சு பேசறீங்க’ என்று சங்கரப்பாண்டி தட்டைப் பிடிக்க சுடலை சற்று கோபமாக ‘விடுடா டேய்’ என்றார்.

‘என்ன மரியாத கொறையுது?’ என்று முறைத்தவன் எதிர்பாராத கணத்தில் தரையிலிருந்து மண்ணை அள்ளி சோற்றிலே போட்டுவிட்டான். சுடலை கொதித்து எழப்போய் மறுகணமே அடக்கிக் கொண்டார். இவன் சிறைப்பறவை. நான் ஒரு எதிர்பாராத பிரச்சினையால் இங்கே வந்தவன். எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு நிலமிருக்கிறது. ஆனால் கைகால்கள் நடுங்கின

‘டேய் என்னடா மொறைக்கிறே?’ என்றான் சங்கரப்பாண்டி

சுடலை பார்வையைத் திருப்பிக்கொண்டார். கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அப்போது சேத்துக்காட்டார் எழுந்து வந்தார். ‘டேய் உன் சோத்த அவனுக்குக் குடுத்திட்டு அந்த சோத்த நீ எடுத்துக்க’ என்றார். நிதானமான கனத்த குரல்

சங்கரப்பாண்டி ” என்ன பெரிசு…கொரலு ஓங்குது? போ போ …போய் அந்தால ஒதுங்கு’ என்றான்

சேத்துக்காட்டார் மேலும் நிதானமான குரலில் ‘குடுத்தா நீ நாளைக்கும் உசிரோட இருப்பே….எனக்கு ரெட்டக்கொலைக்கு ரெட்ட ஆயுள்… இன்னொரு கொலையச் செஞ்சாக்க எனக்கு புதிசா தண்டன இல்ல பாத்துக்க’ என்றார்.

அவர் கண்களைப்பார்த்த சங்கரப்பாண்டி திகைத்துவிட்டான். கை இயல்பாக நீண்டு அவன் தட்டை சுடலையை நோக்கி நீட்டியது.

அதன்பின் பெரியவருக்கு சுடலைதான் மிக நெருக்கமானவராக இருந்தார். ஜெயிலில் இருந்த இரண்டுவருடமும் அனேகமாக தினமும் கூடவே இருந்தார். பெரியவர் பொதுவாகப் பேசுவதேயில்லை. பகல் முழுக்க மூர்க்கமாக மண்ணில் வேலைசெய்வார். ஜெயிலுக்குள் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்தது, அதில் பாதி மரங்கள் பெரியவர் நட்டு வளர்த்தவை என்றார்கள். இரவில் கம்பிக்கு அருகில் வெளிச்சமுள்ள இடத்தில் இருந்துகொண்டு கொண்டு வந்திருந்த மரக்கட்டைகளைச் செதுக்கிக் கொண்டிருப்பார். செதுக்கி பாலீஷ் போட்டு முடிக்கையில் யானைத்தலையோ கழுகுமுகமோ கொண்ட கைத்தடிகளாக அவை உருவாகிவரும். பெரும்பாலும் வார்டர்களுக்கே கொடுத்துவிடுவார். செதுக்கும்போது மொத்த முகமும் கூர்ந்து கவனமாக இருக்கும். வாயை மட்டும் மெல்வதுபோல அசைப்பார்

ஒன்றரை வருடம் கழித்துதான் அவர் ஏன் ஜெயிலுக்கு வந்தார் என்பது சுடலைக்குத் தெரிந்தது. இரண்டு வருடங்களில் ஒரேஒருமுறைதான் அவரது வீட்டார் அவரை மனுபோட்டு பார்க்க வந்திருந்தார்கள். அவரது பேத்தி வயதுக்கு வந்திருந்தாள். பட்டுப்பாவாடை கட்டி நகைபோட்ட கரிய குண்டுச்சிறுமியுடன் அவள் அப்பா ஜெயிலுக்கு வந்திருந்தான். பார்க்க சேத்துக்காட்டார் மாதிரியேதான் இருந்தான். ஆனால் அந்த உறுதியும் உள்ளிறுக்கமும் இல்லாத சாதாரண மனிதனாகவும் தெரிந்தான்.

சேத்துக்காட்டார் தயக்கமாகத்தான் போனார். கம்பிக்கு அப்பால் நின்ற சிறுமியைக் கண்டதும் நடை தளர்ந்தது. மெதுவாக அருகில் சென்று நின்று அவள் தலையில் கைவைத்து வருடினார்.பின்னர் மெல்லியகுரலில் ‘எதுக்கு இங்கல்லாம் கூட்டிட்டுவாறே? சொல்லியிருக்கேன்ல?’ என்றார்

‘இவதான் கேட்டா….பின்ன, என்னதான் இருந்தாலும் உங்க ஆசீர்வார்தமில்லாம…’

‘அது இருக்கே…எங்க இருந்தாலும் இருக்கே..’

‘இருந்தாலும்…’

‘டேய் நான் செத்தாச்சுன்னு நினைச்சுக்கடா…போடா…’ அவரது உரத்த குரல் கேட்டு எல்லாரும் பேச்சை நிறுத்திவிட்டுத் திரும்பினார்கள். சேத்துக்காட்டார் சட்டென்று பேத்தி தலயில் மீண்டும் கைவைத்து ‘நல்லா இரும்மா…மவராசியா பெத்து நெறைஞ்சு இரும்மா’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார்

அன்றிரவு அவர் குச்சி செதுக்கவில்லை. சுவரையே பார்த்துக்கொண்டு பேசாமலிருந்தார். பின்னர் ‘டேய் உனக்கு எவ்வளவு நெலமிருக்கு?’ என்றார்

‘அதுகெடக்கு நாலஞ்சு ஏக்கர். வெறும் முள்ளு…ஆடுகடிக்க பச்சை இல்லை’ என்றார் சுடலை

‘பொட்டக்காடா இருந்தாலும் அதுதாண்டா உனக்கு அடையாளம். நீ செத்தா விளப்போற எடம்டா அது. நாளைக்கு உம்பிள்ளையும் அங்கதான் அடங்குவான்…டேய் மண்ணில்லாதவன் மனுசனில்ல. மிருகம்…தெரிஞ்சுக்க’

பிறகு அவரே அவரது கதையைச் சொன்னார். அவருக்கு எட்டேக்கர் நிலமிருந்தது. பொட்டல்தான். ஆனால் இருபதுவருடம் இரவுபகலாக அதில் கல்லும் சரளும் பொறுக்கிப் போட்டு வயலாக்கினார். கிணறு வெட்டினார். மிளகாயும் சோளமும் தக்காளியும் போட்டார். நிலத்தில் பசுமை விரிந்தபோது ஊர்ப்பெரியமனிதர்களுக்கு எரிந்தது. ‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ இருக்கேன் ஐயா’ என்பார் பணிவாக. ’அப்டியே வெள்ளைய சுத்திக்கிட்டு வண்டிகட்டிக்கிட்டு வந்து பஞ்சாயத்திலே ஒக்காரவேண்டியதுதானேடா?’ ‘என்னய்யா நீங்க? …நான் ஏதோ கைப்பிடி மண்ணக் கிண்டிக்கிட்டிருக்கேன்…’

கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. நிலத்தை விலைக்குக் கேட்டார்கள். விலையைக் கூட்டிப்பார்த்தார்கள். நான்குசாதிசனத்தை வைத்துப் பேசிப்பார்த்தார்கள். ‘இந்தாபாரு சேத்துக்காட்டான், நமக்கு இதெல்லாம் ஆகாது. சமுசாரித்தனம் செய்றவன் அதைச்செய்யணும். அப்பதான் அதுக்கு அழகு….ஏக்கருக்கு எட்டாயிரம் சொல்றாரு நாயக்கரு…இண்ணைக்கு இந்தூர்ல ஆயிரத்துக்கு மேலே போற நெலம் எங்க இருக்கு சொல்லு… பேசாம வாங்கிட்டு போ…’

‘இல்லீங்கய்யா… இது நான் ரத்தம் சிந்தி செதுக்கி எடுத்த மண்ணு…இந்த மண்ணுதானுங்களே நமக்கு ஒரு ஆதாரம்…இத விட்டுப்போட்டுட்டு எப்டிங்கய்யா?’ ஆனால் வற்புறுத்தல்கள் ஏறிக்கொண்டே போயின. ‘அவங்கள எதுத்து நீ இந்த நெலத்த வச்சுகிட முடியும்னு நினைக்கிறியா? விட்டிருவானுங்களா? இப்ப வித்தா பணமாச்சும் மிஞ்சும். சண்டையபோட்டுப் பறிச்சுக்கிட்டானுங்கன்னா அதுவுமில்ல பாத்துக்க’

அதன்பின் கேடிகள் வந்து மிரட்டினார்கள். ஒரே ராத்திரியில் ஒட்டுமொத்த சோளத்தையும் பறித்துக்கொண்டு சென்றார்கள். மிளகாய்ப் பாத்திகளில் மாடுகளை விட்டு அழித்தார்கள். இரவும்பகலும் தோட்டத்திலேயே கிடந்தார். இடுப்பில் அரிவாளுடன்தான் தூங்கினார். தங்கத்தைப் பொத்திப்பாதுகாப்பதுபோலப் பயிரைப்பாதுகாத்தார்.

ஒருநாள் ராத்திரி மூத்தவனைத் தக்காளித்தோட்டத்தில் காவலுக்கு உடகாரச்செய்துவிட்டு வீட்டுக்குப்போனார். திரும்பிவந்தபோது காவல்மாடத்தில் கழுத்துவெட்டுப்பட்டுக் கிடந்தான். அரையடி தள்ளிக்கிடந்தது தலை. தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்துகொண்டார். நாலைந்துநாளுக்கு பேச்சே நின்றுவிட்டது.

வழக்கம்போல போலீஸ் வந்து மகசர் எழுதினார்கள். அவர்தான் குற்றவாளி என்பதுபோல அங்குமிங்கும் நடத்தினார்கள். ஒருமாசத்தில் கேஸ் ஓய்ந்துவிட்டது. குற்றவாளிகள் யாரென்று தெரியவில்லை என்றார்கள்.

அவருக்குத்தெரிந்திருந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்றும் செய்யவுமில்லை. சிதைந்து அழிந்த தக்காளிச்செடிகளை ஒவ்வொன்றாக எழுப்பி நிறுத்திக் குச்சி வைத்துக் கட்டித் தண்ணீர் ஊற்றி மீண்டும் உயிர்ப்பித்தார். அந்த வருடம் அவருக்குத்தான் தக்காளியில் அதிக மகசூல். அவருக்குத்தெரியும் என அவர்களுக்கும் தெரியும். அவர்கள் எச்சரிக்கையாக இருந்தார்கள். கவனித்துக்கொண்டே இருந்தார்கள். அவர் விவசாயத்தில் மட்டும் மூழ்கி இருந்தார். சிரிப்பு மறைந்துவிட்டது. பேச்சு முழுக்க உள்ளுக்குள் புகுந்துவிட்டது.

அதன் பின் அவர்கள் வம்புக்கு வரவில்லை. எட்டு வருடம் அவர் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளவில்லை. எஞ்சிய இருபையன்களும் வளர்ந்து பெரியாளானார்கள். மூத்தவனுக்கு உள்ளூர் சொசைட்டியில் வேலை கிடைத்தது. இளையவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். சின்னவன் போலீசில் சேர்ந்தான். அவனுக்கு வேலைகிடைத்த மறுநாள் அவர் நாலடி நீளமான அரிவாளுடன் மேலகரம் நாயக்கர் வீட்டுக்குச் சென்றார்.

காலைநேரம் .வீட்டுமுன்னால் நாயக்கர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அருகே பெரிய கோளாம்பி. வெற்றிலைத்தட்டம் ஸ்டூல்மேல் இருந்தது. பக்கத்தில் அவரது தம்பி சிக்கையா நின்றிருந்தான். பருத்திவாங்கவந்தவர்கள், சாணிஎருவை அள்ளி மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் என பத்துப்பதினைந்துபேர் இருந்தார்கள். ’என்னடா சேத்துக்காட்டான்? என்ன விசயம்?’ என்றார் நாயக்கர்

‘எட்டுவருசமா என் பிள்ளைய மேல வரட்டும்னு காத்திருந்தேன்’ என்றார் சேத்துக்காட்டார். நாயக்கர் புரிந்துகொள்வதற்கு முன் சட்டென்று படியேறி அவரை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினார். சிக்கையா முற்றத்தில் பாய்ந்து ஓடினான். அவனை இரண்டே எட்டில் பிடித்தார்

‘கொல்லாதே…கொல்லாதே’ என்று சிக்கையா கதறினான்.

’பெத்தவனுக்க அக்கினியிலே இது’ என்றபடி ஒரே வெட்டில் அவனைத் துண்டித்தார். இரு தலைகளுடன் , அக்குளில் அரிவாளுடன் பொதுச்சாலை வழியாக நடந்து சென்றார்.

‘ஒரு பிடி மண்ண வச்சுக்கிட எனக்கு உரிமை உண்டான்னு நாடு அறியட்டும்லே’ என்றார் சேத்துக்காட்டார். சுடலை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

’இப்ப வருத்தப்படுறிகளா?’ என்றார் சுடலை ஒருமுறை

‘எதுக்கு?’

‘இனி வெளிக்காத்து கிட்டாதுல்ல?’

‘வேண்டாம்ல…ஆனால் இனி ஒரு ஏழையோட நெலத்தைத் தொடுறப்ப யோசிப்பானுகள்ல? நம்மாளுக நாலுபேரு துணிஞ்சு வெட்டாம இதுக்கு ஒரு தீர்ப்பு கெடையாதுலே மக்கா’

மேலும் ஒன்பது வருடம் கழித்து சேத்துக்காட்டானுக்கு மன்னிப்பு கிடைத்தது. சிறையில் இருந்து அவர் வெளியேவந்தபோது சுடலை பார்க்கப்போயிருந்தார். அவரது மகன் சொசைட்டியில் ஆபீசராக இருந்தார். பேத்திக்குத் திருமணமாகிப் பிள்ளையும் ஆகிவிட்டிருந்தது. ‘எல்லாம் மாறிப்போச்சுலே சுடலே…ஒத்த ஒரு தெரிஞ்ச ஆளு இல்ல பாத்துக்க…வேற ராச்சியம்போல இருக்கு’ என்றார் சேத்துக்காட்டார்.

டீக்கடையிலும் பஞ்சாயத்துபோர்டு ஆபீசிலும் சேத்துக்காட்டாரை எவருக்கும் தெரியவில்லை. சொசைட்டிக்காரரை சொல்லிக் கேட்டுப்பார்த்தார். அவரையும் தெரியவில்லை. அவர் சாத்தூர் பக்கம் வேலைசெய்வதாகச் சொன்னார் ஒருவர். அவருக்கே பெரிய பிள்ளைகள் இருக்கும்போல.

பஸ்ஸுக்காகக் காத்துநிற்கையில்தான் அதுவரை உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டிருந்ததைத் தொண்டையில் ஒரு பதற்றமாக கைவிரல்களின் நடுக்கமாக கால்களில் ஒரு பலமிழப்பாக உணர்ந்தார். ஊரில் பஸ் ஏறும்போது ராமரின் கடைக்குப்பின்புறம் சென்று குடித்ததுதான். ராமர் தின்பதற்கு ஏதும் வைத்திருப்பதில்லை. குடித்துவிட்டு அப்படியே திரும்பிவிடவேண்டியதுதான்.

ஒருரூபாய்க்கு ஊறுகாயாவது வாங்கலாமென நினைத்துக்கொண்டே ரோட்டுக்கு வரவும் பஸ் வந்தது. ஏறிக்கொண்டபின்புதான் போதை மேலேற ஆரம்பித்தது. ஆனால் நாக்கு தடித்து எச்சில் ஊறிக்கொண்டே இருந்தது. சன்னல் வழியாகத் துப்பிக்கொண்டே இருந்தார். பின்னிருக்கை ஆசாமி ஒருவன் ‘டேய் அறிவுகெட்ட கூமுட்ட…ஓடுற பஸ்ஸில துப்புறியே அறிவில்ல?’ என்றான். மெல்ல நடுங்கும் தலையுடன் அவனைத் திரும்பிப்பார்த்தார். வாயில் எச்சில்தான் கொழகொழவென்று வந்தபடியே இருந்தது. வெறித்துப்பார்த்தபடி சில கணங்கள் சென்றன. ஏதோ பேச நினைத்தார். ஒரு வார்த்தைகூடத் திரண்டுவரவில்லை. திரும்பிக்கொண்டார். தலை கனத்து துவண்டது.

எட்டுமாதம் முன்னால் இவன் என்னை இப்படிச் சொல்லியிருப்பானா? எட்டுமாதம் முன்னாலிருந்த சுடலை ஆளே வேறு. கையும்காலும் பனந்தடிபோல இருக்கும். குரல் உடுக்குபோல ஒலிக்கும். வேட்டியை இறுக்கிக் கட்டியிருக்கும் பச்சை பெல்ட்டில் எப்போதும் கட்டாரி வைத்திருப்பார். வெள்ளைத்துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு மீசையை நீவியபடி பஞ்சாயத்தில் அமர்ந்தாரென்றால் எதிர்ப்பேச்சு பேச ஆளிருக்காது

இன்று அவரைப்பார்க்க எப்படி இருக்க்கும்? வெயிலில் காய்ந்த வாழைத்தண்டு போல உடம்பு. இடுப்பளவு ஓடைத்தண்ணீரில் நடப்பது போல நடை. எல்லாவற்றையும் விட மரியாதை போயிற்று. கண்டவனிடமெல்லாம் கடன் வாங்கிக் குடித்தாயிற்று. குடிமகன் ராமுகூட ‘வே சும்மா போவும்வே அனத்தாம…அவனவன் சாவுறான்…குடிக்கதுக்கு சில்லறைக்கு வந்திருக்கீரு….போவும்வே போயி இடுப்பு துண்ட எடுத்து ரோட்டில விரிச்சிட்டு இரும். சாயங்காலம் அஞ்சோபத்தோ தேறும்’ என்று முகம்பார்த்து சொன்னபோது டீக்கடையில் இருந்த அத்தனை பேரும் சும்மா பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லாக் கண்களிலும் ராமு கண்களிலிருந்த அதே பாவனைதான். புழுவை, மலத்தைப் பார்க்கும் அருவருப்பு. எட்டுமாசம்…எல்லாமே இடிந்துவிழுந்த எட்டுமாசம்.

கம்பியில் தலையை சாய்த்துக்கொண்டபோது சட்டென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. மார்பில் சொட்டும் நீர்த்துளிகளைத் தன் கண்ணீர் என்று உணர்ந்து துடைத்தார். ஆனாலும் கொட்டிக்கொண்டே இருந்தது. சட்டென்று வேறு எங்கிருந்தோ கேட்பதுபோல தன் கேவல் ஒலியைக் கேட்டார். பஸ்ஸே திரும்பிப்பார்த்தது. அவர் கண்ணீருடன் அவர்களை ஏறிட்டுப்பார்த்தார். ‘என்னய்யா?’ என்றார் கண்டக்டர். இருவர் சிரித்தனர். அவர் அண்ணாந்து நோக்கி விசும்பிக்கொண்டே இருந்தார். வந்திறங்குவது வரை மனசு உருகி கண்ணீராக சொட்டிக்கொண்டிருந்தது.

எங்கே சரக்கு கிடைக்கும் என உணர்வது கண்ணோ காதோ அல்ல. அது ஓர் உள்ளுணர்வு. அது இந்த எட்டுமாதங்களில் மிகவும் பெருகிவிட்டிருந்தது. சொல்லப்போனால் பிற எல்லா உணர்வுகளும் மழுங்கி அதுமட்டும் வளர்ந்திருந்தது. பஸ்ஸ்டாப்புக்கு அருகிலேயே விறகுக் கடையில் விற்றுக்கொண்டிருந்தான். பிளாஸ்டிக் டம்ளரில் அந்தக் கலங்கலான திரவத்தைக் கண்டதும் உடம்பு உலுக்கிக்கொண்டது. ஆனால் வாய் நிறைய எச்சில் நிறைந்தது. ஒரே மடக்கில் குடித்ததும் இன்னொரு உலுக்கல். உடம்புக்குள் அது எரிந்து இறங்குவதை உணந்தபடி சில கணங்கள் நின்றார்.

வேட்டியைத் தூக்கி அண்டர்வேரில் இருந்து பணம் எடுத்துக்கொடுத்தபோது உள்ளே குந்தி அமர்ந்திருந்த மொட்டைத்தலை ஆசாமி ‘அண்ணாச்சிக்கு எந்தூரு?’ என்று சினேகமாகக் கேட்டார்.

‘வடக்க’ என்றார் சுருக்கமாக

‘இங்கிண யாரப்பாக்க வந்திக?’

சொல்லலாமா என்று சிந்தித்துவிட்டு சொன்னார் ‘சேத்துக்காட்டாருண்ணுட்டு பெரியவரு ஒருத்தரு…செயிலிலே எல்லாம் இருந்திருக்காரு’

அவன் பெயர் மாரிமுத்து ‘தனலட்சுமி டீச்சரோட தாத்தன் ஒருத்தன் கெடக்காரு.அவரு செயிலுக்குப் போனவரு. போஸ்டுமேன் அவரு லெட்டர எங்கிட்ட குடுத்தான். நான் கொண்டுபோயிக் குடுத்திருக்கேன். செண்டிரல் ஜெயிலு லெட்டர்’ என்றான்.

’ஆளைக்காட்டுலே‘ என்றார் சுடலை.

‘நமக்கு சோலி கெடக்குல்ல? அண்ணாச்சி, இந்தா இப்டியே நேரா மேகாட்டுப் பனம்பொட்டலுக்குப் போங்க…செவலமேட்டில ஒரு சின்னக் குடிச தெரியும்….பெரியவரு அங்கதான் கெடப்பாரு… ’

‘செரிலே’ என்று சுடலை கிளம்பினார்

‘அண்ணாச்சி துப்புக் கூலி குடுக்கல்ல’ என்றான் அவன் சோழிப்பற்களைக் காட்டி

அவனுக்கு ஒரு இரண்டு ரூபாயைக் கொடுத்தபின் வேட்டியைத் தூக்கிக் கட்டியபடி நடந்தார். ஊருக்குள் இருந்து காலனிக்குள் செல்லும் பாதை. பாதையும் ஊரிலிருந்து வெளியேறும் சாக்கடையும் ஒன்றுதான் . நாலைந்து பன்றிகள் முட்டிக்கொண்டு உறுமின. பிளாஸ்டிக்தாள்களும் மட்கிய துணிகளுமாகக் குப்பை குவிந்துகிடந்தது. காலனியில் இருபது வீடுகள். இருபதும் குட்டிச்சுவர்களுக்குமேல் புல்வேய்ந்த கூரை கொண்டவை. எதற்குமே கதவுகள் இல்லை.சாணி மெழுகிய வாசலை வளைவாகக் குழைத்திருந்தார்கள். குகைவாசல் போல. சாக்குப் படுதாக்கள்தான் கதவு. குடிசைகளில் எவரும் இல்லை. இரண்டு சின்னப்பிள்ளைகள் துணியில்லாமல் மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு கிழம் திண்ணையில் சுருண்டு கிடந்தது. அருகே கிடந்த நாய் எழுந்து ஆர்வமில்லாமல் மூக்கை நீட்டிப்பார்த்தது

காலனிக்கு அப்பால் பொட்டல் ஆரம்பித்தது . முழுக்க உடைமுட்கள். அவற்றில் காற்று கொண்டு வந்து மாட்டிவிட்ட பழைய துணிகளும் மழைக்காகிதங்களும் பல வண்ணங்களில் படபடத்தன. ஒற்றையடிப்பாதை நீண்டு சென்றது.

மேகாடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. மேடு என்று சொன்னான். ஆனால் அது ஊருக்கு மிக வெளியே இருந்தது. அதுவரை நடக்கவேண்டுமா என்று தயக்கமாக இருந்தது. தள்ளாட்டம் ஆரம்பமாகிவிட்டது. சமமில்லாத தலைச்சுமை ஒருபக்கமாக இழுப்பது போல உடம்பு அல்லாடியது. அதுவரை வெயிலில் நடந்தால் கீழே விழுந்தாலும் விழவேண்டியிருக்கும். அதன்பிறகு எழ முடியாது.ஆனால் வெறுவழியில்லை. வந்தாயிற்று.

செம்மண் மேடு. தூரத்தில் தெரிந்ததுபோல செங்குத்தான மேடு இல்லை. பனைவிடலிகள் செறிந்த சரிவுதான். நாலைந்து பனைகளைப் பிடித்துக்கொண்டு ஏறமுடிந்தது. மேலே ஒரு சாளை தெரிந்தது. பனையோலைகளைக்கொண்டு கூரை போடப்பட்டிருந்தது. காவல்மாடம் அளவுக்கே இருந்தது. காவல்மாடமாகக் கட்டப்பட்டதற்குக் கொஞ்சம் மண்சுவர் சேர்த்துக்கொண்டு குடிசையாக ஆக்கியிருக்கிறார்கள்.

குடிசை வாசலில் சென்று நின்றார். குடிசைக்குள் மனிதர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்பகுதியிலேயே மனிதநடமாட்டம் இல்லை என்று தோன்றியது. குடிசைமுற்றத்திலேயே முள்மண்டிக்கிடந்தது. திண்ணை இடிந்து மண்ணாகக்கிடக்க காற்றில் வந்த சருகுகள் சுவரில் மோதிக் குவிந்திருந்தன. ’அய்யா’ என்றார் சுடலை. அவரது குரல் அன்னியமாக அவருக்கே கேட்டது.

இரண்டாம் முறை கூப்பிட்டபோது உள்ளிருந்து ஒரு முனகல் ஒலித்தது. ‘அய்யா இருக்கீங்களா?’ என்றார் சுடலை

‘ஆரு?’ அது சேத்துக்காட்டாரின் குரல்தான்

‘நாந்தான் ,சுடலே’

‘உள்ள வா…’

மெல்ல திண்ணையில் ஏறினார். வெயிலில் வந்ததனால் கண்கள் இருட்டாக இருந்தன. உள்ளே தரையில் விரிக்கப்பட்ட பாயில் இரு கால்கள்தான் தெரிந்தன. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார்

‘வாலே’

சுடலை மெல்ல அமர்ந்தார். கண்கள் பழகியபோது கீழே கிடந்தவரை நன்றாகப் பார்க்க முடிந்தது. படபடப்பாக வந்தது.

‘என்னல பாக்கிறே? மனுசன் இப்டி காஞ்சபீயா கெடக்கானேன்னு நெனைக்கிறியா? எல்லாம் மக்கி மண்ணா போற ஒடம்புதானே போவட்டும்’ தொண்டையில் குரல்வளை ஏறி இறங்கிய போது சாரைச்செதில் படர்ந்த கரியசருமம் அசைந்தது.

சுடலை அவரது கைகளைத் தொட்டார். குளுகுளுவென அழுகிய மீன்போல நெளிந்தது சதை. சில்லென்றிருந்தது.

‘தனியா கெடக்கீங்க?’

‘எப்பவும் தனிமதானே? இங்க வசதியா காத்தோட்டமா இருக்கு…’

‘பேத்தி கூட இருக்கதா சொன்னாக’

‘அவதான் பாத்துக்கிடுதா….அவ ஊருக்குள்ள இருக்கா. சோறு குடுத்தனுப்புவா…வேற என்ன வேணும்?’

‘இருந்தாலும்…’

‘லே இது நான் பாத்துப்பாதுகாத்த நெலம் பாத்துக்க….கமல வச்சு தண்ணி எறச்சு நான் வெள்ளாம பண்ணின மண்ணு. இப்ப யாருக்கும் வெள்ளாமைக்கு நேரமும் இல்ல மனசும் இல்ல. இருந்தாலும் இது நம்ம மண்ணுல்ல? என் சடலம் இங்கதானே விளணும்?’

‘அங்க வீட்டிலே இருந்திருக்கலாமே வயசான காலத்திலே’

‘அவுகள்லாம் இப்ப பெரியாளாயாச்சுலே…செயிலுக்குப்போன கொள்ளுத்தாத்தாவப்பாத்தா பிள்ளையளுக்கு பயமா இருக்குண்ணு சொல்லுறா. மூத்தகுட்டிக்குத் தரம்பாக்கிறாக. பேச்சுவாறப்ப இவன் யாரு என்னன்னு கேள்வி வரத்தானே செய்யும்? இப்ப அவுக இருக்கிற இருப்புக்கு ரெட்டைக்கொலை செஞ்சு செயிலுக்குப்போன கதையச் சொல்ல முடியுமா? சரிதான்னு நானே இந்தப்பக்கமா நவுந்துட்டேன்…நீ ஒண்ணும் கவலப்படாதே…எனக்கு ஒரு கொறையுமில்ல…’

‘உடம்பு எப்டி இருக்கு?’

‘நடுவு தளந்துபோச்சு. எந்திரிக்கமுடியாது….சரி இனிமே என்ன? மிஞ்சிப்போனா இந்தக் கார்த்திகை. அதான் என் கணக்கு பாத்துக்க….எல்லாம் பாத்தாச்சுலே . இருந்து இருந்து சலிச்சுப்போச்சு. போனாப்போரும்னு ஆயாச்சு. எளவு, உத்தரவும் வரமாட்டேங்குது….சரி, நாம நினைச்சா வருமா? அவன் நினைக்கணும்….’

சுடலை பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தார்

‘என்ன பாக்கே?’

‘மூத்தவன் வாறதுண்டா?’

‘ரெண்டுபேரும் வருவானுக…ஆனா அவனுகளுக்கும் வயசாச்சு. ஆயிரம் நோயிங்க அவனுகளுக்கும் இருக்கு….நாம இப்டி இளுத்துகிட்டு கிடந்தா அவனுக என்ன செய்வானுக?…செரி அது போவட்டு…நீ எப்டி இருக்கே? சரியா கண்ணு தெரியல்ல பாத்துக்க….’

அவர் சுடலையின் கையைப் பிடித்து உருட்டிப்பார்த்தார். ‘என்னல கையெல்லாம் ஒழவுகம்பு கணக்கா இருக்கு?’’ மூச்சு இழுத்து ‘சாராயம் மணக்குது….அப்ப அதுதான் என்னல?’

‘வாறப்ப கொஞ்சம் குடிச்சேன்’

‘கொஞ்சமில்ல…உனக்க கை நடுங்குது…நனைஞ்ச துண்ட முறுக்கினமாதிரி இருக்கு கை…லே நீ இப்ப இத்துப்போன குடிகாரன்…இல்லேண்ணு சொல்லு’

சுடலை உதடுகளை இறுகக் கடித்தார். நெஞ்சுக்குள் அழுத்தம் ஏறி ஏறி வந்தது.

‘வேண்டாம்லே…நீ பிள்ள குட்டிக்காரன்…ரெண்டு பயக இருக்கானுக ராமலட்சுமணன் மாதிரி..’

சட்டென்று அலறியபடி கிழவர் காலில் விழுந்துவிட்டார் சுடலை. மெலிந்த கால்களை இறுகப்பிடித்து மண்டையை அதில் மோதி மோதிக் கதறி அழுதார். அந்தக்கணமே செத்துவிடவேண்டும் என நினைப்பவரைப்போல. பெரியவரின் கை அவர் தலைமேல் படிந்து முடியைப் பற்றிக்கொண்டு நடுங்கிக்கொண்டிருந்தது

மெல்ல ஓய்ந்து தேம்பிக்கொண்டிருந்தபோது கிழவர் ‘போனது யாரு?’ என்றார்

‘மூத்தவன்யா….கருமுத்துஅய்யனாரு மாதிரி கண்ணு நெறைஞ்சு நின்னானே …என் செல்லம் என் ராசா…என் எஜமானே, நான் என்ன செய்வேன்? இனி என்னத்துக்கு நான் உசிரோட இருக்கணும்? நான் இனி என்ன மசுத்துக்கு மனுஷன்னு நடமாடணும்?’ மீண்டும் தலையிலறைந்துகொண்டு அழ ஆரம்பித்தார்

‘என்ன நடந்தது?’

‘அப்பவும் இப்பவும் ஒரே கததான் அய்யா… ஈனச்சாதி நெலம்வச்சிருந்தா விடமாட்டானுங்க…’

கிழவர் ‘முருகா…’ என்றார்

‘நெலத்தக் கேட்டானுக. குடுக்க மாட்டேன்னு சொன்னேன். சீண்டிட்டே இருந்தானுக. பய கொஞ்சம் சூடுள்ளவன். துணிஞ்சு நின்னான்….கைய வச்சிட்டானுக…அய்யா என் சக்கரவர்த்திய பழங்கந்தல மாதிரி அடிச்சு சுருட்டி முள்ளுக்காட்டில செருகி வச்சிருந்தானுகளே…அதக் கண்ணால பாத்துட்டு நானும் சோறு திண்ணுட்டு வாழுறேனே….அந்தக் கண்ண நோண்டி எறியாம இருக்கேனே’

‘ஆளத்தெரியுமாலே?’

‘தெரியும்….’

கிழவர் ‘ம்ம்?’ என்றார். அந்தப் பழைய சேத்துக்காட்டார் குரல் அது. குகைப்புலியின் ஒலி போல. சுடலைக்குப் புல்லரித்தது.

‘ம்ம்?’ என்றார் கிழவர் மீண்டும்

‘என் கையிலே அருவா நிக்கமாட்டேங்குது சாமி…நூறுவாட்டி ஆயிரம் வாட்டி மனசுக்குள்ள அவன வெட்டி சாய்ச்சாச்சு…முடியல்ல. சாராயத்த ஊத்தி தீய அணைச்சுகிட்டு படுக்கத்தான்யா முடியுது….என்னால முடியல்ல…என் காலு மண்ணில தரிக்கல….நான் அப்பவே செத்தாச்சு…இந்தச்சடலத்த வச்சுகிட்டு நான் அவன் முன்னால போயி நிக்கமுடியாது….என்னால முடியல்ல…என்னால முடியல்லய்யா’

கிழவர் பேசாமல் கண்கள் மின்ன படுத்துக்கிடந்தார்.

‘உங்களப்பாத்தா ஒரு தைரியம் வருமான்னு பாக்கவந்தேன்யா….வீட்டுப்பாத்திரத்த எடுத்து வித்து அந்தப்பணத்திலே வெசாரிச்சு வந்தேன்…ஆனா நீங்க இந்தக் கெடை கெடக்கிறீக….என்னத்துக்கு இதெல்லாம்னு தோணுது. எதுக்கு வெட்டும் குத்தும்? அந்தப் பாழாப்போன நெலத்துக்கா? அந்தப் பொட்டக்காட்டுக்கா நான் என் செல்லத்த பலிகுடுத்தேன்? வேண்டாம்….அந்த மண்ணு நாசமா–’

பளாரென்று கன்னத்தில் அறை விழுந்தது. காதுஅடைக்க விழுந்த அறையில் சுடலை பொறி கலங்கி சரிந்து பொத்திப்பிடித்துக்கொண்டார். ஊன்றிய கை ஆடியது. அவர் நிமிர்வதற்குள் கிழவர் தன் ஒரு கையை ஊன்றிக் கடைசி உந்தலில் எழுந்து பாதி அமர்ந்துவிட்டார். வற்றிச்சுருங்கிய முகம் உணர்ச்சிமிகுதியால் கோணலாகியது. தாடை ஆட கழுத்துச்சதைகள் நெளிந்து நெளிந்து இழுபட்டன.

‘ச்சீ…பிச்சக்காரப்பயலே….நெலத்தையா பழிக்குறே? லே நெலம் உனக்கும் எனக்கும் தாயாக்கும்லே…நீயும் உன் சந்ததிகளும் இந்த மண்ணில மனுஷனா வாழணுமானா கையிலே நெலமிருக்கணும்…நீ ஆம்புளையானா போயி அவன வெட்டுல.. வெட்டிட்டு நீயும் சாவுலே… உன்னால முடியல்லேண்ணா உனக்க மகன அனுப்பு…நீயும் உன் வம்சமும் வெட்டிச் செத்தாலும் சரி, ஒரு துண்டு நெலத்த விடாதீங்க ….நம்ம சந்ததிகளுக்கு நாம செய்ற கடமைலே…’

ஊன்றிய கை வெடவெடவென ஆட கிழவர் அப்படியே மல்லாந்து விழுந்தார். மறுகையால் தரையைப் படார் படார் என ஓங்கி அறைந்தார். ‘மனுசனா வாழணும்ல…நாயா பண்ணியா வாழாதே. மனுஷனா வாழு…மனுஷனா வாழுலே…லே மனுஷனா வாழுலே’

இருமல்களும் மூச்சுத்திணறல்களுமாக தன் முன் கிடந்து நெளியும் அந்த வற்றிய உடலை சுடலை விழித்துப்பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

Mar 1, 2013 முதற்பிரசுரம்

முந்தைய கட்டுரைகாடு இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-27