சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு

சூரியநெல்லி வழக்கு புதையுண்ட டிராக்குலா பிறகு உயிர்த்தெழுவதுபோல எழுந்து வந்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலைநடை சென்றபோது மலையாள மனோரமாவில் செய்தி பார்த்தேன். டீக்கடையில் இருந்த தொழிலாளர் ‘பி.ஜெ.குரியனுக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது’ என்றார்

இன்னொருவர் ‘என்ன கெட்டகாலம்? ஜனங்கள் ஓட்டுப் போட்டு அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பிரச்சினைக்குப்பிறகும் அவரால் ஜெயிக்கமுடிகிறது என்றால் இது என்ன பெரியவிஷயம்? இது ஒரு வாரத்தில் மறைந்துபோகும்…’ என்றார்

‘அப்படிப் போகாது…டெல்லி சம்பவத்துக்குப்பிறகு இதெல்லாம் முன்னைப்போல சாதாரணமாக போய்விடாது’ என்றார் முதல் தொழிலாளர்

‘டெல்லி சம்பவத்துக்குப் பிறகு நம்முடைய நீதியுணர்ச்சி தலைகீழாக மாறிவிட்டதா என்ன? ‘ என்றார் இரண்டாம் தொழிலாளர். ‘எட்டு வருடம் கேரள அரசாங்கத்தின் அப்பீல் உச்சநீதிமன்றத்தில் எப்படி தூங்கிக்கிடந்தது?’

கேரளத்தில் இடுக்கி மாவடத்தில் சூரியநெல்லி என்ற கிராமத்தைச்சேர்ந்த 16 வயதான சிறுமி 1996 ஜனவரி 16 ஆம் தேதி ராஜு என்னும் பேருந்து நடத்துநனரால் கடத்திக் கற்பழிக்கப்பட்டார். அவர் அந்தப்பெண்ணை உஷாதேவி என்பவருக்கு விற்றார். உஷாதேவியும் ஒரு தர்மராஜன் என்னும் வழக்கறிஞரும் சேர்ந்து அப்பெண்ணைக் கிட்டத்தட்ட நாற்பதுநாள் முப்பது பேருக்கு பாலுறவுக்கு விட்டனர். பின்னர் கடுமையாக மிரட்டப்பட்டு அந்தப்பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

அவருடைய ஊரிலிருந்த சமூகசேவகர்களின் உதவியோடு அப்பெண் தனக்கு நிகழ்ந்ததை வெளியே கொண்டுவந்தார். போலீஸிடமும் ஊடகங்களிடமும் பலர் பல இடங்களிலாகத் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகச் சொன்னார். அதில் ஒருவர் பி.ஜெ.குரியன். கேரள காங்கிரஸைச்சேர்ந்த அரசியல்வாதி. இப்போது காங்கிரஸ் அரசின் ராஜ்யசபா துணைத்தலைவராக ஆக இருக்கிறார்

இந்த வழக்கு பலபடிகளாக விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் பல இடங்களில் மீண்டும் பி.ஜெ.குரியனின் பெயரைச்சுட்டிக்காட்டியபின்னரும் அவர்மீது போலீஸ் வழக்குப் பதியவில்லை. பெரும்போராட்டத்திற்குப்பின் வழக்கு பதியப்பட்டாலும் சில மேலோட்டமான விசாரணைக்குப்பின் அவர் விடுதலைசெய்யப்பட்டார். சிறப்புநீதிமன்றத்தில் 36 பேர் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் உயர்நீதிமன்றம் அவர்களில் ஒருவரை மட்டும் தண்டித்து மற்றவர்களை விட்டுவிட்டது.

உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டுக்குச் சென்ற வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று சொல்லி வழக்கை மீண்டும் விசாரிக்க தீர்ப்பளித்தனர். மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம் இன்னொரு குற்றவாளிக்கு மட்டும் ஒப்புக்கு தண்டனை அளித்து வழக்கை முடித்தது. அதன்மேல்முறையீடு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றாலும் எட்டாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது

இப்போது டெல்லி பிரச்சினைக்குப்பின் பெண்ணின் அன்னை உச்சநீதிமன்றத்துக்கு அளித்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள் பி.ஜெ.குரியன் ராஜினாமாசெய்யவேண்டும் என்று சொல்லித் தெருவில் போராடிவருகிறார்கள்.

டெல்லி பாலியல் வன்முறைக்குப்பின்னர் பெண்கள் மீதான அத்துமீறல் பற்றிப் பல தளங்களில் விவாதங்கள் நிகழ்கின்றன. சட்டென்று நம் தேசிய மனசாட்சி சீண்டப்பட்டது. அதற்கு அந்நிகழ்ச்சியை உக்கிரமாக மக்கள் முன்வைத்த காட்சியூடகங்கள் முக்கியமான காரணம். நாடெங்கும் நடந்த ,நடக்கும் பாலியல்வன்முறைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்தளித்த அச்சு ஊடகங்கள் அந்த உணச்சிவேகத்தைப் பெருக்கி நிலைநாட்டின

அதைத்தொடர்ந்து இன்று இந்திய அளவில் பாலியல்வன்முறைகளைப்பற்றி ஒரு விழிப்புணர்ச்சி உருவாகியிருக்கிறது. இது வெறுமே ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பரபரப்பு என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் உலகமெங்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இப்படி சில அன்றாட நிகழ்வுகளை முன்வைத்துத்தான் ஒட்டுமொத்தமான ஒரு சமூக எழுச்சி இதுவரை நிகழ்ந்துள்ளது.

இந்த எழுச்சியின் விளைவாக நம் காதில் விழுபவை பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்கள். ‘அப்டியே நிக்க வச்சு சுட்டுத்தள்ளணும்சார்’ என்று என் பக்கத்துவீட்டுக் குமரேசன் சொன்னார்.

‘விசாரணை வேண்டாம்கிறீங்களா?’ என்றேன்.

‘என்னத்த விசாரணை? நாசமாபோறவனுகளுக்கு என்ன விசாரணைங்கிறேன்?’ என்று கொதித்தார்.

இதில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களுக்கு ஆதாரங்களைக் கண்டடைகிறார்கள். ‘எல்லாம் இந்த நாகரீகம்போற போக்குசார். குடி,கூத்து,கும்மாளம்… இண்ணைக்குள்ள பசங்க போறபோக்கே சரியில்லை’ என்றார் ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ஹென்றிசார்.

’ஏன் உங்க சின்ன வயசிலே பொம்புள்ளைப்புள்ளைங்க சுதந்திரமா நடமாடுவாங்களோ?’ என்றேன் அறியாதவனாக.

‘எங்க? அப்பல்லாம் வீட்டுக்கு வெளிய ஒரு வயசுப்பொண்ண பாக்கமுடியாதே? சவரியார் கோயில் விளாவுக்கே வண்டிகட்டி சொந்தம் சாதிமக்களோடதானே வருவாளுக’

‘பின்ன? இப்பமும் அதே மாதிரி பெண்கள் வீட்டவிட்டு வெளியே போகாம இருக்கணும்னு சொல்றீங்களா?’ அவர் யோசிப்பதற்குள் நான் சொல்ல ஆரம்பித்தேன். ஐம்பதாண்டுகளுக்கு முன்புவரை சொந்தக்காரர்கள் புடைசூழக்கூட ஒரு பெண் வில்லுக்குறி சாலையில் சென்றுவிட முடியாது. இந்தியவரலாற்றில் மிக அதிகமாகப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட காலம்.

‘நம்ம நாட்டுப்புறப் பெண்தெய்வங்களிலே முக்காவாசி கற்பழிச்சுக் கொல்லப்பட்ட குமரிங்கதான்…’ என்றேன். ஆ.சிவசுப்ரமனியன் ஆய்வுகளைச் சொன்னேன்.

ஹென்றிசார் ‘உள்ளதுதான்…’ என்று இழுத்தார்.

‘எல்லாம் இவளுக டிரெஸ் பண்ணிக்கிடுததைக்கண்டுதான் சார்’ என்றார் ராமச்சந்திரன்.

‘அப்ப திருட்டு எல்லாம் வீட்டையும் டிரஸ்ஸையும் கண்டுதான் நடக்குதுன்னு சொல்லலாமா? அப்ப இனிமே குடிசைதான் கட்டிக்கணும். கந்தலைத்தான் உடுக்கணும், அப்ப திருடனுக்கு மூடு வராது…இல்ல?’

‘அப்டி இல்ல..’

சென்ற நூற்றாண்டில்தான் பெண்கள் படிக்க வந்தார்கள். ’அரசிக்கும் தாசிக்கும்தான் படிப்பு தேவை. எங்கள் பெண் அரசி இல்லை. அப்படியென்றால் தாசியா? ’ என்று எதிர்த்தார்கள் பழமைவாதிகள். அதன்பின் பெண்கள் வேலைக்குப்போக ஆரம்பித்தார்கள். ‘வேலைக்குப்போகிற பெண் வேசி’ என்றார்கள்.

எல்லாத் தடைகளையும் மீறி இன்று பெண் ஆணுக்கு சமமான இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறாள். அந்த மாற்றத்தை வைத்துப்பார்க்கையில் இப்போது நடக்கும் பாலியல் வன்முறைகள் ஒன்றும் பெரிய அளவுக்கு இல்லை. ஆமாம், வரலாற்றை வைத்துப்பார்ப்போம். வீட்டுக்குள் அடைபட்டு ஆணுக்கு அடிமையாகப் பெண்கள் வாழ்ந்த சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த பாலியல்கொடுமைகளில் பத்துசதவீதம்கூட இன்று நடக்கவில்லை.

காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கும்போது சுதந்திரம் என்றால் என்ன என்று வரையறை செய்தார். ‘நள்ளிரவில் பெண் தனியாக நடமாடும் சுதந்திரம்’ .என்ன இது அபத்தமாகச் சொல்கிறார் என்று பழைமைவாதிகளுக்குத் தோன்றலாம். நள்ளிரவில் ஏன் பெண் தனியாக நடமாடவேண்டும்.?

ஆனால் தாத்தாவின் சொல் குறள்போல. குறுகத்தறித்த பொருள் கொண்டது அது. நடமாட்ட உரிமைதான் ஆதாரம். அதிலிருந்துதான் கல்வி கற்கும் உரிமை, சுயமாகப் பொருளீட்டும் உரிமை, தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உரிமை எல்லாம் வருகிறது. அதைத் தன் குடிமக்களுக்கு அளிப்பதே அரசின் முதற்கடமை.

நடமாட்ட உரிமை மறுக்கப்பட்ட பெண்களுக்கு அதை அளிப்பதையே சுதந்திர இந்தியாவின் கடமை என்று காந்தி சொன்னார். அதை அளிப்பது எப்படி என்பதுதான் பேச்சே ஒழிய பெண்ணுக்கு உரிமை வேண்டாமா, பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல.

அந்த உரிமைக்குத்தடையாக இருப்பது என்ன? சட்டங்களா? இல்லை. இப்போதிருக்கும் சட்டங்கள் போதுமானவை. இச்சட்டங்கள் ஏன் செயலற்றிருக்கின்றன என்பதுதான் கேள்வி.

சட்டங்கள் செயலற்றுக்கிடப்பது ஏன்? பிரச்சினை நம் நீதிமன்றங்களில் உள்ளது. கல்பனாசுமதி என்ற பள்ளி ஆசிரியை 1987 இல் காவலர்களால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவரது வழக்கைக் காவல்துறை பதிவுசெய்யவே மறுத்துவிட்டது. அரசூழியர் சங்கங்களின் தொடர்போராட்டத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டது

அந்த வழக்கு விசாரணை முடிந்து இறுதியாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது 17 வருடங்கள் கழித்து. அத்தனைவருடம் சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி கல்பனா சுமதி நீதிக்காகப் போராடினார். உடனடியாக ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகளும் அவர்களுக்குத் துணையாக இருந்த காவல்துறையும் கொடுத்த மிரட்டல்களுக்கு அஞ்சாமலிருந்தார்.

அத்தனை தூரம் போராடும் மனபலமும் பணபலமும் சொந்தங்களின் ஆதரவும் பிற பெண்களுக்கு இருக்குமா என்ன? பாலியல் வல்லுறவுக்காளான பெண்ணின் வாழ்க்கை சிதைந்துவிடுகிறது. சமூகப் புறக்கணிப்பு நிகழ்கிறது. எங்காவது தொலைதூரமாக அவளை மணம்செய்தோ செய்யாமலோ அனுப்பிவைப்பதுதான் நம்மூரில் இருக்கும் ஒரேவழி. அந்தப்பெண் வருடக்கணக்காக நீதிமன்றம் வந்து, அத்தனை அவமதிப்புகளையும் சந்தித்து வழக்காடுவது நடப்பதில்லை. வழக்கு தேங்கிக் கிடக்கிறது, பின் கைவிடப்படுகிறது

சூரியநெல்லி வழக்கையே எடுத்துக்கொள்வோம். 1996இல் நடந்த சம்பவத்துக்கு பதினாறு வருடம் கழித்தும் நீதி கிடைக்கவில்லை. பிரச்சினை எங்கே இருக்கிறது? உயர்நீதிமன்றத்தில் என்பது அப்பட்டமாக தெரிகிறது. குற்றவாளிகளை தண்டிக்க உயர்நீதிமன்றம் விரும்பவில்லை. உச்சநீதிமன்றமே கண்டித்தாலும் முறையாக விசாரணைசெய்ய அதற்கு மனமில்லை. காரணம் அது மாநில அரசியல்வாதிகளின் நேரடி செல்வாக்கில் இருக்கிறது. அத்தனைகுற்றவாளிகளும் தப்பிவிட்டார்கள்.

[அன்று இவ்வழக்கில் அத்தனை குற்றவாளிகளையும் விடுவித்த நீதிபதி ஆர்.பசந்த் ஒரு தனிப்பட்ட உரையாடலில் சூரியநெல்லி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு விபச்சாரி என தனக்கு தோன்றியது என்று சொல்லியது பதிவுசெய்யப்பட்டு வெளியானது. விபச்சாரி என்றால்கூட குழந்தையை அதில் ஈடுபடுத்துவது குற்றமல்லவா என்ற வினாவை அவர் எதிர்கொள்ளவில்லை. மேலும் அவருக்கு ஏன் அப்படி தோன்றியது என்றும் விளக்கவில்லை. பாலியல்வழக்கில் பாதிக்கபப்ட்ட பெண்ணையே குற்றவாளியாக காணும் அப்பட்டமான ஆணாதிக்க நோக்கு நீதிபதிகளில் நிறைந்திருக்கிறது]

இத்தகைய ஒரு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மிக முக்கியமானது. கண்ணால்பார்த்த சாட்சிகள் இருந்தால்தான் பாலியல் வல்லுறவு வழக்கை நம்புவோம் என்றால் எவரையுமே தண்டிக்கமுடியாது. பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதற்காகக் கடுமை காட்டுவதற்கு நேர் மாறாக மைனர் பெண் சொல்வதை நம்பமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தது நீதிமன்றம்

தண்டிக்கப்பட்டு விடுதலையானவர்களில் சிலர் இப்போது வெளிப்படையாகவே ஊடகங்கள் முன் சொல்லிவிட்டார்கள், தாங்கள் குற்றம் செய்தோம் என்று. குறிப்பாக முதல்குற்றவாளியான தர்மராஜன் ஊடகங்களில் வந்து பி.ஜெ.குரியனுக்காகவே அதைச்செய்தேன் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் சட்டமும் அரசும் மசியவில்லை.

பிஜெகுரியன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்றே அவை சொல்லிவருகின்றன. ஆனால் எப்படி விடுவிக்கப்பட்டார்? அவர்மேல் முறையான போலிஸ் விசாரணையே நிகழவில்லை. அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. அவரை அடையாளம்காட்டிய சூரியநெல்லிப்பெண்ணின் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை. அவர் அப்பெண்முன் அடையாளம் காட்டப்படுவதற்காக கொண்டுவந்து நிறுத்தப்படவுமில்லை.விசாரணை அதிகாரி சிபி மாத்யூஸ் என்பவர் குரியன் பெயரை சொல்லவேகூடாது என பிற குற்றவாளிகளையும் சூரியநெல்லிப்பெண்ணையும்கூட அடித்தார் என்று இன்று அத்தனைபேரும் சொல்கிறார்கள்.

குரியன் தண்டிக்கப்படுவாரா? கட்சி, அரசு, காவல்துறை, நீதிமன்றம் அனைத்தும் சேர்ந்து ஒருவரை பாதுகாத்தால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை. குரியனுக்கு பாதுகாப்பாக உள்ளது அவர் சார்ந்த கிறித்தவ திருச்சபை. அதன் மனசாட்சி கண்விழித்து அவரை அது கைவிடாதவரை இந்திய அரசோ சட்டமோ அவரை தொடவெ முடியாது.

ராஜஸ்தானைச்சேர்ந்த பன்வாரிதேவி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்து சமூகசேவகி உள்ளூர் உயர்சாதி இளைஞர்களால் 1992ல் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்ட வழக்கில் கீழ்நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும்கூட ‘படித்த இளைஞர்கள் அழகில்லாத பெண்ணைக் கற்பழிக்கமாட்டார்கள்’ என்ற அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்-

டெல்லி சம்பவத்தை ஒட்டிப் புள்ளிவிவரங்கள் வெளியாயின. நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகள் நூற்றில் ஒன்று. அவற்றில் நான்குசதவீதம் குற்றவாளிகள்கூட தண்டிக்கப்படுவதில்லை. அதாவது குற்றங்களில் ஆயிரத்தில் நான்குபேர்கூட தண்டிக்கப்படுவதில்லை.

அப்படியானால் உண்மையான கற்பழிப்புக்குற்றவாளிகள் யார்? ஆணாதிக்க சிந்தனைகளை தயங்காமல் ஊடகம் முன்வைக்கும் மதவாதிகளா? அரசியல்வாதிகளா? நீதிபதிகளா? கண்முன் ஒரு பெண் பாலியல்வல்லுறவுக்காளாகி வந்து நிற்பதைக் கண்டும் வரைமுறையில்லாமல் வருடக்கணக்காக வாய்தா வழங்கிக்கொண்டே இருக்கக்கூடிய, சில்லறைக் காரணங்களுக்காகக் குற்றவாளிகளை விடுதலைசெய்யத்துணியக்கூடிய நம் நீதிபதிகளை சாமானிய குடிமக்களாகிய நாம் எப்படி புரிந்துகொள்வது?

குற்றாலம் சென்றிருக்கிறீர்களா? சீசனில் குளிக்கவரும் பெண்களிடம் நம் படித்த .நடுத்தரவர்க்க ஆண்கள் குடித்துவிட்டு செய்யும் தொல்லைகளைப் பாருங்கள். அவர்கள்தானே இங்கே வக்கீல்கள், டாக்டர்கள், நீதிபதிகள்.

பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகபட்சம் ஒரு ஆண்டுக்குள் கடைசி மேல்முறையீடு வரை முடிந்து தண்டனை வழங்கப்படட்டும். பிரச்சினை முக்கால்வாசி தீர்ந்துவிடும். அதுவல்லாமல் வெறுமே சட்டங்களைக் கடுமையாக ஆக்கினால் அதை வைத்துக்கொண்டு போலீஸும் பிறரும் சாமானியர்களை மிரட்டுவதுதான் நடக்கும். யாரும் யாரையும் குற்றம்சாட்டலாம். ஆனால் நிரூபிக்கப்படாத குற்றத்துக்காக தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது பெரும் அநீதி. அந்தப் பேச்சே அபத்தம்.

பாலியல்குற்றம் என்பது ஒரு குற்றம் மட்டுமல்ல. பெண்களின் அடிப்படை நடமாட்ட உரிமைக்கெதிரான ஒடுக்குமுறையும்கூட. ஆகவே சட்டம் உண்மையான வீரியத்துடன் அதைத் தடுத்தாகவேண்டும். அதைச்செய்ய சட்டத்துறை மக்களால் கண்காணிக்கப்படவேண்டும். நீதிபதிகளின் மனசாட்சி அப்போதுதான் கொஞ்சமாவது செயல்படும்.

சூரியநெல்லி வழக்கு குமரேசனைத் தலைகீழாக மாற்றிவிட்டது. அவர் சொன்னார். ‘சும்மா போட்டு கலாட்டா பண்றாங்க சார். எல்லாம் பாலிடிக்ஸ்….குரியனை கோர்ட்டே விட்டாச்சு’ அவர் காங்கிரஸ்காரர். ‘அந்தக்குட்டி என்ன பண்ணிச்சோ? ஒரு நல்ல பொண்ணு இவ்ளவுநாள் இத வச்சு பாலிடிக்ஸ் பண்ணாது…என்னசார் சொல்றீங்க?’ .

அவர்களைப்போன்றவர்கள்தான் தினமும் கற்பழிக்கிறார்கள். [மறுபிரசுரம் 2013 ]

முந்தைய கட்டுரைஞாநி ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38