வஹாபியம்- கடிதம்

அன்பின் ஜெயமோகன்,

தங்கள் தளத்தில் மனுஷ்ய புத்திரன் குறித்து இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் எழுதிய கட்டுரைக்குக் கண்டனத்தையும் அவர் சார்ந்திருக்கும் கொள்கை குறித்த விவாதங்களை இன்னொரு கடிதத்தின் வாயிலாகவும் பகிர்ந்திருந்தீர்கள். ஆனால் அந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தையும் தாங்கள் காணவில்லையோ அல்லது கண்டு கொள்ள விரும்பவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

மாற்றுக் கருத்துள்ள பல்வேறு குழுக்களை அழகிய முறையில் விவாதங்களில் மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறது ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத். இஸ்லாத்தின் உள்ளே மாற்றுக்கருத்துள்ள பல்வேறு குழுக்களையும், பல்வேறு கிறித்தவ நம்பிக்கையுடைய குழுக்களையும், நாத்திகவாதிகளையும் கூட இத்தகைய அறிவுபூர்வமான விவாத மேடைகளில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது அவருடைய இயக்கம். கடந்த வாரம் கூட இஸ்லாத்தில் மாற்றுக் கருத்துள்ள வேறுபட்ட இஸ்லாமியக் குழு ஒன்றுடன் திருச்சியில் விவாதம் மூன்று நாட்கள் நடந்தது. மேலும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் விவாதிக்க வாருங்கள் என்றுதான் அழைப்பு கொடுத்திருக்கிறார். ஜைனுல் ஆபிதீன் அவர்களோடு விவாதம் செய்த மாற்று நம்பிக்கையுள்ள அனைவரும் எத்தகைய இடர்பாடுகளும் இல்லாமல் தான் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்சனை குறித்து பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அது குறித்து உங்களின் கருத்து என்ன?

கருத்துச் சுதந்திரம் என்றாலும் அல்லது வேறு எந்த வகைச் சுதந்திரம் என்றாலும் அற்கு எல்லையும் கட்டுப்பாடும் உண்டு. ஒருவரது கருத்தினால் உடல் பொருளுக்கோ அல்லது மானம் மரியாதைக்கோ பங்கம் ஏற்பட்டால், அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திரம் அல்ல. இதுதான் நல்லது, இதுதான் கெட்டது என்று கூறி அதற்கான வாதங்களை எடுத்துவைத்தால், அது கருத்து சுதந்திரம் எனலாம். எதிரியின் கருத்தில் மாறுபட்ட நிலை நமக்கு இருந்தால், அதைக் காரண காரியத்துடன் விளக்கி, நியாயப்படுத்தாமல், அவன் காட்டுமிராண்டி, பிற்போக்காளன், மதவெறியில் சொல்கிறான் என்றெல்லாம் எழுதுவதும் பேசுவதும் ஒருக்காலும் கருத்துச் சுதந்திரம் ஆகாது. அது எழுத்து வன்முறையாகும்.

தூக்குத் தண்டனை சரியா தவறா என்பதில் சரி என்பவர்களும் தவறு என்பவர்களும் தத்தமது கருத்து சரியானது என்று ஆதாரங்கள் அடிப்படையில் வாதங்களை முன் வைக்கலாம். எதிர்க் கருத்து உடையவர்களின் வாதங்களில் உள்ள பலவீனங்களையும் அதில் உள்ள அறியாமையையும் சுட்டிக்காட்டலாம்.

தூக்குத் தண்டனையைக் காட்டு மிராண்டிகள்தான் உண்டாக்கினார்கள் என்பதும், மதத்தின் பெயரால் இனவாதக்குழுக்கள் உருவாக்கிக் கொண்டனர் என்றும் எழுதுவதில் எந்தக் கருத்தும் இல்லை. பிறரைத் தக்க காரணமின்றி இழிவுபடுத்துவதுதான் இதில் உள்ளது. ஆனால் நமது நாட்டில் உள்ள எல்லா ஊடகங்களும் இதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்று வாதிடுகின்றன.

மனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட மூளையைப் பயன்படுத்தாத ஒருவர் ரிசானா என்பவர் விஷயத்தில் இப்படித்தான் எழுதினார். அவர் தனது வாதத்திற்கு ஏற்கத்தக்க எந்த ஒரு ஆதாரத்தையும் வைக்காமல், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும், சவூதி அரசையும், இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்களையும் இழிவுபடுத்தி எழுதினார். அதைத்தான் எல்லா ஊடகங்களும் கருத்துச் சுதந்திரம் என்றன.

இதுதான் கருத்துச் சுதந்திரம் என்பது இவர்களின் நிலை என்றால், நாம் பதிலடியாக மனுஷ்ய புத்திரனுக்கு உறைக்கும் வகையில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினோம். பதிலடியாகத்தான் பயன்படுத்தினோம். இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்கிறார்கள். அதாவது எழுத்தாளர் என்று அறியப்பட்டவர் எதைச் சொன்னாலும் கருத்துச் சுதந்திரமாம்; அவர் எழுதியது தவறு என்று சொல்வது கருத்துச் சுதந்திரம் இல்லையாம்.

ஒரு மனிதன் புண்படக்கூடாது என்பதால் நமது விமர்சனத்தை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூச்சல் போடுபவர்கள் 150 கோடி முஸ்லிம்கள் தமது தாய், தந்தையரைவிட மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தைக் காட்டுமிராண்டி என்று சித்தரித்தால் நாங்கள் புண்படுவோம், அது எங்களைப் பாதிக்கும் என்பதை இவர்கள் உணருவதில்லை.

கேடு கெட்ட முறையில் எழுதி வம்பை ஆரம்பித்து வைத்த நபர் புண்படக்கூடாது, ஆனால் 150 கோடி மக்களை யார் புண்படுத்தினாலும் வாயில் பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இவர்களின் அகராதியில் கருத்துச் சுதந்திரமாம்.

வம்புக்கு வந்தவர்களை விட்டுவிட்டு பதிலடி கொடுப்பவர்களைப் பாய்ந்து பிராண்டுகிறார்கள்.

சிறுபான்மையினர் பற்றி யாரும் எதையும் சொல்லலாம் என்பது கருத்து சுதந்திரம். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. இது எங்கே போய் முடியுமோ என்று நமக்கு அச்சமாக உள்ளது.

முழு கட்டுரையும் அவருடைய வலைத்தளத்தில் இருக்கிறது.

இது குறித்த கருத்துக்களைத் தங்களிடம் எதிர்பார்க்கிறேன்

ஷேக் தாவூத்

அன்புள்ள ஷேக் தாவூத்,

உங்கள் கடிதத்தைப்போல எனக்குக் கிட்டத்தட்ட இருபது கடிதங்கள் வந்துள்ளன. உங்கள் கடிதத்தைப் பிரதிநிதித்துவம் கருதி வெளியிடுகிறேன். ஜெயலலிதா பற்றிய பகுதியை நீக்கியிருக்கிறேன்.

திண்ணை இணையதளத்தில் பல வருடங்களாக இந்த வஹாபியம் – இஸ்லாமியரல்லாதவர் விவாதம் நடந்துவருகிறது. அனைவரும் ஒரே குரலில் பேசி, எவருமே மாற்றுத்தரப்பை சற்றும் கவனிக்காமல் அந்த விவாதங்கள் நீண்டதனால் வாசகர்கள் நடுவே பெரும் சலிப்பை அது உருவாக்கியது. ஆம் இந்த விவாதம் எங்கும் சென்று சேராது. நம்பிக்கைகளுடன் விவாதிப்பதில் பொருளில்லை.

அந்தக்காரணத்தினால்தான் ஜெய்னுலாபிதீன் போன்றவர்களிடம் அறிவார்ந்த விவாதத்தில் ஈடுபட முடியாது என நான் நினைக்கிறேன். ஒரு இந்துவேதாந்தி பௌத்தர்களுடன், சமணர்களுடன்,தாவோ மதத்துடன் , ஜென்னுடன் விவாதிக்கலாம். நவீன அறிவியலின் பிரபஞ்சவியலுடனும் பரிணாமவியலுடனும் விவாதிக்கலாம். அத்தகைய விவாதங்கள் நூற்றுக்கணக்கான நூல்களாகக் கிடைக்கின்றன. பிற தரப்புகளுடன் விவாதிக்கமுடியாது

ஏனென்றால் அவற்றின் அடிப்படை என்பது நம்பிக்கை. அதாவது முதலில் இருப்பது உறுதியான மாற்றமுடியாத நம்பிக்கை. நபி மீது, அவர் முன்வைத்த அல்லாஹ் மீது ,அவரில் வெளிப்பட்ட குர் ஆன் மீது உறுதியான முழுமுற்றான நம்பிக்கையில் இருந்தே இஸ்லாம் உருவாகிறது. அவற்றைப்பற்றிய அவநம்பிக்கையை, மறுப்பை இஸ்லாம் மதநிந்தனைக் குற்றமாக மட்டுமே நினைக்கிறது. இந்நிலையில் எதைப்பற்றி விவாதிப்பது?

குர் ஆன் நபி வழியாக இறக்கப்பட்டது, அல்லா அதைச்செய்தார், நபியே இறுதி இறைத்தூதர் என்பதை ஒரு மேடையில் நிரூபிக்க முடியுமா என்ன? விவாதித்தவர்கள் எல்லாம் நீங்கள் காட்டிய நிரூபணங்களை கண்டு தலைவணங்கியா விடைபெற்றார்கள்? அவர்கள் உங்கள் மத நம்பிக்கை புண்பட்டுவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் பேசுவார்கள். நீங்கள் ஒற்றைப்படையாக உங்கள் நம்பிக்கையை சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் விவாதம் முட்டி நின்று விடும்.

ஆக, அந்த விவாதங்கள் எல்லாம் வெறும் மேடை நாடகங்கள் மட்டுமே. நானே ஜெய்னுலாப்தீன் அவர்களின் இரு நிகழ்ச்சிகளில் பார்வையாளராகப் பங்கெடுத்திருக்கிறேன். கேட்கப்படும் வினாக்கள் முன்னரே எழுதிக்கொடுக்கப்படுகின்றன. அந்த வினாக்களில் தேவையானவற்றை ஜெய்னுலாபிதீன் தேர்வு செய்கிறார். அதற்கு வழக்கமான விடைகளைச் சொல்கிறார். இதே நிகழ்ச்சியை இப்படியே சாது செல்லப்பா போன்ற பெந்தேகொஸ்தே பிரச்சாரகர்களும் செய்கிறார்கள்.

மையத்தில் உள்ளது நம்பிக்கை அல்ல , ஒரு தர்க்கபூர்வ நிலைப்பாடு என்றால் மட்டுமே விவாதம் சாத்தியம். ஆகவே நான் இஸ்லாமியரிடம் மட்டுமல்ல எந்த மதநம்பிக்கையாளரிடமும் அவர்களின் நம்பிக்கை பற்றி எதையும் விவாதிப்பதில்லை.அந்நம்பிக்கைகளை நிராகரிப்பதும் இல்லை. நான் எங்கும் எந்த மதநம்பிக்கையையும் விமர்சனம் செய்து நீங்கள் பார்க்கமுடியாது. அது விவாத விஷயமே அல்ல.

இந்தக்கடிதத்திலேயே விவாதத்துக்கு எதிரான உங்கள் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. மனுஷ்யபுத்திரன் மிக நிதானமாக, மிக மென்மையாகத்தான் தன் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை நீங்கள் எப்படி மதநிந்தனையாக முத்திரை குத்துகிறீர்கள் என்று கவனிக்கிறேன். மதநிந்தனைக்கு ஹதீதுகள் அளிக்கும் தண்டனை எனக்குத்தெரியும்– நான் இருபது வருடங்களுக்கும் மேலாக குரானையும் ஹதீதுகளையும் வாசித்துவருபவன்.

சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் ஈரானிலும் பாகிஸ்தானிலும் அருளாளர்களான சூஃஃபிகள் எவ்வளவுபேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் உங்கள் கோபத்தை நான் எப்படி ஒரு கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியும்? ஒரு விமர்சனக்கருத்து வரும்போது அக்கருத்தைச் சொல்வதற்கான உரிமை அவருக்குண்டு என்றும், அக்கருத்தை மட்டும் தர்க்கபூர்வமாக எடுத்து விவாதிக்கவேண்டும் என்றும் உறுதிகொள்வதே விவாதத்துக்கான வழியாகும்.அது இல்லாதபோது எப்படி விவாதத்துக்கு அழைக்கிறீர்கள்?

இஸ்லாம் மீதான அவதூறுத் தாக்குதல்கள் இங்கே தொடர்ந்து நிகழ்வதாகவும், இஸ்லாமியத் தரப்பின் பதிலடி மட்டுமே தாக்குதலாகக் கருதப்படுவதாகவும் சொல்கிறீர்கள். நண்பரே, உங்களுக்கு வெளியே பார்க்கும் வழக்கமிருந்தால் கொஞ்சம் கவனியுங்கள். ராமனை,கிருஷ்ணனை ,பிள்ளையாரை, எவ்வளவு நேரடியாகத் தாக்கியிருக்கிறார்கள். எத்தனை நாவல்கள் வந்திருக்கின்றன. எவ்வளவு சினிமாக்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சொல் நபியைப்பற்றி அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா? இந்துமத நம்பிக்கை பற்றி எவ்வளவு நேரடியான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன, ஒரு சொல் இஸ்லாம் பற்றி அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா?

சொல்லப்படவும்கூடாது என்றே நான் நினைக்கிறேன். இந்துமதம் அதன் பன்மைத்தன்மையால் விவாதத்தை வரவேற்கிறது. கீதையே ‘இதை விவாதித்து உன் முடிவுக்கு நீயே வா’ என்றுதான் சொல்கிறது. ‘மேலான உண்மை என்னவென்று நீயும் நானும் சேர்ந்து தேடுவோம்’ என்று குரு சீடனிடம் சொல்லியபடித்தான் இந்து ஞான அரங்குகள் ஆரம்பிக்கவேண்டும். ஆகவே இந்துமதத்தை விமர்சிக்கலாம். விவாதிக்கலாம். இஸ்லாமை விவாதிப்பது மதநம்பிக்கையைப் புண்படுத்துவதாக இஸ்லாமியர்களால் கருதப்படுவதனால் எவ்வகையிலும் அது தவிர்க்கப்படவேண்டும்.

இங்குள்ள எண்பதுசதவீதம் பேரும் இஸ்லாமின் நம்பிக்கையையோ நபியின் சொற்களையோ கொஞ்சம்கூட ஏற்காத பிற மத நம்பிக்கையாளர்கள்தான். ஆனால் எவரேனும் எங்கேனும் இஸ்லாமுக்கு எதிராக ஒரு சொல் சொல்லியிருக்கிறார்களா? அபூர்வமாக இஸ்லாமியக் கொள்கைகளை அறியாமல் சிலர் நபி படத்தை வரைவது போன்ற சிலவற்றைச் செய்தால் உடனே மனமார மன்னிப்பும் கேட்டுவிடுகிறார்கள். இஸ்லாம் தாக்கப்படுகிறது என்ற பொய்யை ஏன் திரும்பத்திரும்பச் சொல்கிறீர்கள்? அதற்கான அரசியல்தேவை என்ன?

இங்குள்ளவர்களின் ஐயம் அல்லது அச்சம் இஸ்லாம் மீதல்ல. இஸ்லாமின் பெயரால் நிகழும் அரசியல் அடிப்படைவாதத்தின் வன்முறைகளைப்பற்றி மட்டுமே. அதை ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய மதத்தில் இருந்து பிரித்துதான் ஒவ்வொருவரும் சொல்லி வருகிறார்கள். அந்த ஐயத்தையும் அச்சத்தையும் களைவதற்குப்பதில் அதுவே இஸ்லாம் மீதான தாக்குதல் என சித்தரிக்கமுயல்கிறீர்கள்.அதற்கு எதிராக இஸ்லாமியர் ஒருங்கிணையவேண்டும் என்கிறீர்கள். அது ஓர் அரசியல் உத்தி.

உங்கள் தரப்பைச் சொல்லிவிட்டீர்கள். நான் என் தரப்பையும் சொல்லிவிட்டேன். கடைசியாக மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். இஸ்லாம் மீதான மனவிலக்கம் உலகமெங்கும் உருவாகி வருகிறது. இந்தியாவில் அந்த விலக்கத்துக்கு வேகம் கூட்டுவதாக இங்குள்ள இஸ்லாமிய அரசியல் ஆகிவிடக்கூடாது.இந்து அடிப்படைவாதத்திற்கான காரணமாக அது மாறக்கூடாது. அது நம் சந்ததிகளுக்கு நல்லதல்ல. இந்த தேசத்தை சுரண்டவிரும்பும் மேலைநாடுகளின் கருவியாக அந்த மோதல் ஆகிவிடக்கூடும். நம் சகோதரச்சண்டையில் நம் பிள்ளைகள் வாழ்க்கையை இழக்கலாகாது.

இஸ்லாம் கடந்த ஆயிரமாண்டுகளாக ஓர் இந்திய மதம். இந்தியப்பண்பாட்டின் அம்சம் அது. அதன் சிந்தனைகளும் கலைகளும் இல்லாமல் இந்தியா இல்லை. தாஜ்மஹாலும், கஜலும், உருது இலக்கியமும், சூஃபி மதமும் எனக்கும் என் மூதாதையரின் சொத்து. இஸ்லாம் என் குழந்தைகளுக்கு நான் சுட்டிக்காட்டிச் செல்லும் மரபு.தூய்மைவாதங்களாலும் அடிப்படைவாதங்களாலும் அதை வன்முறைக் களமாக ஆக்காமலிருப்போம்.

நம் முன் மகத்தான முன்னுதாரணம் ஒன்று உண்டு. சதக்கத்துல்லா அப்பா அவர்கள். இஸ்லாமைத் தமிழ்ப்பண்பாட்டுடன் உரையாடச்செய்வதில் அவர்தான் முன்னோடி. உமறுப்புலவரைப்போலவே படிக்காசுப்புலவருக்கும் அவர்தான் ஞானகுரு. ராமேஸ்வரம் கோயிலைக்கட்டிய சீதக்காதிக்கு அவர்தான் வழிகாட்டி.தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் முதல் ஊற்றுமுகம் அவர்தான்.

அப்பா அவர்களின் நல்விவேகம் இந்த மண்ணில் முந்நூறாண்டுக்காலம் மதநல்லிணக்கத்தை உருவாக்கியிருக்கிறது.இந்த விவாதத்தின் முடிவாக அவரை நினைவிலிருத்தி வணங்குகிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல்