இன்று, ஜூலை பதினொன்றாம்தேதி அதிகாலை, 5.35க்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கிளம்புகிறேன். ஒன்பதாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்சில் நாகர்கோயிலில் இருந்து கிளம்பினேன். பிரதாப் பிளாஸா ஓடலில் வசந்தபாலன் அறைபோட்டிருந்தார். பத்தாம் தேதி காலையில் சென்னை வந்ததுமே இங்கே வந்துசேர்ந்தேன்.
வழக்கம்போல பத்தாம் தேதி முழுக்க நண்பர்களைப் பார்க்கும் பரபரப்பு. புத்தகங்களைச் சேகரிப்பது. அமெரிக்க டாலர் மாற்றிக்கொள்வது. இம்மாதிரி வேலைகள் செய்யும்போது சுத்தமாக நேரம்போவதே தெரிவதில்லை. பகல் எப்படி ஓடிப்போயிற்று என்றே சொல்லமுடியவில்லை. விமானம் அதிகாலை. மூன்றுமணி நேரம் முன்னரே விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ஆகவே இரவு ஒருமணிகெல்லாம் ஓடலில் இருந்து கிளம்பவேண்டும்.
ஆகவே சுத்தமாக துங்கவேயில்லை. பின் இரவுவரை எழுதிக்கொண்டே இருந்தேன். இத்தகைய சிக்கல்களிலும் நெருக்கடிகளிலும்கூட எனக்கு எழுத்தே துணை. மன அழுத்தம் இருந்தால் எழுத்து. உற்சாகம் ததும்பினாலும் எழுத்து. எழுதுவதில் சோர்வு வந்தால்? என்ன செய்வது, அதைப்பற்றி எழுதவேண்டியதுதான்.
டாபர்மான் நாயின் இயல்பு அது. அதற்கு உடல் நலம் இருந்தால் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். உடல்நலம் குலைந்தால் மேலும் வேகமாக ஓடும். இனும் வேகமாக ஓடினால் உடனே டாக்டரிடம் காட்டவேண்டும்.
சென்ற ஆஸ்திரேலியப்பயணம்போல இப்போது உற்சாகமாக இல்லை. அப்போது அருண்மொழி கூட இருந்தது ஒரு காரணம். இன்னொன்று சமீபகால நிகழ்ச்சிகள். முதலில் ஈழப்பிரச்சினை நீண்ட மனச்சோர்வை அளித்தது. சில நண்பர்கள் அங்கே மறைந்தார்கள். ஆகவே தேவையான எதையும் செய்யாமல் ஒருமாசம் சென்றது. கனடா செல்வதாக இருந்தது. ஆனால் நான் விண்ணப்பிக்கவே இல்லை. தேரிவரும்போது ராஜமார்த்தாண்டன் மரணம். பின்னர் லோகி
அமெரிக்கா சென்றால் சரியாகிவிடும் என்றாள் அருணா. இருக்கலாம். புதிய மண் புதிய தோழர்கள். இந்தப்பயணத்தில் என்னை வரவேற்று பசரிக்கும் அனைவரும் எனக்கு மிக நெருக்கமான வாசகர்கள், நண்பர்கள். எவரையுமே நேரில் பார்த்தது இல்லை. அடையாளம் கண்டுகொள்வதற்காக பாஸ்டன் பாலா ஒரு படம் அனுப்பியதைக் கண்டு கொஞ்சம் வருத்தம். சிந்னப்பையன் போல இருக்கிறா
இந்தப்பயணத்திலும் எந்தப்பயணத்தையும்போல தேவையான எல்லா குழப்பங்களையும் அடைந்தேன். விசா வேவர் என்று ஒரு கட்டம் இருந்தது முதல் உலக மக்களுக்கு அளிக்கபப்டும் விசா இல்லாத அமெரிக்க நுழைவுச்சலுகை அது. அது என்ன என்று தெரியாமல் அதற்குதேவையான கட்டங்களை நிரப்பி, குழம்பி, மின்னஞ்சல் அனுப்பி, அந்த தானியங்கி பதில் இயந்திரத்தையும் குழப்பி நான் தெளிவடைந்தேன்.
நடுவே வாக்ஸினேன்ஷன் சர்ட்டி·பிகெட் ஏதும் தேவையா, மெடிகல் சர்டி·பிகெட் வைத்திருக்கவேண்டுமா மணிக்கணினியை அனுமதிப்பார்களா என்றெல்லாம் ஏகப்பட்ட குழப்பங்கள். அவையெல்லாம் அமெரிக்க மண்ணுக்குள் நுழைந்தபின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக் விலகும்.
அதிகாரிகளால் நாம் ‘டீல்’ செய்யப்படுவதென்பது நம்முடைய இந்திய ஜனநாயக வாழ்க்கையின் தீரா அனுபவங்களில் ஒன்று. ஆகவே எனக்கெல்லாம் எந்த அதிகாரியைப்பார்த்தாலும் உதறல்தான். வெளிநாட்டுப்பயணங்களில் கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் சென்று நிற்கும்போதே எனக்கு ஒரு குற்றவாளிக்களை- அல்லது தண்டனக்குற்றவாளிக்களை- முகத்தில் வந்துவிடும்
அதற்கேற்ப அதிகாரிகள் என்னைப்போன்றவர்களைத்தான் குறிவைப்பார்கள். இந்திய அதிகாரிகள் என்னிடம் பேசுவதே இல்லை, கண்னசைவுதான். மேலை அதிகாரிகள் குழறுவார்கள். அவர்களிடம் இருந்து காத்துக்கொள்ள நான் தடித்தடியாக புத்தகங்கள் அழைப்புக்கடிதங்கள் என் அட்டைப்படம் பேண்ட்ட தென்றல் இதழ் என ஏகப்பட்ட கவசங்களை வைத்திருக்கிறேன். இருந்தாலும் என்னை கசாப்புமிருகத்தை சிங்கம் பார்ப்பதுபோலத்தான் பார்ப்பார்கள்
இந்தமாதிரி வரிசையிலும் கிட்டதட்ட ஆர்கஸம் அடையுமளவுக்கு காதலனிடம் கொஞ்சும் வெண்நங்கையை காண பொறாமையாக இருக்கிறது. அவளுக்கு உலகப்பயணம் டவுன்பஸ் பயணம் போல ஆகியிருக்கும்போல. பாவமாகவும் இருக்கிறது, அதன்பின் அவளுக்கு பயணத்தில் என்ன அனுபவம் எஞ்சப்போகிறது?
சென்ற முறை அருண்மொழி கூடவே இருந்தாள். அவளை நம்பி எங்கும் செல்லலாம். அவளிடம் நம்மை ஒப்படைத்துவிட்டு வேறு பெண்களை- அவள் அனுமதியுடன் பராக்கு பார்க்கலாம். இங்கே நானே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாகவேண்டும். எனக்கு பயத்தில் கேள்விகள் காதிலேயே விழுவதில்லை.
இப்போது குளிர்ந்த விமான நிலையத்தில் தள்ளுவண்டியில் கனத்த பெட்டிகளுடன் காத்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.