இஸ்லாம்-வஹாபியம்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களின் இணையதளத்தை சில வருடங்களாகப் படித்து வருகிறேன். தங்களின் சிலபுத்தகங்களையும் படித்துள்ளேன். உங்களின் ஏழாம் உலகம் நாவல் என் மனதைப் புரட்டிப் போட்டது. தங்களின் சில நிலைப்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

நான் ஒரு இஸ்லாமியன் என்ற நிலையில் ஜைனுல்ஆபீதீனின் பல சொற்பொழிவுகளைக் கேட்டு இருக்கிறேன். அவரின் இந்த உரை சற்று மூர்க்கமாக இருந்தாலும்தற்போதைய சூழ்நிலையில் வேறு எப்படி பேசச் சொல்கிறீர்கள்? இந்த உரையில் அவர்சொல்கின்ற அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடு உண்மையில்லையா?இத்தகைய அரசியல்வாதிகளிடம் எத்தகைய நாகரிகத்தில் பேசவேண்டும் என்று
நினைக்கிறீர்கள் ?

அவர் பேசிய கமல் சுருதி விஷயம் வேண்டுமென்றேதான் என்று நான்நினைக்கிறேன். “அவரது பேச்சு தமிழ்ச்சமூகத்திற்கே அவமதிப்பு” என்றுநீங்கள் எதிர் வினையாற்றியிருக்கிறீர்கள். இதையேன் கருத்து சுதந்திரம்என்று நீங்கள் நினைக்கவில்லை?

ஆக என்னதான் கருத்து சுதந்திரம் என்றாலும் சிலசமயம் அவை மற்றவர்களை பாதிக்கிறது இல்லையா?
இதைத்தான் இஸ்லாமியர்கள் பல வருடங்களாக அனுபவித்து வருகிறோம். பக்கத்து வீட்டுக்காரன் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்ற ஐயம் எத்தகைய வலியைத்தரும் என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா ?

தங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். வஹாபியம் பற்றித் தங்களுடன் விவாதிக்க ஆசை. மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இதுவே தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தவறிருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு
சிகந்தர்

அன்புள்ள சிகந்தர்,

ஜெய்னுலாப்தீன் அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் சரியானவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இங்கே ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் ஊடகங்களில் முன்வைக்கப்படும்போது ஊடக சுதந்திரம் பற்றிக் கவலைப்படுவதில்லை.

எல்லா மதங்களையும் சாதிகளையும் அரசியல்கட்சிகளையும் சேர்ந்தவர்கள் கருத்துக்களுக்கு எதிராக மூர்க்கமாகப் போராடியிருக்கிறார்கள். வரலாற்றுக்கு எதிராக, எளிமையான தகவல்களுக்கு எதிராக இங்கே போராட்டங்கள் நடந்துள்ளன. வன்முறையைக் கையிலெடுத்தவர்களும் பலர்.

பல படங்கள் இங்கே தடைசெய்யபப்பட்டிருக்கின்றன. இடஒதுக்கீடு திறமையைத் தடைசெய்கிறதா என விவாதித்த ஒரே ’ஒரு கிராமத்திலே’ படம் முதல் கிறித்தவ நாடுகளே அங்கீகரித்த ’டாவின்ஸி கோடு’வரை.

ஏன் கருத்துச் சொன்னதற்காக நானே தலையில் பனிக்குல்லாய் போட்டுக்கொண்டு தலைமறைவாக அலைந்திருக்கிறேன். சுவாரசியமான விஷயம், மதுரையில் ஒரு இஸ்லாமிய நண்பரின் இல்லத்தில்தான் சிலநாள் தங்கியிருந்தேன்.

ஆகவே இஸ்லாமியர் மட்டும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தவறானது. அதை நானும் ஏற்கவில்லை.

அந்தக் குறிப்பிட்ட திரைப்படத்துக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு எடுக்கவும் அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவும் இஸ்லாமியருக்கு உரிமை உண்டு. தங்களைப்புண்படுத்தும் விஷயங்களைக் களையவேண்டுமென அவர்கள் கோரலாம்.

வணிகசினிமா என்பது ஒரு பொதுவான பொழுதுபோக்கு ஊடகம். அதில் சமூக ஐயங்களை உருவாக்கக்கூடிய, அடிப்படை மதக்குறியீடுகளை சீண்டுகிற விஷயங்கள் வரக்கூடாதென்பதே என் எண்ணம். ஆமாம், எல்லாரும் நல்லவரே என்று சொல்லக்கூடிய ‘ஆதாமின் மகன் அபு’ போன்ற படங்களையே நான் வரவேற்பேன். நான் எழுதிய நீர்ப்பறவை போன்ற படங்களில் அதை நீங்கள் காணலாம்

இங்குள்ள பிரச்சினைகள் இரண்டு. ஒன்று, தாலிபான்கள், அல்குவைதா போன்ற அப்பட்டமான மதவெறி அமைப்புகளை விமர்சிக்கும்போது இஸ்லாமியர் அதைத் தங்கள் மீதான விமர்சனமாகக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் உருவாவது. இஸ்லாமியர் அந்தத் தீவிரவாதிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்களா என்ற எண்ணத்தை இந்த எதிர்ப்புகள் பொதுவாக இவ்விஷயங்களைப்பார்ப்பவர்களிடம் உருவாக்கிவிடும் என்பது.

வஹாபிய இயக்கங்களான தாலிபானையும் அல்குவைதாவையும் ஆதரிக்கும் அமைப்புகள் இந்த எதிர்ப்பை முன்னெடுக்கையில் அந்த ஐயம் மேலோங்கக் கூடும். [அவமைப்புகள் தாலிபானின் ‘சில’ விஷயங்களை நாங்கள் ஏற்கவில்லை என்றெல்லாம் சொல்வது வெறும் மழுப்பல் மட்டுமே].

இரண்டு, ‘சட்டம் ஒழுங்கு சீர்குலையும்’ என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது. அது வன்முறைமிரட்டலாகவே கொள்ளப்படும். அவ்வரியை அரசியல்கட்சி சொல்லும்போது அது வன்முறைக் கட்சியாகவே கருதப்படும். ஆனால் இஸ்லாமியர் சொல்லும்போது நேரடியாக அது உலகளாவிய தீவிரவாதத்துடன் அடையாளப்படுத்தப்படும். குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு போன்றவை இங்கே நிகழ்ந்த பின்னணியில்.

அரசையும் சிவில் சமூகத்தையும் இஸ்லாமியர் மிரட்டுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவது இஸ்லாமிய சமூகத்துக்கு நல்லதா என யோசியுங்கள். அது சில இஸ்லாமியக்குழுக்களுக்கு மட்டுமே சாதகமானது.

இஸ்லாமியர் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது பற்றிச் சொன்னீர்கள். இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உலகளாவிய தீவிரவாதத்தாக்குதல்கள் ஒவ்வொருநாளும் செய்தித்தாள்களில் உள்ளன. இவை இஸ்லாமியக்குழுக்களால் செய்யப்படுபவை என்பது வெளிப்படை. அவர்களே பொறுப்பேற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இத்தாக்குதல்களைச் செய்பவர்கள் இஸ்லாம் மதத்தையும் குர்ஆனையும்தான் தங்களுக்கான கருத்தியல் பின்னணியாகவும் தூண்டுதலாகவும் சொல்கிறார்கள். தாக்குதலுக்குச் செல்பவர்கள் குர்ஆன் சொல்லும் ஜிகாதுக்காகச் செல்வதாகவே சொல்கிறார்கள். மறுமைக்காகவே அதைச் செய்கிறார்கள்.

இந்த அம்சம் இருக்கும் வரை என்னதான் சொன்னாலும் உலகமெங்கும் இஸ்லாம் மீதான ஐயமும் அச்சமும் இருந்துகொண்டுதான் இருக்கும். அது இயல்பானது. வணிகசினிமா என்பது பொதுப்புத்தி சார்ந்தது. பொதுவாகப் பலரும் நம்பும், ஏற்கும் விஷயத்தையே அது காட்டும். அப்போதுதான் படம் நம்பகமாக இருக்கும் என்பது மட்டுமே அதன் நோக்கம்.

சமகால உலக நிகழ்வுகளில் இஸ்லாமியதீவிரவாதம் என்ற அம்சம் [ இஸ்லாமியதீவிரவாதம் என ஏன் சொல்கிறேன் என்றால் அந்தத் தீவிரவாதம் அப்படித் தன்னைச் சொல்லிக்கொள்கிறது என்பதனால்தான்] இருப்பதனால்தான் இஸ்லாமியர்மீது அதன் எதிர்ப்பாளர்களோ அல்லது பொதுப்புத்தியை நம்பும் ஊடகங்களோ அதைச் சொல்லும்போது அது நம்பப்படுகிறது. அந்த அடிப்படை இல்லாமல் சொல்லப்பட்டால் அது நிலைநிற்குமா என்ன?

ஆகவே உண்மையான பிரச்சினை என்பது இஸ்லாமியர் மீது பிறர் தொடுக்கும் தாக்குதல்பிரச்சாரம் அல்ல. இன்றைய உலகச்சூழல்தான். அந்த யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் தாக்கப்படுபவர்களாக இஸ்லாமியர் தங்களைக் கற்பனைசெய்துகொண்டால் அது பயனற்ற தன்னிரக்கத்தையும் தனிமையையும் மட்டுமே உருவாக்கும். அதைத்தான் இங்குள்ள அடிப்படைவாத அமைப்புகள் உருவாக்குகின்றன. ஒரு சமூகம் தனிமைகொண்டால் அது அடிப்படைவாதம் நோக்கித்தான் நகரமுடியும்.

இஸ்லாமியர் தீவிரவாதிகளாக இளம் மனங்களில் பதிவது பெரும்பாலும் செய்திகள் வழியாகவே. ஊடகங்களில் இஸ்லாமியத்தோற்றத்துடன் தோன்றும் அல்குவைதா அல்லது லஷ்கர் தீவிரவாதிகள் உருவாக்கும் மனச்சித்திரம் மிகமிக அபாயகரமானது. தீவிரவாதத்தைக்கூட வெல்லலாம். இது உருவாக்கும் அவநம்பிக்கை இந்தியாவுக்குப் பெரும் சவால்.அதை அப்படியே கேளிக்கை ஊடகங்கள் திரும்பக்காட்டி மேலும் வலியுறுத்தாமலிருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்.

உங்கள் வருத்தத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இஸ்லாமியசமூகத்தை வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்தக்கூடிய, ஒதுக்கக்கூடிய எந்த ஒரு நோக்கும் கண்டிக்கத்தக்கதே.என் மகளின் இஸ்லாமியத் தோழியின் மதமாகவே நான் இஸ்லாமைப் பார்க்க விரும்புவேன். இந்த தேசத்துக்கு உரிமையாளர்கள். அவர்களுக்கிடையே நுழையும் எந்தப் பேச்சும் எந்தக்கருத்தும் புறக்கணிக்கப்படவேண்டியதுதான்

*

கடைசியில் அடிப்படைவாதம் என்ற பிரச்சினைதான் அனைத்துக்கும் மையம்.

நான் மதத்தை மூன்று கட்டுமானங்களின் தொகுதி என அணுகக்கூடியவன்.

ஒன்று அதன் ஆன்மீகம் : அடிப்படையான பிரபஞ்ச உருவகமும், மானுட மீட்பு பற்றிய தரிசனமும், அறத்தரிசனமும் அடங்கியது அது

இரண்டு: அதன் ஆசார நம்பிக்கைகள், வழிபாட்டுமுறைகள்

மூன்று: அதன் ஒழுக்கநெறிகள் மற்றும் சட்டங்கள். செய்யக்கூடியவை,செய்யக்கூடாதவை பற்றிய வரையறைகள்.

என் வரையில் மதத்தின் சாரம் என்பது ஆன்மீகமே. அதன் ஆசாரங்களும் வழிபாட்டுமுறைகளும் அந்த ஆன்மீகத்தை நிலைநாட்டுவதற்குரியவை மட்டுமே.

அதன் ஒழுக்க நெறிகளும் சட்டங்களும் கண்டிப்பாகக் காலந்தோறும் மறுபரிசீலனைக்குரியவை. அந்த மதம் என்பது அவை அல்ல . அந்த மறுபரிசீலனை அந்த மதத்தின் மையமான ஆன்மீகத்தின் அடிபப்டையிலேயே செய்யப்படலாம்.

இஸ்லாமின் உள்ளேயே எவ்வளவோ முறை அந்த மறுபரிசீலனை நிகழ்ந்துள்ளது. மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முதன்மையான சீர்திருத்தவாதிகள் அதில் வந்துள்ளார்கள். அந்த மாற்றங்களை எதிர்க்கும் பழைமைவாதிகளும் இருந்தார்கள்.

ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் பண்பாட்டுப்படையெடுப்பை எதிர்க்கும் நோக்குடன் இஸ்லாம் தன்னை இறுக்கிக் கொண்டது. இஸ்லாமின் உள்ளே வஹாபியர் போன்ற குழுவினர் உருவாகிவந்தனர். இவர்கள் தூய்மைவாதிகள். இவர்கள் இஸ்லாமை ஒரு மாறாத, அசையாத கட்டுமானமாக நிலைநிறுத்தப் போராட ஆரம்பித்தனர்

அப்படிப்பட்ட தூய்மைவாதம் எந்த மதத்திலானாலும் வெறும் வன்முறையாகவே இருக்கமுடியும். ஏனென்றால் அது பண்பாட்டுப்பன்மைக்கு எதிரானது. தேசியப்பன்மைக்கு எதிரானது. மானுட இயல்புக்கு எதிரானது. அந்த வன்முறைதான் இஸ்லாமின் பெயரால் இன்று உலகமெங்கும் நிகழ்கிறது.

இந்தத் தூய்மைவாதம் இஸ்லாமிய நடைமுறைகளை சமகாலநோக்கில் அதன் ஆன்மீகத்தின் அடிப்படையில் சீர்திருத்தமுயல்பவர்களுக்கு எதிராக உச்சகட்ட வன்முறையை செலுத்துகிறது. ஷரியத் சட்டங்களையோ ஹதீஸ்களையோ சற்றேனும் விமர்சிப்பவர்கள் , அடிப்படை மனித உரிமைபற்றிப்பேசுபவர்கள் இஸ்லாமிய நாடுகளில் தண்டிக்கப்படுகிறர்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதை தினமும் காண்கிறோம்.

இந்தியாவிலும் அது நிகழ்கிறது என்பது என் நேரடி அனுபவம். ஆழ்ந்த குர்ஆன் ஞானம் கொண்டவரும் இஸ்லாமிய சமூகசீர்திருத்ததுக்காகத் தன்னலமில்லாமல் போராடியவருமான சேகன்னூர் மௌல்வியை [சேகன்னூர் முகம்மது அப்துல் ஹாசன் மௌல்வி] நான் காசர்கோட்டில் இருந்தபோது நன்கறிவேன். என் வரையில் அவர் ஒரு மாமனிதர். அவர் ஹதீதுகளில் பல இடைசெருகல்கள் இருப்பதாகவும் பல ஹதீதுகள் குர்ஆனைத் திரிக்கும்தன்மை கொண்டவை என்றும் வாதிட்டுவந்தார். இஸ்லாமியசட்டங்களில் சில சீர்திருத்தங்களைத்தான் கோரினார்.

சேகன்னூர் மௌல்வி

ஆனால் 1993ல் சேகன்னூர் மௌல்வி காணாமலானார். சுன்னி இஸ்லாமியத் தலைவரான காந்தபுரம் ஷேக் அபூபக்கர் அஹமது என்னும் காந்தபுரம் முசலியார் சேகன்னூர் மௌல்வியைக் கொன்ற குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அத்தனை சாட்சிகளும் காணாமலானார்கள். சிலர் மட்டும் பின்னர் வளைகுடா நாடுகளில்- சவூதியில்- கண்டுபிடிக்கப்பட்டார்கள். சேகன்னூரின் சடலம் கிடைக்கவேயில்லை. எரித்துக் கடலில் கலக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதைச்செய்த வி.வி.ஹம்சா என்பவர் இரட்டை ஆயுள்தண்டனை பெற்றார். காந்தபுரம் முசலியார் விடுதலை அடைந்து இன்னும் முக்கியமான மதச்சொற்பொழிவாளாக விளங்குகிறார்.

ஆம், வெறும் அச்சம் அல்ல. கண்முன் ஆதாரம் உள்ளது எனக்கு. எனக்கே ஒரு மோசமான அனுபவம் உண்டு. இணையத்தில் நேசகுமார் என்பவர் குர்ஆன் பற்றி வஹாபியருடன் விவாதித்தார். நான்தான் நேசகுமார் என்றபேரில் எழுதுகிறேன் என என் எதிரியான யமுனா ராஜேந்திரன் என்பவர் திட்டமிட்டு கிளப்பிவிட்டார். விளைவாக ஒருநாள் சில இஸ்லாமிய இளைஞர்கள் என்னை தேடிவந்து கடுமையாக மிரட்டினர். என்னை அழைத்துச்சென்று விசாரித்தனர்.

நான் கேரள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்துக்கு நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் என்பதையே நான் நேசகுமாராக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரமாக முன்வைத்தனர். நான் நேசகுமார் அல்ல என்று எல்லா இணையக்கடவுச் சொற்களையும் அளித்து ஆதாரபூர்வமாக நிறுவியபின் என்னை விட்டுவிட்டனர். அவர்கள் நான் நேசகுமாரல்ல என்று உறுதியாக அறிந்ததுகூட ஒரு சிறிய தற்செயல்தான்.

அத்துடன் இஸ்லாமிய தூய்மைவாதத்தின் வன்முறை இஸ்லாமியர்களின் பிற பிரிவினரையே அதிகமும் கொன்றழித்துள்ளது , கொன்றழித்துக்கொண்டிருக்கிறது என்பது வரலாறு.ஒவ்வொரு அடிப்படைவாதக் குழுவும் தங்கள் தரப்பே தூய்மையான இஸ்லாம் என்று சொல்லிப் பிறர் மீது வன்முறையை செலுத்துகிறார்கள். உலகில் மிக அதிகமாக மசூதிகளில் குண்டுவைத்தவர்கள் இஸ்லாமியர்தான். மாறிமாறி வைத்துக்கொள்கிறார்கள்.

இஸ்லாமியர் தங்களுக்குள்தூய்மைவாதம் பேசினால் என்ன தவறு என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் உலகம் முழுக்க நாம் காண்பது அதில் உள்ள நேரடியான உடனடியான வன்முறையைதான்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் மீதான அச்சம் இதனால்தான். அது ஒரு கருத்தியல்தரப்பு மட்டும் என்றால் அது பிரச்சினை அல்ல. ஆனால் எங்கெல்லாம் அது வளர்ந்துள்ளதோ அங்கெல்லாம் அது ஆயுதமேந்திய நவீன போர்க்குழுக்களையே உருவாக்குகிறது. தங்கள் சமூகத்தையே அழிக்கிறது.

*

எல்லா மதங்களிலும் ஒருகாலத்தில் அரசியலதிகாரநோக்கம் இருந்தது. கிறித்தவம் ஐரோப்பாவையே ஆண்டிருக்கிறது. இந்துமதம் அதிகார மதமாக இருந்தது. பௌத்தம் அரசு மதமாக இருந்திருக்கிறது

மதத்தில் இருந்து அரசியலதிகாரத்தைப்பிரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வலுப்பெற்றது. மூன்று காரணங்கள்.

ஒன்று, மதம் பொதுவாக தன் தரிசனம் மட்டுமே உண்மை என்றும், பிற தரிசனங்கள் பொய் என்றும் கூறும். மதம் அரசதிகாரத்துடன் இணைந்திருந்தால் அந்த தரிசனத்தை ஏற்காதவர்கள் அதனால் ஒடுக்கப்படுவார்கள். அவர்கள் அரசாங்க வன்முறையால் அந்த மதத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அது தனிமனித சுதந்திரத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் எதிரானதாகவே அமையும்.

இரண்டு, மதம் உலகளாவ அனைவரையும் தன் நம்பிக்கை நோக்கி இழுக்க முயலும். அதை அது பிரச்சாரம் மூலம் செய்யலாம். ஆனால் அரசதிகாரத்துடன் இணைந்திருந்தால் அது பிற உலகுடன் போரிலேயே இருக்கும். உலகம் முழுக்க தன் மதம் பரவவேண்டும் என்ற கனவு இருக்கும் வரை அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பிற மதங்களுடன் இணைந்து சமரசமாக வாழமாட்டார்கள்

மூன்று: அதிகார மாற்றம் என்பது சுமுகமாக நிகழும்வரைத்தான் ஒருநாட்டில் அமைதி நிலவும். மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஜனநாயக அரசு அமையவேண்டுமென்றால் ஆட்சிமாற்றம் வன்முறை இல்லாமல் நிகழவேண்டும். அரசும் மதமும் பிணைந்திருந்தால் அது நிகழாது.

ஆகவேதான் மதத்தை அரசியலதிகாரத்தில் இருந்து பிரித்தார்கள். அதன் விளைவே செகுலர்ஸ்டேட் என்ற கருத்துருவம். அதுவே நவீன உலகின் அடிப்படை. அது ஒரு தேசத்தின் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை அளிக்கிறது. மதத்தை வன்முறைமூலம் கட்டாயப்படுத்தாமல் ஒரு நம்பிக்கையாக முன்வைக்கச்செய்கிறது.

இன்றைய மதங்கள் அரசியலதிகாரநோக்கை கைவிட்டுவிட்டன. ஆகவே இன்றைய இஸ்லாமியரில் பாதிப்பேர் செகுலர்நாடுகளில் வசிக்கிறார்கள். அங்கே அவர்களுடைய மத நம்பிக்கைகளுக்கு முழுமையான சம உரிமை அளிக்கப்படுகிறது.

ஆனால் இன்றும்கூட இஸ்லாம் அரசதிகாரத்தில் இருந்து தன்னை பிரித்துக்கொள்ளவில்லை. உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாம் ஒரு மதமாக மட்டும் இல்லை, அரசதிகாரத்தின் அடிப்படையாகவும் இருக்கிறது. ஆகவே அங்கே ஜனநாயகம் நிகழ முடியவில்லை.

இஸ்லாமின் உள்ளே இருக்கும் அந்த அகிலம்தழுவிய இஸ்லாமியதேசம் என்ற கனவுதான் இன்றும் இஸ்லாமியதீவிரவாதத்தின் அடிப்படையாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமியதீவிரவாதிகளின் போர் எதற்காக? இது இஸ்லாமியதேசம் அல்ல என்பதனால் மட்டுமே. இதே போர் சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும் எதிராகவும் இஸ்லாமியதீவிரவாதிகளால் நிகழ்த்தபடுகிறது

ஆக, இரு விஷயங்களை நான் உறுதியாகச் சொல்வேன். ஒன்று, இஸ்லாம் அதன் தூய்மைவாதவெறியில் இருந்து, பழைமைவாதத்தில் இருந்து வெளிவந்தாகவேண்டும். அதன் ஆன்மீகத்தை மட்டுமே முன்வைத்து சமகாலப்பிரக்ஞையுடன் பேசும் குரல்கள் அதனுள் வலுப்பெறவேண்டும்.

இரண்டு , இஸ்லாம் அதன் அரசியலதிகார நோக்கை, உலகத்தை ஆளும் கனவை கைவிடவேண்டும். அது தன் ஆன்மீகத்தை மட்டுமே முன்னிறுத்தக்கூடியதாக மாறவேண்டும். உலகை அது தன் ஆன்மீகத்தால் வெல்லமுயலட்டும்.

பிற மதங்களில் நிகழ்ந்த இந்த மாறுதல் இஸ்லாமிலும் நிகழாதவரை பிற மதங்களால் அது ஐயத்துடன் மட்டுமே பார்க்கப்படும். இதுதான் உண்மை நிலவரம்.

*

இந்த உண்மையை இஸ்லாமியரை நோக்கி இன்று சொல்ல எவரும் இல்லை. தங்கள் சொந்த அரசியலுக்காக, சாதிக்காழ்ப்புகளுக்காக இஸ்லாமியரை கருவியாகக் கொள்பவர்கள்தான் இஸ்லாமியரை நோக்கிப் பொய்யைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் இஸ்லாமியர் நட்புக்குரல்களாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப்பின்னணியில் மனுஷ்யபுத்திரனின் குரலை ஜெய்னுலாப்தீன் எதிர்கொண்டமை பற்றிப் பார்க்கலாம். மனுஷ்யபுத்திரனின் குரல் இஸ்லாமுக்கு உள்ளிருந்து ஒலிக்கும் ஒரு மாற்றத்துக்கான அழைப்பு. அவர் இஸ்லாமை எதிர்க்கவில்லை. இஸ்லாமியச்சட்டங்களைக்கூட ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை. ஆனால் மதத்தின் பெயரால் மூர்க்கமாக அச்சட்டம் பயன்படுத்தப்படுவதை கவனப்படுத்துகிறார். தண்டனைகளைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாமே என்கிறார்.

அவர் சொல்வது உலகின் பல இஸ்லாமிய நாடுகளிலேயே நடைமுறையில் உள்ளதுதான். பல சிந்தனையாளர்கள் சொல்லியதுதான். அது கருத்து. அக்குரலுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை. அது சேகன்னூர் மௌல்வியின் குரலும் கூட என்னும்போது அதிலுள்ள அபாயத்தைக் குறைத்துமதிப்பிடமுடியுமா என்ன? அது ஒருகருத்து அதை எதிர்ப்பதும் ஒரு கருத்து என்று விட்டுவிட முடியுமா? சேகன்னூர் மௌல்வியும் கருத்தைத்தானே சொன்னார்?

அதற்கு எதிராக ஜெய்னுலாப்தீன் பேசியது கருத்து அல்ல. வசை, மிரட்டல், வன்முறை. உலகமெங்கும் வஹாபியர் சீர்திருத்தம் கோருபவரகளைக் கொன்றழித்துவரும் சூழலில் ஒரு வஹாபியக்குழுவின் தலைவரின் அந்தக்குரலை எப்படி ஒரு எளிய கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறீர்கள்?

அப்போதுகூட நான் அவரைக் கண்டிக்க மட்டுமே செய்கிறேன். அவரை அந்தக்குரலை வைத்து அடையாளம் காணவேண்டும் என்கிறேன். உலகமெங்கும் வஹாபியரின் குரலில் ஒலிக்கும் எல்லா அம்சங்களும் அதில் உள்ளன. ஒன்று, கண்மூடித்தனமான சவூதி அரேபிய ஆதரவு இரண்டு, சீர்திருத்தநோக்குகளுக்கு எதிரான வன்முறைப்பார்வை. மூன்று, பிற இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு.

இஸ்லாமியரை நான் தீவிரவாதிகளாக நினைக்கவில்லை. ஆனால் உலகளாவிய தீவிரவாதத்தின் அதே கொள்கைகளை இங்கே மூர்க்கமாக முன்வைப்பவர்களை ஐயத்துடன் பார்க்கிறேன். அவர்களை இஸ்லாமியர் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும்போது அஞ்சுகிறேன்.

கடைசியாக ஒன்று. இஸ்லாமுக்குள் வஹாபியம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே ஐரோப்பாவின் நேரடி பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எதிராகத்தான். அன்றைய ஐரோப்பா பண்பாட்டுமேட்டிமைவாதமும் அரசதிகார ஆதிக்கமும் கொண்ட சக்தியாக இருந்தது என்பதும் உண்மை. அதற்கு எதிரான இஸ்லாமை மையப்படுத்தி தொகுக்கும் நோக்கமே அதை உருவாக்கியது.

ஆனால் ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் வஹாபியம் சென்ற முந்நூறாண்டுகளில் இஸ்லாமிய உலகைத் தங்களுக்குள் போரிடும் மக்களின் பிராந்தியமாக மாற்றியது என்பதே நடைமுறை யதார்த்தம். ஒருநாள் கூட அதன்பின் அரபுலகில் குருதி உலர்ந்ததில்லை. இக்க்கணம்கூட எங்கோ ஷியாக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கலாம்.

ஆனால் இன்னொரு பொற்காலம் இஸ்லாமுக்கு இருந்தது. இஸ்லாம் அதன் மைய ஆன்மீகதரிசனத்தை முன்வைத்து எல்லாவகையான பண்பாட்டு அடையாளங்களையும் வளர அனுமதித்த காலம் அது. எட்டாம்நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரையிலான காலகட்டம். அன்று இஸ்லாமிய இலக்கியமும் அறிவியலும் தத்துவமும் கலைகளும் உலகத்திற்கே முன்னுதாரணமாக அமைந்திருந்தன. இன்றையநவீன அறிவியலின் தொடக்கமே அங்கிருந்துதான் என்று தெரியுமா?

பதினேழாம் நூற்றாண்டுக்குப்பின் ஏன் இஸ்லாமிய உலகம் தேக்கமடைந்தது? ஏன் கலையும் இலக்கியமும் அறிவியலும் அறவே அற்றுப்போயின? ஏன் இத்தனை சகோதரச்சண்டைகள்? அந்த வினாவுடன் ஆரம்பித்தால் நான் சொல்லுமிடத்துக்கே வந்துசேர்வீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகைதிகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்