வடகிழக்கு பிரியவேண்டுமா?

அன்புள்ள ஜெ,

தங்களின் பதில் தேசிய சுய நிர்ணயம்  கண்டேன், உண்மையில் இவ்வளவு நீண்ட அடர்த்தியான பதிலை எதிர்பார்க்கவில்லை. நன்றி.நான் உங்களுக்கு உடனே பதில் கடிதம் எழுத ஆரம்பித்தேன் ஆனால் முடிக்க முடியவில்லை,எதை எழுதினாலும் அபத்தமாகவே முடிகிறாற்போல் ஒரு எண்ணம். நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்கவும் முடியவில்லை , மறுக்கவும் முடியவில்லை.

நீங்கள் சொன்னதின் ஒட்டுமொத்த சாராம்சமாக நான் கண்டது,

  1. வரலாற்றை வைத்து எதனையும் முடிவு செய்ய முடியாது, ஒரு போராட்டத்தை கலகமாகவோ சுதந்திரபோரட்டமாகவோ வரலாறு மாற்றும்,வரலாறு சொல்வது எல்லாமே உண்மை கிடையாது.
  2. பிரிவினை மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதே முக்கியம்.
  3. வடகிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்றால், ரத்த களரி நிகழும், அவர்களுக்குள்ளே அடிபட்டு கொள்வார்கள்.
  4. இந்த நாட்டை மக்களின் தோற்றத்தை வைத்து (அதாவது இனத்தை வைத்து) பிரிக்க முடியாது)

நீங்கள் தேசியம் அமைவைதற்கு அல்லது தொடர்வதற்கு நான்கு காரணிகளை (factors) கூறி இருக்கறீர்கள்.

அந்த நான்கின் அடிப்படையில் பார்த்தாலும், வடகிழக்கு பிரதேசம் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே படுகிறது (எனக்கு தெரிந்த அளவில்)

நிலப்பகுதியின் அமைப்பு – பெரும் இந்தியா சமவேளியாகவும் ,பீடபூமியாகவும் இருக்க வடகிழக்கின் ஏழு சகோதரிகளும் குறிஞ்சியும் முல்லையுமாகவே இருக்கிறார்கள்.

மேலும்,அவர்கள் mainland என சொல்லப்படும் இந்தியாவில் அடைவதற்கு siliguri corridar எனப்படும் குறுகிய நிலத்தின் வழியாகவே முடியும் என்ற அரசியல் அமைப்பு.

பொதுப்பண்பாடு- இது குறித்து எனக்கு ஒரு குழப்பமான கருத்தே உள்ளது, கலாச்சார ரீதியாக இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதற்கு இது மிக மிக முக்கிய காரணம், ஆனால் இது எந்த அளவிற்கு அந்த பகுதியில் இருக்கிறது என்று கேள்விக்குரியாகதான் இருக்கிறது.

சமகால அரசியல் மற்றும் பொருளியல் காரணங்கள்: இந்த காரணங்களின்படி பார்த்தால், பல வடகிழக்கு மக்கள் mainland இந்தியாவிலும் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள், ஆனால் இதற்கான வரலாறு குறித்தும் எனக்கு தெரியவில்லை , அதாவது இந்த migration எப்போது ஆரம்பித்தது அறுபதுகளிலா, எழுபதிகளிலா , அதற்கு முன்பாகவா என்று தெரியவில்லை, சுதந்திரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டதா என்றும் தெரியவில்லை.

இந்த கடிதத்தை எழுதும்போது எனக்கு தோன்றுவது என்னவென்றால், நீங்கள் ‘வடகிழக்கு ஏன் சேர்ந்து வாழவேண்டும் என்று’ என்ற பார்வை கொண்டு உள்ளீர்கள், ஆனால் எனக்கோ  மீண்டும் மீண்டும் ஏன் சேர்ந்து வாழக்கூடாது என்றே சிந்திக்க தோன்றுகிறது , ஆனால் அதை நியாயபடுத்த போதிய வலு இல்லை என்றும் தோன்றுகிறது,ஏனெனில் நான் சாட்சிக்கு அழைக்கும் சிந்தனையாளர்களை நீங்கள் நிராகரிக்கறீர்கள் (அதை தவறு என்று கூறவில்லை).

ஆனால் என்னுடைய முதல் கடிதத்தில், எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் சுட்டியை கொடுத்து இருந்தேன் , அதில் அவர் சொல்லிய ஒரு கருத்து முக்கியமானது , அது ‘கலாச்சார ஆணவம்’.பிரிவினைக்கு இந்த கலாச்சார ஆணவமும் ஒரு முக்கிய காரணமாக தோன்றுகிறது, மைய இந்தியாவுடன் மொழியாலோ, மதத்தாலோ, முக்கிய தொழில் மற்றும் வாழ்க்கை முறையாலோ எவ்வளவுக்கெவ்வளவு தூரம் கொண்டு இருக்கிறதோ , அந்த தூர  பிரதேசங்கள் அவ்வளவுக்கவ்வளவு  மைய இந்தியாவின் கலாச்சார ஆணவத்தை எதிர்கொண்டு இருக்கின்றன , என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் இந்திய பயணம் போனவர்,தமிழர் என்பதிலோ அல்லது  பொதுவாக தென்னிந்தியர் என்பதிலோ சில அவமானங்களை சந்தித்து இருப்பீகள் என்று நினைக்கிறேன் (இது இது உங்கள் விஷயத்தில் நடக்காமல் இருந்திருந்தால் மகிழ்ச்சி, ஆனால், ஆனால் வட இந்தியாவிற்கு செல்லும் 99 % தமிழர்கள் அனுபவிப்பது)

அது தமிழர்களை, ‘சாம்பார் இட்லி’ என எளனபடுத்துவதில் இருந்து வடகிழக்கில் இருந்து ஒரு பெண் வந்தால் அவள் எப்போது வேண்டுமானாலும் படுக்கைku வருவாள் என்று தில்லி பல்கலை கழக மாணவர்கள் நினைப்பது வரை நீள்கிறது , மேலும் அதன் பொருட்டு திராவிடஸ்தான் கோரிக்கை((பெரியார் முழங்கியது) முதல் நிரந்தர ராணுவ முகாம் இருக்கும் வட கிழக்கு போராட்டம் வரை தொடர்கிறது. கோரிக்கையும் அதன் போராட்டமும் அந்த சமூகம் எதிர்நோக்கும் ஏளனத்தின், ஆணவத்தை பொருத்து அமைகிறது.நீங்கள் இந்த கலாச்சார ஆணவம் ஒரு முக்கிய காரணமாக நினைக்கறீர்களா, அல்லது இந்த நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா :-) என்று நினைக்கறீர்களா? இங்கே கலாச்சார ஆணவத்தை நான் குறிப்பிட காரணம் , அந்த கலாச்சார ஆணவமே மற்ற மெத்தன போக்கிற்கு காரணமாகின்றது.நான் ஆழ்ந்த வாசிப்பை கொண்டவனில்லை,தகவல் பிழை இருப்பின் மன்னியுங்கள்.நான் அறிந்தவருள் தொலைகாட்சிகளிலோ அல்லது பத்திரிக்கைகளிலோ வட கிழக்கு சமாதானமாக போக வேண்டும் என்ற சொன்ன முதல் மனிதர் நீங்கள் அதனால் மனம் சமாதானமடைய முடியவில்லை.

நேசமுடன்
கோகுல்

 

 

 

 

 

அன்புள்ள கோகுல்

உங்கள் கடிதம் நம்முடைய அறிவுஜீவிகள்  எவ்வளவு ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டியது. யாரோ எங்கோ உருவாக்கும் பிரிவினைக் கோட்பாடுகளை அப்படியே அவர்கள் விழுங்கிக் கொண்டு  ஊடகங்களில் பரப்புகிறார்கள். அவை நம் மனதில் மெல்லமெல்ல ஊறி ஆழமான எண்ணங்களாக ஆகி அந்தக்கோணத்திலேயே நம்மை சிந்திக்கச் செய்கின்றன.

உங்களை வாசந்தி பாதித்திருக்கிறார். ஆகவே வடகிழக்கு பிரிந்துபோகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து அந்தக் கோணத்தில் பார்க்க பழகிவிட்டிருக்கிறீர்கள். அந்த முடிவுக்கு வாசந்தி எப்படி வந்தார்? அவருக்கு அடிப்படை வரலாறோ அரசியலோ தெரியாதென்பதே என் எண்ணம். அவர் பிற ஊடகக் கட்டுரைகளை வாசிக்கிறார். அதில் இருந்து தன் முடிவை அடைகிறார். அதற்கான ‘ஊக்குவிப்புகள்’ அவருக்கு கிடைக்கின்றன.

அந்த ஊடகக் கட்டுரைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை.  அன்னிய ஆதிக்க — சீர்குலைவு நோக்கங்கள் கொண்டவை. அதைப்பற்றி வாசந்தி போன்றவர்களுக்குக் கவலை இல்லை. அங்கே வன்முறை வெடித்து மக்கள் செத்தால் பட்டினி கிடந்தால் கவலை இல்லை. அதைப்பற்றி மேலும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதலாமே.

எல்லா மூன்றாமுலக நாடுகளிலும் குறுந்தேசிய பிரிவினைவாதங்களை ஆயுத உற்பத்திநாடுகள் உருவாக்குகின்றன. அவற்றை முன்வைத்து எழுதும் எழுத்துகக்ளை ஊக்குவிக்கின்றன. தங்கள் குறுந்தேசியப்பிரச்சினைகளை அவை முழுமையாகவே சமரசப்படுத்தி ஒடுக்கி ஒற்றைதேசியமாக ஆகி மேலும் மேலும் பெருந்தேசியங்களாக ஆகிக் கொண்டிருக்கின்றன- இதுவே சமகால உலகவரலாறு. நம் அறிவுஜீவிகள் அவர்களின் இரைகள். அல்லது ஒற்றர்கள்.

நான் சொன்ன விஷயங்களை மீண்டும் சுருக்கிச் சொல்கிறேனே

1. ஒரு தேசிய உருவகம் என்பது எதற்குப் பயன்படுகிறது என்பதே அளவுகோல். இந்திய தேசியம் என்ற பெரும் கட்டுமானம் அதன் உள்ளுறுப்புகளின் சீரான வளர்ச்சிக்கு உதவும் என்பதே இன்றைய யதார்த்த நிலை.

2. பல குறுந்தேசியங்கள் இன-மத-சாதிய அடிப்படைகள் கொண்டவை. ஆகவே அவை பேரழிவை விதைப்பவை. இந்திய தேசியம் இந்த நிலப்பரப்பில் நெடுங்காலமாக மக்கள் பரவலாக்கம் இருப்பதனால் இயல்பாகவே உருவானது. ஆனால் இதற்கு மாற்றாகப் பேசப்படும் தேசியங்கள் எல்லாமே மத- இன-மொழி-சாதிய அடிப்படைவாத நோக்கு கொண்டவை.

3. ஆகவே குறுந்தேசியக் கோரிக்கைகள் மக்களை பிளவுபடுத்தி போராடி அழியவே வகை செய்யும். எவ்வகையிலும் முன்னேற்றத்துக்கு உதவாது

நீங்கள் சொல்லும் காரணங்களில் வடகிழக்குக்கு இந்தியாவில் நில இணைப்பு இல்லை என்பது அபத்தம். இந்தியாவில் எத்தனையோ பகுதிகள் அப்படித்தான். ஏன் கன்யாகுமரி மாவட்டத்துக்கு தமிழகத்துடன் உள்ள ஒரே இணைப்பு ஒன்றரைகிமீ அகலம் உள்ள ஆரல்வாய்மொழி கணவாய் மட்டும்தான்

மையத்து மக்களின் ஆணவம் அல்லது அலட்சியம் பற்றிச் சொன்னீர்கள். இதுவே உங்கள் பிரிவினை ஆதரவு மனநிலையின் சாரம். ஆனால் இதுவும் ஆதாரமில்லாத ஒரு மனப்பதிவுமட்டுமே. டெல்லியில் ‘வட இந்தியர்’ கள் நம்மை நல்லவிதமாக நடத்துவதில்லை என்கிறீர்கள்.. ஆனால் யார் இந்த வட இந்தியர்கள்? ஏற்கனவே பணத்தால் அதிகாரத்தால் சில இடங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் மிகச்சிறிய ஒரு கூட்டம். இன்று எழுச்சி பெற்று வரும் தென்னக மக்களைப்பற்றி அவர்கள் உணரும் பாதுகாப்பின்மை காரணமாக அவர்களுக்கு ஒரு முரட்டுத்தனம் ஏற்படுகிறது
வட இந்திய மக்கள் என்பவர்கள் இவர்கள் அல்ல. கோடிக்கணக்கான கிராம மக்கள். ஏழை எளிய மக்கள். அவர்களின் ஊடாக வாழ்ந்திருக்கிறேன். அபாரமான மரியாதையும் பிரியமும் மட்டுமே எனக்கு கிடைத்திருக்கின்றன. கய்னாகுமரி என்னும்போதே கண்கள் மலர அமருங்கள் லஸ்ஸி சாப்பிடுங்கள் என்று சொல்லும் மக்களையே நான் கண்டிருக்கிறேன்.

வட இந்தியரைப்பற்றிய உங்கள் இதே உணர்ச்சியை தாழ்த்தபப்ட்டவர்கள் பிற சாதியைப்பற்றி உணர்கிறார்கள். பிற்படுத்தபப்ட்டவர்கள் பிராமணர்களைப்பற்றி உணர்கிறார்கள். இதுவா தனிநாடாக பிரிவதற்கான காரணம்? வளர்ச்சி மூலம். பேரம் மூலம் ஒரு கூட்டமைப்பில் தங்களுக்குரிய பங்கை எந்த தரப்பும் பெற முடியும்.

நாளை வடகிழக்கு சுதந்திரம் பெற்றாலும் அங்கே இதே சிக்கல் இருக்குமே. தமிழகம் சுந்தந்திரம் பெற்றால் குமரிமாவட்ட மகக்ள் இதே நியாயத்தை பேசமுடியுமே?

இதேபோல இன்னொரு தப்பான மனப்பதிவு– இதுவும் அரைவேக்காட்டு ஊடகங்களால் உருவாவது- வடகிழக்கு வசதியாக இருக்கிறது என்பது. நகரங்களில் மிஷனரிகளின் அமைப்புகள் சார்ந்து வாழும் மக்களின் ஒரு சிறு வட்டத்தில் மட்டுமே நீங்கள் அங்கே ஒரு நடுத்தர வற்க்கச் செழிப்பை காணமுடியும். ஒருசிலர் இங்கிலீஷ் பேசினாலே அப்பகுதி முன்னேறிவிட்டது என்ற எண்ணம் கொள்ளும் ஆங்கில ஊடக அசடுகள் நம் சிந்தனையை தீர்மானிக்கிறார்கள்.

மாறாக வடகிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் தொழில்களே இல்லை. சந்தைகளையும்  பண்ணைகளையும் போரளிக்குழுக்கள் கப்பம் வசூலிக்க பயன்படுத்துகிறார்கள். ஆகவே உற்பத்தியும் வினியோஅமும் முடங்கி பொருளியல் பக்கவாதம் வந்து கிடக்கிறது அப்பகுதி. போராளிக்குழுக்கள் பிரிந்து பிரிந்து ஒன்றுடன் ஒன்று போராடி ஒவ்வொரு குழுவும் தண்டம் வசூலிக்கின்றன. மணிப்பூர், மேகாலயா நாகாலாந்தின் உட்பகுதிகள்தான் இந்தியாவிலேயே மிகமிக வறுமை மிக்க பகுதிகள்.

தோண்டி எடுக்கும் கிழங்குகளும் கொட்டைகளும் பச்சை டீயும் மட்டுமே உணவாக மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்த வறுமைக்குக் காரணம் இந்தியா என அவர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். இது நேரில் காணும் உண்மை. பூனைகளையும் காட்டுநாய்களையும் பிடித்து சாப்பிடுகிறார்கள் மக்கள். காட்டுநாயை நானே சாப்பிட்டேன்.

இந்த இரண்டு வருடத்தில் மணிப்பூர் மேகாலயா இளைஞர்களும் இளம்பெண்களும் சென்னை ஓட்டல்கள் அனைத்திலும் அடிநிலை வேலைகளுக்கு வந்து நிரம்பியிருக்கிறார்கள் தெரியுமா?  காரணம் இங்கே உள்ள இளைஞர்களுக்கு வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. அடிநிலை ஓட்டல் வேலைக்கு வர அவர்கள் தயாராக இல்லை. ஆனால் மணிப்பூர் மேகாலயா இளைஞர்களுக்கு அது நாம் வளகுடா நாடுகளுக்குச் செல்வதுபோல!

சென்ற இருபதாண்டுகளில் இந்தியாவில் பெரும் வளர்ச்சி அடைந்த பகுதிகள் தென்னக மாநிலங்கள். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம். [கேரளம் பணவிடைப் பொருளியலில் முடங்கி கிடக்கிறது] குஜராத் ஏற்கனவே முன்னேறிய பகுதி. பஞ்சாப் இந்தியாவின் முதல் உலகம். இங்கே வட இந்தியா எங்கே வந்தது?

சென்ற இருபதுவருடங்களாக இந்திய அரசியல்  என்பது வலுவான கூட்டரசியல். தென்னகப் பங்களிப்பே இந்திய அரசியலின் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. வருங்காலத்தில் இது இன்னமும் தெளிவடையும்.

இதை உடைத்து குறைந்தது ஐம்பது சிறுநாடுகளாக இப்பகுதி ஆவதன் மூலம் லாபம் அடையப்போவது யார்? அந்தப்பெரும் போராட்டம் மூலம் உருவாகும் மக்கள் இடப்பெயர்வு , அதன் வன்முறைகள் கசப்புகள் மானுடத்துயரங்கள் , வளப்பகிர்வின் விளைவாக உருவாகும் பூசல்கள் போர்கள், அந்த குறுந்தேசியங்களின் அடிப்படையாக உள்ள இன மத மொழி வெறிகள் மூலம் அவற்றுக்குள் உருவாகும் பூசல்கள் போர்கள் —  இவை அனைத்துக்கும் காரணமாக டெல்லியிலே சில பஞ்சாபிகளும் பிகாரிகளும் சில சென்னைக்காரர்களை நோக்கி நக்கல் அடிக்கிறார்கள் என்பதை முன்வைக்க முடியுமா?

சிந்தனைசெய்து பாருங்கள்

ஜெ

தேசிய சுய நிர்ணயம்

முந்தைய கட்டுரைவாஷிங்டன் டி சி சந்திப்பு
அடுத்த கட்டுரைகடிதங்கள்