அயன் ராண்ட் 1

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்,நலம்தானே. அயன் ராண்டின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரது ·பௌண்டன் ஹெட் [Fountainhead]மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் [Atlas shrugged]  பற்றி பேசினீர்களென்றால் நன்றாக இருக்கும்.

அன்புடன் ரவி

பி.கு. நான் உங்களை 2006ல் மதுரை புத்தகச்சந்தையில் சந்தித்தபின் வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறேன்

அன்புள்ள ரவி,

மன்னிக்கவும், எனக்கு உங்கள் பெயருடன் முகம் நினைவுக்கு வரவில்லை. நெடுநாளாகிவிடது. நேரில்பார்த்தால் தெரிந்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நான் இருக்கும்போது உங்கள் கடிதம் வந்தது. மிகவும் தாமதமாக பதில் எழுதுகிறேன். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அன்று  நான் சிவராமன் என்ற நண்பருடன் மெல்பர்ன் நகரைச் சுற்றினேன். திரும்பி ரயிலில் செல்லும்போது அவர் என்னிடம் அயன் ராண்ட் குறித்து கேட்டார். அவர் ஒரு கட்டிட நிபுணர். அவரது ஆர்வத்துக்குக் காரணம் தெரிந்திருக்குமே. அவர் அண்ணா பல்கலையில் சேரும்போதே மூத்த மாணவர்கள் ·பௌண்டன்ஹெட் படி என்று சொல்லி கையிலே கொடுத்துவிட்டார்களாம். அயன் ராண்டின் கொள்கைகளைப் பற்றி என் கருத்தை மெட்ரோ ரயிலில் பேசிக்கொண்டே சென்றேன்.

பின்னர்சென்னை திரும்பி என் நண்பர் பாலா மற்றும் விஜி ஆகியோர் வீட்டில் தங்கி பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் அயன் ராண்ட் பேச்சில் வந்தார். அவர்கள் இருவருமே வேளாண் தொழிலிய முதுகலை பட்டதாரிகள். விஜி மேலே ஆய்வுசெய்கிறார். பாலா ஒரு நிறுவன உயரதிகாரி. என் இணையதளத்தில் பாலாவின் கடிதங்களைப் பார்த்திருக்கலாம்.அவர்கள் கல்லூரிக்குச் சென்றதுமே ‘வாசித்தாகவேண்டிய’ நூல் என்றால் அயன் ராண்டின்ட் ·பௌண்டன் ஹெட் தானாம். விஜி இரண்டே பகலிரவுகளில் அதைப் படித்து முடித்ததைப் பற்றிச் சொன்னார்.

நம் உயர்கல்வித்துறைகளில் மட்டும் ஏன் அயன் ராண்ட்டுக்கு இத்தனை முக்கியத்துவம்? நம் நாட்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு மாணவர்கள் தேர்வுசெய்யப்படும்போது அவர்களிடம்  சொல்லப்படும் முதல் சொற்றொடர் ”நீங்கள் விசேஷமாகத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்” என்பதே. அந்த எண்ணம் இருந்தால் மட்டும்மே அவர்களால் ‘நல்ல’ அதிகாரிகளாக விளங்க முடியுமாம். தாங்கள் ‘குடிமக்கள்’ அல்ல ‘ஆட்சியாளர்கள்’ என்று அவர்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் அவர்கள் அரசின்பக்கமாக எப்போதுமே நிலைபாடு எடுக்கமுடியும். ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த வழிமுறை இன்றும் தொடர்கிறது.

இந்திய ஆட்சிப்பணிப் பயிற்சியை நான் கவனித்திருக்கிறேன். அது அந்த மாணவர்களை தங்களை சலுகை பெற்றவர்களாக எண்ணச்செய்வதற்கான பயிற்சி மட்டுமே. அவர்கள் இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், தடைசெய்யபப்ட்ட பகுதிகளில் கூட சுற்றுலா கொண்டுசெல்லப்படுவார்கள். எந்த சட்டமும் அவர்கலுக்கு வளையும்  என்று காட்டப்படும். பாதுகாக்கப்பட்ட கன்னிவனத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் சிகரெட் பிடித்தபடி அம்மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு செல்வதைக் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு தங்களுக்குரிய வேறுவகையான அற- ஒழுக்க மதீப்பிடுகள் உண்டு.

இதேபோலத்தான் இந்தியச் சூழலில் தொழிலியக் கல்வி பெறுபவர் பின்னர் உயர்மட்ட வேலைக்குச் சென்று உயர்மட்ட குடிமகனாக ஆகப்போகிறார். அவர் ‘பொதுமக்களின்’ அற- ஒழுக்க மதிப்பிடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தங்கள் மட்டத்துக்குரிய தனி மதிப்பீடுகள் கொண்டவராக ஆகவேண்டும். அதற்கான ஆரம்பப் பயிற்சியே அயன் ராண்ட்ண்டின் அந்நாவல் வழியாக அளிக்கப்படுகிறது. தங்களை ‘தெரிவு செய்யப்பட்ட’ வர்களாக உணரும் அந்த வட்டத்தின் கோட்பாடு அயன் ராண்ட் முன்வைத்த  புறவயவாதம் [Objectivism]தான்.

இக்கணம் வரை நம் உயர்கல்வித்துறையில் இச்சிந்தனைதான் கோலோச்சுகிறது என்றால் மிகையல்ல. நம்  உயர்கல்வி மாணவர்களை தங்களை ‘உலகம் சமைப்பவர்களாக’ , உலகைச்சுமக்கும் அட்லஸ்களாக, உணரச்செய்கிறது அது. அதன்பின் ‘அழுக்கும் அறியாமையும் நிறைந்த’ இந்தியாவில் இங்குள்ள மனிதர்களுடன் சேர்ந்து வாழ அவர்களால் முடிவதில்லை. ‘ஞானபூமி’ யாகிய அமெரிக்கா சென்று அங்கே குடியுரிமை பெறும் கனவு ஆரம்பமாகிறது. உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தங்களால் நிபுணர்களுக்கும் மேலாக கருத்து சொல்லமுடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்த அபத்தத்தையே நாம் இணைய எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறோம்.

இந்தமனநிலை நடைமுறையில் உருவாக்கும் அழிவுகளுக்கு எல்லையே இல்லை. பெரும்பாலான இந்திய ஆட்சிப்பணி ஊழியர்கள் தங்களை முற்றுமுணர்ந்த ஞானிகளாகவே நினைக்கிறார்கள். எப்போதாவது ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிப்பாருங்கள். நீங்கள் சொல்லும் எதையாவது ஐந்துநிமிடமாவது அவர் கவனிக்கிறாரா என்று பாருங்கள். அவர்களிடம்  எந்த நிபுணரும் எதையும் சொல்லிவிட முடியாது, அவர்கள் சொல்வார்கள் நாம் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த நோக்கிலேயே ஒட்டுமொத்த  இந்திய நிர்வாக அமைப்பும் செயல்படுகிறது. கதர் வாரியத்துக்கும், பனைபொருள் வாரியத்துக்கும், சுகாதார நிர்வாகத்துக்கும், போக்குவரத்து வாரியத்துக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள். மாநகராட்சி நிர்வாகத்துக்கும், கூட்டுறவு நிர்வாகத்துக்கும், நூலக மேலதிகாரியாகவும், கலாச்சரச்செயலாளராகவும், கல்வித்துறைச் செயலராகவும் எல்லாம்  அவர்களே மாறி மாறி  அனுப்பப்படுவார்கள். அந்தத்துறை சார்ந்த நிபுணர் அவர்களுக்குக் கீழேதான் பணிபுரிவார்.

இவர்களிடம் இவ்வாறு உருவான மேட்டிமைவாதமே நம்முடைய நிர்வாகத்தின் முரட்டுப்போக்குகளுக்கு காரணம் என்றால் மிகையல்ல. சூழலியல் சம்பந்தமான எளிய தகவல்களை இவர்களுக்குச் சொல்ல பட்டபாட்டை என்னிடம் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். புதிய எதுவுமே மண்டையில் ஏறாது. இவர்களின் அகங்காரமே ஈழப்பிரச்சினை போன்ற பல வெளியுறவுப் பிரச்சினைகளை சீரழித்தது.

நம் வேளாண் பட்டதாரிகளின் திமிரின் அழிவுகளைப்பற்றி எஸ்.என்.நாகராஜன் விரிவாக பேசிக்கேட்டிருக்கிறேன். பல்லாயிரம் வருட வேளாண் மரபின் அனுபவ ஞானம் திரண்ட மரபார்ந்த விவசாயிகளை ‘சொன்னால் புரிந்துகொள்ளாத’ முட்டாள்களாகவே இவர்கள் நடத்தினார்கள். ஒரு விவசாயிக்குத் தெரியாமல் அவன் நிலத்தில் பூச்சிவிஷங்க¨ளையும் ரசாயன உரங்களையும் கொண்டுபோய் போடுவது பிழையே அல்ல என்று நம்பும் அளவுக்கு மேட்டிமை அறவியல் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் இதை அவர்கள் அந்த முட்டாள் விவசாயிகளின் நலனுக்காகத்தானே செய்கிறார்கள்?

இவர்கள் இவ்வாறு இந்திய நிலங்களில் கொண்டுபோட்டவை இந்நாடு வேளாண்மையை ரசாயன நிறுவனங்களுக்கு அடிமையாக்க்கின என்பது வரலாற்று உண்மை. இந்த மேதாவிகள் உண்மையில் வெளிநாட்டு நிறுவங்களின் அடியாட்களாக அவர்களை அறியாமலே செயல்பட்ட்டார்கள்.

ஆக, அயன் ராண்ட் ஒரு வெறும் நாவலாசிரியர் அல்ல. ஒரு தத்துவ சிந்தனையாளர் அல்ல. அவர் நம் இளைஞர்களின் முதிரா இளமையில் அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு போதை. அயன் ராண்ட்டைக் கடந்து செல்லும் மாணவர்கள் பத்து சதவீதம்கூட இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் கடுமையான தொழில்கல்வியின் சுமையாலும், பின்னர் போட்டிகள் நிறைந்த வேலையாலும் முழுக்க ஆக்ரமிக்கப்படுகிறார்கள். பிற்பாடு அவர்கள் எதையுமே படிப்பதில்லை.

அயன் ராண்டைக் கடந்து செல்வது மிக எளிது. மேலைத் தத்துவசிந்தனையின் பரிணாமத்தை ஒரே ஒரு நல்ல நூலைப்படித்துப் புரிந்துகொண்டாலே போதும். அதற்கு என் சிபாரிசுகள் இரண்டு, 1. தி ஸ்டோரி ஆ·ப் பிலாச·பி   – வில் டுரண்ட் 2. ஸோ·பீஸ் வேர்ல்ட் . புறவயவாதம் ஒரு பெரிய அறிவு விவாதத்தின் ஒரு சிறு தரப்பு மட்டுமே என்பதை அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

தத்துவம் என்பது எப்போதுமே ஒரு விவாதத்தரப்பாக மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும். தத்துவத்தை ஒரு பெரிய உரையாடலாக மட்டுமே நாம் காண வேண்டும். தத்துவம் ஒன்றுடன் ஒன்று முடிவிலாது மோதி உரையாடிச்செல்லும் ஒரு பிரவாகம். சுபக்கம்-பரபக்கம் என்று இருபாற்பட்டதாகவே எந்த தத்துவ ஞானமும் இருக்க வேண்டும். அப்படி  இல்லாமல் சுபக்கம் மட்டுமே இருக்குமென்றால் அது மதமே ஒழிய தத்துவஞானம் அல்ல.

அயன் ராண்ட்டின் புறவயவாதத்தை அவ்வாறு ஒரு தத்துவஞானமாகப் புரிந்துகொள்ளாமல் ஒரு விவேகஞானமாக நம்பிக்கொண்டால் அதன் மிகக்கீழான ஒரு வடிவமே நம் கைக்குச் சிக்குகிறது. அது நம் மனிதாபிமானத்தை அழிக்கும். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் பண்பாட்டு வேரும் எதுவுமே இல்லாத அதிகார யத்திரங்களாக நம்மை அது மாற்றும். அப்பட்டமான சுயநலத்தின் உயர்ந்த பீடத்தில் நம்மை உட்காரச்செய்யும். சுயநலத்துக்குரிய நியாயப்படுத்தல்களையே நமக்குரிய அறங்களாகக் கற்பனைசெய்துகொள்ளச் செய்யும். நம் பிரபஞ்சம் என்பது நம் தலைக்குள் இருக்கும் புரோட்டீன் உருளை மட்டுமே என நம்மை நம்பவைக்கும்.

நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.

இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். அயன் ரான்ட் கடைசிக்காலத்தில் மனநோய் நிலையத்தில் இருந்தார், மனமுடைந்த நிலையில் இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.

அயன் ராண்ட் பற்றிய இந்த விவாதத்தின் ஒரு முக்கிய கருத்தாகச் சொல்லவேண்டிய ஒன்று உள்ளது. அயன் ராண்ட் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர் அல்ல என்பதுதான். பொதுவாக நாம் அமெரிக்க மதிப்பீடுகளை ‘அப்படியே’ ஏற்றுக்கொள்ள பழகிவிடிருக்கிறோம். அங்குள்ள ஊடகங்களால் போற்றிப்புகழப்பட்டு ஒரு ‘கல்ட்’ ஆக முன்வைக்கப்படும் பல நூல்கள் உண்மையில் விவேகச்சமநிலையோ தரிசன ஆழமோ இல்லாதவை. உதாரணம் எரிகா யங்கின் ‘·பியர் ஆ·ப் ·ப்ளையிங்’ ரிச்சர்ட் பாக்ஹின் ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ போன்றவை.

தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.

அமெரிக்க இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்கள் ஐசக் பாஷவிஸ் ஸிங்கர், எடித் வார்டன், ரேமண்ட் கார்வர், வில்லியம் சரோயன், போன்றவர்களால் எழுதப்பட்டவையே என்றும் அவைதான் அமெரிக்க மனதை நாம் கற்பனைசெய்து அறிய உதவும் இலக்கிய ஆக்கங்கள் என்றும் நான்  நினைக்கிறேன். என் அமெரிக்க இலக்கிய வாசிப்பு எல்லைக்குட்பட்டது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். சட்டென்று நான் ஆர்வமிழந்துவிட்டேன்.

இலக்கியத்தைப் பொருட்படுத்தாமல் நடைமுறைத்தளத்தில் வாசிக்க விரும்புபவர்களுக்குக் கூட கார்ல் சாகன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களின் புனைவு-அபுனைவு எழுத்துக்களே உண்மையிலேயே உதவிகரமானவை. அயன் ராண்ட் பற்றிய என் கருத்தை இங்கே எழுதக்காரணம் அவர் நம் இளம் வாசகர்களில் உயர்கல்வி பெற்றவர்கள் நடுவே பெற்றுள்ள தவறான செல்வாக்கு மட்டுமே
[மேலும்]

 

 

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேர்தல்:கடிதங்கள்