இவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு

இவான் இல்யிச் எழுதிய ‘மருத்துவ இயலின் எல்லைகள்’ [Medical Nemesis] ன்ற நூல் 1975 ல் வெளிவந்தது. இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன். அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு அழுத்தமான விடையளிக்கக் கூடியதாகவும் மருத்துவம், உடல்நலம் பற்றிய ஓர் நிலைபாட்டை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது அந்நூல். பலமுறை விரிவான குறிப்புகள் எடுத்துக் கொண்டு அதை கிட்டத்தட்ட கற்றிருக்கிறேன்.

இன்று இருபதுவருடங்கள் கழித்து இக்கட்டுரைக்காக அந்நூலை மீண்டும் புரட்டிப் பார்த்தபோது அவர் சொன்ன பல விஷயங்கள் பாமரரும் தெரிந்துள்ள உண்மைகளாக மாறியுள்ளமையே கண்ணுக்குப் படுகிறது. அவரது விரிவான ஆய்வும், அவரளிக்கும் தரவுகளும் இப்போது பெரும்பாலும் பொருளிழந்துவிட்டன. மேலதிக தகவல்களும் மேலதிக கோட்பாடுகளும் வந்து குவிந்துவிட்டன. தமிழிலேயேகூட ஏராளமாக எழுதப்பட்டுவிட்டது.

 

 

ஆயினும் இன்றும் இந்நூல் முக்கியமானதாகவே படுகிறது. முதன்மையாக, இதுவே இத்துறையின் முன்னோடிநூல். மருத்துவத்துறையில் ஏராளமாக எழுதப்பட்டிருக்கலாம். மருத்துவத்துக்கு ஆளாகும் சமூகத்திலிருந்து அதன் சிந்தனையின் நுனியாகிய ஒரு தத்துவஞானியால் முன்வைக்கப்பட்ட முன்னோடி நூல் இது.

இரண்டாவதாக வைத்தியத்தின் அறவியல் குறித்து இது முன்வைக்கும் கருத்துக்களும் உருவகங்களும் இன்றும் சிந்தனைக்கு உரியவை. உலக அளவில் மருத்துவத்துறைமீதான சட்டக் கண்காணிப்பு உருவாவதற்கு இந்த நூல் முக்கியமான காரணமாகும்.

அதைவிட முக்கியமாக எண்பதுகள் வரை இருந்த ஒரு புத்துலகம் குறித்த பெருங்கனவின் ஆவணம் இந்நூல். நமது உலக அமைப்பு முன்வைக்கும் அனைத்துக்கும் முழுமையான மாற்று அமைப்புகளை உருவாக்கிவிட முடியும் என்ற கனவை இதுவும் முன்வைக்கிறது. நமது பெருமுதலிய அமைப்பின் அறமின்மைக்கு மாற்றாக அறத்தில் ஊன்றிய உலகக் கட்டுமானம் ஒன்றை உருவாக்குதலில் தனக்குரிய பங்கை ஆற்ற இந்நூலில் இவான் இல்யிச் முனைகிறார். இன்று இதை தூசிதட்டி வாசிக்கும் போது பல விதமான சிந்தனைகளும் மனக்குழப்பங்களும் நெஞ்சில் அலைமோதுகின்றன.

இவால் இல்யிச் வியன்னாவில் 1926ல் பிறந்தார். தத்துவத்தில் பட்டம் பெற்றார். அவருக்கு ஆர்வமுள்ள துறை என்றால் வரலாற்றியலைச் சொல்ல வேண்டும். ஆர்னால்ட் டாயன்பியின் வரலாற்றுக் கொள்கை குறித்து ஆய்வுசெய்திருக்கிறார். அவருக்கு இந்தி உட்பட பத்து மொழிகள் தெரியும். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கு பலமுறை வந்துள்ளார், ஒருமுறை சென்னைக்கும் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

இல்யிச் ஓர் ‘அமைப்பு மறுப்பாளர்’ [anarchist] சமூக வாழ்க்கையின் பல இன்றியமையாத கூறுகளை அமைப்புகள் சார்ந்ததாக ஆக்குவதன் மூலம் நாம் எவ்வாறாக அதிகாரங்களைக் கட்டியெழுப்பி பின்னர் மெல்ல மெல்ல அவற்றை முற்றிலும் எதிர்மறையானதாக ஆக்கிக் கொள்கிறோம் என்பதே இவான் இல்யிச்சின் முக்கியமான ஆய்வுக் கோணமாக அமைந்தது. அவர் ஈடுபட்ட எல்லா தளங்களிலும் இந்நோக்குடனேயே செயல்பட்டிருக்கிறார்.

‘பள்ளி நீக்கம்’ [Deschooling Society] இவான் இல்யிச் எழுதிய முதல் நூல். உலகமெங்கும் பரவலான கவனத்தை பெற்ற நூல் இது. நமது கல்வியமைப்பு என்பது ஆளுமை வளர்ச்சிக்கு எதிரானதாக, ஆளுமையை ஒரே அச்சில் வார்த்து ஊற்றி அமைப்புமனிதர்களை உருவாக்குவதாக இருப்பதை இதில் இவான் இல்யிச் மிக விரிவாக விவாதிக்கிறார். நிறுவனமயமாக்கபப்ட்ட கல்வி என்பது சமூகத்தை ஒரு பெரிய நிறுவமனமாக ஆக்கும் பொருட்டு முயல்கிறது. ஆனால் வளரும் சமூகத்தில் கல்வி என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னைக் கண்டுகொள்ள உதவுவதாகவே இருக்கும். இந்நூலின் பல வடிவங்களை இந்தியமொழிகளில் பலர் எழுதியிருக்கிறார்கள். இப்போது நமது ஆரம்பப் பள்ளிக் கல்வியில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விளையாட்டுக் கல்வி’ முதலிய பல சீர்திருத்தங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்த நூல் இது.

இவான் இல்யிச் பிற்பாடு நவீனப் போக்குவரத்து உருவாக்கும் சமூகவியல் சிக்கல்கள் குறித்தும் நவீனத் தொழில்நுட்பத்தின் மானுடமறுப்பு அம்சம் குறித்தும் பல நூல்களை எழுதியிருக்கிறார். Celebration of Awareness[1971], Tools for Conviviality (1973) Energy and Equity (1974) The Right to Useful Unemployment (1978) Toward a History of Needs (1978) Shadow Work (1981) Gender (1982) H2O and the Waters of Forgetfulness (1985)ABC: The Alphabetization of the Popular Mind (1988) In the Mirror of the Past (1992) போன்றவை அவரது நூல்களில் முக்கியமானவை என இணையம் மூலம் அறிய முடிகிறது.

அமைப்புமறுப்பாளர் என்ற வகையில் இவான் இல்யிச்சை அன்றைய இருத்தலிய சிந்தனையாளர்களால் பாதிப்படைந்தவர் என்று சொல்லலாம். அமைப்புக்கு எதிராக தனிமனிதனை நிறுத்தி நோக்கியவர் இவான் இல்யிச். அதிகாரத்துக்கு எதிராக அறத்தை நிறுத்த முடியுமா என்று பார்த்தவர்.

ஆய்வுமுறைமைக்கு அதிக முக்கியமளித்து, புறவயமான உண்மைகளுக்காக எப்போதுமே முயற்சிசெய்யும் ஐரோப்பிய அறிவியக்கத்தின் உருவாக்கம்தான்  இவான் இல்யிச்சும். அவரது விமரிசகர்கள் அவரைப் பற்றிச் சொல்லும் முக்கியமான குற்றச்சாட்டே அவர் கருத்துக்களை சீக்கிரமாகவே கோட்பாடுகளாக ஆக்கிக் கொள்கிறார் என்பதே. அவரது சமகாலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட வில்ஹெல்ம் ரீச், அண்டோனியோ கிராம்ஷி, எரிக் ·ப்ராம் போன்றவர்கள் மீதும் பிற்பாடு வைக்கபப்ட்ட குற்றச்சாட்டுதான்  இது.

ஆனால் இன்னொரு கோணத்தில் இவான் இல்யிச்சை இ.எம்.ஷ¤மாக்கர், மாஸானபு ·புகுவேகா போன்றவர்களுடன் ஒப்பிட்டு யோசிக்கலாம். நவீன நாகரீகம் என்று நாம் சொல்வதின் அதிகார உருவாக்கத்தைப் பற்றி ஐயப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும். தங்கள் தளங்களில் அதற்கான மாற்று குறித்து சிந்தனை செய்தவர்கள். எண்பதுகளில் இவர்களையெல்லாம் சேர்த்துப் பேசுவதே பொதுவான வழக்கமாக இருந்தது. இவான் இல்யிச்சின் ஐரோப்பியதத்துவமரபு சார்ந்த ஆய்வு நோக்குக்கும் ·புகுவேகாவின் கீழைமெய்யியல் சார்ந்த தரிசன நோக்குக்கும் இடையே பூமியளவுக்கு தூரம் இருந்தாலும்கூட அவை ஒரே மையத்தில் குவிந்தன. ஒரு புதிய உலகம்!

எண்பதுகளில் கேரளத்தில் இவற்றை ஆர்வமுடன் வாசித்த என்னைப்போன்ற வாசகர்களை பெரிதும் கவர்ந்த அந்த ஒட்டுமொத்த சிந்தனையலை அப்படியே பின்னர் வந்த பின்நவீனத்துவ அலையால் காணாமலாயிற்று என்பதை இப்போது பார்க்கும்போது வியப்பு ஏற்படுகிறது. ஐரோப்பிய சிந்தனைகளை ஐரோப்பாவின் சிந்தனை வேகமே அழித்துவிடுகிறதா என்ன என்ற எண்ணமும் உருவாகிறது.

யோசிக்கும்போது மேலும் ஒன்று தோன்றுகிறது. இத்தகைய அமைப்புஎதிர்ப்புச் சிந்தனைகள் அனைத்துமே சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியை ஒட்டி சட்டென்று வலுவிழந்து மறைந்தன என்று. வெறும் மனப்பதிவாகவும் இருக்கலாம். சோவியத் ருஷ்யா அல்லது கம்யூனிசம் இச்சிந்தனைகளை ஆதரித்தது என்று சொல்ல வரவில்லை. ஆனால் அந்த நாடு இருந்தவரை ஓர் உலகளாவிய மாற்று அமைப்பு சாத்தியம் என்ற எண்ணம் உலகச் சிந்தனையாளர் மனதுக்குள் இருந்தது. அதன் வீழ்ச்சி அந்த உள்ளார்ந்த நம்பிக்கையை தகர்த்தது. அந்த வெற்றிடத்திலேயே பின்நவீனத்துவ சிந்தனைகள் முக்கியத்துவத்தைப் பெற்றன.

இன்னொரு வகையில் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி உலகமெங்கும் சிந்தனையாளர் மத்தியில் இனவாத, மதவாத சிந்தனைகளுக்கான இடத்தை அதிகரித்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. எழுபதுகளின் அமைப்புமறுப்பு சிந்தனைகள் உலகத்தையே தங்கள்முன் கண்டுகொண்டு பேசியவை. இவான் இல்யிச் பத்துமொழி தெரிந்திருந்தாரென்றால் அவர் உலகத்துடன் பேச விரும்பினார் என்பதே காரணம். உலகம் முழுக்க பறந்து கொண்டிருந்தார் அவர். ·புகுவேகா ஜப்பானியப் பண்பாட்டை பேசவில்லை, அவர் உருவாக்க விரும்பிய புதிய உலகைப் பற்றியே பேசினார். தங்கள் எண்ணங்களை உலகம் முழுக்க செல்லுபடியானவையாக ஆக்கும் விருப்பிலேயே அவர்கள் அவற்றைக் கோட்பாடுகளாக ஆக்க மு¨னைந்தனர்.

மார்க்ஸியத்தை ஏற்காதவர்கள், மறுப்பாளர்கள் கூட புதியஉலகம் பற்றிய கனவை மார்க்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டிருந்தார்கள் என்று படுகிறது. அவர்களெல்லாம் மார்க்ஸியர்களுடன்தான் ஓயாமல் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த புதியஉலகம் குறித்த கனவு இப்போது முற்றிலும் இல்லை. இருபது வருடங்கள் முன்பு இச்சிந்தனையாளர்கள் பற்றி நான் படித்த நாட்களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தால் நடத்தப்பட்ட கம்யூனில் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் பயிற்சி வகுப்புகள் இருக்கும். தீராத விவாதங்கள். அந்த வேகம் இப்போது வெறும் கனவாக மாறிவிட்டிருக்கிறது.

சோவியத் ருஷ்யா அதனளவில் எப்படிப்பட்ட அதிகார அமைப்பாக இருந்தாலும் ஒரு பெரும் குறியீடாக உலகம் முழுக்க சிந்தனையாளர்களை ஊக்கமூட்டிக் கொண்டிருந்தது என்று அது இல்லாமலாகி பத்துவருடம் கழிந்த இன்று தெளிவாகவே உணர முடிகிறது. இன்று உலகளாவிய ஓர் இலட்சியக் கனவே சாத்தியமல்ல என்ற நிலை உருவாகியிருக்கிறது. உலகை ஒன்றாக இணைக்கும் ஒரே விஷயமாக இன்று தொழில்நுட்பம் மட்டுமே நம் முன் உள்ளது. புத்துலகம் என்பது தொழில்நுட்பம் மூலம் உருவாக வாய்ப்புள்ள ஒன்று என்பதே இன்று நம் முன் உள்ள கனவு.

தொழில்நுட்பம் என்பது முழுக்கமுழுக்க பெருமுதலீட்டின் கருவி என்ற நிலை இன்று உள்ளது. ஆகவே இன்று நமது புத்துலகக் கனவுகளனைத்துமே பன்னாட்டுப் பெருமுதலியத்தின் கனவுகளைச் சார்ந்தே நிகழ முடியும். அதன் அதிகாரக் குவிப்பு, அதன் சுரண்டல், அதன் மனித மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக முன்வைக்க ஓர் உலகக் கனவு என்பது எவரிடமும் இல்லை.

அப்படிப் பார்த்தால் தொண்ணூறுகளில் பின்நவீனத்துவம் உலகளாவிய அறிவதிகாரத்தைச் சிதைத்தழித்தது எந்த அளவுக்கு பொறுப்பானசெயல் என்ற வியப்பு ஏற்படுகிறது. கோட்பாடுகள் மூலம் உருவாகும் அறிவின் அதிகாரத்தை அது இல்லாமலாக்கியது. உலகளாவிய கனவுகளை பொருளில்லாமலாக்கியது. ஏன், சிந்தனைகளை பேரமைப்பாக தொகுத்துக் கொள்வதையே தவறானதாக ஆக்கியது. இவான் இல்யிச் போன்றவர்களின் நூல்கள் பின்னகர்ந்தமைக்குக் காரணம் இதுவே

ஆனால் அதன் விளைவாக உலகப் பெருமுதலியத்தின் முற்றதிகாரத்துக்கு எதிராக மாற்று உலகைக் கற்பனைசெய்ய முயன்ற அறிவமைப்புகள் மட்டுமே சிதைந்தழிந்தன. மார்க்ஸிய சிந்தனைகள் மட்டுமல்ல, மார்க்ஸியத்தை எதிர்த்த பிற அமைப்புஎதிர்ப்புச் சிந்தனைகளும் கூடத்தான். கண்முன்னாலேயே காண்கிறோம், எண்பதுகளில் தமிழ்நாட்டில்கூட ஓர் அலையை உருவாக்கிய இயற்கைவேளாண்மை முதலிய சிந்தனைகள் இன்று அவற்றின் புத்துலகக் கனவை இழந்து, வேறு ஒருவகை சிறுதொழில்நுட்பமாக மட்டும் மாறி, புழக்கத்தில் உள்ளன.

நவீனத்தொழில்நுட்பத்தையும் அதன் அறிவுப்புலமாக உள்ள நிரூபணவாத அறிவியலையும் பின்நவீனத்துவச் சிந்தனைகள் தீண்டக்கூட முடியவில்லை. மந்திரத்தால் மலையை அகற்ற முயல்வதுபோல கட்டவிழ்க்கிறேன் பேர்வழி என்று கட்டுரைகளை எழுதித்தள்ளி சில உருவகங்களை உருவாக்கினார்கள். வேறு எதுவுமே நிகழவில்லை. உலகளாவியப் பெருமுதலியம் தன்னை அனைத்து தளத்திலும் விரித்துக் கொண்டு மானுடவாழ்வும் கனவும் அதுவன்றி பிறிதில்லை என்ற நிலையில் உள்ளது.

எண்பதுகளில் கேரளச் சூழலில் இவான் இல்யிச் முதலிய சிந்தனையாளர்கள் ஒரேசமயம் அலைபோலக் கடந்து வந்தமைக்கு அமைதிப்பள்ளத்தாக்கை காப்பதற்கான இயக்கம் போன்ற மக்களியக்கங்கள்தான் காரணம் என்று இப்போது தெரிகிறது. அந்நாட்களில் நான் அதற்காக நடைபயணம் சென்றிருக்கிறேன். துண்டுப்பிரசுரங்கள் எழுதியிருக்கிறேன். அந்த வேகத்திலேயே இவற்றை படித்தும் இருக்கிறேன். உண்மையான மக்களியக்கமே அறிவியக்கமாகவும் மாற முடியும்.

இன்றைய போராட்டங்கள் ஒன்று பெருமுதலியத்துக்கு எதிரான மூர்க்கமான கோபவெளிப்பாடுகள். பெரும்பாலும் அவை இன, சாதி, மத அடையாளத்துடன் நிகழ்த்தப்படுகின்றன. அல்லது பெருமுதலாலாளியத்திடம் கருணைக்காக யாசிக்கும் போராட்டங்கள். எல்லா போராட்டங்களிலும் பெருமுதலாளியல் தன்னார்வக் குழுக்கள் என்ற பதிலிஅமைப்புகள் மூலம் உள்ளே நுழைந்து அழித்து இல்லாமலாக்கி விடுகிறது.

இன்றைய சூழலில் இவான் இல்யிச்சின் இந்நூலை மீண்டும் படிக்கும்போது அதன் இன்றைய தேவை என்ன என்று சிந்திக்க வைத்தது. அதன் அறிவார்ந்த பங்களிப்பு இன்றும் உள்ளது. ஆனால் அதற்கும் மேலாக அதன் அமைப்புஎதிர்ப்பு நோக்கு என்பது நாம் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொண்டாகவேண்டிய இன்றியமையாத ஒரு சிந்தனை விதை. அதன் மாற்று உலகுக்கான கனவு என்பது நாம் தவறவிடக்கூடாத ஓர் ஆன்மீக அம்சம். அக்கோணத்திலேயே இன்று இந்நூலை வாசிக்கிறேன்.

 

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Jul 12, 2009

 

 

 

முந்தைய கட்டுரைகலையறிதல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59