பஸ்தர்- விவாதம்

குகைத்தொடரின் மிக முக்கியமான கட்டுரை. பயணம் என்பதன் முக்கியத்துவம் அதன் நேரடித்தனத்தில் அது நம்முள் படிவதில் அது நம் பார்வையில் உருவாக்கும் தாக்கத்தில் இருக்கிறது.

“இந்தப்பெரும் செல்வத்தின்மீது பஸ்தர் பழங்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். மிகமிகக்குறைவான மக்கள்தொகையினர் அவர்கள். அந்த தேசியசெல்வத்துக்கு அவர்கள் முழுமையாக உரிமை கொண்டாடவேண்டும் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அத்துடன் அங்குள்ள மாபெரும் விளைநிலப்பரப்பை இன்றைய இந்தியா அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதிலும் பொருத்தப்பாடு இல்லை. இந்தியாவின் தொழில்துறையும் விவசாயமும் அப்பகுதியை நோக்கிப்படர்வதைத் தவிர்க்கமுடியாது. தவிர்ப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவும் முழுமையாகவே காந்திய வழியில் கிராமப் பொருளியலை நோக்கி நகர்வது. நுகர்வு-தொழில்-வணிகப் பண்பாட்டை முற்றாக உதறுவது. அது இப்போது உடனடிச் சாத்தியம் அல்ல”.

இது அரசியல் சரித்தனம் கிடையாது. சுரண்டப்படும் பழங்குடியினர் Vs சுரண்டும் தேசிய பூர்ஷ்வாக்கள் என்று காண்பதுதான் முற்போக்கின் வழி. இந்த சமன்பாட்டை கலைத்தால் அவன் பிற்போக்குவாதி. இதை உடைத்துச்சொல்லும் நேர்மையும் துணிவும் சமநிலைப் பார்வையும் இன்றைய எழுத்தாளர்களில் வேறு யாரிடத்திலும் நான் கண்டதில்லை. அதுவும் அடுத்த பாராவில் தன் எண்ணப்போக்கு ”முற்போக்கிலிருந்து பிற்போக்காக” மாறியதை ஒப்புக்கொள்ள எத்தனை எழுத்தாளர்களுக்கு மனம் வரும்?

பஸ்தருக்கு வருவதற்கு முன் ஆங்கில ஊடகங்கள், அவற்றின் அரசியலை அப்படியே மொழியாக்கம் செய்யும் தமிழ் அரசியல் எழுத்தாளர்கள் எழுத்துக்களை வாசித்து என் மனதில் இருந்த பிம்பம் என்பது பஸ்தர் பழங்குடிகளின் நெருக்கமான வசிப்பிடங்களைக் கலைத்து அவர்களைத் துரத்தி அந்நிலத்தைக் கைப்பற்ற வேதாந்தாவும் டாட்டாவும் முயல்கிறார்கள் என்பதே. ஆனால் இந்த நிலம் வழியாகச் செல்லும் பயணம் நேர் மாறான சித்திரத்தை அளிக்கிறது. இப்பகுதி வெரியர் எல்வினின் கொள்கைப்படி அரசால் அப்படியே விடப்பட்டிருக்கிறது. விரிந்து பரந்த விளைநிலமும் கனிச்செல்வமும் வீணாகக் கிடக்க பழங்குடி வாழ்க்கை அப்படியே தேங்கி செயலற்றுக்கிடக்கிறது”.

கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

அருணகிரி

இதே வாதத்தை, திருவனந்தபுரம் கோவிலில் கிடக்கும் செல்வத்தின் மீதும் வைக்கலாம். மண்ணிற்குக் கீழ் இருக்கும் செல்வம் பஸ்தர் பழங்குடிகளுடையதல்ல என்றே வைத்துக் கொள்வோம். அது நிச்சயம் சைரஸ் மிஸ்திரியுடையதும், அனில் அகர்வாலுடையதும் அல்ல.

அந்தப் பஸ்தர் பழங்குடிகளை இடம் பெயர்க்கும் முன்பு, அவர்களுக்கு உண்மையான கல்வியும், வாழ்க்கையையும் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அரசு எடுத்த பின்பு, தொழில் மயமாவதை யாரும் மறுக்கப் போவதில்லை. சில ஆயிரம் கோடிகளில் செய்து விடக் கூடிய பணிதான் அது. (இன்று வரை நர்மதை அணையினால் பாதிக்கப் பட்ட பழங்குடியினருக்கான குறைந்த பட்ச உதவித் தொகையைக் கூட மேதா பட்கரின் பல்வேறு போராட்டங்கள்தான் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அரசோ, நர்மதை நீரினால் பயன்பெற்ற குழுக்களோ எதுவும் செய்யவில்லை. குஜராத்தின் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாக மார் தட்டிக் கொள்ளூம் அரசு, அதற்காகத் தான் வாழ்க்கையைத் தியாகம் செய்த ஆதிவாசிக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதே நிஜம்.

மாறாக, அனுமதி கிடைத்தவுடன், சுற்றுச் சூழல், மக்கள் நலன் என்ற ஒன்றையும் கருதாமல், சுற்றுச் சூழல் சூறையாடப் படும் விதத்தை, ஒரு பயணம் சென்று, கோவாவிலும், கர்நாடாகாவிலும் கண்டு வரவேண்டும். பொதுச்சொத்தை தனியார் துறை கையாளும் விதம் பற்றிய உண்மையான அறிதல் வேண்டும். வங்காள விரிகுடாவின் பெட்ரோலியமும், சத்தீஸ்கரின் கனிமமும் 10-15 தொழிலதிபர்களின் சொத்து அல்ல. அது வேண்டுமெனில், அதற்கான நியாயமான விலையை (மக்கள் பாதிப்பு, சுற்றுச் சூழல் பாதிப்பு) விலையைக் கொடுத்துப் பெற்றுச் செல்லட்டும்

இன்று முன்னேற்றம் என்ற பெயரில் வரவேற்கும் சில விஷயங்களால், நாளை, மொத்தச் சூழலும் மாறி, ஏரிகள் மூடப் பட்டு, ஆறுகள் மாசுபடுத்தப் பட்டு, ரியல் எஸ்டேட்களாக மாறும் காலத்தில் புலம்பிப் பிரயோசனப் படாது.

எனவே, சீன மாவோயிஸமோ, இந்திய முதலாளியிஸமோ வழி அல்ல.. இந்த இடத்தில் பரம்பரையாக இருந்து வரும் பஸ்தர் மக்களின் முனைப்பில் அங்கு முன்னேற்றப் பணிகள் நடை பெறுவதே சரியாக இருக்கும். மிக முக்கியமாக, இன்னும் “முன்னேற்றம்” சென்றடையாத இடங்களில், எது ‘முன்னேற்றம்’ என்பது குறித்த வாதங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. ஒரு ஒட்டு மொத்த – மக்கள், சுற்றுச் சூழல், கனிம வளத்தைப் பயன்படுத்துதல் – நோக்கு வர வேண்டும்.

பாலா

அன்புள்ள பாலா, அருணகிரி,

நான் எழுதியது நேரடியான உடனடி மனப்பதிவு. பயணம்செய்து பழக்கமுள்ளவர்களுக்கு அப்படி நேரடியாக உருவாகும் மனப்பதிவுகளின் மதிப்பு என்ன என்று தெரியும். அது தர்க்கபூர்வமானதல்ல. அதேசமயம் நம் உள்ளுணர்வாலும் பொதுவிவேகத்தாலும் நம்முள் எழும் சித்திரமாகையால் மிக மிக முக்கியமானதும் கூட. எந்தப்பயணத்திலும் நாம் படித்து கற்று தெரிந்து வைத்துள்ளவற்றைக் கழற்றிவீசிவிட்டுக் கண்ணும் கருத்தும் மட்டும் விழித்திருக்க செல்வதே உசிதம் என்பது என் அனுபவம்

நமக்கு இந்த பஸ்தர் பழங்குடிகளைப்பற்றி இந்நிலத்தைப்பற்றிப் பல்வேறு ஆய்வாளர்கள் எழுதி அளிக்கும் நூல்கள் அளிக்கும் சித்திரத்தில் இருந்து நேரடிச்சித்திரம் மிக மிக மாறுபட்டது என்பதையே நான் முதன்மையாகக் குறிப்பிடுகிறேன். இந்த மண்ணில் வளம், இங்குள்ள வாய்ப்புகள் ஆகியவை கண்கூடானவை. கூடவே இங்குள்ள பழங்குடிகளின் துடிப்பில்லாத சோம்பல் வாழ்க்கை. மிக முக்கியமாக இவர்களின் அதீதமான குடி. இங்குள்ள வறுமைக்கான காரணத்துக்கு இவற்றை உதாசீனம் செய்து அரசாங்கம், சுரண்டல் என்று மட்டுமே காரணம் காட்டுவது வெறும் பிரச்சாரம். அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசாங்கப் பிரச்சாரம் போலவே அதன் மறுபக்கமாக மட்டுமே காணத்தக்கது.

நான் சொல்வது இந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வருவதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி. இந்த மக்களின் இயல்பில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி அவர்களை அச்சப்படுத்தி, பொய்யான உணர்ச்ச்சிகளை ஊட்டி, மத்திய அரசுக்கு எதிரான போராளிகளாக மாற்றி அவர்களின் வாழ்க்கையை மேலும் கீழானதாக ஆக்குவதில் உள்ள அதார்மிகம் பற்றி. அது இன்னொருவகை சுரண்டல். மிகக்கேவலமான ‘பயன்படுத்திக்கொள்ளும்’ உத்தி.

அதைப்பற்றிப்பேசும்போது சம்பந்தமே இல்லாமல் எதையெதையாவது இழுத்துவந்து பேசுவதும் மிகையான உணர்ச்சி கொள்வதும் பயனற்றவை. எதை விவாதித்தாலும் உணர்ச்சிப்பெருக்கு கொண்டால்தான் நாம் நேர்மையானவர்கள் , தீவிரமானவர்கள் என அர்த்தமில்லை. நம்முடைய சொந்த சமரசங்களின் மறுபக்க சமநிலையாக நாம் இத்தகைய மிகையுணர்ச்சிகளை அடைகிறோம். நம் சூழலில் கருத்துவிவாதங்கள் யதார்த்தமாக நிகழாமல் தடுக்கும் சக்தியே இந்த அர்த்தமில்லாத மிகையுணர்ச்சிகள்தான்

இந்தக் கனிவளங்களை தேசநலனுக்காக, ஒட்டுமொத்த இந்தியப் பொருளியலின் நலனுக்காக பயன்படுத்துவது சரி என்ற முடிவை எடுத்தால் அதை எப்படி செய்வது என்று யோசிக்கலாம். அதை பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டு எடுக்கலாம். தனியாரிடம் குத்தகைக்கு விடலாம். பொதுத்துறை நிறுவனம் செயல்படும் விதமென்ன என்பதை நேரடியாக அறிந்தவன் என்ற வகையில் எந்தக் கீழ்த்தர தனியார் துறையைவிடவும் அது மோசமானது என்றே சொல்வேன். எந்தச்சட்டத்துக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படாத அதிகாரிகளின் கூட்டுக்கொள்ளையாக மட்டுமே அது நிகழ முடியும்.

பொதுத்துறை இங்கே பெரும் நஷ்டத்தை மட்டுமே உருவாக்கியது. அகழ்ந்து எடுத்து விற்பதில் நஷ்டம். ஆகவே தனியார் துறைக்கு சென்றோம். ஆனால் அங்கு அரசும் பெருவணிகர்களும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடிக்க முடியும். அதுதான் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது இன்று ஊடகங்கள் வழி அனைவரும் அறிந்ததாக உள்ளது. ஆனால் சென்ற பலவருடங்களில் பொதுத்துறை அடித்த கொள்ளைகள் பொதுக்கவனத்துக்கே வரவில்லை. இன்று அவலங்கள் சுட்டப்படும்போது நாம் கொதிக்கிறோம். ஆனால் இந்தத் தனியாரைப் பொதுமக்கள் கவனம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதையே சமீபகால நிகழ்ச்ச்சிகள் காட்டுகின்றன.

ஆக எப்படியும் கனிவளம் சுரண்டப்படும். அதிலுள்ள உண்மையான பிரச்சினை ஊழல். அதற்கு எதிரான பொதுமக்கள் கண்காணிப்பும் ஊடகக் கண்காணிப்பும் அதன் விளைவான ஜனநாயக அரசியல் போராட்டங்களுமே அதைத் தடுப்பதற்கான வழிகள். பழங்குடிகள் ஆயுதம் எடுத்து போராடிப் பட்டினி கிடந்து சாவது அல்ல. சீன ஆதரவாளர்களின் அரசு எதிர்ப்புப் போராட்டமும் அல்ல. அதை எடுக்கவே வேண்டாம், அப்படியே கிடக்கட்டும் என்ற நிலைப்பாடும் அல்ல.

பழங்குடி நலன் இந்தப்பிரசினையின் அடுத்த பக்கம். அதைப் பிரித்து ஆராயவேண்டும். உண்மையில் பழங்குடி நலன் நோக்கம் என்றால் இந்தக் கனிச்சுரங்கச்செல்வத்தில் சிறுபகுதியை அதற்காகச் செலவிட்டாலே போதும். சுற்றுலாத்துறையை வளரவிட்டாலே போதும். ஏன் ஒன்றுமே செய்யாமல் இருந்ந்தால் கூட இந்த ஒட்டுமொத்த வளர்ச்சியின் பகுதியாக அவர்கள் இன்றிருப்பதை விட மேலான வாழ்க்கையையே அடைவார்கள் என்றே நான் நினைக்கிறேன்

எந்த அரசும் இயல்பாக மக்கள் நலனுக்கு வந்துவிடாது. ஜனநாயகத்தின் விதியே அழும் பிள்ளைக்குப் பால் என்பதுதான். போராடக்கூடிய ஒருங்கிணைவுள்ள சமூகங்களே வளர்ச்ச்சியின் பலனை அடைவார்கள். ஆகவே ஜனநாயகத்தில் பழங்குடிகள் தங்கள் உரிமைகளை அடையப் போராட்டமே ஒரே வழி என்று நான் சொல்கிறேன்.

அதற்கான தெளிவான கோரிக்கைகளுடன் பொதுவெளிக்கு வந்து போராடுவதும் அந்தப் போராட்டத்தை அவர்களே நடத்திக்கொள்ளப் பழங்குடிகளைப் பயிற்றுவதுமே வழி. அதையே நான் கட்டுரையில் வலுவாகச் சொல்லியிருந்தேன். மேதாபட்கரின் இயக்கம் போல.

இருபதாண்டுக்காலமாக மேதா பட்கரின் இயக்கத்தைத் திட்டவட்டமாக் ஆதரித்துஎழுதிவருகிறேன். தமிழிலும் மலையாளத்திலுமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அத்தகைய போராட்டங்கள் பழங்குடிகளை அரசியல் படுத்துகின்றன. அவர்களுக்குப் போராடக் கற்றுக்கொடுக்கின்றன. அவர்களின் தேக்கநிலையில் இருந்து வெளியே கொண்டு வரவும் செய்கின்றன. எந்நிலையிலும் அவை வெற்றியையே அடைகின்றன.

மாறாக இங்குள்ள மாவோயிசப்போராட்டம் பழங்குடிகளுக்கானது அல்ல. அவர்களின் நலனை நோக்கமாகக் கொண்டது அல்ல. அவர்களைத் தேங்கிய நிலையில் வைத்திருப்பது மட்டுமே அவர்களின் இலக்கு. இப்பகுதி இப்படியே கைவிடப்பட்டுக் கிடப்பது மட்டுமே அவர்களின் வழிமுறை.

இப்பிரச்சினைகளைப் பிரித்துப்பார்க்கவும், தனித்தனியாக கண்கூடான மனச்சித்திரத்தின் வெளிச்சத்தில் நடைமுறை சார்ந்து விவாதிக்கவுமே நான் என் குறிப்பை எழுதினேன். அதில் எல்லாமே தெளிவாக உள்ளது.

எந்த விஷயம் என்றாலும் உடனே எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பொத்தாம்பொதுவாக ஆக்கி அதில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து உணர்ச்சிக்கொந்தளிப்பை முன்வைப்பதே நாம் செய்யும் விவாதமாக இருக்கிறது. விவாதிக்க விவாதிக்க மேலும் மேலும் சம்பந்தமில்லாத விஷயங்களை இழுத்துப்போட்டுக் குழப்புவோம். இந்த விவாதத்தின் பயன் என்னவென்றால் கடைசியில் மாறி மாறி முத்திரை குத்துவதுதான்.

இந்தப்பிரச்சினையில் அவரவர் சுயபிம்பம் முக்கியம் என நினைத்தால் நான் சொல்ல ஒன்றுமில்லை. உண்மை என்பது பலகோணங்களில் ஆராய்ந்து அடையப்படும் ஒரு சமரசப்புள்ளி என்று நினைத்தால் இருபதாண்டுக்காலமாக இப்பிரச்சினைகளை வாசித்தறிந்தும் பல்வேறு வகைகளில் ஈடுபட்டும் நேரடியாக வந்து பார்த்தும் நான் சொல்வதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைதேவதேவனைப்பற்றி…
அடுத்த கட்டுரைகிறித்துவம்- கடிதங்கள்