தேசிய சுய நிர்ணயம்

அன்புள்ள ஜெ,

நான் சமீபத்தில் உங்கள் இந்திய பயண பதிவை (மறுபடியும்) படித்தேன், அதில் உள்ள ஒரு வரியே இந்த கடிதத்தை எழுத தூண்டியது.

நீங்கள் தமிழகத்தில் இருந்து வங்காளம் வரை சென்றதை குறிப்பிடும்போது, இன்னும் பார்க்க வேண்டிய நிலம் நிறைய உள்ளது, ஆனாலும் இது இந்தியாவில் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை பார்ப்பது போன்றது என்று சொன்னீர்கள் (நீங்கள் சொன்னதை உத்தேசமாக சொல்கிறேன்)

சுருக்கமாக கேட்டால், ‘இந்திய பயணம்’ கிழக்கில் வங்காளத்தோடு முடிவைடிகிறது என்று நீங்கள் நினைக்கறீர்களா? வடகிழக்கு மாகாணங்களான அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோராம் போன்றவை பற்றி உங்கள் கருத்தென்ன? முக்கியமாக அதன் இந்தியத்தன்மை பற்றி உங்களின் கருத்தென்ன , பழுப்பு நிறமும், சற்றே கூர்மையான நாசியே இந்திய தன்மை என்று நீங்கள் நினைக்கறீர்களா? மஞ்சள் நிறமும் , சப்பையான மூக்கும் இந்தியத்தன்மையாகுமா? இந்த கேள்விகளுக்கான வார்த்தைகள் முதிர்ச்சியில்லாமல் இருக்கலாம், ஆனால் முக்கியமானவைகள் என்று நினைக்கிறேன்.

அரசியல் தளத்தில், அவை இந்தியாவுடன் இருந்தாலும், (அரசியல் தளத்திலேயே  பெரும் insurgency – ஐ சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரதேசம் அது)கலாச்சார ரீதியாக அவை இந்தியாவுடன் சேர்ந்து இருப்பதாக நினைக்கறீர்களா?

இங்கே எழுத்தாளர் வாஸந்தி திண்ணை இணைய இதழில் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எழுதிய கட்டுரையும்,
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20710253&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20711083&format=html

அதற்கு திரு. அரவிந்த் நீலகண்டன் அவர்கள் எழுதிய மறுப்புரையும்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20711151&format=print&edition_id=20071115
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்

மேலும், சமீபத்தில் , மிசோரம் முதல்வர் , சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் , இந்தியாவில் நிறவெறி இருக்கிறது என்றும், தென்னிந்தியாவில் மிசோரம் என்ற மாநிலமே தெரியவில்லை  என்றும் சொல்லி இருக்கிறார்.
http://economictimes.indiatimes.com/PoliticsNation/I-am-a-victim-of-racism-Mizoram-CM/articleshow/4701406.cms

இந்தியாவின் பெரும்பகுதியின் சுற்றி வந்த ஒரு இலக்கியவாதியாக உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

நேசமுடன்
கோகுல்

 

அன்புள்ள கோகுல்,

இந்த தேசியம் சார்ந்த விவாதத்தில் ஈடுபடும் ஒருவருக்கு நம் வரலாறு சார்ந்து, நம் வரலாற்றெழுத்துமுறைகள் சார்ந்து,ஒரு அடிப்படை வாசிப்பு இருந்தால் அவர் பேசும் தொனியே வேறு. ஒரு நிலப்பகுதியை ஒரு தேசியமாக ஒருவர் முன்வைக்கிறார் என்றால் நான் அதனால் உருவாகும் பயன் என்ன என்ற கோணத்தில் மட்டுமே அதைப் பார்ப்பேன். அது ‘உண்மையா’ என்றல்ல. ஏனென்றால் வரலாற்றின் பெரும்பாலான உண்மைகள் உருவாக்கப்படுபவையே

”கன்யாகுமரி மாவட்டம் என்றுமே ஒரு தனி தேசியமாகவே இருந்துள்ளது. இன்று அது தமிழகத்தின் ஒரு பகுதியாக வன்முறை மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. குமரிதேசியம் தன் ஆக்ரமிப்பில் இருந்து விடுதலை பெறவேண்டும். தேசிய சுய நிர்ணய உரிமை பெற வேண்டும்” — அபத்தம் என்று உடனே தோன்றும் இல்லையா? ஆனால் வரலாற்றை வைத்து மிகக் கச்சிதமாக இதை நியாயப்படுத்தலாம்

நமக்கு எழுதப்பட்ட வரலாறு எப்போது கிடைக்கிறதோ அப்போதிருந்தே குமரிமாவட்டம் தனி நிலப்பகுதியாக, தனிநாடாகத் தான் இருந்துள்ளது.  சங்ககாலத்தில் இந்நாட்டை ஆய்மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களை பாண்டியர்களும் சேரர்களும் மாறி மாறி தாக்கி அடிமைப்படுத்தி திறை பெற்றாலும் அவர்கள் தனி நாடாகவே இருந்தார்கள். நாஞ்சில்நாடு என தனிநாடாகவே இது எப்போதும் சொல்லப்பட்டது.

அதன்பின் நாஞ்சில்குறவன் இப்பகுதியை ஆண்டான். அவனை வஞ்சகமாகக் கொன்று பாண்டியன் இந்நாட்டைக் கைப்பற்றினான். பின்னர் சேரர்கள் கைப்பற்றினார்கள். பின்னர் ராஜசோழன் இந்நாட்டைக் கைப்பற்றி முந்நூறு வருடம் ஆண்டான்.  அவனுக்கு எதிராக நாஞ்சில்நாடு இடைவிடாது போராடியது. சோழர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று நாஞ்சில்நாடு  அரை நூற்றாண்டுக்காலம் தனித்து செயல்பட்டது. மீண்டும் பாண்டியர். அதன் பின் இஸ்லாமியர். அதன்பின் நாயக்கர்கள் இந்நாட்டை கைப்பற்றி திறை பெற்றார்கள்

பின்னர் திருவிதாங்கூர் அரசு என்ற பேரில் இந்நாடு  நாநூறு வருடம் தனியாகச் செயல்பட்டது. ஆரல்வாய்மொழி முதல் ஆலப்புழை வரை விரிந்து கிடந்தது. இந்தியா சுதந்திரம் பெறும்போது இது தனிநாடாகவே இருந்தது. தனி நாணயமும், தனி ராணுவமும், தனி கொடியும் கொண்ட  முற்றிலும் சுதந்திர நாடு! சுதந்திர இந்தியாவுடன் சேர்வதற்கு  நாஞ்சில்நாடாகிய திருவிதாங்கூர் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இதன் அப்போதைய திவான் சி.பி ராமசாமி அய்யர் இது ஒரு தனிநாடு இது இந்தியாவுடன் இணையாது என்று அறிவித்தார். திருவிதாங்கூருக்கு தனியாகவே சுதந்திரம் அளிக்க வேண்டும் என வெள்ளையனிடம் கோரிக்கை விடுத்தார். இந்தியாவின்  ‘ஆதிக்க’ மிரட்டலை தடுக்க பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஆதரவு கோரி தூதனுப்பினார். ஆனால் இந்தியா தன் மாபெரும் ராணுவபலத்தால் திருவிதாங்கூரை பிடித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டது. ஆம், இது அத்தனையும் வரலாறு

இன்றும் குமரிமாவட்டத்தின் பண்பாடு தனித்துவம் கொண்டது.  இதன் உணவு, மொழி, சமூகவியல் எல்லாமே தமிழ்நாடு கேரளம் இரண்டிலும் இருந்து திட்டவட்டமாக வேறுபட்டிருக்கின்றன. இந்திய தேசியமும் தமிழ்-மலையாள தேசியமும் குமரி தேசியத்தை அழிக்கின்றன

மேலும் குமரிநிலம் இந்தியாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பெற்றுக்கொள்வதை விட கொடுப்பது பல மடங்கு அதிகம். இதன் நீரில் முக்கால் பங்கை தமிழகம் எடுத்துக்கொள்கிறது. மின்சாரத்தில் தொண்ணூறு சதவீதத்தை தமிழகம் எடுத்துக்கொள்கிறது. இதன் மீன்வளம் மொத்த தமிழகத்தின் மீன்வளத்தில் பாதி. இந்த சிறு பகுதியில் மூன்று மீன்பிடி துறைமுகமும் ஒரு வணிகத்துறைமுகமும் உள்ளன. மொத்தத்தில் தமிழகத்தின் வளத்தில் ஏறத்தாழ முப்பது சதவீதம் இந்த மாவட்டத்தால் அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் நிதிப்பங்கீட்டில் இந்த மாவட்டம் வெறும் நான்கு சதவீதத்தையே பெறுகிறது.

ஆகவே தமிழகத்தால் மிக வெளிப்படையாக குமரிநிலம் சுரண்டப்படுகிறது. வன்முறை மூலம் குமரியை தன் ஒருபகுதியாக ஆக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியம் குமரித்தேசியத்தை அழிக்கிறது! குமரிமகக்ள் திரண்டு இந்த தேசிய் ஆக்ரமிப்புக்கு எதிராக போராடவேண்டும். குமரிமகக்ள் சிறுபான்மையினர் ஆகையால் வன்முறையை ஆயுதமாக்கினால் மட்டுமே தனித்தேசியத்தை அடைய முடியும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்துமே தகவல்ரீதியாக முழுக்கமுழுக்க நியாயப்படுத்தப்படக் கூடியவை. குமரி மக்களில் ஆழமான ஓர் அதிருப்தி எப்போதும் உண்டு. எப்போதுமே தமிழக ஆட்சியில் குமரிமாவட்டத்துக்கு முக்கியமான இடம் இல்லை. எப்போதுமே புறக்கணிக்கப்படும் மாவட்டம் இது. படித்தவர்கள் மிக்க இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் குறைவு. தமிழகத்தில் மலையாளியாகவும் கேரளத்தில் தமிழனாகவும் அடையாளப்படுத்தப்படும் துரதிருஷ்டம் இவர்களுக்கு உண்டு

இந்த அதிருப்தியை பயன்படுத்திக்கொண்டு மேலே சொன்ன தகவல்களை வலிமையாக முன்வைத்து ஒரு சிறந்த பேச்சாளன் குமரிதேசியம் சார்ந்த உணர்ச்சியை இங்குள்ள மக்களிடம் உருவாக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு சீனாவோ அமெரிக்காவோ பணம் கொடுத்தது என்று வைத்துக்கொள்வோம்,  அப்போது  இந்த குமரித்தேசியத்தை ஓர் ‘உண்மை’ என்று சொல்ல முடியுமா? ‘தேசிய சுயநிற்ணய’ உரிமை குமரி மக்களுக்கு வேண்டும் என்று சொல்லலாமா? இந்த வரலாற்று உண்மைக்காக குமரிமக்கள் ரத்தம் சிந்தவேண்டுமா?  என்ன அபத்தம் என்று தோன்றுகிறது இல்லையா?

வடகிழக்கில் பேசப்படும் பெரும்பாலான தேசியங்கள் இந்த அளவுக்குக் கூட வரலாற்று நியாயங்கள் இல்லாதவை. இந்த அளவுக்குக் கூட நிலப்பரப்பு இல்லாதவை. உதாரணமாக போடோலேண்ட் என ஒரு தேசியக்கோரிக்கை பேசப்படுகிறது. ஆனால் போடோக்கள் மூன்று மாநிலங்களிலாக பிரிந்து மற்ற மக்களுடன் கலந்து கிடக்கும் ஒரு பழங்குடி இனம். அது ‘நாடார்லேண்ட்’ கேட்பதைப்போல.

அப்படி ஒரு நாடார்லேண்ட் கொடுக்கப்பட்டால் அங்கே வாழும் தேவர்கள் என்ன செய்வார்கள்? இன்னும் சிறுபான்மையினரான ஆசாரிகள், கொல்லர்கள், பகடைகள் எங்கே போவார்கள்? போடோலேண்ட் போராட்டம் பெரும்பாலும் சக பழங்குடிகள் மேல் கொலைவெறித்தாக்குதல்களாகவே இதுவரை இருந்துள்ளது என்பதே உண்மை. ஆனால் அதையும் நம் முற்போக்கு அறிவுலகம் ‘தேசிய சுயநிர்ணய’ உரிமை என்று பேசுகிறது

இவ்வாறு சொல்கிறேனே, இந்திய தேசியத்தில் இருந்து தமிழ்த்தேசியம் பிரிந்துசெல்ல என்னென்ன காரணங்கள் உள்ளனவோ அதே அளவுக்கு காரணங்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து குமரித்தேசியம் பிரிந்துசெல்லவும் இருக்கிறது.  இந்தியாவின் பிரிக்கமுடியாத உறுப்பாக தமிழகத்தைக் காண என்னென்ன காரணங்கள் உள்ளனவோ அந்த காரணங்கள் தமிழகத்தின் பிரிக்கமுடியாத உறுப்பாக குமரிமாவட்டம் இருக்கவும் உள்ளன.

ஒரு தேசியம் என நான் நினைப்பது மாற்ற முடியாத புனித கட்டுமானத்தை அல்ல. நான்கு காரணிகளால் ஒரு தேசியம் தன் கட்டமைப்பை அடைகிறது. தேசியத்தை நியாயப்படுத்தும் அம்சங்கள் அவை என்றும் சொல்லலாம்

1. ஒரு நிலப்பகுதியின் அமைப்பு. அதற்குள் வாழும் மக்கள் ஒருநாடாக இணைவது அவர்கள் ஒருங்கிணைந்து முன்னேறுவதற்கு அவசியமாக ஆகிறது. ஆகவே அவர்கள் ஒரு தேசியம்

2. பொதுப்பண்பாடு. ஒரு நிலப்பரப்பு எல்லைக்குள் வாழும் மக்கள் தங்கள் வேற்றுமைக்கு அப்பால் ஒரு பொதுவான பண்பாட்டின் சரடால் பிணைக்கப்பட்டிருப்பார்கள் என்றால் அவர்கள் தங்களை ஒரு தேசியமாக கருதி ஒருங்கிணைந்து முன்னேற முடியும்

3. நெடுங்கால மக்கள் பரிமாற்றம். ஒரு நிலப்பகுதியில் மக்கள் நெடுங்காலமாக பரவி ஊடுகலந்து வாழ்கிறாரக்ள் என்றால் அவர்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும், வேறு வழி இல்லை.

4. சமகால அரசியல் பொருளியல் தேவைகள். ஒரு நிலப்பகுதியின் மக்கள் தங்களை அரசியல் ரீதியாக காத்துக்கொள்ளவும், பொருளியல் ரீதியாக வளர்த்துக்கொள்ளவும் ஒரு தேசியமாக திரள்வதன் தேவை இருக்குமென்றால் அவர்கள் ஒரு தேசியமே

மேலே சொன்ன நான்கு அம்சங்களுமே வலுவான ஓர் இந்திய தேசத்துக்கான காரணங்களாக அமைகின்றன என்றே நான் நினைக்கிரேன். நிலப்பகுதியாக இது ஒரு நாடு. இந்நாடு முழுக்க நிலவும் ஒரு பொதுப்பண்பாடு உண்டு, வேறுபாடுகளுக்கு அப்பால் அந்த பொதுமை அம்சம் வலிமையாக இருப்பதை காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பஞ்சாப் முதல் மிசோரம் வரை காணலாம்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்த நாடு ஒரு பண்பாட்டுத்தேசமாக நெடுங்காலம் முதல் இருந்து வந்ததன் விளைவான மக்கள் பரிமாற்றம். இந்தியாவில் கேரளம் போன்ற சில நிலப்பகுதிகளில் மட்டுமே பிற இந்திய நிலபகுதியினரின் குடியேற்றம் குறைவு. நவீன காலத்திலும் அந்த குடியேற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தமிழகத்தின்  எட்டுகோடி மக்களில் இரண்டு கோடியினர் தமிழ் பேசாத மக்கள். முந்நூறுநாநூறு வருடங்களாக இங்கே வாழ்பவர்கள்.  அதே சமயம் தமிழகத்துக்கு வெளியே இந்தியநிலமெங்கும் எப்படியும் இரண்டுகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த மக்கள்ப்பரிமாற்றமே இந்நிலத்தை ஒரு தேசியமாக ஆக்கும் சக்தி. வேறு வழியே இல்லை. ஒருங்கிணைந்தே ஆகவேண்டும். ஒற்றுமை கெட்டால் ரத்த ஆறுதான். மானுடப்பேரழிவுதான்.

வடகிழக்கு குறித்துச் சொன்னீர்கள், உங்களுக்குத்தெரியுமா, வடகிழக்கு மக்களில் கால்வாசிக்கும் மேல் பிற  இந்தியப்பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். கொல்கொத்தாவில் மட்டும் ஐம்பது லட்சம் வடகிழக்கு மாநில மக்கள் இருக்கிறார்கள் என ஒரு கணக்கு. சென்னையில்கூட ஒரு லட்சம் மணிப்பூர்-மேகாலயாவாசிகள் வணிகம் செய்கிறார்கள். இனரிதியாக வட்கிழக்கு பிரிந்தால் இந்த மக்கள் அகதிகளாக வேண்டும்.

ஒரு வலிமைவாய்ந்த பெரும் தேசமாக, ராணுவ வல்லமையாக, பொருளாதார வல்லமையாக இருப்பதே இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சீரான அமைதியான வளர்ச்சியை உருவாக்கும். இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளின் துயரம் நிறைந்த வரலாறு நமக்குக் கற்பிப்பதும் அதையே

இருந்தும் ஏன் இந்த குட்டித்தேசியங்கள் பேசப்படுகின்றன? எப்படி இவை போராட்டங்களாக ஆகின்றன?  நம்மில் இரு வகை அறிவுஜீவிகள் உண்டு. பலவகையிலும் பணம் வாங்கிக்கொண்டு எழுதும் புத்திசாலிகள். எது முற்போக்கு என்று சொல்லப்படுகிறதோ அதை எழுதும் அப்பாவிகள். இருசாராராலும் இந்த உபதேசியக்கோரிக்கைகள் முற்போக்கானவை என்று முன்வைக்கப்பட்டுவருகின்றன

பஞ்சாப் தேசியக்கோரிக்கையின் ஊற்றுக்கண் எது? பஞ்சாபின் உபரி நீரை பிற மாநிலங்களுக்குக் கொடுக்கமாட்டோம் என்ற புனிதமான சுயநலம். அந்தச் சுயநலம் எளிதில்  மக்களை ஒருங்கிணைக்கும். வரண்ட நெல்லைமாவட்ட பணகுடி – ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என குமரி மக்கள் போராடியிருக்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக  குளச்சல் கடற்கரைப்பகுதிக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று பைங்குளம் மக்கள் இங்கே போராடி தடைசெய்தார்கள்.

ஒரு மண்ணில் பிறந்து அங்கே இருப்பதனால் அங்குள்ள நதியும் காற்றும் கனிவளமும் தனக்குச் சொந்தம் என்று நினைக்கும் சுயநலத்தையே இங்கே புனித தேசியமாக நம் முற்போக்காளர் எண்ணுகிறார்கள். அதுதான் ஒரு ஆறு அல்லது சானலின் முன்னால் குடியிருப்பது பின்னால் குடியிருப்பவர்களுக்கு நீரை மறுக்கும் அதிகாரத்தை அளிக்கிறது என்ற எண்ணமாகவும் ஆகிறது. இந்த உணர்ச்சிதான் காரைக்குடிக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என திருப்பத்தூர் மக்கள் அறச்சீற்றம் கொள்ள வழி வகுக்கிரது

வடகிழக்கு மக்களின் தேசியக் கோரிக்கைகள் இத்தகைய அபத்தமான சுயநலத்தின் சிருஷ்டிகள். அவற்றுக்குப் பின்னால் பலசமயங்களில் மிகக்குறுகிய இனவாதம்தான் இருக்கிறது.  வடகிழக்கு தேசியக்கோரிக்கைகள் பல இனக்குழு அடையாளம் சார்ந்து  எழுப்பபடுகின்றன என்பதும் அவை ஒன்றுக்கொன்று கடுமையான வெறுப்பு கொண்டவை என்பதும் இங்குள்ள நம் அறிவுஜீவிகளுக்கு தெரிவதில்லை. அவற்றுக்கு பொதுவான எதிரியாக இந்திய தேசியம் இருப்பதால் மட்டுமே அவை ஒன்றுக்கொன்று ரத்தக்களரியில் ஈடுபடாமல் இருக்கின்றன.

ஆனாலும் அவ்வப்போது அவற்றுக்கு இடையே பெரும் வன்முறைகள் வெடித்து கொலைவெறியாட்டம் நடந்துள்ளது. சென்ற 2003 முதல் மூன்றுவருடம் போடோக்களுக்கும் பிற பழங்குடிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர்கள் ஐயாயிரம் பேருக்கு மேல். துரத்தப்பட்டவ்ர்கள் ஒரு லட்சம். இந்த தேசிய இனக்கோரிக்கைகள் வெற்றி பெற்று வடகிழக்கு மாநிலங்களில் கிட்டத்தட்ட பன்னிரண்டு தனி தேசங்கள் உருவானால் அங்கே என்ன நிகழப்போகிறது என்பது வெளிப்படை. எல்லா பழங்குடிகளும் எல்லா நிலங்களிலுமாக பரவி வாழும் அங்கே பழங்குடிக்கொரு தேசம் என்றால் ரத்த வெறியாட்டமும் அகதிப்பெருக்கமும்தான் உருவாகும். அதைத்தான் தேசிய சுயநிர்ணயம் என்கிறார்கள் நம் அறிவுஜீவிகள்.

இன அடையாளம் குறித்துச் சொன்னீர்கள். இதையெல்லாம் பற்றிப்பேசும் நம் ஆட்களில் ஒரு எளிய இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் எவரும் இல்லை. குறிப்பாக தமிழில் எஸ்வி ராஜதுரை போன்றவர்கள். அவர்களுக்கு நேர் அனுபவமாக தமிழகமே தெரியாது. ஒரு எதிர்மறை நிலைபாட்டை ஏற்கனவெ எடுத்துக்கொண்டு அதற்கேற்ப தகவல்சேகரித்து எழுதிவைப்பதுதான் இவர்கள் அறிந்தது. இந்தியாவில் ஒரு சுற்று சுற்றிவந்தால் தெரியும் இங்கே இன அடையாளம் என்ற பேச்சே மிகமிக அபத்தம் என்று

இந்தியாவில் சாதாரணமாக கண்ணுக்கே நான்கு வகை தோற்ற தனித்தன்மைகள் தென்படும். ஒன்று கரிய நிறமுள்ள மனிதர்கள். ஒரு பேச்சுக்காக திராவிடர் எனலாம். இன்னொன்று சிவந்த மனிதர்கள், ஆரியர்கள். மங்கலான  நிறம் கொண்ட உயரமும் எடையும் இல்லாத சித்தியன் மக்கள். மஞ்சள் இனமான மங்கோலியர்

இந்த மூன்று மக்களையும் நாம் இந்தியா முழுக்க எங்குமே காணமுடியும் என்பதுதான் ஆச்சரியம். தென்னிந்தியாவில்  அந்தமான் தீவில் உள்ள பழங்குடியினரில் மஞ்சள் இனத்தைச்சேர்ந்தவர்கள் உண்டு. கர்நாடகத்தில் பல இடங்களில் பல்லாயிரம் வருடப் பாரம்பரியமாக வாழும் மஞ்சள் இனத்தவர் உண்டு. வங்காளத்தில் டார்ஜிலிங் பகுதி முழுக்கமுழுக்க கூர்க்காக்களுடையது. இமையமலை அடிவாரம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் மஞ்சள் இனத்தவர் உண்டு.  அதேபோல வட இந்தியா முழுக்க எங்கும் திராவிட மக்களை பார்க்கலாம். பிகாரில் பெரும்பாலான மக்களில் திராவிட முகங்களே தென்படும். இன அடிப்படையில் இந்தியாவை நிலப்பாகுபாடு செய்யவேமுடியாது.

அதேபோல இந்தியாவில் உள்ள எல்லா இனங்களும் நெடுங்கால இனக்கலப்பால் தனித்தன்மை இழந்து கலவையான பண்புகளுடன் இருப்பார்கள் என்பதைக் காணலாம். வங்காளிகளில் பெரும்பாலானவ்ர்களுக்கு மங்கோலிய இன அடையாளம் கொஞ்சம் இருக்கும். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முகத்திலேயே நீங்கள் அதைப் பார்க்கலாம். மத்தியபிரதேசத்தில் போபால் பகுதியில், கர்நாடகத்தில் குந்தாப்பூர் பகுதியில் மங்கோலியக் கலப்புள்ள மக்களை நிறையவே பார்க்க முடியும்.

ஒரு பெருந்தேசமாக இருப்பதே இந்தியாவுக்கு இன்று நல்லது. இத்தனை மக்கள்ப்பரிமாற்றம் உள்ள நிலப்பகுதியில் வேறெந்த தேசிய உருவகமும் அழிவையே உருவாக்கும். ஆகவே நான் இந்திய தேசியத்தின் ஆதரவாளன். உடனே  இந்த தேசிய உருவகத்தை புனிதமானது என நான் சொல்கிறேன் என்று சொல்ல ஆரம்பிக்கும் அறிவுஜீவிகள் நம்மிடையே அதிகம். இந்த தேசியத்தை விட மேலான இன்னொன்று , ஒரு சர்வ தேசியம், முன்வைக்கப்பட்டால் இந்த தேசிய உருவகத்தை உதறுவதே உசிதமானது என்பேன்.

ஆனால் இந்த வசதியான, வளர்ச்சியையும் அமைதியையும் அளிக்கக்கூடிய, தவிர்க்க முடியாத அமைப்பை உடைத்து ஒன்றுடன் ஒன்று போரிடும் சாதியதேசியங்களின் ,மொழித்தேசியங்களின் ,இனத்தேசியங்களின் கூட்டமாக இந்த நிலத்தை ஆக்கவேண்டும் என்று சொல்லும் மேதைகள் சர்வதேசியத்தை முன்வைத்து தேசியத்தை நிராகரித்தவர்களை தங்களுக்கு மேற்கோள் காட்டுகிறார்கள்.தேசியத்தை தாண்டிய பின் நவீனத்துவ படிமத்தைச் சூட்டிக் கொள்கிறார்கள். எதையும் எங்கும் எப்படியும் மேற்கோள் காட்டும் திராணி நம்மிடம் இருப்பது போல எங்கும் இருக்காது

ஒரு தேசமாக ஒருங்கிணைந்து முன்னேறுவதற்கான காரணங்களே இந்தியாவின் எப்பகுதி மக்களுக்கும் அதிகம். இருந்தும் பிரிவினை வாதம் முன்வைக்கப்படுகிறது. பல இடங்களில் செல்வாக்குடனும் இருக்கிறது.. ஏன்? முக்கியமாக அது அரசியல் உள்நோக்கம் கொண்ட கோரிக்கை. அதிகாரத்துக்கான குறுக்கு வழியாகவே இந்த தேசியக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. வடகிழக்கு பகுதியில் சீனா பெரும் செலவில் மிகத்திறமையான உளவாளிகள் உதவியுடன்  அந்த பிரிவினைவாதக் கோரிக்கைகளை வளர்த்து விடுகிறது

இது இயல்பானதே. பாக் பஞ்சாபில் சிந்து தேசிய கோரிக்கையையும் , ஸ்வாத் பள்ளத்தாக்கில் பதான் தேசிய கோரிக்கையையும் பாகிஸ்தானில் வளர்த்து விட்டது இந்தியா. ஈழத்தமிழ் கோரிக்கையையும் இந்திய உளவுத்துறையே வளர்த்துவிட்டது. முடிந்தால் சீனாவுக்குள்ளும் உபதேசியக் கோரிக்கைகளை இந்திய அரசு தன் உளவமைப்புகள் மூலம் உருவாக்கக் கூடும்.

ஆகவே உபதேசியக் கோரிக்கைகளை அது உண்மையா பொய்யா என்ற அளவில் பார்ப்பது அபத்தம். அதனால் யாருக்கு லாபம், என்ன லாபம் என்ற அளவில் பார்ப்பதே உசிதமானது. வடகிழக்கு உபதேசியக்கோரிக்கைகளால் சாதிக்கொரு தனிநாடு கிடைத்தால் அங்கே லாபம் அடையப்போவது யார்? நாளை தமிழ்நாட்டை அதேபோல நாடார்லேண்ட், வன்னியநாடு, தேவர்பூமி என்றெல்லாம் பிரிக்கும் கோரிக்கை வந்தால் அதனால் எவருக்கு லாபம் வரும்?

கண்டிப்பாக மக்களுக்கு அல்ல. அவர்கள் தங்களுக்குள் மோதி அழிவார்கள். குருதி பெருக்குவார்கள்.பட்டினியில் சாவார்கள். சுயநல நோக்குடன் இம்மாதிரி பிரிவினைவாதங்களை தூண்டிவிடும் அரசியல்வாதிகளுக்கும் சரி, அவற்றை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளுக்கும் சரி மானுட அழிவு ஒரு பொருட்டே அல்ல. தங்கள் பிளவு அரசியல் மூலம் மக்கள் ஆயிரம் லட்சம் என அழிந்தால்கூட அந்த அழிவையே தங்கள் எதிரிக்கு எதிரான ஆயுதமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள். அதைத்தான் எந்த மனசாட்சி உறுத்தலும் இல்லாமல் செய்வார்கள்.

பலசமயம் இவற்றில் உள்ள அபத்தம் நம் கண்களை மங்கச்செய்யும். சில்லறை பொருளியல் காரணங்களுக்காக ஆரம்பிக்கும் ஒரு பிரிவினைவாதப்போராட்டம் அந்த பொருளியல் லாபத்தை விட பல்லாயிரம் மடங்கு  அழிவை உருவாக்கும். நதிநீர் தாவாவுக்காக பஞ்சாபில் ஆரம்பித்த தனிநாடுப்போராட்டம் பாகிஸ்தானிய ஆதரவுடன் பெருகி பஞ்சாபை அப்படியே மரணப்படுக்கையில் வீழ்த்தியது. வடகிழக்கு சுரண்டப்படுகிறது என்று சொல்லி ஆரம்பிக்கபப்ட்ட போராட்டங்கள் சாதிப்போராட்டங்களாக மாறி வடகிழக்கையே அழித்துக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் சண்டே இன்டியன் இதழில் இதழாளார் ஒருவர் எண்பதுகளில் தீவிரவாதம் இருந்த நாட்களில் பஞ்சாப் எப்படி இருண்டு கைவிடப்பட்டு கிடந்தது என்று சொல்லிவிட்டு இன்றைய பஞ்சாப் கடந்த இருபத்தைந்தாண்டுகளில் எப்படி மாபெரும் பொருளியல் பாய்ச்சலை அடைந்துள்ளது என் எழுதியிருந்தார். பொருளியல் வளர்ச்சிக்காகப் பிரிவினைப்போர் என்பது தலைவலிக்காக தற்கொலை செய்துகொள்வது போல.

எந்த தேசியக்கோரிக்கையும் தன்னிச்சையாக எழுவதில்லை. அதிகார அரசியல் நோக்குடன் திட்டமிட்டு  உருவாக்கப்படுகின்றன அவை. ஒருசிலரை பதவிக்குக் கொண்டுசெல்லும் ஏணிகள் அவை.  அந்த மாற்றத்தால் சிலசமயம் சில லாபங்கள் இருக்கலாம். ஆனால் அந்த ஆட்சி- அதிகார மாற்றத்துக்காக எந்த அளவுக்கு  எளிய மக்கள் இழப்பைச் சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே கேள்வி. அந்தக் கோரிக்கை வரலாற்று ரீதியானதா இல்லையா என்பதல்ல.

வரலாறு தெரிந்தவன் ஒன்றை உணர்ந்திருப்பான், எந்த தேசியக்கோரிக்கையையும் வரலாற்றை வைத்து நியாயப்படுத்தலாம். எந்த தேசியக் கோரிக்கையையும் வரலாற்றை வைத்து நிராகரிக்கவும் செய்யலாம். சேர்ந்து வழவெண்டும் என்றாலும் பிரிந்து சாகவேண்டும் என்றாலும் வரலாற்றில் இருந்து அதற்கான எல்லா ஆதாரங்களையும் கண்டு பிடிக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஅயன் ராண்ட் 2
அடுத்த கட்டுரைகடிதங்கள்