இந்தப்பயணத்தில் முக்கியமான சிக்கல்கள் சில உள்ளன. குகைகள் நடுவே உள்ள நெடுந்தூரம். அதை நிரப்புவதற்காக வழியில் உள்ள வேறு இடங்களை சேர்த்துக்கொள்ளவேண்டியிருந்தது. தூரங்களைக்கூட நாங்கள் தமிழகக் கணக்குப்படி மானசீகமாக கணித்திருந்தோம். ஆனால் சட்டிஸ்கரில் ஐம்பது கிமீ என்பது இரண்டுமணிநேர பயணம். தமிழகக் கணக்குக்கு இரு மடங்கு. ஆகவே எல்லா கணிப்புகளும் தவறின. புதிய இடங்களைப்பார்ப்பதற்காக வழியை கொஞ்சம் மாற்றும்போது ஒருநாளையே இழந்துவிட நேர்ந்தது
மேலும் குகைகள் பெரும்பாலும் புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் அல்ல. அவை அடர்கானகத்துக்குள் இருந்தன. முன்னரே விரிவான ஏற்பாடுகள் செய்யாமல் சென்றால் அவற்றைக் கண்டுபிடிப்பாது கடினம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் முடிந்தவரை பெரிய குகைகளையே பார்க்க எண்ணியிருந்தோம். ஆனாலும் சில குகைகளை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவற்றில் ஒன்று ஜோகி குகைகள். அவை அருவிக்கருகே இருக்கின்றன என்று சொன்னார்கள். சில காவலர்களும் உறுதிசெய்தனர். ஆனால் அருவிக்கு அருகே மது அருந்த வந்தவர்களாகத் தென்பட்ட இருவர் அங்கே அப்படி குகையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் திரும்பும்போது யோசித்தோம், மது அருந்துவது போல அவர்கள் நடித்திருக்கலாம், அவர்கள் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என்று.
இரவு தம்தாரி என்ற ஊரில் சாலையோர விடுதியில் தங்கினோம். முதலில் அறைகேட்ட விடுதி பரிதாபநிலையில் இருந்தது. ‘இன்னும் கொஞ்சம் நல்ல விடுதி இங்கே உள்ளதா?’ என்று கேட்டபோது ‘இருக்கும் விடுதிக்கே ஆட்களைக் காணோம்’ என உரிமையாளர் முணுமுணுத்தார். கடைசியில் ஒரு வழிப்போக்கர் சொன்ன விடுதி சுமாராக இருந்தது. ஆனால் அதியுக்கிரமான கொசு. நண்பர்கள்தான் புகார் சொன்னார்கள். நான் தூங்கிவிட்டேன்
காலையிலேயே கிளம்பிவிட்டோம். கிட்டத்தட்ட பகல் முழுக்க கார்ப்பயணம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்று பார்த்த ஊர் மிக முக்கியமானது. சிர்பூர் இப்போது இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் நடுவே அதிகமாகப் பேசப்படுகிறது. சென்ற இருபதாண்டுகளில் அடையாளம் கானப்பட்டு அகழ்வாய்வு செய்யப்பட்டுவரும் இந்த ஊர் ஒரு பிரம்மாண்டமான தொல்நகரம். மாபெரும் ஏரி ஒன்று நகர் நடுவே உள்ளது. ஏழாம் நூற்றாண்டு வரை இந்நகரம் ஒரு முக்கியமான கல்விநகரமாக இருந்துள்ளது. நாளந்தாவைவிட பழமையானது, நான்குமடங்கு பெரியது என்கிறார்கள்.
சம்ஸ்கிருதத்தில் இதை ஸ்ரீபுரம் என்று சொல்லவேண்டும். செல்வநகரம் அல்லது திருநகரம் என்று மொழியாக்கம் செய்யலாம். தட்சிண கோசலம் என்றழைக்கப்பட்டது இப்பகுதி. ஸ்ரீபுரம் அதன் தலைநகரம். கிமு ஐந்தாம் நூற்றாண்டுமுதலே இந்த நகரம் இருந்திருக்கிறது. முக்கியமான வேதக்கல்வி மையமாக இருந்த இந்நகரத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சமணமும் பௌத்தமும் செல்வாக்கு கொண்டன.
கோசலர்களின் ஆட்சிக்குப்பின் சாதவாகனர்கள் காலத்தில் இந்நகரம் மேலும் விரிவடைந்தது சோமவன்ஷிக்கள் அல்லது பாண்டவ வன்ஷிக்கள் என்ற மன்னர்கள் பின்னர் இந்நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். கடைசியாக காலசூரிகளின் ஆட்சி நிலவியது. சோமவன்ஷிக்களின் காலகட்டத்தில் மாமன்னர் மகாசிவகுப்த பல்லார்ஜுனர் இந்நகரை இன்றுள்ள வடிவில் கட்டி விரிவாக்கினார்.
அழிந்துகிடந்த சிர்பூர் வெள்ளையர் ஆட்சிக்காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்நகரைப்பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பின்னர் இந்நகரை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மத்தியப்பிரதேசத்தில் இருந்து சட்டிஸ்கர் பிரிந்தபின் சட்டிஸ்கரின் பண்பாட்டுத்தனித்தன்மையைப்பற்றிய ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே மீண்டும் ஆய்வுகள் ஆரம்பித்தன. சிர்பூர் விரிவான அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இப்போது இந்நகரம் சட்டிஸ்கர் அரசின் கோரிக்கை வழியாக உலக பாரம்பரியச் செல்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபுரம் நகரின் அளவு இன்றைய ஆய்வாளர்களை பிரமிப்படையச்செய்கிறது. இன்று இங்கே நூற்றைம்பது கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நகரம் நாற்பது சதுர கிலோமீட்டர் பரப்புள்ளதாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். மகாநதியின் கரையில் உள்ளது இந்நகரம். ஆகவே முக்கியமான நீர்வழிப்பாதை இதற்கு இருந்திருக்கிறது. துறைமுகத்தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. கடலில் இருந்து நதிவழியாக உள்நிலத்துக்கு வந்து வடக்கே அஜந்தாவுக்கோ ஜனக்பூருக்கோ செல்லக்கூடிய வணிகப்பாதை இதுவாக இருந்திருக்கலாம்
ஸ்ரீபுரம் அன்றையப் பண்பாட்டின் மிகசிறந்த உதாரணம். இந்துமதமும் பௌத்த சமண மதங்களும் பலநூற்றாண்டுக்காலம் அருகருகே எந்தவிதமான மோதலும் இல்லாமல் நீடித்ததை இந்த நகரின் கோயில்களிலும் விகாரங்களிலும் காணலாம். அந்தக்காட்சியை நாம் சிலப்பதிகாரத்திலும் காணலாம்தான். இந்தியாவின் நூற்றுக்கணக்கான காவியங்களில் அதைக் காணலாம். காஞ்சி போன்ற தொல்நகரங்களில் கண்கூடாகக் காணலாம்.
ஆனாலும் சென்ற அரைநூற்றாண்டாக நம்முடைய வரலாற்றாய்வுக் கூலிப்படை இந்துமதம் சமண பௌத்த மதங்களுடன் போராடி அவற்றை அழித்தது என்ற பொய்யை உச்சகட்ட பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. வரலாற்றாய்வுத்தளத்தில் இருந்து இன்று ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாக அதைக் கொண்டுவந்துவிட்டார்கள். அவற்றை எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் ஸ்ரீபுரம் போன்ற ஒரு வரலாற்றுநகரை எட்டிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.
சிர்பூர் எப்படி அழிந்தது என்பது பலவாறாக விவாதிக்கப்படுகிறது. இந்நகர் மகாநதியில் வந்த பெருவெள்ளம் அல்லது பூகம்பத்தால் அழிந்திருக்கலாம் என்பதே ஆய்வாளர் நம்பிக்கை. காரணம் இந்நகரம் 1872 வரை முழுக்க மண்ணிலும் வண்டலிலும் மூழ்கிக் கிடந்தது. 1872ல் டாக்டர் ஜோசப் டேவிட் பெக்லர் தலைமையில் இங்கே முதல் அகழ்வாய்வு நிகழ்ந்தது. அப்போதே இங்குள்ள பல முக்கியமான இந்து ஆலயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று இநத இடத்தில் உள்ள முதன்மையான, தொல்சின்னமான ஆனந்தபிரபு பௌத்தவிகாரமும் அதனருகே உள்ள ஸ்வஸ்திக பௌத்த விகாரமும் சமீபத்தில்தான் கண்டடையப்பட்டன.
மதியவெயிலில் சிர்பூர் வந்து சேர்ந்தோம். எந்தத்தொல்நகரையும் காலையிலோ மாலையிலோதான் பார்க்கவேண்டும். காலையைவிட அஸ்தமன நேரம் நல்லது. மதியவெயிலில் முற்றிலும் வேறு உணர்வு, ஒருவகை வெறுமை மனதில் நிறைந்தது. சிர்பூரின் பெரும்பாலான கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. அடித்தளங்கள்கூட செங்கற்களே. இன்று பெரும்பாலான கட்டிடங்களின் அடித்தளங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. மிகமிக உறுதியான செங்கற்கள். ஆயிரத்து முந்நூறு வருடங்களாகியும் நேற்று கட்டியவை போல உறுதியான விளிம்புகளுடன் இருந்தன.
செங்கல் அடித்தளங்கள் வழியாக நடக்கும்போது நாளந்தாவுக்குச் சென்ற உணர்வே ஏற்பட்டது. நடுவே உள்ள ஆனந்தபிரபு விகாரம் மிகப்பெரியது. கட்டிடம் முழுக்க செந்நிறமான கல்லால் ஆனது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்ட தூண்கள். விதவிதமான காதலர் சிலைகள்.அவற்றில் கணிசமானவை நெடுங்காலம் மண்ணில் புதைந்து மழையில் அரித்து கரைந்த நிலையில் உள்ளன. சில சிலைகள் கரையாமல் திகைப்பு அளிக்கும் அழகுடன் எஞ்சுகின்றன. போதிசத்துவர்கள், தேவதைகள். நடுவே பூமிதொடுகை முத்திரையுடன் அமர்ந்திருக்கும் புத்தரின் செந்நிறக்கல் திருமேனி. இந்த விகாரம் தேரவாத பௌத்தர்களுக்குரியது.
அதனருகே உள்ள ஸ்வஸ்திக விகாரத்தில் கருவறைக்குள் சிலை இல்லை. சிறிய அறைகள் கொண்டது இந்த விகாரம். இங்கே மூன்று பெருமதங்களின் ஆலயங்களும் அருகருகே உள்ளன. அருகே உள்ள சிவன் கோயிலில் உடைந்த லிங்கம் கருவறைக்குள் இருக்கிறது. மொத்த கோயிலுமே இடுப்பளவு உயரமுள்ள குட்டிச்சுவராகவே எஞ்சுகிறது. இங்கே அருகே இருக்கும் அடித்தளம் கோயிலதிகாரியின் வீடாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். அங்கே நான்கு ஆழமான நிலவறைகள். அவற்றில் இருந்ந்து ஏராளமான சங்குவளையல்கள் கிடைத்திருக்கின்றன.
இப்பகுதி முழுக்கக் கட்டிடங்களின் அடித்தளங்கள். அவற்றில் சமண ஆலயங்கள் பல உள்ளன. ஆனாலும் ஸ்ரீபுரத்தின் முக்கியமான மதம் என்றால் சைவம்தான். இங்கே நூற்றி எட்டு சிவன் கோயில்கள் உள்ளன. விஷ்ணு ஆலயங்கள் நான்குதான். பெரும் சமண மடாலயம் ஒன்றின் இடிபாடுகள் உள்ளன. இந்நகரத்தை ஓர் ஆய்வாளர் முறையாகப் பார்க்க எப்படியும் ஒருமாதம் தேவைப்படும்.
அங்கிருந்த அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். இங்கே சிலைகளுக்குப் பெரும்பாலும் களிமண்பாறைகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை காலத்தால் அரிக்கப்பட்டு உருவிழந்து காணப்படுகின்றன. ஆனாலும் அகழ்வைப்பகத்தில் இருந்த போதிசத்வர் சிலைகள் அழகானவை. அஜந்தா ஓவியங்களில் உள்ள மாபெரும் ரஜதகிரீடங்கள் சூடிய போதிசத்வர்கள் அவர்கள். இரண்டு அற்புதமான மகிஷாசுரமர்தனி சிலைகள் சிதையாமல் இருந்தன. நாகபடம் சூழ அமர்ந்திருக்கும் யோக உபவிஷ்ட புத்தரின் சிலை அழகியது.
இங்கே முழுக்க இடியாமலிருக்கும் இரு கோயில்கள் ராமர் கோயில், லட்சுமணார் கோயில் என உள்ளூரில் சொல்லப்படுகின்றன. ராமர்கோயில் முகடு உடைந்த நிலையில் உள்ளது. லட்சுமணர் கோயில் ஏறத்தாழ முழுமையாகவே உள்ளது. முழுக்கமுழுக்க சுட்ட செங்கல்லில் கட்டப்பட்ட கோயில் இது. மிக உறுதியான செங்கல். செங்கல்லிலேயே சிற்பங்களும் அலங்காரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மகாநதியின் உயர்தரக் களிமண்ணின் கொடை அது. அந்தக்கோயிலின் செந்நிறம் பேரழகுடன் தோன்றியது.
லட்சுமணர் கோயிலின் உள்ளே போதிசத்வர் சமேத புத்தர்சிலைகளை தூக்கிக் கொண்டுவைத்து ராமலட்சுமணர்களாக வழிபட்டு வருகிறார்கள் உள்ளூர்க்காரர்கள். கோயிலின் முகப்பு சிலைகளால் ஆன மாபெரும் தோரணவாயில் கொண்டது. செந்நிறமான கல்லில் செதுக்கப்பட்டது. அவற்றில் விஷ்ணுவின் அவதாரங்கள் நுணுக்கமான சிலைகளாகச் செதுக்காப்பட்டுள்ளன. பூவராகமூர்த்தி சிலையும் உலகளந்தான் சிலையும் அழகுடன் உள்ளன. பெரும்பாலான சிலைகள் மழுங்கிவிட்டன. நேர்மேலே விஷ்ணு பள்ளிகொண்ட சிலை உள்ளது. அது ஒரு விஷ்ணுகோயிலாக இருந்திருக்கிறது.
கோயிலின் இருபக்கமும் உள்ள சிலைகளில் காதலர் சிலைகள் அழகியவை. மிக நளினமான நிலைகள். குறிப்பாக காதலியைப் பின்புறமாக வந்து அணைத்து நிற்கும் காதலன் சிலை அதிகமாகக் காணக்கிடைக்காத தோரணை கொண்டது. நுணுக்கமானஆடையணிகள். துல்லியமான முகபாவனை. செந்நிறமான கல்லில் செப்புச்சிலைகள் போல அவை மின்னின. இதழ்முத்தம் அளிக்கும் செந்நிறமான சிலையை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். கஜுராகோவை விட மேலான அற்புதமான சிலைகள் இங்கே இருந்திருக்கவேண்டும். அந்தப்பெண்ணின் கொண்டை சுருள்சுருளாக அமைந்திருந்தது, ஆணின் தலைமுடி மெல்லிய சடைகளின் தொகை.
சிர்பூரில் இருந்து மனமில்லாமல்தான் கிளம்பினோம். எங்கள் திட்டத்தில் அந்த ஊர் இல்லை. சட்டிஸ்கரின் வரலாற்றை ஆராயும் ஒரு பயணத்தைத் தனியாகவே போடவேண்டும். இந்தியாவை அப்படிப் பல கோணங்களில் பார்த்து முடிக்க ஆயிரமாண்டு ஆயுளும் தேவைப்படும்.
நாங்கள் மதிய உணவு உண்ணவில்லை. சட்டிஸ்கர் மாநிலம் உருவானபின்னர் அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகப்பெரிய திட்டங்களை வகுத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. சிர்பூரில் இருந்ந்த அரசு உணவகமும் தங்குமிடமும் சர்வதேசத்தரம் கொண்டவை. கட்டிமுடித்து சில மாதங்களே ஆனவை ஆனால் உணவுக்கு நாங்கள் முன்னரே சொல்லியிருக்கவில்லை. சிர்பூருக்கு சுற்றுலாப்பயணிகள் வருவது குறைவு. ஆகவே வேறுவழியில்லாமல் கிளம்பினோம்.
ராய்கட் என்ற அடுத்த ஊருக்கு காரில் செல்லும் வழியில் ஒரு டாபாவில் சாப்பிட்டோம். ராய்கருக்கு இரவு ஏழு மணிக்கு வந்துசேர்ந்தோம். சட்டிஸ்கர் அரசின் சுற்றுலா விடுதியில் அறை கிடைத்தது. புதிய விடுதி. இப்படி சுற்றுலா விடுதிகள் எவையும் தமிழகத்தில் கிடையாது.
ஒன்றைக் கவனித்தேன். மாவோயிசப்பிரச்சினை உள்ள தண்டகாரண்ய பகுதி மட்டும் இங்கே எந்த விதமான வளர்ச்சித்திட்டங்களும் இல்லாமல் தேங்கிக் கிடக்கிறது. அப்பிரச்சினை சரிசெய்யப்பட்ட பிற பகுதிகளில் சாலைகள் சிறப்பாக உள்ளன. ஒட்டுமொத்தமாகவே வளர்ச்சியும் வளமும் கண்ணுக்குப்படுகிறது
[மேலும்]