குகைகளின் வழியே – 11

இன்று காலை தாமதமாகவே எழுந்தோம். நேற்று மீண்டும் ஜக்தல்பூர் வந்து அதே விடுதியில் தங்கினோம். நல்லவேளையாக பஜனை முடிவுற்றுவிட்டது. நன்றாகத் தூங்கி எழுந்து ஜக்தல்பூரில் உள்ள பழங்குடி அருங்காட்சியகம் செல்லலாம் என்று எண்ணினோம் ஆனால் காலை பத்துமணிக்குத்தான் அருங்காட்சியகாம் திறக்கும் என்றார்கள். காலையுணவை முடித்துவிட்டு வந்தோம். நாங்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னதனால் ஒன்பது மணிக்கே திறக்க காவலர் ஒப்புக்கொண்டார்

சட்டிஸ்கரின் பழங்குடிப்பண்பாட்டை மிகச்சிறப்பாகச் சொல்லக்கூடிய அருங்காட்சியகம் இது. ஆறு அறைகளிலாக பழங்குடிகளின் வாழ்க்கை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் வேட்டைக்கருவிகள். முதலில் அம்பு எய்து மீன்பிடிக்கும் வழக்கம் இவர்களுக்கு இருந்திருக்கிறது. தோளில் ஒரு கோடாலி இல்லாத பழங்குடியை இந்தக் காட்டில் காணவே முடியாது. விதவிதமான கோடாலிகள். மிக நீளமான அம்புகளைப்போட மிகமிக நீளமான அம்புறாத்தூளிகள்.

பழங்குடி ஆயுதங்களில் உலகம் முழுக்கவே அம்புதான் அதிகம். வாள் அனேகமாகக் கிடையாது. அபூர்வமாகக் கத்தி. கத்தி பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டுக் கருவிதான். விதவிதமான அரிவாட்கள். இத்தனை விதமான அரிவாட்களை எதற்காகச் செய்தார்கள் என்று புரியவில்லை.

சில பழங்குடியினர் ஆயுதங்கள்

பழங்குடிகளின் கூடைகள், மீன்பிடிக்கூடைகள், பெட்டிக்கூடைகள் என பலவகையான பிரம்பு மூங்கில் முடைவுகள் இருந்தன. அவை வெறும் பயன்பாடு கருதியவை அல்ல. அவை மிகுந்த அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்பட்டவையும் கூட. பழங்குடிகளின் கலை என்பது பயன்பாடும் அழகும் சரிவிகிதமாகக் கலந்த ஒன்று.

பிரம்புப் பொருட்கள்

மண்ணாலும் உலோகத்தாலும் செய்யப்பட்ட பலவகையான பழங்குடித்தெய்வங்களை இங்கே காணமுடிந்தது. பல சிலைகள் மிகத் தொன்மையானவை. இந்தச் சிலைகளை காணும் எந்த ஒரு இந்துவும் இவை எல்லாமே இந்து தெய்வங்கள் என உணர முடியும். இந்த தெய்வங்களின் அமைப்பு , நகைகள், அமர்வுமுறை , குறியீட்டு முறை எல்லாமே பிற இந்து தெய்வங்களைப் போன்றே உள்ளன. யானைமீதேறி அமர்ந்த தேவியை எளிதில் கொற்றவை என்று சொல்லிவிடமுடியும். காரணம் இந்த தெய்வங்களில் பெரும்பாலானாவை இந்து வழிபாட்டுக்குள் ஏற்கனவே நுழைந்துவிட்டவை. எஞ்சியவை இந்து பெருமரபில் இருந்து பழங்குடித்தெய்வமாக ஆனவை. உதாரணம் பீமதேவ்.

இது ஏன் என்றால் இந்து மதத்தின் அடித்தளம் பழங்குடிப்பண்பாடு என்பதே. இன்று இந்துக்களாக இருக்கும் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் தெய்வங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட பழங்குடிகளே. மிகச்சமீபகாலமாக கிறித்தவ மதமாற்ற உத்தியின் ஒரு பகுதியாக, அவர்களிடம் நிதிபெறும் ஆய்வாளர்களால் பழங்குடிகள் இந்துக்கள் அல்ல என்றும் அவர்களின் பண்பாடு இந்துப்பண்பாட்டுக்கு நேர் எதிரானது, இந்துக்களால் ஒடுக்கப்பட்டது என்றும் சொல்லும் ஒரு தரப்பு உச்சகட்டப் பிரச்சாரம் வழியாகப் பரப்பப்படுகிறது. கல்வித்துறைகளில் பணபலத்தால் நிறுவப்பட்டும் வருகிறது. இத்தகைய ஒரு பழங்குடி ஆவணக்காப்பகம் அதற்கு எதிரான கண்கூடான ஆதாரம்.

பழங்குடித் தெய்வங்கள்

அருங்காட்சியகத்தைப்பார்த்துவிட்டு நேராக ராய்கர் பாதையில் கிளம்பிச்சென்றோம். இங்கே வழிகேட்டுச் செல்வது ஒரு அபாரமான அனுபவம். பெரும்பாலானவர்கள் அதிகம் பயணம் செய்யாதவர்கள். பயணம்செய்வதற்கான அச்சம் இங்கே அதிகம். ஆகவே ஐம்பது கிமீ தொலைவில் உள்ள ஓர் இடம் இவர்கள் அறியாதது. ஆனால் அக்கறையுடன் வந்து நட்புடன் வழி சொல்வார்கள்.

மலஞ்ச்குடும் அருவியையும் ஜோகி குகையையும் பார்ப்பதற்காகச் சென்றோம். காங்கர்சிட்டி என்ற ஊரிலிருந்து வழிகேட்டு வழிகேட்டுச் சென்றோம். சட்டிஸ்கரின் குக்கிராமப்பகுதி. பஸ்தரை விட்டு வெளியே வந்துவிட்டோம். சிலேட்டுப்பாறைகள் இல்லாமலாகிவிட்டன. கருங்கல் பாறைகள். அதற்கேற்ப வீடுகள் களிமண்ணால் ஆனவையாகவும் வளையோடு போட்டவையாகவும் மாறின. கால்களில் கண்ணகியின் சிலம்பு போன்று அலுமினியத்தாலான சிலம்பை அணிந்த பெண்கள் தொடைக்குமேல் ஏற்றிக்கட்டி மார்பையும் மறைத்த வேட்டியுடன் குழந்தைகளையும் மூட்டைகளையும் சுமந்துகொண்டு கடந்து சென்றார்கள்.

வழிநெடுகப் பேசிக்கொண்டே சென்றோம். அர்விந்த் அமெரிக்காவில் எம்.ஐ.டியில் தத்துவத்தில் உள்ளுணர்வு பற்றி ஆராய்ச்சி செய்கிறார். நான் எழுதிய எரிக் ஹாப்ஸ்வம் பற்றிய குறிப்புகள் மிக முக்கியமானவை என்று சொன்னார். காப்ஸ்வமின் ஒட்டுமொத்தப்பங்களிப்பை நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று சொன்னேன். அவரது உண்மையான இடம் ஐரோப்பிய தொழிற்சமூகங்களின் பரிணாமம் பற்றிய அவரது ஊகங்களினால்தான் உருவாகியிருக்கிறது. அவருக்கும் பின் நவீனத்துவர்களுக்குமான மோதல் பற்றி நீண்ட பேச்சு பின்நவீனத்துவத்தின் இன்றைய நிலை வரை சென்றது.

தகர்க்கப்பட்ட பாலம்

அருவியைக் கண்டுபிடித்தோம். மலைகளுக்கு உள்ளே தன்னந்தனியாக விழுகிறது. மிக உயரத்தில் இருந்து பல பாறைகளிலாக சரிந்து சரிந்து விழும் அருவி மழைக்காலத்தில் உக்கிரமாக இருக்கலாம். நாங்கள் போனபோது நீர் இல்லாமல் ஓடையாக வழிந்துகொண்டிருந்தது. அருவியைப் பார்க்க ஒரு இரும்புக்கயிற்றுப்பாலம் இருந்திருக்கிறது, நாற்பதாண்டு பழையது. அதை மாவோயிஸ்டுகள் தகர்த்திருந்தனர். அருகே ஒரு படிக்கட்டு. கிட்டத்தட்ட ஆயிரம் படிக்கட்டுகள். மூச்சிரைக்க மேலேறிச் சென்றால் அருவியின் தொடக்கத்தைக் காணலாம். அந்தப் படிக்கட்டுக்குப் போடப்பட விளக்குகளும் மாவோயிஸ்டுகளால் அழிக்கப்பட்டுத் தூண்கள் மட்டும் நின்றன.

அருவியை நோக்கி…

இனிய மாலை. முற்றிலும் அன்னிய ஊரில் சூரியன் மிகமிக அறிமுகமானவனாக இருக்கிறான்.

[மேலும்]

படங்கள்

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 10
அடுத்த கட்டுரைகடிதம்