ஏழாம் உலகம், கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
 
முதன் முதலாக உங்களின் நாவல் ஏழாம் உலகைப் வாங்கிப் படித்தேன்.  பிரமிப்பு.
 
சில படங்களைப் பார்க்கும் போது நம்மை அறியாமலே அப்படத்தினூடே புகுந்து விடுவோம். அகம், புறம் இவற்றை மறந்து ஒன்றிப் போய் விடுவோம். அவ்வாறு என்னை முற்றிலுமாக ஆக்ரமித்துக் கொண்ட படம் “அழகி”.  அதற்குப் பிறகு ஒரு புத்தகம் என்னை முழுவதுமாய் ஆக்ரமித்துக் கொண்டது உங்களின் நாவலைப் படித்த போது தான்.
 
தங்களின் நாவல் ஏழாம் உலகை காலையில் எடுத்தேன். படித்தேன். முடித்தேன். இரவு 7.00. மனம் வேதனையிலும், விரக்தியிலும் வெம்பியது. அதன் பிறகு மூன்று நாட்களாயின அச்சூழலிலிருந்து வெளிவருவதற்கு.
 
இதுவரையில் நான் பார்க்காத உலகம். அதிர்ச்சி. அதிர்ச்சி. இப்படியும் மனிதர்கள் வாழ்க்கை இருக்கிறது என்று பட்டென்று அடித்தது.
 
”மனிதன் என்ற சொல்லுக்கு இன்னொரு வார்த்தை – உருப்படி”.
 
பிச்சைக்காரர்களின் உலகத்தில் மனிதனுக்குப் பெயர் ”உருப்படி”,  வணிக உலகத்தில் “எம்ப்ளாயி”
 
உங்கள் நாவலைப் படித்த பிறகு ஏதோ ஒரு மாயத்தோற்றத்திற்குள் மாட்டிக் கொண்டது போல இருந்தது. அவ்வுணர்ச்சியைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை.
 
ஒரே ஒரு வார்த்தை : பிரமாதம்
 
 
பின்னர், தங்களின் அமெரிக்கப்பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
அன்புடன்
 
கோவையிலிருந்து தங்கவேல் மாணிக்கம்
அன்புள்ள தங்கவேல்

ஏழாம் உலகம் என் நாவல்களில் நேரடியானது. கிட்டத்தட்ட அது எடுத்துக்கொள்ளும் கேள்வியையே– மனிதனின் சாரம் என்ன என்ற வினாவை- வரலாற்றிலும் தொன்மன்களிலும் வைத்துப்பேசும் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களும் உங்கள் கவனத்துக்கு வரவேண்டும். ஏழாம் உலகம் நல்ல தொடக்கம்
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

இணையதள எழுத்துக்கள் வழியாகவே உங்களை பழக்கம். நான் அதிகம் நவல்களை படித்தது இல்லை. சமீபத்தில் உங்கள் ஏழாம் உலகம் நாவலை வாசித்தேன். கொடுமையான ஒரு வாழ்க்கையை நேரில் கண்ட அனுபவம் பெற்றேன். எங்கள் ஊரில் தீர்த்தமலை அருகிலே பிச்சைக்காரர்களின் உலகம் உண்டு. அவர்கள் பெரும்பாலும் நாடோடிகள். இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிற கசப்பான அடிமை வாழ்க்க்கை அவர்களுக்கு இருக்காது. உங்கள் எழுத்துக்கள் என்னை கதிகலன்கச்செய்தன. அம்மாடி என்ன ஒரு வாழ்க்கை என்ற நினைப்பு வந்தது.

ஆனால் அந்த மக்கலின் வாழ்க்கையைப் பார்த்தால் அதிலேயும் அன்பும் பாசமும் தியாகமும் இருக்கிறது. மனிதனின் நற்குணங்கள் எல்லா இடத்திலும் அவனுடன் வரும் அதனால்தான் அவன் மனிதன் இல்லையா? குப்பையிலே கிடந்தாலும் சந்தையிலே விற்கப்பட்டாலும் அவன் மனிதன் அல்லவா? அந்த எண்ணம்தான் என் மனதில் கிடைத்தது.

நன்றி ஜெயமோகன்

சரவணன் சுப்ரமணியன்

அன்புள்ள சரவணன்

தீர்த்தமலை எனக்கு நன்றாகத்தெரிந்த ஊர். ஏழாம் உலகம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அந்நாவலின் சாரத்துக்குள் நீங்கள் சென்றிருப்பதையே காட்டுகின்றன. மனிதன் அமிலத்தில் ஊறினால் எது மிஞ்சுகிறதோ அதுவே மனிதத்தன்மை அல்லவா?

நன்றி

ஜெ.

 

விஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

நூல்கள்:கடிதங்கள்

ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்

கடிதங்கள்

ஏழாம் உலகம்: கடிதங்கள்

ஏழாம் உலகம் :கடிதங்கள்

சில இணையப்பதிவுகள்

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்:புதியமாதவி, மும்பை

ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்

ஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

Monday, May 16th, 2005

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்

முந்தைய கட்டுரைஆனியாடி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைவ‌ல்லின‌ம் ‘க‌லை இல‌க்கிய‌ விழா