கடல்

கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு

1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும்.

2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல தருணங்கள் உள்ளன. ஆன்மீகமானவை, கவித்துவமானவை– அதுதான் வேறுபாடு

3. கடல் காதல்கதை அல்ல. காதல் அதில் முக்கியமான இடம் வகிக்கிறது. காதல் என்பதை விட ஆணின் ஆன்மா பெண்ணைக் கண்டுகொள்ளும் தருணம் என்று சொல்லலாம், அவ்வளவுதான்

4. கீச்சான் என்பது பாடலில் வருகிறது. நான் எழுதியது அல்ல.மதன் கார்க்கியின் சொல்லாட்சி அது. ஆனால் கீச்சான் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது.கீச்சான் என்றால் புலி போலக் கோடுகள் கொண்ட சிறிய மீன். டைகர்ஃபிஷ் என்று சொல்வார்கள் கடலில் உள்ள சிறு மீன், ஆனால் அது புலிதான்.

இனிமேல் கடல் பற்றிய விவாதங்கள் ஏதும் இந்த தளத்தில் இருக்காது. நான் எழுதும் படங்கள் சம்பந்தமான விவாதங்களுக்காக இந்த தளத்தைக் கையாள விரும்பவில்லை. ஏனென்றால் அதற்கு மட்டுமே இங்கே வரும் வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.

மேலும் தமிழகமே பேசப்போகும் ஒரு பெரிய படத்தைப்பற்றி இங்கும் பேச ஆரம்பித்தால் வேறு எதற்குமே இங்கே இடமிருக்காது. இந்த இணையதளம் இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றையே பேசுபொருளாகக் கொண்டது.

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைஇலட்சிய முகங்கள்
அடுத்த கட்டுரைசெல்வராஜும் சாகித்ய அகாடமியும்