காலையிலெழுந்து கிளம்பியபோதே கிருஷ்ணன் சொல்லிவிட்டார், இன்று குகைகள் ஏதும் இல்லை.சட்டிஸ்கர் நோக்கிய நெடும்பயணம் மட்டும்தான் என்று. ஆகவே அதற்கான மனநிலையுடன்தான் கிளம்பிச்சென்றோம். குளிர் இருந்தது. நான் முதல்முறையாக என் கோட்டை அணிந்து கொண்டேன்.சென்ற முறை காட்ஜெட் முத்து என்று சான்றோரால் அன்புடன் அழைக்கப்படும் ஜெர்மன் முத்துக்கிருஷ்ணன் பயணத்துக்காகக் கொண்டுவந்த எடையில்லாத செயற்கைக் கம்பிளி கோட்டு.இதமான வெம்மையுடன் அது உடலை அணைத்திருந்தது.
புழுதி படிந்த சாலை. அது ஒரு தேசிய நெடுஞ்சாலை என்று அறிவிப்புகள் சொல்லின. ஆனால் எந்த ஒரு கிராமச்சாலையை விடவும் மோசமான பராமரிப்பு. குண்டும்குழியுமான சாலையில் மணிக்குப் பத்து கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்ல முடிந்தது. ஆனால் சாலையில் அனேகமாக வாகனங்களே இல்லை. ஒருமணிநேரத்துக்கு ஒரு வண்டி எதிரே வந்தால் அதிசயம். எப்போதாவது வரும் லாரிகள் படகுகள் போல அலையடித்து அசைந்து வந்தன
சட்டிஸ்கரின் மாவோயிஸ்டு தீவிரவாதம் அப்பகுதியின் வளார்ச்சியை அப்படியே உறையச்செய்துவிட்டது. அரசு நலத்திட்டங்களோ வளர்ச்சித்திட்டங்களோ மக்கள் வாழ்க்கையைப் பெரிதாக மாற்றிவிடப்போவதில்லைதான். ஆனால் சுதந்திரமான சந்தைகள், வணிகப்போக்குவரத்து தடைசெய்யப்படும்போது வாழ்க்கை அப்படியே உறைந்துவிடுகிறது
கண்ணுக்கெட்டிய தொலைவுவரை , நிலம் காலியாகவே கிடந்தது. கிராமங்களோ குடியிருப்புகளோ தெரியவில்லை. மிகச்சில இடங்களில்தான் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்ட தடயம் தெரிந்தது. நெல்லின் கதிர்கள் மட்டும் அறுவடைசெய்யப்பட்டு வைக்கோல்தாள் அப்படியே விடப்பட்டிருந்தது. அது பழங்குடிகள் வேளாண்மை செய்யும் விதம். காட்டுநிலத்தில் விதைத்து அறுவடை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவார்கள். அவர்களின் கிராமங்கள் தொலைவில் இருக்கலாம். அவற்றுக்குச் செல்லும் செம்மண்சாலைகள் பிரிந்து சென்றன.
வழியில் இந்திராவதி என்ற ஆற்றைக் கண்டோம். தெளிந்த நீர் சுழித்தோடியது. இருபக்கமும் விரிந்த குறுங்காடு. மனிதசலனமே இல்லாத இடம். பாறைகளில் அமர்ந்து சிறிதுநேரம் ஆற்றையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
சட்டிஸ்கரின் இப்பகுதி மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் பிடியில் இருந்தது. சாலையோரங்களில் ஐந்து கிலோமீட்டருக்கு ஒருமுறை ஆயுதப்படை முகாம்கள் வந்துகொண்டிருந்தன. மணல்மூட்டைகள் அடுக்கப்பட்ட காவல் மாடங்களில் ஏ.கே.47 ஏந்திய காவலர்கள் காவலிருந்தனர். சுருள்முள்கம்பிவேலி போடப்பட்டுத் தேடுவிளக்குகள் பொருத்தப்பட்ட சுற்றுப்புறம். உள்ளே பனியன் அணிந்த காவலர்கள் இருந்தார்கள். ஆனால் எங்குமே எங்களை நிற்கச்சொல்லவோ சோதனை செய்யவோ இல்லை.
பல கிலோமீட்டர் தூரம் ஊர்ந்து ஊர்ந்து சென்றபின் ஒரு சிறிய ஊர்மையத்தை அடைந்தோம். பெசரெட்டும் தோசையும் இட்லியும் சாப்பிட்டோம். சாலை இருக்கும் நிலையில் எங்கே உணவு கிடைக்குமெனத் தெரியாதாகையால் நன்றாகவே சாப்பிட்டோம். அப்பகுதியின் மாவோயிஸ்டு ஆதிக்கம் பற்றி கேட்டோம். மாவோயிஸ்டுகள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள் என்றாலும் சென்ற சில வருடங்களில் அவர்களின் மையங்கள் அனேகமாக முழுமையாகவே அழிக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்கள். இப்போது பெரிய பிரச்சினைகள் இல்லை. கிராமப்புறப் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. பள்ளிகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
சாலையோரங்கள் முழுக்க மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு சிமிண்ட் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கொல்லப்பட்ட இடங்களில் அச்சிலைகள் வைக்கப்பட்டிருப்பதனால் பலசமயம் அத்துவானக்காட்டில் யாரோ நிற்பது போலத் தெரியும். அருகே செல்லும்போதுதான் அவை சிலைகள் என்று புரியும் .நூற்றுக்கணக்கான காவலர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வண்டியின் வேகத்தைப்பற்றிய வேடிக்கைகள் பேசியபடி சென்றோம். கிட்டத்தட்ட காலால் ஓடும் வேகம். புழுதி மேகம்போல எங்கள் பாதையை மறித்தது. இன்னொரு சிறிய சந்திப்பு. அங்கே டீ குடிக்கும்போது சாப்பிட ஏதாவது வாங்கிக்கொள்ளலாம் என்றேன். ’இல்லை சார், இனிமேல் ஓட்டல் எல்லாம் வரும், வாங்கிக்கலாம்’ என்றார் சேலம் பிரசாத். அப்படி ஒருவர் சொன்னால் உடனே பிடிவாதமாக உணவு வாங்கிக்கொள்வது என் வழக்கம். ஏனென்றால் அப்படி நம்பி ஏமாந்து பசித்துக்கிடந்த அனுபவம் நிறையவே உண்டு. பெரும்பாலும் எதையும் யோசிக்காமல் ‘அப்புறமா பாத்துக்கலாமே’ என்பார்கள் நண்பர்கள். தோசை, இட்லிதான் இருந்தது. வாங்கிக்கொண்டோம்
மேலும் பயணம் செய்தபோதுதான் அது எப்படிப்பட்ட நல்ல முடிவு என தெரிந்தது. எங்கும் மனித சஞ்சாரமே இல்லை. காவலர்குடியிருப்புகள், காவலர் சிலைகள், புழுதிபடிந்த செடிகள், வாடிநிற்கும் மாரங்கள், சிறிய குன்றுகள், அமைதி தேங்கிய காட்டு வெளி. மதியம் இரண்டரை மணிக்கு ஒரு சிறிய குட்டைக் கரையில் காரை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று நிழலில் அமர்ந்து இட்லிதோசையை சாப்பிட்டோம்.
தண்டவாடா என்ற ஊரை அடையவேண்டும். புராணங்களில் சொல்லப்படும் தண்டகாரண்யம். இன்று மாவோயிசப்பிரச்சினைக்காக இந்தியா முழுக்கப் பேசப்படும் பகுதி. ஒரு சில மனிதர்கள் தென்பட ஆரம்பித்தனர். நாங்கள் பார்த்த அந்த சந்திப்பு ஏராளமான கிராமங்களுக்கு முக்கியமான நகர்மையம் என்பதை ஊகிக்க முடிந்தது. தென்படுபவர்கள் எல்லாருமே மூட்டைகள் வைத்திருந்தனர். தானியங்கள் மளிகைகள் வாங்கிக்கொண்டு கால்நடையாக கிராமங்களுக்குச் செல்கிறார்கள்.
இப்பகுதி மக்கள் இருவகை. சித்தியன் இன மக்கள் கூரிய முகமும் செம்பட்டைநிறமும் கொண்டவர்கள். கோண்டு மொழிக்குடும்பதைச் சேர்ந்த பழங்குடிகள். மாநிறமான சீனர்கள் போல தோற்றம். இருசாராருமே குள்ளமானவர்கள். பெண்கள் நாலடி இருந்தால் அதிகம்.
திடீரென்று ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டோம் . அறுநூறு எழுநூறு பேர் இருப்பார்கள். எல்லாருமே பழங்குடிகள். ஒரு சந்தை போலத் தெரிந்தது. பின்னர் கவனித்தோம், கோழிச்சண்டை நடந்துகொண்டிருந்தது. கோழிகள் ஆங்காங்கே கட்டிப்போடப்பட்டிருந்தன. மரத்தாலான ஒரு வளைப்புக்குள் கோழிகள் சண்டைக்கு விடப்பட்டன. சுற்றி கூடி நின்றவர்கள் கைகளில் ரூபாய்களை ஆட்டிக் காட்டிக் கூச்சலிட்டுத் துள்ளிக்குதித்து உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். ‘சிவப்புக்கு ஐம்பது! வெள்ளைக்கு எழுபது!
நிரந்தரமான அரங்கு அது. சனிக்கிழமை மாலை தோறும் கோழிச்சண்டை உண்டாம். கோழிச்சண்டை மைதானத்தைச் சுற்றி பலவகை வணிகர்கள். சுண்டல், பக்கோடா முதல் துணிகள் பிளாஸ்டிக் கறுப்புக்கண்ணாடிகள் சவுரிகள் வரை விற்கப்பட்டன. ஆனால் டீ கிடைக்கவில்லை. நாங்கள் உள்ளே போக அனுமதித்தார்கள். அரங்குக்குள் கோழிகளின் அருகிலேயே சென்று அமர்ந்தோம். விருந்தாளிகள் என்பதனால் தனி கவனிப்பு.
கோழிகளின் கால்களில் கூரிய கத்திகள் கட்டப்பட்டன. மின்னும் கத்திகள். கோழிகளின் உரிமையாளர்கள் இரு கோழிகளையும் முதலில் முகத்தோடு முகம் காட்டிக் கொத்தச்செய்கிறார்கள். கோழிகள் பிடரி சிலிர்த்துச் சீறியதும் கீழே விடுகிறார்கள். தொழில்முறை மல்லர்களைப்போல அவை பாய்ந்து பாய்ந்து சண்டையிட்டன. சண்டையின் ஒரு கட்டத்தில் ஒருகோழி கழுத்தறுபட்டுத் தொய்ந்து விழுகிறது. ஒரு வெள்ளைக்கோழி ஒரே தாவலில் இன்னொரு கோழியை வீழ்த்தியதைக் கண்டேன். கொல்லப்பட்ட கோழிகள் குருதி வழிய எடுத்துப்போடப்படும்போதுதான் அந்தக்கத்திக்காயம் எவ்வளவு ஆழம் எனத் தெரிந்தது. காய்பிளந்தது போல இருந்தது.
கோழிச்சண்டையின் உற்சாகமும் வேகமும் பிடித்திருந்தாலும் அந்த ரத்தம் கொஞ்சம் மனவிலகலை உருவாக்கியது. செத்த கோழியின் வாலின் இறகைப் பிடுங்கி வென்றவன் சேகரித்துக்கொள்வதைக் கண்டேன். நினைவுச்சின்னமாகக் கொண்டுசெல்வான் போல. ஒருநாளில் நூற்றுக்கணக்கான கோழிகள். ஒரேசமயம் நான்கு கோழிகள் கூட சண்டையிட்டன
கிளம்பி தண்டேவாடா வந்தோம். மேலும் செல்லவேண்டாம், இரவில் பயணம் செய்வது நல்லதல்ல என்றார்கள். ஆகவே ஓர் விடுதியில் தங்க முடிவெடுத்தோம் இப்பகுதியில் கறுப்புக்கண்ணாடி மாட்டிய போலீஸ் சாயல்கொண்ட மனிதர்கள் பைக்குகளில் ஆங்காங்கே தென்படுகிறார்கள். இன்னும் அனல் அணையாத மண் இது
[மேலும்]