1992ல் தருமபுரியில் ஒருமுறை ஒரு டீக்கடைக்குப்போய் டீ கேட்டேன். என்னை உற்று நோக்கியபின்னர் ‘பால் இல்லை’ என்றார் டீக்கடைக்காரர். இன்னொருநாள் போனபோது ‘சீனி இல்லை’ என்றார். பிறர் டீ குடிப்பதை நான் கவனித்தேன். ‘ஏன் டீ இல்லை என்கிறீர்கள்?’ என்றேன். ‘இங்கே வேற சமூகத்து ஆட்கள் சாப்பிடமாட்டார்கள். நாங்கள் தீண்டாச்சாதி’ என்றார் கடைககரர் மிகவும் தயங்கியபடி. ‘நான் சாப்பிடுவேன்’ என்றேன். அவர்கள் நம்பவில்லை. பிடிவாதமாக டீ வாங்கி சாப்பிட்டேன். அடிக்கடி நடைபோகும்போது அங்கே போய் அமர்ந்து டீ சாப்பிடுவேன். அந்த டீக்கடையைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறேன். குறிப்பாக பன்றிகளைப்பற்றி. சில நாட்களில் ஒன்று தெரிந்தது, டீகக்டைககரர் என்னை ஒரு நக்சலைட் என்று எண்ணிவிட்டார். மிக ஜாக்ரதையான உபசரிப்பு கிடைக்கும். யாரும் இல்லாதபோது ‘எங்கள்’ அமைப்பு பற்றி பேசுவார். அப்போது அம்மாவட்டத்தில் சத்தமில்லாமல் நக்சலைட் வேட்டை நடந்துகொண்டிருந்தது. எதற்கு வம்பு என்று விலகிவிட்டேன்.
தர்மபுரியில் பணியாற்றிய நாட்களில் பெண்ணாகரம் பகுதி கிராமங்களிலும், ஓசூர் கெலமங்கலம் பகுதி கிராமங்களிலும் நான் சுற்றியதுண்டு. அங்கே விளைநிலங்களில் பெருமளவுக்கு நாயிடுக்கள்,மராட்டிய பிராமணர்கள், சில இடங்களில் கொங்குவேளாளர்கள் ஆகியோருக்குச் சொந்தமானவை. வன்னியர்களுக்கு நிலம் குறைவு, என்பதுடன் அவர்கள் அதிக ஊக்கத்துடன் வேளாண்மையிலும் ஈடுபடுவதில்லை. ‘களி புளி கம்பிளி’ என்று தர்மபுரிவாசிகளைப்பற்றி பிறர் சொல்வார்கள். புளியமரம் இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை பொறுக்கி விற்றால் வருடம்தோறும் சுருட்டு வாங்க பணம் கிடைக்கும். கேழவரகு போட்டு அறுத்து பானைகளில் வைத்துக் கொண்டால் எப்போதும் களி. குளிரான இடமாகையால் கம்பிளி புகைத்து வெட்டவெளியைப் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது அவர்களின் இயல்பு. வெளியே இருந்து வந்த கொங்கு கவுண்டர்கள் வாங்கிய இடங்கள் பச்சைபொலியும் தோட்டங்களாக இருக்கும்.
தொண்ணூறுகளில் நான் அங்கே கண்ட சமூக மாற்றம் என்பது வன்னியர் நடுவே உருவான சலனம். ஏற்கனவே கிராமத்தில் நிலம் வைத்திருந்த நாயிடுக்களும் ராவ்களும் நிலங்களை நகர்புறச் சொத்துக்களாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். தொண்ணூறுகளில் எஞ்சிய நிலங்கள் மெல்லமெல்ல வன்னியர் கைகளுக்குப் போக ஆரம்பித்தன. வன்னியர்களுக்கு உருவான அரசியல் செல்வாக்குதான் காரணம். அரசியல்செல்வாக்கு மூலம் உருவாகும் ஆயிரம் தொழில் வாய்ப்புகளும் அதன் மூலம் உருவாகும் செல்வமும். அத்துடன் நகர்சார் சொத்துக்களும் படிப்படியாக வன்னியர்கள் கைக்கு மாறிக் கோண்டிருக்கும் மனச்சித்திரம் உருவாயிற்று.
இது இயல்புதான் என்பதே என் எண்ணம். ஒரு சாதி தன்னைத் திரட்டிக் கொண்டு அந்த ஒற்றுமையை அரசியலதிகாரமாக ஆக்கிக் கோண்டு மூலதனத்தைக் கைப்பற்றி அதன்மூலமே தன்னை முன்னேற்றிக் கொள்ள முடியும். சமூகத்தில் எப்போதும் நடந்துகொண்டிருப்பது இப்படிபப்ட்ட கடுமையான உயிர்வாழ்தல் போராட்டமே. ஏதோ ஒருவகையில் பலமானது பலவீனமானதை தின்னத்தான் செய்யும். தமிழ்நாட்டுப் பிற்பட்டசாதிகளின் முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியே.
சமீபத்தில் என் நண்பர் ஒருவர் பாட்டாளிமக்கள் கட்சி மீது எனக்கு ஒரு பொருந்தா அனுதாபம் இருப்பதாக இணையத்தில் எழுதியிருந்தார். அக்கட்சியை ஆதரித்து நான் ஏதும் எழுதியதில்லை. அதன் பல போக்குகள் எனக்கு பிடிப்பதில்லை, பல போக்குகள் புரிவதுமில்லை. ஆனால் கட்சியரசியலுக்கு வந்துவிட்ட பின்னர் பணஅதிகாரம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை. மேலும் அக்கட்சி ஒன்றும் இலட்சியவாதத்துக்காக அரசியலுக்கு வரவில்லை, பொருளியல் அதிகாரம் தேடியே அரசியலுக்கு வந்துள்ளது. அதன் சந்தர்ப்பவாத அரசியல் கூட்டுகள் எல்லாமே இதற்காகத்தான். அதையெல்லாம் நான் ஏற்கிறேன் என்றல்ல. அதை புரிந்துகொள்கிறேன் என்றுதான் சொல்கிறேன்.
இந்தப் பின்னணியில் ஒன்று மட்டும் எனக்குத்தோன்றுகிறது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் சமூகத்தைப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கும்தன்மை கொண்டவர் ராமதாஸ் என்றே எண்ணுகிறேன்.பல சமூகப்பிரச்சினைகளை அவரன்றி பிற தமிழ் அரசியல்வாதிகளில் பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். மிகவும் பின்தங்கி நிலைத்துக்கிடந்த தருமபுரி போன்ற பல பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஓர் வளர்ச்சியசைவை உருவாக்கியிருக்கிறது என்றுதான் நம்புகிறேன்.
ஆனால் தருமபுரி பகுதிகளில் தலித்துக்களின் நிலை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதைக் கண்டேன். ஆனால் கண்டிப்பாக மதுரை தஞ்சைப் பகுதிகளில் உள்ள அளவு சீரழிந்தும் இல்லை. காரணம் தருமபுரி நிலத்துக்கு அதிக மதிப்பு இல்லாத பிற்பட்ட பகுதியாக இருந்தமையால் தலித்துக்களிடமும் ஓரளவுக்கு நிலம் உள்ளது. இப்பகுதிகளில் வன்னியர்கள் தலித்துக்களை ஒடுக்குவதை விட ஒதுக்குவதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள். எவ்வகையிலும் அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்ற எண்ணம். தருமபுரி நகரில்கூட இந்த ஒதுக்குதல் உண்டு.
ஒருமுறை ஒரு தலித் நண்பர் வீட்டில் தங்கியிருந்த நான் அப்படியே ஊருக்குள் சென்று அம்மன்கோயிலுக்குள் சாதாரணமாக நுழைந்து பிடிபட்டு ஓரிரு அடிகள் வாங்கியிருக்கிறேன். தலித் நண்பர்களின் திருமணங்களுக்கு அழைப்பு இருக்காது. சென்றால் அவர்களே சங்கடமாக உணர்ந்து விழிப்பார்கள். அப்போது தலித்துகளுக்கான அரசியல் இயக்கங்கள் உருவாகியிருக்கவில்லை. காவலர்கள் மாதாந்திர வழக்குக்கு குறைவு வரும்போது காலனிகளுக்குள் வந்து அகப்பட்ட இளைஞர்களைப் பிடித்து வழக்கு பதிவுசெய்வார்கள். இந்த ஒடுக்குமுறை காரணமாக எல்லா தலித் காலனிகளும் எம்.எல் அமைப்புகளின் களங்களாககைருந்தன. எம்.எல் அமைப்பை ஒடுக்குவதை காரணம்காட்டி தலித் காலனிகளை போலீஸ் மேலும் சூறையாடியது. அவர்களுக்கு அன்று இருந்த மிகப்பெரிய தேவையே ஒரு சிக்கல் என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் பேச போலீஸால் பொருட்படுத்தப்படும் ஒருவர் வேண்டும் என்பதுதான்.
ஆகவே அச்சூழலில் தருமபுரி மாவட்டத்தில் கிறித்தவம் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. திருவண்ண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி பகுதிகளில்தான் மதமாற்றம் அதிகளவில் நடக்கிறது. மதம் மாரினால் உடனே ஒருவகை அதிகாரப் பாதுகாப்பு ஏற்படுகிரது. போதகர் அங்கியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவார். மேலும் சிக்கல் என்றால் தன் மேலிடத்துக்கு புகார் செய்வார். சிறுபான்மையினரின் உரிமை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார். முதன் முதலாக தலித்துக்களுக்கு அவர்கள் முறையிடுவதற்கு என ஒரு அமைப்பு கிடைக்கிறது.ஒரு மேலிடம் உருவாகிறது!
மதமாற்றம் நிகழும் விதம் பற்றி ஓர் அனுபவம் எனக்குண்டு. எம்.எல் அமைப்பில் ஆர்வமுடைய ஒரு தலித நணப்ர் சொன்னார். அவரது ‘காலனியில்’ இருந்து சாலைக்கு வர ‘ஊர்’வழியாக ஓரமாக ஓர் ஒற்றையடிப்பாதை மட்டுமே உண்டு. காலனிக்குள் இருசக்கரவாகனம்கூட போக முடியாது. அங்கே சிலர் படித்து வேலைக்குப்போய் வீடுகட்ட விரும்பியபோது ஒரு வண்டிச்சாலைபோட விரும்பினார்கள். வன்னியர்கள் அதை எவ்வகையிலும் ஏற்கவில்லை. பலவகையான மனுக்கள், போராட்டங்கள்,பேச்சுவார்த்தைகள். அதிகாரிகள் வந்தால் இரு தரப்பையும் சமாதானம்செய்து வைக்க மட்டுமே முயல்வார்கள். அது எட்டுவருடம் நீண்ட போராட்டம். நண்பரிடம் ஒரு கிறித்தவ மிஷனரி அமைப்பு சொன்னது, மதம் மாறுங்கள் சாலையை நாங்கள் போட்டு தருகிறோம். என்னிடம் பேசும்போது நான் சொன்னேன், ‘மதம் மாறினாலும் தப்பில்லை. இதற்குமேல் என்னதான் செய்வது’என. மதம் மாறினார்கள். நம்பமாட்டீர்கள் ஆறே மாதத்தில் சாலை போடபப்ட்டது- தார்ச்சாலை. பணபலத்தால், அதிகாரவர்க்க தொடர்பால், ஓரளவு மிரட்டலால்.
இன்று [மார்ச் 29,2008] காலை தினமணி படித்தபோது இந்நினைவுகள் நெஞ்சில் அலையடித்தன.’இந்துமதத்துக்கு மாற வன்னிய கிறிஸ்தவர்கள் முடிவு’ என்ற செய்தி. உளுந்தூர்பேட்டை எறையூர் பகுதி வன்னியர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். அங்கே உள்ள புனித ஜெபமாலை கிறித்தவ தேவாலயத்தில் தலித் கிறித்தவர்கள் தங்களைச் சமமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். தலித் கிறித்தவர்களின் முக்கியமான கோரிக்கைகள் நான்கு. 1. தலித்துக்களுக்கும் பொதுவான சாலையில் ஊர்வலங்கள் செல்ல வேண்டும். அதில் தலித்துக்களும் பங்கேற்க வேண்டும் 2. தலித் வன்னியர் ஆகிய அனைவருக்கும் பொதுவான தூம்பாவை பயன்படுத்த வேண்டும், தனித்தனியாகக் கூடாது 3. தலித் கிறித்தவர்களுக்கு தனிப் பங்கு தேவை 4. தலித் கிறித்தவர்களின் குடியிருப்புவரை மாதா பவனி தேர் செல்லவேண்டும்.
இப்பிரச்சினையில் தலித்துக்கள் போராட , வன்னியர்கள் தலித்துக்களை இரண்டாம்தரமாக ஒதுக்கி வைக்கும் போக்கை கைவிடமுடியாது என்ற நிலைபாடு எடுத்து நிற்க ,கடலூர் புதுச்சேரி மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் கிறித்தவம் போதிக்கும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப தார்மீகமான நிலைபாடு எடுத்து தலித் கிறித்தவர்களின் கோரிக்கையை ஏற்று கிறித்தவத்திற்குள் சாதி இழிவை அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். இதற்கு எதிராகவே வன்னிய கிறித்தவர்கள் ‘தாய்மதம் திரும்பும்’ அறிவிப்பை விடுத்துள்ளார்கள்.
கடந்த ஐம்பதாண்டுகளில் இந்துமதத்தைப் பற்றி பல கடுமையான அவமதிப்புகள் வந்துள்ளன. ஆனால் இந்த அறிக்கை அளவுக்கு மோசமான ஓர் அவமதிப்பு பிறிதில்லை என்றுதான் எண்ணுகிறேன். தீண்டாமையைப் பேணிக்கொள்ளும் பொருட்டு அவர்கள் இந்துமதம் திரும்ப விரும்புகிறார்கள்! இந்துக்கள் அவர்களை அணைத்து ஏற்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்!
இந்துமக்கள்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் என்பவர் 27-3-08ல் வெளியிட்ட அறிக்கையில் தீண்டாமையைப் பேணும்பொருட்டு மதம் மார நினைபப்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கடுமையாக சொல்லியிருப்பதை வரவேற்க வேண்டும்.ஆனால் பிற அமைப்புகள் ஏன் பேசாமலிருக்கின்றன? அந்த வன்னியக் கிறித்தவர்களுக்கு இன்றைய இந்துமதமும் தீண்டாமையை ஏற்காது என்று ஆணித்தரமாகச் சொல்லியிருக்க வேண்டாமா என்ன?
இச்சூழலில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நிலைபாட்டைப்பற்றி சில சொல்ல வேண்டும். பொதுவான சாதிசார்பு அமைப்புகள் சாதிய முரண்பாடுகளை வளர்த்தும் சாதிமேன்மைகளை உருவாக்கியும் செயல்படும்போது அதற்கு எதிரான நிலைபாட்டையே அவர் பெரும்பாலும் எடுத்திருக்கிறார். வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே முரண்பாடுகள் உருவான காலங்களில் அவர் அம்முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்க்கவும் தலித்துக்களின் அடிப்படை உரிமைகள் பேணப்படவுமே முயன்றிருக்கிறார். நான் தர்மபுரியில் இருந்த காலத்தில் நாலைந்து நிகழ்வுகளை நேரடியாக கண்டிருக்கிறேன். பலசமயம் அது பாட்டளிமக்கள்கட்சிக்கு எதிராகவே கூட திரும்பியிருக்கிறது.
இன்று உருவாகும் இத்தகைய முரண்பாடுகள் உண்மையில் உருவாகிவரும் உரிமைபற்றிய பிரக்ஞையின் விளைவுகள். ஆகவே இவை நல்ல அடையாளங்களே. மருத்துவர் ராமதாஸ், கிறித்தவ அமைப்புகள், இந்து அமைப்புகள் ஆகியோர் செய்வதற்கு ஒன்றுமட்டுமே உள்ளது. மனித உரிமைகளுக்கு எதிரான நிலைபாடு எடுப்பதற்கு எந்த மனிதக்குழுவுக்கும் உரிமை இல்லை என்று அந்த மக்களுக்கு உணர்த்துவது. திட்டவட்டமாக. அதில் காட்டப்படும் எந்த தயக்கமும் தார்மீகப் பிழையே ஆகும்.