குகைகளின் வழியே – 2

நேற்று மாலை ராய்துர்க் கோட்டையில் இருந்து கிளம்பும்போது மாலை ஆறுமணி . அங்கேயே தங்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் மறுநாள் நாங்கள் பார்க்கவேண்டிய ஊர் கூத்தி. கூடுமானவரை கூத்திக்கு அருகே வந்து தங்கலாமென்று திட்டமிட்டோம். வரும் வழியில்தான் அனந்தப்பூர். அனந்தபூரிலேயே ஒரு விடுதியில் தங்கினோம். சுமாரான அறை. நான் பதிவை எழுதிவிட்டுப் பன்னிரண்டுமணிக்குத் தூங்கினேன்

நண்பர்கள் எதையோ பேசிக்கொண்டே இருந்தார்கள். இந்தமாதிரி பயணங்களில் தூங்குவதற்கான நேரத்தைக் கூடுமானவரை குறைக்கவே கூடாது. ஏனென்றால் எந்தப்பயணத்திலும் விடியற்காலையில் கிளம்புவதுதான் பயணத்தின் மிக மிக உற்சாகமான அம்சம். அதை இழக்கவே முடியாது. அதற்காகத் தூக்கத்தைக் குறைத்தால் மறுநாள் முழுக்க பயணத்தில் சோர்வு இருந்துகொண்டே இருக்கும்

கூத்தி, விஜயநகரத்தின் முக்கியமான ராணுவத்தளமான இருந்தது. ஹம்பி வீழ்ந்தபோது நாயக்கர்களின் படை பின்வாங்கி கூத்தியில் மையம் கொண்டது நூறாண்டுகளுக்குமேல் கூத்தி, நாயக்கர்களால் ஆளப்பட்டது. அனந்தபூர் நாயக்கர்களின் தலைநகரமானபோது கூத்தி மெல்ல மையமிழந்தது

இந்தியாவின் பிரம்மாண்டமான கோட்டைகளில் ஒன்று கூத்தி. குட்டி என்றுதான் உள்ளூரில் சொல்கிறார்கள். இரண்டு மலைகளை உள்ளிட்டுக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டைச்சுவர் வளைந்து வளைந்து செல்கிறது. உள்ளிருக்கும் மலைக்குமேலும் கோட்டைகளும் இருந்தன. அந்தக்காலை நேராத்தில் கோட்டைமேல் நின்று கீழே விரிந்துகிடந்த நகரத்தைப் பார்த்தது எழுச்சியூட்டும் அனுபவமாக இருந்தது

கூத்தி கோட்டைக்குச்செல்லும் வழி முழுக்க சிறிய கட்டிடங்கள். இப்பகுதியின் பாறை சிவந்த அடுக்குப்பாறையாலானது. அதிலேயே கட்டப்பட்ட வீடுகள். இத்தகைய கைவிடப்பட்ட கோட்டைகளை ஒட்டி தலித் அல்லது முஸ்லீம் குடியிருப்புகள் உருவாகி வந்திருக்கும் .அந்த குடிசைப்பகுதியில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் பெயரைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். 1882ல் அப்பகுதியில் அவர் தலித்துகள் தங்கி படிப்பதற்கான ஓர் அமைப்பையும் கட்டிடத்தையும் உருவாக்கியிருக்கிறார்

பதினோரு மணிக்கு யாடிகே குகையைப்பார்க்கச்சென்றோம். ராயலசீமாவுக்கே உரிய திறந்து வெளுத்த நிலம். கௌபாய் படங்களில் வருவதுபோன்ற காட்சி. மலைகள் முழுக்க அடுக்கடுக்காக வைக்கப்பட்ட ஓடுகள் போன்று அமைந்த பாறைகள். அவை சரிந்து விழுந்து நொறுங்கிய சரிவுகள். மிகக்குறைவாகவே மரங்கள்

வெயில் விரிந்த மலைச்சரிவு வழியாக யாடிகே குகைகளைத் தேடிச்சென்றோம். மலைமேல் ஏறி ஏறிச் சென்றால் அங்கே ஆச்சரியமாக ஒரு பெரிய சமவெளி. வயல்கள். நடுவே ஒரு சிறிய கிராமம். விசித்திரமான கிராமம். மொத்த கிராமத்தையும் சுற்றி அடுக்கி வைக்கப்பட்ட கற்களாலான மூன்றாள் உயரமான கோட்டை. மொத்தமே நூறு வீடுகள். ஆனால் விவசாயம் செய்து வளமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. தீவட்டிக்கொள்ளையர்களை அஞ்சி அந்தக் கோட்டையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எப்படியும் முந்நூறு வருடம் பழையது அக்கோட்டை. பல இடங்களில் கற்குவைகள் பிய்ந்து விழுந்து கிடந்தன. மிகத்தொன்மையான ஒரு காலகட்டத்திற்குள் வந்து விழுந்துகிடந்ததாக உணர்ந்தபடி சுற்றிவந்தோம். எங்களை அவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் இருந்து வந்த அன்னியர்களாகப் பார்த்தனர். மலைமேல் ஒரு அந்தர உலகம் மிதந்து நிற்பது போலிருந்தது. சில மலைப்பாறை உச்சியில் குட்டைகளில் மீன்கள் வாழும். அதேபோல மலைமேல் ஒரு மனிதக்கூட்டம். அவர்களுக்குரிய எல்லாம் அங்கேயே இருந்தன

ஆனால் யாடிகே குகை அவர்களுக்குத் தெரியவில்லை. கேள்விப்பட்டிருந்தார்கள் எவருமே பார்த்ததில்லை. திரும்பி வந்தோம். பக்கவாட்டில் சென்று ஒரு விரிந்த பாறைக்குவியல்வெளியை அடைந்தோம். ஓட்டுப்பாறை கண்ணெட்டிய தொலைவுவரை சிதறிக்கிடந்தது மாபெரும் ஓட்டுக்கூரை ஒன்று சரிந்தது போல. அங்கேயும் குகையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை

ரவியும் ஓட்டுநரும் காரில் கீழே சென்றனர். நாங்கள் அங்கேயே ஒரு முள்செடியின் அடிநிழலில் அமர்ந்துகொண்டோம். கீழே சென்று ரவி அங்கே கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் குகையைப்பற்றிக் கேட்டார். எல்லாருக்கும் அங்கே ஒரு குகை இருப்பது தெரிந்திருந்தது , எவரும் பார்த்ததில்லை. வழியும் தெரியாது. திரும்பிவிடலாம் என்று காரில் வந்து சொன்னார்கள். அங்கே இருந்த ஒரு புராதனமான கோயில் நோக்கிச் சென்றோம். மலையின் அடியில் இருந்து நீர் ஊறி ஊறி ஒரு சிறிய ஓடையாக வழிந்தது. குடிக்கலாம் ஆனால் அங்கே நின்றிருந்த பையன்களுக்கும் குகை தெரிந்திருக்கவில்லை

என்ன செய்யலாம்? திரும்பிவிடலாமா? ஆனால் இத்தனைபேர் கேள்வியே படாத ஒரு குகை முக்கியமானது. அதை விட்டுவிட்டுப் போகவே கூடாது. பேசாமல் திரும்பினோம் என்றால் மனக்குறைதான் எஞ்சும் என்றார் ராஜமாணிக்கம். திரும்பி யாடிகி கிராமம் வந்து எவரிடமாவது கேட்டுப் பார்க்கலாமென முடிவு செய்தோம். ஆனால் திரும்பும் வழியில் ஒரு மாடுமேய்ப்பவரைப்பார்த்தோம் . அவர் பெயர் அனுமந்து. அவருக்குத் தெரிந்திருந்தது

அவரிடம் ஏறிக்கொள்ளுங்கள் வழிகாட்டினால் நூறு ரூபாய் தருகிறோம் என்றோம். அவர் இருநூறு ஆடுகள் மேய விட்டிருந்தார். ஆடுகளை விட்டுவிட்டு வரத் தயங்கினார். இருநூறு ரூபாய் என்றதும் யோசித்தார். ஆடுகளை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுக் காரில் ஏறினார்

அவரைப்பின் தொடர்ந்து சென்று அந்த குகையை அடைந்தோம். அவர் உதவி இல்லாமல் அந்தக்குகையைக் கண்டுபிடிக்கவே முடியாது. அவ்வளவு ஆழக்காட்டில் மறைவாக இருந்ந்தது அது. ஒரு சிறிய கிணறு போன்ற பள்ளம். அதனுள் இறங்கிச்சென்றால் 12 அடி ஆழம் கொண்ட இடுங்கலான இருண்ட பாதை. அதன்பின் பக்கவாட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நீளும் குகை இருக்கிறது

எட்டிப்பார்த்தால் பயமாக இருந்தது. மிக இருண்ட பாதை. ஒல்லியான உடல் கொண்ட இளைஞர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வந்தோம். உள்ளே குகைக்குள் ஒரு நல்ல நீரோடை ஓடுவதாக அனுமந்து சொன்னார்

குகையை தரிசனம் செய்வதே போதும் என்று திரும்பிவிட்டோம். நேராக அடுத்த குகை. பிலம் குகைகள் என்று பெயர். பிலம் என்றாலே மண்ணுக்கு அடியில் உள்ள குகைதான். பேலும் என்று சொல்கிறார்கள் சிலர். பிலம் குகைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய குகை. தரைத்தளத்தில் உள்ள குகைகளில் மிகப்பெரியது அதுதான். மிகநன்றாகப் பேணப்பட்ட சுற்றுலாத்தலம் இது

டிக்கெட் எடுத்து வழிகாட்டியுடன் உள்ளே சென்றோம். மண்ணுக்கு அடியில் நூறு முடல் நூற்று எண்பது அடிவரை ஆழத்தில் செல்லும் இக்குகைகள் உறுதியான களிமண்பாறைகள் வழியாக பாய்ந்த நிலத்தடிநீர் அங்கே கலந்திருந்த சுண்ணாம்புப்பாறையைக் கரைத்துக் கொண்டுசெல்வதன் வழியாக உருவாகி வந்தவை. மண்ணுக்கு அடியில் ஒரு பெரிய கட்டிடத்தொடர் போல இவை உள்ளன

1884ல் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட்டே என்ற ஆய்வாளர் இந்த குகையைக் கண்டுபிடித்தார். அதன்பின் ஜெர்மானிய நிலவியலாளரான டேனியல் கீபர் விரிவான ஆய்வுக்குள்ளாக்கினார். ஆனால் நெடுங்காலமாகவே இக்குகைகள் சமண பௌத்த துறவிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தி வந்தவை. இங்கே கிடைத்த சமண பௌத்த சின்னங்கள் அனந்தபூர் அருங்காட்சியகத்தில் உள்ளன

1988 வரை இந்த குகைகள் உள்ளூர்க்காரர்கள் குப்பைகளைக் கொட்டும் இடமாகவே இருந்திருக்கின்றன. இங்கே இருந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி நாராயண ரெட்டி என்பவரும் சலபதி ரெட்டி என்பவரும் எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக 1999ல்தான் ஆந்திர அரசு இக்குகைகளைக் கைப்பற்றிப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. குகைகளைச்சுற்றி பாதுகாவலும் பயண வசதிகளும் உருவாக்கப்பட்டன. 2000த்தில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள்

இன்று ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை இக்குகைக்குள் செல்ல அனுமதி உள்ளது. நான்கு கிலோமீட்டருக்கு மேல் நீளமுள்ள குகை இது. பிரிந்து பிரிந்து செல்லும் ஏராளமான கிளைகள் கொண்ட ஒரு ஆழத்து உலகம். மேலிருந்து காற்று குழாய்கள் மூலம் உள்ளே செலுத்தப்படுகிறது. என்றாலும் உள்ளே அதிகநேரம் நிற்க முடியாது. கடுமையான வெக்கை மூச்சுத்திணறலும் ஓரளவு உண்டு. நான் ஆஸ்திரேலியாவிலும் மலேசியாவிலும் குகைகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் நான் கண்ட குகைகளில் இதுவே மிகப்பெரியது. ஒரு முக்கியமான சுற்றுலா அனுபவம்

குகை என்றாலே ஒரு ரகசியத்தன்மை வந்துவிடுகிறது. ஆழத்தில் இருக்கிறோம் என்ற உணர்ச்சியின் பதற்றம். தலைக்குமேல் சமகாலம். குகைகளின் களிமண் பாறைகள் விதவிதமாக அரித்து பலவகையான பிம்பங்களைக் காட்டின. குழிகள் கண்கள் போல விழித்தன. புடைப்புகளில் மத்தகங்கள் பாம்புப்படங்கள்.

சில இடங்களில் நூறுபேர் இருக்கும்படியான கூடம்போல இருந்தது குகை. சில இடங்களில் மிகநெருக்கமாக குனிந்து வளைந்து செல்லவேண்டும். சில இடங்களில் அடர்ந்த இருட்டு . சில இடங்களில் ஒரு மாபெரும் குடலுக்குள் சென்று விட்டது போல வழுவழுப்பான பாறைச்சுவர்கள். அந்த பயணத்தின் இடங்கள் தகவல்கள் எதுவும் மனதுள் பதியவில்லை.எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் அனுபவம்தான் முதன்மையானது

பல இடங்களில் பாறைகள் பிளந்து விழுந்து கிடக்கின்றன. அவை எப்போது விழுந்தவை என்ற பிரமிப்பேற்பட்டது. வரலாற்றுக்காலத்திற்கு முன்பு எப்போதாவது விழுந்திருக்கலாம். நேற்றுகூட விழுந்திருக்கலாம். அவை விழுந்து உள்ளே அடைபட்டு விட்டால் என்னாகும் என்ற பீதி மெல்ல உள்ளே அதிர்ந்துகொண்டெ இருந்தது

மேலே களிமண் பாறை உருகி வழிந்து உருவான கூம்புகள் பெரும் கொத்துவிளக்குகள் போல தொங்கின. பட்டுத்துணியை வளைத்து வளைத்துச் செய்த பந்தல் அலங்காரம்போல பாறைகளில் நீரின் செதுக்குவடிவங்கள் . போர்வை போர்த்திக்கொண்டு அமர்ந்த குழந்தைகள். சேற்றுக்குள் நிற்கும் எருமைகள். மத்தகம் மட்டும் நீட்டும் யானைகள்.

மிக ஆழத்தில் பாதாள கங்கை என்ற ஊற்று ஊறி நீர் மேலும் ஆழத்திற்கு எங்கோ கொட்டுகிறது. அங்கே செல்லக் குறுகலான திருகுப்படிகள் வழியாக ஆழத்துக்கு இறங்கிச்செல்லவேண்டும். ஆழ்மனதுக்குள் செல்லும் பயணம். இருண்ட வழிகள். சிதைந்த வழிகள். இருளும் ஒளியும் முயங்கும் விசித்திர உருவங்கள். கனவுகளின் நிழலாட்டம். ஆழத்தில் சதா கொப்பளிக்கும் அந்த குளிர்ந்த ஊற்று…

[மேலும்]

முந்தைய கட்டுரைஎச்சிலில் புரள்வது என்னும் சடங்கு
அடுத்த கட்டுரைஅனுபவத்துளிகள்