குகைகளின் வழியே – 1

அதிகாலை பெங்களூரில் இருந்து கிளம்பியபோது வழக்கமான பயணத்தின் உற்சாகம் சற்றே குறைவாக இருந்தது. காரணம் தூக்கக் களைப்பு. நான் சரியாகத் தூங்கி இரண்டுநாட்களாகின்றன. கார் கிளம்பியதுமே சிலநிமிட உற்சாகப்பேச்சுகள் கழிந்ததும் நான் தூங்க ஆரம்பித்துவிட்டேன்

காரின் மீது பைகளை வைத்துக்கட்டுவது ஒரு பெரிய வேலை. முதல்நாள் அதைச்செய்யும்போது அடடா இதை தினம் இருமுறை எப்படி செய்யப்போகிறோம் என்ற பயம் ஏற்படும். கட்டி முடிக்கையில் ஒரு கூட்டு உழைப்பு முடிந்த அலுப்பு. ஆனால் இரண்டுநாட்களில் அதில் தேறி சட்டென்று கட்டிக் கிளம்பிவிடுவோம்.

பயணம் இப்போதெல்லாம் பழைய பயணங்களின் நினைவுகளால் ஆனதாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு பயணத்துடன் எல்லாப் பயணங்களும் வந்து கலந்துகொள்கின்றன. ஒரு காட்சியுடன் பல பிம்பங்கள் ஊடுருவுகின்றன. கிருஷ்ணன் பழைய பயணங்களைப்பற்றித்தான் உற்சாகமாகப்பேசிக்கொண்டிருந்தார்.

பெங்களூரில் இருந்து கிளம்புவது கிருஷ்ணனின் திட்டம். ஏன் என்று எனக்கு இன்னும்கூட சரியாகப் புரியவில்லை. முதல் குகை பெங்களூரில் இருந்து 360 கிமீ தள்ளி இருக்கிறது. செல்லும் வழியில் சும்மா போகவேண்டாமே என இரு புராதனமான கோயில்களைப் பார்த்துக்கொண்டு செல்லத் திட்டமிட்டோம். வழியில் தும்கூரில் ஒரு ஓட்டலில் தட்டு இட்லி. பெங்களூரில் இருந்து தும்கூர் செல்லும் பலருக்கும் இந்த ஓட்டலில் தட்டு இட்லி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. பெயரைச்சொல்லப் போவதில்லை- அப்படிப்பட்ட பயணக்குறிப்பு அல்ல இது.

முதல் கோயில் சிபி என்ற ஊரில் இருந்த நரசிம்மசுவாமி ஆலயம். ஒரு காலத்தில் முக்கியமான கோயிலாக இருந்திருக்கவேண்டும். இப்போது அந்தப்பிராந்தியமே இடிந்து கற்குவியல்களாகக் கிடக்கிறது சிப்பூரு என்பது ஊரின் கன்னடப்பெயர். 18 ஆம் நூற்ராண்டின் ஹைதர் அலியின் தளபதியாக இருந்த நல்லப்பா என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது.

இந்த ஆலயத்தில் உட்கூரையின் சுதைமேல் வண்ண ஓவியங்கள் உள்ளன. ராமாயண மகாபாரதக் காட்சிகளுடன் ஏராளமான மைதுன – கேளி- ஓவியங்களும் இருக்கின்றன. பொதுவாக கோயில் இடிந்து கிடந்து பின்பு எடுத்துக்கட்டப்பட்ட நிலையில் இருந்தாலும் அப்பகுதி எங்குமே ஓர் அவலத்தோற்றம் எஞ்சியிருக்கிறது. பிரம்மாண்டமான ஓர் குளம் பாசிநீர் தேங்கிக்கிடக்கிறது. நான்கு பக்கமும் பெரிய படிக்கட்டுகளால் சூழப்பட்ட அழகிய தெப்பக்குளம்.

சிபியிலிருந்து கிளம்பியபோது பத்துமணி ஆகிவிட்டது. வழியில் இன்னொரு முக்கியமான பண்டைய நகரம் இருந்தது. ஹேமாவதி. இது ஒரு பெரிய கோட்டையாக இருந்திருக்கிறது இன்று அனேகமாக இடிந்து சில பகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கோட்டைக்குள் இருந்த சித்தேஸ்வர தொட்டேஸ்வர் கோயில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. தொல்லியல்துறையின் ஒரு அருங்காட்சியகம் உள்ளது

அருங்காட்சியகத்தில் அழகிய கருங்கற்சிலைகள். பெரும்பாலும் இந்திராண்டி நந்தி சப்தகன்னியர் சிலைகள். சிலைகளில் பூவராக மூர்த்தியும் வராஹியும் எனக்கு ஒரு அலாதியான மன எழுச்சியை அளிப்பவை. பன்றிமுகம் கொண்ட தெய்வங்கள். மூர்க்கமும் கம்பீரமும் அழகாகப் பிணைந்து தோன்றும் ஒரு கணத்தை ஓர் அசைவை சிற்பி அவற்றில் நிகழ்த்தியிருப்பான்.

ஹேமவதி எட்டாம் நூற்றாண்டில் சிறப்புடன் இருந்த தொல்நகரம். நொளம்ப பல்லவர்கள் கட்டிய இந்நகரம் பின்னர் கல்யாணி சாளுக்கியர்களால் ஆளப்பட்டது. பல்லவர் காலகட்டத்தில் இந்நகரம் ஹென்சேரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்நகரைத் தாக்கிக் கைப்பற்றிய ராஜேந்திரசோழன் இங்கிருந்த அழகிய தூண்களைக் கண்டு வியந்து அவற்றில் 44 முக்கியமான அலங்காரத்தூண்களைப் பெயர்த்து சோழநாட்டுக்குக் கொண்டுசென்றதாகவும் வரலாறு. இங்குள்ள கல்வெட்டுகள் அதை உறுதி செய்கின்றன.

இன்று இங்குள்ள ஆலயம் கிட்டத்தட்ட சிதைந்த நிலையில் உள்ளது கதம்ப-கல்யாணி சாளுக்கிய பாணியைச்சேர்ந்த உருட்டப்பட்ட பளபளப்பான உருளைகள் கொண்ட தூண்கள் மிக அழகானவை.

தொட்டேஸ்வர் ஆலயத்தில் மூலவராக இருக்கும் சிலை அமர்ந்த கோலத்தில் சிவன் என்று கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அழகிய சிலை. பொதுவாக சிவாலயங்களில் சிலை இருப்பதில்லை. லிங்கம்தான் மூலச்சிலையாக இருக்கும். இக்கோயில் பிற்காலத்தில் வரங்கலின் காகதீயரால் கைப்பற்றப்ப்பட்டு விரிந்து கட்டப்பட்டிருக்கிறது. வாரங்கல்லில் நிறைய காணப்படும் அற்புதமான கரிய கல்லால் ஆன அலங்கார நந்தி சிலைகள் இரண்டு இங்கே உள்ளன. சென்ற 2009 பயணத்தில் வாரங்கல்லில் கண்ட அதியற்புதமான நந்திகளை நினைவில் மீட்டிக்கொள்ள அரிய தருணமாக அமைந்தது

ஹேமாவதி முழுக்க இடிந்த சிலைகள்தான். கர்நாடகம் ஆந்திரம் முழுக்க காணப்படும் இடிந்து கைவிடப்பட்ட பழங்கால நகரங்களில் ஒன்று. பன்வாசி ஹலசி போல. அந்நகரில் நடக்கையில் ஒரு கனவு நம்மைத் தொடர்வதை உணரலாம். ஒவ்வொரு கல்லிலும் சிலையிலும் வரலாறு. காலம். அல்லது மானுடவாழ்க்கை என்ற நிலைக்காத துயரநாடகம். அந்த சுமையேற்று ஒவ்வொன்றும் படிமங்களாகிவிடுகின்றன. இடிந்த கோயில்கள் ஆழ்பிரதிகள் பெற்றுக் கவிதைகளாகின்றன போலும்

மதியம் கையில் இருந்த சப்பாத்திச்சுருள்களை ஒரு புளியமரச்சோலையில் அமர்ந்து சாப்பிட்டோம். அங்கே ஏதோ நாட்டுப்புற தெய்வத்தின் பிரதிஷ்டைகள் இருந்தன. குளிர்ந்த இடம். தூங்கு ராஜா தூங்கு என்று சொல்லும் மெல்லிய குளிர்காற்று

மாலையில் ராய்துர்க் என்ற கோட்டையை வந்தடைந்தோம். புராதனமான கோட்டை. ராயலசீமாவின் கரடுமுரடான பாறைக்குவியல்மலைகள் நடுவே ஒரு மலையை சுற்றி வளைத்துக் கட்டப்பட்டது. மலைக்குக் கீழே இன்றைய ராய்துர்க் என்ற சாக்கடை வழிந்த கடப்பைக்கல் பாவப்பட்ட சாலைகளும் கடப்பைக்கல் சுவர்கள் கொண்ட சிறிய வீடுகளும் கொண்ட நெரிசலான நகரம். அதன் சிறிய சந்துகள் வழியாகப் பன்றிகளை விலக்கி நடந்து கோட்டையை அடைந்தோம்.

மேலே செல்ல பழங்காலப்படிகள். குதிரைகள் செல்வதற்காகக் கட்டப்பட்டவை. பெரும்பாறைகள் சரிந்து சிதறிக்கிடந்த பரப்பினூடாகப் படிகள் சென்றன. பருமனான அர்விந்த் கொஞ்சம் மூச்சிரைத்தார் என்றாலும் வந்து விட்டார்
ராயதுர்க் ,பாளையக்காரர்களின் தலைநகரம். இவர்கள் விஜயநகரத்து நாயக்க அரசர்களின் சிற்றரசர்கள். சிற்றரசர்கள் விஜயநகருக்கு அடங்க மறுக்கவே மன்னர் கோட்டையைத் தன்வசம் எடுத்துக்கொண்டு பூபதிராயகோண்டா என்று பெயரிட்டு வைத்துக்கொண்டார். தக்காணப்போர்களில் மிக முக்கியமான இடம் வகித்த கோட்டை இது. பின்னர் பிதார் சுல்தான் இதை விஜயநகரிடமிருந்து கைப்பற்றினார் .கடைசியாக திப்புசுல்தானின் படைநகரமாக இருந்திருக்கிறது

கோட்டைக்குமேல் ஒரு பெருமாள் கோயிலும் ஒரு சிவன் கோயிலும் மசூதியும் உள்ளன. அங்கே எங்கும் வேறு மனிதர்கள் இல்லை. மேயச்சென்ற சில எருமைகள் மட்டும் எங்களை சந்தேகமாக பார்த்துக்கொண்டு திரும்பின. பாறைகள் நடுவே அந்தத் தனிமையில் வரலாற்று நெடிகொண்ட காற்றில் இந்தப் பயணத்தின் முதல் அஸ்தமனம்

[மேலும்]

முந்தைய கட்டுரைஇந்துக்கல்லூரி கருத்தரங்கு படங்கள்
அடுத்த கட்டுரைதருமபுரி