அழகிய மலர்ப்பாதை

அனைவருக்கும் வணக்கம்.

இந்த அரங்கில் ‘பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துகலைகளும் அவற்றின் நீட்சியும்’ என்ற தலைப்பில் நடந்து முடிந்த கருத்தரங்கு சிறப்பாக நிறைவடைந்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் அதில் பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கேரளத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் ஒருமுறை மத்தியகேரளத்தில் சங்கனாச்சேரி அருகே ஒரு கிராமத்திற்கு ஒரு நண்பர் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே அவரது வீட்டுக்கு அருகே ஒரு சிறிய பகவதி காவில் ஏதோ விழா நடந்துகொண்டிருந்தது. அந்த விழாவில் சடங்கை நடத்தப்போகும் நாட்டுப்புறக்கலைஞர் நண்பரின் வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்திருந்தார். அவருக்கு வெற்றிலையும் தேநீரும் கொடுத்தார் நண்பனின் அம்மா. அவர் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுவதையும், அவர் மீது அவர்களுக்கு ஒருவித அச்சம் கலந்த மதிப்பு இருப்பதையும் கவனித்தேன்.

அந்த வீட்டிலிருந்த ஒரு சிறுவன் இரவில் பயந்துகொண்டு கத்துகிறான் என்று நண்பனின் அம்மா அவரிடம் சொன்னார். அவர் அவன் நெற்றியில் கைவைத்து சில சைகைகள் செய்து சொடக்கு விட்டு ஜெபித்து விபூதி கொடுத்தார். பையன் அவரை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டான்.

அவர் யார் என்று கேட்டேன். அவர் வேலன் என்றார் நண்பர். வேலன் என்பது ஒரு சிறிய சாதி, ஒரு சமூக பதவியும் கூட. நான் அவரது தொழில் என்ன என்று கேட்டேன். வெறியாட்டு என்றார். அவர் அங்கே செய்யப்போகும் சடங்கு அதுதான். ஒருகணத்தில் காலத்தின் திரை நழுவி விழுந்து என் கண்முன்னால் சங்ககாலம் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

வேலன் என்ற சாதி கேரளத்தில் ஒரு மந்திரவாதிச்சாதியாகவே அறியப்படுகிறது. வேலர்கள் வைத்தியம், மந்திரவாதம், செண்டை போன்ற வாத்தியங்களை இசைப்பது போன்றவற்றைச் செய்கிறார்கள். அவர்களின் தோற்றத்தைப்பற்றி ஒரு கதை சொல்கிறார்கள். பார்வதி ஒருமுறை விளையாட்டாக மண்ணில் ஒரு யானையைச்செய்தாள். அந்த யானை சிவனின் கால்பட்டு உடைந்துபோயிற்று. அதிலிருந்து ஒருவன் பிறந்தான். மண்ணில் பிறந்தவனாதலால் அவன் மண்ணன். அவன் தன் தம்பி என்று உணர்ந்த முருகன் அவனுக்கு தன் வேலை அளித்தான். அதிலிருந்து அவர்கள் வேலர்கள் என்று அறியப்படலானார்கள்.

இன்னொரு புராணம் முற்காலத்தில் விஷ்ணுவுக்கு கண் திருஷ்டி நோய் வந்தபோது அந்த நோயைத்தீர்க்க சிவபெருமான் வேலன் சாதியை உருவாக்கினார். அவர்களுக்கு வேதத்தை அருளினான். வேதம் ஓதுவதனால் அவர்கள் வேதர் என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்களிடமே ஆதியில் வேதம் இருந்தது. பிறகுதான் அது பிராமணர்களிடம் சென்று சேர்ந்தது. பரமசிவனும் பார்வதியும் வேலன் வேலத்தியாக சென்று விஷ்ணுவின் பிணியகற்றியதாகவும் ஒரு தொன்மம் உண்டு.

வேலர்களின் குடும்ப ஆசாரங்கள் அப்படியே நாயர் சாதிக்குரியவையாக இருக்கின்றன. கேரளம் முழுக்க கோயில்களில் இவர்களுக்கு ஏராளமான சடங்குசார்ந்த உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. இதில் ஓர் முறைமை இருப்பதைப்பார்க்கலாம். கேரளத்தில் வழிபாட்டிடங்கள் இருவகை. சிவன் விஷ்ணுபோன்ற பெருந்தெய்வங்களுக்குரியவை கோவில்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை பெரிய கட்டுமானங்கள். பிராமணச் சடங்குகள் கொண்டவை. சாஸ்தா, பகவதி முதலிய சிறிய தெய்வங்களுக்குரியவை காவுகள். காவு என்றால் சோலை என்றுதான் பொருள். அங்கே சமீபகாலமாகத்தான் பிராமணர்கள் பூசை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஆலயங்களில் பெரும்பாலும் வேலர், வள்ளுவர் போன்றவர்கள்தான் பூசைச்சடங்குகளைச் செய்துவந்தார்கள்.

இப்போது மிகமிகச்சிறிய காவுகளில் மட்டுமே ஆங்காங்கே வேலர்கள் பூசை செய்துவருகிறார்கள். ஆனால் எல்லா காவுகளிலும் முக்கியமான சடங்குகளை வேலர்கள்தான் செய்யவேண்டும். கோயில்களில்கூட வேலர்கள் செய்தாகவேண்டிய சடங்குகள் இன்னும் நீடிக்கின்றன. அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலில் பள்ளிப்பானை என்ற சடங்கு வேலர்களால் செய்யப்படுகிறது. கிருஷ்ணை தூங்கவைப்பதற்கான தாளம் அது. கொடுங்கல்லூர் கோயிலில் வருடம்தோறும் நிகழும் திருவிழாச்சடங்கை தொடங்கி வைப்பவர் வேலன். அதை காவுதீண்டல் என்கிறார்கள்.

வேலர்கள் கேரளமண்ணில் இன்று பிராமணர்கள் செய்துவரும் பணிகளை ஒருகாலத்தில் செய்துவந்தவர்கள் என்பது அனேகமாக நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. காலப்போக்கில் கோயில்களும் மதச்சடங்குகளும் பிராமணியமயமானபோது அவர்கள் சமூகத்தில் பின்னடைவைச் சந்தித்தார்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பு அடித்தளத்தில் வலுவாகவே நீடித்தது. சொல்லப்போனால் சமூகமும் வழிபாடும் எந்த அளவுக்கு பழங்குடித்தன்மையுடன் இருந்ததோ அந்த அளவுக்கு வேலனுக்கு இடமிருந்தது. 1987ல் கூட சங்ககாலத்து வேலன் அதே கம்பீரத்துடன் வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்து ஆசியளித்துக்கொண்டிருந்தார்.

யார் இந்த வேலன்? சங்கப்பாடல்களில் குலக்குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஒருவன். பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும்போது வேலன் வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான். அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் – முருகன்- சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது. வேலன் பல்வேறுவகையில் குறிசொல்கிறான். கழங்கு என்னும் வண்ணம்தீட்டப்பட்ட காய்களை வீசி குறிசொல்கிறான். வேலனாட்டம் என்றும் வெறியாட்டு என்றும் சொல்லப்படும் ஆடலை வேலன் நிகழ்த்துகிறான். இது அவன் மேல் மலைத்தெய்வமான முருகு வந்து ஆவேசிப்பதனால் நிகழ்கிறது.

இன்றும் வேலனின் ஆட்டமோ அவனுடைய குறிசொல்லுதலோ எதுவுமே மாறவில்லை. கழங்காடுதல்கூட இன்றும் உள்ளது. வேலனாட்டம் இன்று வேலன்துள்ளள் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் ஆவணிமாதத்தில் ஒரு சடங்காக மட்டும் நிகழ்த்தpபடுகிறது. மந்திரச்சடங்குகளில் நோய் தீர்க்கவும் பேயோட்டவும் வேலர்கள் பாடும் பாடல்கள் வேலன்பாட்டுகள் என்ற பேரில் தொகுக்கப்பட்டுள்ளன. பானைமேல் தோல்கட்டிய தோல்பானை என்னும் தாளவாத்தியத்தையும் ஊரச்சுள்ளி என்னும் காட்டுகொடியைக் கட்டி செய்யப்பட்ட யாழ்போன்ற வாத்தியமான நந்துனியையும் இவர்கள் வாசிக்கிறார்கள்.

கண்முன் அமர்ந்திருந்த வேலன் சங்ககாலத்திலிருந்து எவ்வளவு அருகில் நாம் இருக்கிறோம் என்று எனக்குக் காட்டித்தந்தார். அந்த அனுபவத்திலிருந்து நான் ஆழமாக ஒன்றைப்புரிந்துகொண்டேன். சங்ககாலம் நமக்கு வரலாற்று ரீதியாக மிகத் தொலைவில் உள்ளது. இலக்கியரீதியாகவும் தொலைவில்தான் உள்ளது. ஆனால் நாம் அதை மிக நெருங்கிச்செல்ல ஒரு ரகசியப்பாதை உள்ளது. சடங்குகள் என்னும் பாதை.

சடங்குகள் என்பவை குறியீட்டுரீதியான செயல்பாடுகள். தொன்மையான பழங்குடிமனம் இயற்கையை எதிர்கொண்டதன் ஒருவெளிப்பாடுதான் சடங்கு. ஒருசெயல் மீது குறியீட்டு ரீதியாக மேலதிக பொருள் ஏற்றப்படும்போது அது சடங்காக ஆகிறது. பலசமயம் அன்றாடவாழ்க்கையின் ஒரு சாதாரணச்செயல்பாடு குறியீடாக ஆகும்போது அது சடங்காகிறது. ஒரு பெண்ணை தன்னுடையவளாக ஏற்றுக்கொள்ளும் ஒருவன் தன் குலச்சின்னத்தை ஒரு பனையோலையில் எழுதி அவள் கழுத்தில் கட்டுகிறான். தாலம் தாலியாக மாறிவிடுகிறது.

வாழ்க்கைத்தருணங்கள், பூசைகள், கேளிக்கைகள் போன்றவற்றில் சடங்குகள் உருவாகின்றன. சடங்குகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும்போது அவற்றில் பயிற்சிபெற்றவர்கள் உருவாகிறார்கள். பழைய சமூக அமைப்பில் அவர்கள் ஒரு சாதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்கள் செய்யும்போது சடங்குக்கு கலை என்னும் தகுதி வருகிறது. அதை நாம் சடங்குகலைகள் என்கிறோம்.

சடங்குகள் குறியீடுகள். குறியீடுகள் ஆழ்மனம் சார்ந்தவை. அவற்றை நாம் நம்மையறியாமலேயே உணர்வுரீதியாக அர்த்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆகவே வாழ்க்கைச்சூழல்கள் மாறும்போதும் அவை மாறுவதில்லை. அவற்றில் ஒரு திட்டவட்டமான மாற்றம் நிகழ பலநூற்றாண்டுகள் தேவைப்படும். தமிழ்வரலாற்றில் நீண்டகாலம் அன்னியப்பண்பாட்டின் ஆதிக்கம் இருந்துள்ளது. களப்பிரர், நாயக்கர் காலங்கள். அப்போது இங்குள்ள பண்பாட்டுக்கட்டுமானம் பெரிதும் உடைத்து மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. மலையும்காடும் சூழ்ந்த நிலமாகிய கேரளத்தின் பல பகுதிகளில் அத்தகைய பண்பாட்டு ஊடுருவல் நிகழவில்லை. ஆகவே அங்கே பழைய பண்பாடு சில மாற்றங்களுடன் நீடித்தது. ஆகவேதான் சங்ககாலத்தலைவிக்கு அணங்கோட்டிய வேலன் அதே கம்பீரத்துடன் வந்து நிற்கிறார்.

சடங்குகள் அவற்றின் நேரடித்தேவைகளை இழக்கையில் நிகழ்த்துகலைகளாக நீடிக்கின்றன. வேலன் வெறியாட்டு இன்று ஒருவகை கோயில்சார்ந்த நிகழ்த்துகலை மட்டுமேயாகும். இந்நிகழ்த்துகலைகள் வழியாக சங்ககாலத்து மனநிலைகளுக்குள் மிக எளிதில் நுழைய முடிகிறது. கேரளத்தில் இன்றும் இருக்கும் நூற்றுக்கணக்கான நாட்டார் நிகழ்த்துகலைகளை நாம் நேரடியாகவே சங்ககாலத்துக்குள் கொண்டு சென்று பொருத்திப்பார்க்கலாம். அது ஆய்வுக்கான பெரியதோர் களம்.

இதற்கு மறுபக்கமாகச் சொல்லப்படவேண்டியது சங்ககால இலக்கியங்கள் நிகழ்த்துகலைகளின் பகுதிகளாகவே இருந்திருக்கலாம் என்ற உண்மையைத்தான். நாட்டார் சங்கப்பாடல்களில் உள்ள திணை, துறை குறிப்புகள் மிகப்பிற்காலத்தில் போடப்பட்டவை என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகிறார்கள். மிகச்சமீபமாக துளசி ராமசாமி என்னும் ஆய்வாளர் விரிவாகவே அதை எழுதியிருக்கிறார். ஆரம்பகால சங்கப்பாடல்கள் திணைத்துறை இலக்கணங்கள் அற்றவையாக, சுதந்திரமான தனிப்பாடல்களாகவே இருக்கின்றன.

அவை பழங்கால வாய்மொழி நாட்டார் பாடல்கள் என்று துளசி ராமசாமி சொல்கிறார். வாய்மொழி மரபில் நீண்டகாலமாக இருந்த பாடல்கள் அவை என்பதில் ஐயமில்லை. அவற்றில் நாட்டாரியல் கூறுகள் உள்ளன என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அவை தன்னிச்சையாக உருவான தனித்தனியான நாட்டார்ப்பாடல்கள் என்று தோன்றவில்லை.

[தெய்யம்]

ஆனால் அவையனைத்துக்கும் இடையே ஒரு பொதுத்தன்மை எப்போதும் உள்ளது. சுதந்திரமான நாட்டார்பாடல்கள் என்றால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கலாமே. அவற்றின் கவிதை அமைப்பும், சித்தரிப்புமுறையும் ஏன் அத்தகைய பொது இயல்புகளை அடைந்தன?

அதற்கான பதில் என்பது அப்பாடல்கள் அக்காலத்து நிகழ்த்துகலைகளின் பகுதியாக உருவாயின என்பதே. அவற்றின் யாப்பு அமைப்புக்கு அவற்றுடன் வாசிக்கப்படும் வாத்தியம் காரணமாக அமைந்திருக்கிறது. ஆசிரியப்பாவின் இலக்கணத்தை அகவல் ஓசை சார்ந்தது என்று சொல்லலாம். அந்த ஓசை அதனுடன் வாசிக்கப்படும் தளர்வான தோல் கொண்ட கிணைப்பறையே உருவாக்கியது.

கிணைப்பறை முழவு என்றும் அழைக்கப்பட்டது. மிழவு என்ற பேரில் இன்றும் அந்த வாத்தியம் கேரளத்தில் வாசிக்கப்படுகிறது. பெரிய செம்புப்பாத்திரத்தின் வாயில் தோல்கட்டி உருவாக்கப்படுவது இந்த வாத்தியம். முற்காலத்தில் மண்ணாலான பாத்திரத்தில் கட்டப்பட்டிருந்திருக்கிறது. மிழவு பெரும்பாலும் அதற்கான மரமேடையில் தூக்கி வைக்கப்பட்டிருக்கும். கேரளத்தின் கூத்தம்பலங்களில் இருபக்கமும் மிழவு இருக்கும். பாடல்களுக்கு மிழவு துணைசேர்வதில்லை. கிட்டத்தட்ட வசனம்போலவே வரக்கூடிய நேரடிக் கூற்றுகளுக்குத்தான் அது பின்புல வாத்தியம். அதாவது ஆசிரியப்பா போலவே சொல்லப்படும் வரிகளுடன்தான் அது இன்றும் இணைந்துகொள்கிறது!

இதேபோல சங்க பாடல்களின் உள்ளடக்கத்தை வரையறுத்த ஓர் அம்சமும் இருந்திருக்க வேண்டும். அது நிகழ்த்துகலைகளின் நாடகக்கூறு என்று சொல்லலாம். சங்கப்பாடல்களை பாணனும் விறலியும் ஆடியிருக்கிறார்கள். ஒரு சபைநடுவே அவர்கள் ஆடும்போது அவர்களுக்கு அதற்கான வேடம் தேவைப்படுகிறது. அந்த ஆடுகளத்தை ஒரு குறிப்பிட்ட நிலமாக அவர்கள் உருவகம் செய்தாகவேண்டியிருக்கிறது. இப்படித்தான் சங்கப்பாடல் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிலத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது.

ஒரு பாடல் ஆடப்படும்போது அந்த கதைமாந்தரும் மண்ணும் நுட்பமாக விவரிக்கப்படுகிறார்கள். கவித்துவமாக விரித்தெடுக்கப்படுகிறார்கள். குறியீடாக்கப்படுகிறார்கள். அவ்வாறு அந்த மண் சார்ந்த அடையாளமானது நிகழ்த்துகலை வழியாக மேலும் மேலும் பெரிதாகிறது. அந்தப்பாடலில் அது ஒரு முக்கியமான கூறாக தனித்துத்தெரிகிறது. இந்தப்பாடல் மலையில், குறமக்களிடையே நிகழ்வது என சொல்ல முடிகிறது. அந்த அம்சத்தையே பின்னாளில் திணைக்கோட்பாடாக இலக்கணப்படுத்திக்கொண்டார்கள் என்று சொல்லலாம்.

நிகழ்த்துகலை என்ற தொடர்ச்சியான இயக்கம் பழந்தமிழ்ப்பாடல்களின் வடிவத்தை மெல்லமெல்ல உருவாக்கியது. நுண்மைப்படுத்தியது. அந்த பரிணாமம் வழியாகவே அவை செவ்விலக்கியங்களாக ஆயின. அதாவது சங்கப்பாடல்களை செவ்வியலை நோக்கி கொண்டுவந்த சக்தி நிகழ்த்துகலைதான்

நிகழ்த்துகலைகளின் பகுதியாக பழந்தமிழ்ப்பாடல்கள் இருந்த ஆரம்பகட்டத்தில் அவை நாட்டார் இயல்புடன் இருந்திருக்கலாம். நிகழ்த்துகலை அவற்றை திரும்பத்திரும்ப நிகழ்த்துகிறது. அதன்வழியாக நிகழ்த்துபவன் தேர்ந்த தொழில்முறைக்கலைஞனாக ஆகிறான். அக்கலையை ரசிப்பவன் தேர்ந்த ரசிகனாக ஆகிறான். இவ்வாறு ஆகும்தோறும் அக்கலை மேலும் மேலும் தெளிவான வடிவ இலக்கணம் கொண்டதாக ஆகிறது. நுட்பங்களை மட்டுமே இலக்காக்குவதாக ஆகிறது. இதுவே செவ்வியலுக்கான வழி.

நாட்டார்கலையின் இயல்பாகச் சொல்லப்படுபவை அவற்றின் உடனடியான வெளிப்பாடு, தங்குதடையற்ற ஓட்டம், நேரடித்தன்மை ஆகியவை. செவ்வியல் அவ்வியல்புகளை உதறுவதன் மூலம் உருவாகக்கூடியது. செவ்வியல் உருவாக்கத்துக்கு முதல்தேவை கலைஞன், கவிஞன் என்னும் தனியாளுமை. அவன் அம்மரபை கற்றறிந்தவன், தன் கலையில் தேர்ச்சி பெற்றவன். இரண்டாவது அக்கலை அல்லது இலக்கியம் வடிவ இலக்கணம் வகுத்து முறையாக கற்பிக்கும்படியானதாக ஆவது.

இவ்விரண்டின் விளைவாகவே செவ்வியலின் முக்கியமான மூன்றாவது சிறப்பம்சம் அமைகிறது. அது திரும்பத்திரும்பச் செய்வதன் மூலம் நுட்பங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கக்கூடியதாக ஆகிறது. செவ்வியலின் வெளிப்படையான அடையாளங்களில் ஒன்று இது. அடிப்படை அம்சங்களை அப்படியே உறைய வைத்துக்கொண்டு நுட்பங்களில் மட்டுமே கவனம் செலுத்தும்போது இது நிகழ்கிறது. இன்று தமிழ் இசைநிகழ்ச்சிகளில் ஒரேபாடல்கள் மீண்டும் மீண்டும் பாடப்படுவது இதனால்தான்.

சங்கப்பாடல்கள் கைவளை கழலுதல் பசலை பரவுதல் முதலியவற்றை மீளமீளச் செய்து நுட்பத்தை நிகழ்த்துவதை நாம் காணலாம். இவ்வியல்பு அவை நிகழ்த்துகலைகளாக இருந்தமையால் உருவானதென்று வெளிப்படையாகவே தெரிகிறது. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு வகையாக கைவளை கழல்வதை விறலி நடித்துக்காட்டியிருக்கலாம். இன்றுகூட கதகளியில் இவ்வாறு கைவளை கழல்வதை நுணுக்கமான மனோதர்மத்துடன் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிகழ்த்துகலையில் இருந்து வாசிப்புக்கலையாக சங்கப்பாடல்கள் பிரிந்தது அவை தொகுக்கப்பட்டபின்னர் என்று ஊகிக்கலாம். இலக்கியம் என்னும் தனிக்கலையின் பிறவி அதன் வழியாக நடந்தது என்று சொன்னாலும் மிகையல்ல. நடிப்பு என்பது வாசகனின் மனதுக்குள் நிகழ ஆரம்பித்தது. அவன் அவ்வரிகளில் இருந்து அர்த்தங்களையும் உணர்ச்சிகளையும் அடைய விறலியும் பாணனும் தேவையில்லாதவர்களானார்கள்.

ஆனால் சங்கபபடல்களுக்கும் நம் நிகழ்த்துகலைகளுக்கும் இடையேயான உறவு இன்றும் தொடரக்கூடியது. ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்று அமர்ந்தால் அங்கே ஆடிக்கொண்டிருப்பவள் ஒரு சங்ககாலத்தலைவி என்ற எண்ணம் எழுவதை நம்மால் தவிர்க்கவே முடியாது.

சங்ககால அழகியல், குறிப்பாக அகத்துறை அழகியல், பக்தி காலகட்டத்தில் ஆழ்வார்-நாயன்மார் பாடல்கள் வழியாக மறுபிறப்பு எடுத்தது. நம் பக்தி இயக்கப்பாடல்கள் எல்லாமே நேரடியாக நிகழ்த்துகலைகளுடன் இணைந்திருந்தன. நிகழ்த்துகலை வழியாகவே அவை பரவின. பின்னர் அவை கோயில்கலைகளின் பகுதியாயின. பக்திகாலகட்டத்தில் உருவான நம்முடைய இசையிலும் நடனத்திலும் அந்த அழகியல் நீடித்தது. அங்கிருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டு சென்னை சபாக்களுக்குச் சென்றது. அறுபடாத ஒரு சரடாக சங்ககாலம் முதல் அலர்மேல்வள்ளி வரை தமிழின் அகமரபு நீடிக்கிறது.

நான் எண்பத்தெட்டில் காஞ்ஞாங்காட்டில் ஒரு விசித்திர அனுபவத்தை அடைந்தேன். அன்று காலை ஒரு நண்பரின் இல்லத்துக்கு விருந்தினராகச் சென்றிருந்தேன். காலையில் அவரது குலதெய்வமான குளிகனின் காவில் ஒரு படைப்பு. அதாவது பலிகொடை. கோழி வெட்டி பலிகொடுத்தபோது சட்டென்று அவரது உறவில் ஒரு பெரியவருக்கு சன்னதம் வந்து கூச்சலிட்டு எழுந்து ஆடினார். உரக்கப்பாடியபடி செந்தூரத்தை அள்ளி முகத்தில்பூசிக்கொண்டு நடனமிட்டார்.

அன்று மாலை நான் அந்நண்பருடன் செல்லும்போது ஒரு முத்தப்பன் காவில் தெய்யம் விழாவை கண்டேன். வேலன் தெய்யம் வேடமிட்டு நின்றிருந்தார். முகத்தில் சிவந்த சாயம். தென்னை ஓலைக்குருத்தாலான தலைமுடிவிரிவு. கமுகுப்பாளையாலான இடையலங்காரம். முருக்கமரத்தாலான பெரும் கிரீடமும் புஜகீர்த்தியும். அதற்கு கொந்தை என்று பெயர். ரத்தம்போல சிவந்த கண்கள். தெய்யமாக வந்த முத்தப்பனின் கதையை ஒருவர் துடி வாத்தியத்தைக் கொட்டி பாடிக்கொண்டிருந்தார்.

அந்த துடிதாளத்துக்கு வேலன் ஆடினார். இரு கைகளிலும் இரு பந்தங்களுடன் அவர் சுழன்று நடனமிட்டார். மிகத்தேர்ச்சியான அசைவுகள் இல்லாவிட்டால் அதை ஆட முடியாது. ஆனால் அவர் தன்னிலையில் இல்லை. சன்னதம் வந்ததுபோலத்தான் இருந்தார். ஏஏஏ என்ற கூச்சல் என்னை புல்லரிக்கச்செய்தது. அவரது காலடியில் அரிசியையும் தேங்காயையும் வைத்து மக்கள் வழிபட்டனர். அவர் ஒரு உயிருள்ள கடவுள் சிலை.

அன்று இரவு அங்கிருந்த கோயிலில் ஒரு கதகளி பார்த்தோம். தேர்ச்சி பெற்ற வண்ண முக அலங்காரம், பளபளப்பான உடைகள். உயர்ந்த மணிமுடி. இருபது ஆண்டுக்காலம் எடுத்துக்கொண்ட அதி தீவிரப்யிற்சியின் விளைவான நுட்பமான ஆட்டம். அவர் அன்று ஆடியது ராவணன் சிவனிடம் வரம்பெற்ற காட்சி. வழக்கமான கதை, வழக்கமான பாடல். ஆனால் நுட்பமான மனோதர்மம் மூலம் அதை முன்னெடுத்துச்சென்றார்.

சட்டென்று ஒரு கூச்சல். ஏஏஏ! அதே கூச்சல். அந்தக்கணத்தில் அந்த மூன்று ஆட்டங்களும் ஒன்றாயின. ஒரு மதச்சடங்கு சடங்குகலையாக மாறி நிகழ்த்துகலையாக உருவம் கொண்டு வந்த பரிணாமத்தை நான் ஒரே பார்வையில் கண்டேன். சடங்கு பழங்குடிப்பண்பாட்டில் இருக்கையில் சடங்குகலை நாட்டார்மரபில் இருந்தது. நிகழ்த்துகலை செவ்வியல்வடிவமாக இருந்தது.

சங்கப்பாடல்கள் கடந்துவந்த பாதை இந்த மூன்று புள்ளிகளிலும் உள்ளதென்று நினைக்கிறேன். அவை பழங்குடிப்பாடல்கள். பின்னர் நாட்டார் பாடல்கள். அந்த நாட்டார்கலைகள் தேர்ந்த நிகழ்த்துகலைகளாக ஆனபோது அவை செவ்வியல் தன்மை கொண்டன. தமிழின் மகத்தான செவ்விலக்கியத் தொகை உருவாகியது. அந்த செவ்வியலில் இருந்து நம் இலக்கிய மரபு பிறந்தது.

நாம் இந்த செவ்வியலுக்குள் நம் நாட்டார் மரபை, நம் பழங்குடி ஆழத்தைக் காணமுடிகிறது என்பது ஆச்சரியம்தான். கொஞ்சம் கவனித்தால் நம்முடைய சடங்குகலைகளில் சங்கப்பாடல்களின் அழகியலை காணலாம். சங்கப்பாடல்களில் நம்முடைய பழங்குடிமரபை காணலாம்.

சங்ககாலம் நம்முடைய தொல்மரபு. அதிலிருந்து நாம் இருபது நூற்றாண்டுகளால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நிகழ்த்துகலைகளின் வழியாக மிக எளிதாக நாம் அங்கு செலவும் அது இங்கு வரவும் ஒரு அரிய பாதை நம்மருகே இருந்துகொண்டிருக்கிறது. ஒர் அழகிய மலர்ப்பாதை. ஆச்சரியம்தான்!

நன்றி

[5-12-2012அன்று நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் நடந்த ‘பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துகலைகளும் அவற்றின் நீட்சியும் ’ என்ற கருத்தரங்கின் நிறைவுரை]

முதற்பிரசுரம்: Jan 6, 2013  / மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைஹிண்ட்ராப்
அடுத்த கட்டுரைஎதிர்மனநிலை கற்றலுக்கு உதவுமா?