தமிழில் இஸ்லாமிய இலக்கியம்

ன்புள்ள ஜெயமோகன்
உங்களை ஈரோடில் சந்தித்தது மிகவும் இனிமையான ஒரு அனுபவம். என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

அந்தப் பொழுதில் நான் உணர்ந்ததை விட அசை போடும் போது இன்னமும் இனிமையான ஒன்றாக மாறி வருகிறது (முதல் நாள் வத்தல் குழம்பு போல) அதைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று ஆசை. அதனால் ஒத்தி வைத்திருக்கிறேன்,

இந்த நாட்களில் அசோகமித்ரனின் “நண்பனின் தந்தை” படித்தேன். யதார்த்தமான ஒரு எழுத்து. ல.ச.ரா. வின் பிராயச்சித்தம் படித்தேன். அதன் பின்னர் உங்கள்
தளத்தில் தேடி லா.ச.ரா. குறித்து படித்தேன். உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். (விமான நிலையத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்த ஒரே நல்ல புத்தகம் இதுவே. அதானால் வாங்கி படித்தேன் )

புதுமைப்பித்தன் அவர்களில் புத்தக தொகுப்பு படிக்க இருக்கிறேன். உங்களில் விசும்பு மற்றும் உலோகம் படித்து முடித்த பின்னர் ஏழாம் உலகம் படிக்கவிருக்கிறேன்.

தமிழில் இஸ்லாமிய வாழ்கையை சொல்லும் நல்ல இலக்கியம் / நாவல் / கதை ஏதாவது பரிந்துரைக்கிறீர்களா.

எனக்கு தெரியாத வாழ்க்கை, ஒரு உலகம் அது. எனது தந்தையின் பல நண்பர்கள் ராஜகிரி பண்டாரவாடை (பாய்) இஸ்லாமியர்கள். ஆனால் பெரிதாக அவர்கள் வாழ்கையை நான் அவதானித்தது கிடையாது.

“கேதேள் சாஹிப்” தான் நான் படித்த இஸ்லாமியர்களின் நல்ல கதை (இது ஒரு இஸ்லாமியரின் கதை தானே ஒழிய அவர்கள் வாழ்கையை சொல்லும் கதை அல்ல) .

நீங்கள் இது (இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ) குறித்து “நவீன தமிழ் இலக்கியம்” புத்தகத்தில் எழுதியிருந்தீர்களா என்று மறந்து விட்டேன்.

காதலுடன்
ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்

நான் தமிழில் சிறுபான்மை இலக்கியம் என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் இஸ்லாமிய இலக்கியம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். வேறு தனிக்கட்டுரைகள் உள்ளன. என் நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ கோரியதற்கேற்ப எழுதியவை.

பொதுவாக எழுத்தை இப்படி பேசுபொருள் சார்ந்து பிரித்துக்கொள்ளக்கூடாதென்பதே என் எண்ணம். அது இலக்கியத்தை குறுக்கும் நோக்கு. அப்படைப்புகளை நாம் முழுமையாக காணமுடியாமல் செய்துவிடும். ஆனால் ஒரு வரலாற்றுப்புரிதலுக்காக எல்லைக்குட்பட்டு அப்படி ஆராய்ந்து பார்க்கலாம்.

தமிழில் எழுதுபவர்களில் தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா இருவரும் இஸ்லாமிய இலக்கியவாதிகளில் முதன்மையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்குக் காரணம் இஸ்லாமிய வாழ்க்கையை சொல்லும் விதமாக அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் என்ற அடையாளத்தை எளிதில் தாண்டிவிடுகிறார்கள். மானுடத்தின் கதையாக தங்கள் எழுத்தை ஆக்கிவிடுகிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகுகைகளின் வழியே – 14
அடுத்த கட்டுரைகுகைகளின் வழியே – 15