அன்புள்ள ஜெயமோகன், எப்படி இருக்கிறீர்கள்? சமீபத்தில் குங்குமம் இதழில்
என் தொகுப்பைக் குறித்து ரத்தினச்சுருக்கமாக எழுதியிருந்ததை நண்பர்கள்
சொல்ல நான் பார்த்தேன். சந்தோஷம். இந்தப் புத்தகம் அப்படியான பெருமை
பெற்றிருப்பின் பாக்கியமே.
தமிழில் மிகச் சிறந்த கவிதைகளை, தொகுதியிலிருந்து (முதல் பதிப்பு) சில
முக்கியமான கவிதைகளை, சிற்றிதழ்க்கவிதைகளை வலைப்பூவில் வெளியிட
விரும்புகிறேன். உதாரணத்திற்குச் சொல்வதானால், காகிதத்தில் ஒரு கோடு
தொகுப்பின் அட்டையை இளம்தலைமுறைகள் பார்த்திருக்கமாட்டார்கள். அந்த
அட்டையுடன், மிகச் சிறந்த கவிதைகளை நண்பர்களைக் கொணடு (உங்களையும்)
தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்க விருப்பம். தினம் ஒரு கவிதை என்று
எடுத்துக்கொண்டாலும், பிற்காலத்தில் ஒரு கவிஞரின் மிகச் சிறந்த கவிதைகளைக்
கண்டடைய உதவும் மின்-நூலகமாகவும் அமையக்கூடும் என்று நம்புகிறேன்.
மிகச் சிறந்த கவிதைகள், விமர்சனங்கள், முதல் பதிப்பின் அட்டை,
சிறுபத்திரிகை கவிதைகள், பேட்டிகள், மொழிபெயர்ப்புகள் என வகைப்படுத்திட
எண்ணம்.
இப்பணி தொடங்கலாமா?
உங்கள் மேலான ஆலோசயைத் தெரிவியுங்கள்.
ராணி திலக்
அன்புள்ள ராணி திலக்,
நல்ல பணி. முக்கியமானது. ஆனால் இணையத்தில் இத்தகைய பணிகளுக்கு உடனடியான எதிர்வினை மௌனமாகவே இருக்கும். சோர்வில்லாது கொஞ்சகாலம் செய்தால் மட்டுமே ஏதேனும் பயன் இருக்கும்
. தமிழில் முக்கியமானவை எனப் பலராலும் சொல்லப்பட்ட கவிதைகளை அக்கவிதைகள் பற்றி அவர்கள் சொன்ன வரிகளுடன் சேர்த்துப் பிரசுரிக்கலாம்
. தமிழின் முக்கியமான கவிஞர்கள் தங்கள் கவிதை பற்றிச் சொன்னவற்றுடன் அக்கவிதைகளைப் பிரசுரிக்கலாம்
. கூடவே நீங்கள் சொன்னதுபோலக் கவிதைநூல்களின் முதற்பதிப்பின் அட்டையையும் பிரசுரிக்கலாம்
கவிதை எப்போதுமே மிகக்குறைவான வாசகர்களைக் கொண்டது. ஆனால் அது மொழியின் கூர்முனை
ஜெ