அன்புள்ள மெய்யப்பன் அவர்களுக்கு
நன்றி. நீங்கள் சொன்ன கோணத்தில் நான் விஐயை அணுகியதே இல்லை. நான் பழகி அறிந்த விஐயைப்பற்றி எழுதவில்லை, ஏனென்றால் பழகவே இல்லை. நான் எழுதியது பிறர் சொல்லிக்கேட்ட விஐயைப்பற்றி. அது ஒரு வெறும் மனப்பதிவாகவே இருக்கும் என நானும் நம்புகிறேன்
ஜெ
வ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின் ஓட்டு வீடு என் மாமனார் வீட்டுக்கு மிக மிக அருகில் மனோன்மணி சுந்தரனார் தெருவில் இருக்கிறது. இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அந்த வாசலை கடந்து செல்கிறேன். பயமோ மரியாதையோ அவரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை. இனி எங்கே சந்திப்பது?
இத்தனைக்கும் என் மாமனாரும் தமிழ் பேராசிரியர். என்னை அவரிடம் அறிமுகப்படுத்த எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. வடசேரி வாழ் வெள்ளாளர்கள் அமைத்த சமூக கூட திறப்பு விழா போட்டோ ஆல்பத்தில்தாந் அவர் புகைப்படைத்தை பார்த்தேன்
—
ஜீவா
அன்புள்ள ஜீவா
நீங்கள் குறிப்பிட்ட அதே தயக்கம் எனக்கும் இருந்தது. அவரிடம் நெருங்குவது கஷ்டம். நெருக்காதே என்றுதான் அவர் அமர்ந்திருப்பார். பழையகால மனிதர். நீங்கள் நெருங்கி ”வணக்கம்” சொல்லியிருந்தால்கூட ”நீங்கள் யார்? உமக்கு என்னிடம் என்ன காரியம் ஆகவேண்டும்?” என்று கேட்டிருப்பார்
ஜெ
அன்புள்ள ஐயா, வணக்கம்.
மூதறிஞர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையினை வாசித்தேன். நீங்கள் பிறரைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் அவர்களின் ஆளுமைச்சிறப்பினை அழகுபடச் சொல்லியிருந்தீர்கள். இக்கட்டுரையில் அவ்வகையில் விரிவாக ஏதும் இல்லை. ஓர் உளப்பதிவு மட்டுமே உள்ளது. ஒரு நல்ல கட்டுரைக்காகவேனும் நீங்கள் அவரிடம் நெருங்கியிருக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்
அர.முனுசாமி
அன்புள்ள முனுசாமி
விஐயை நெருங்குவது எளிதல்ல. நெருங்கியிருக்கலாம், அதற்கான மனநிலை எனக்கு அமையவில்லை. ஆனால் அவரது ஆய்வுநெறிமீது எனக்கு பெருமதிப்பு இருந்தது. ஒரு நிகழ்ச்சி. சம்பந்தபப்ட்டவரே என்னிடம் சொன்னது. சுதந்திரமாக ஆய்வுசெய்யும் ஒஉவர் விஐயை நெருங்கி ‘தமிழாய்வுசெய்கிறேன். பலகலை நிதியுதவி ஏதேனும் கிடைக்குமா?” என்று கேட்டார்.
விஐ ”நீங்கள் ஏன் தமிழாய்வுசெய்யவேண்டும்?” என்றார்.” ஏனென்றால் உலகிலேயே மூத்தமொழியாகிய தமிழை உலக அளவில் நிலைநாட்டவேண்டும்” என்றார் இவர். ”உலகிலேயே மூத்தமொழி என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் இருக்கிறதா?” என்றார் விஐ. ”இல்லை ஐயா கண்டிப்பாக இல்லை. துளிகூட இல்லை” என்றார் ஆய்வாளர்
”இந்த அளவுக்கு உறுதிப்பாடு இருக்கையில் இனி நீங்கள் ஏன் ஆய்வுசெய்யவேண்டும்?கடைசிநபி முகமதுதான் என்பதை முஸ்லீம்கள் ஆதாரம் காட்டி நிறுவிக்கொண்டா இருக்கிறார்கள்? அப்படியே நம்பவேண்டியதுதானே?” என்றாராம் விஐ.
ஜெ
அன்புள்ள ஜெ
நீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று திரு இளங்கோவன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தேன். வெற்று அரட்டைகளாக இணையதளங்கள் சீரழிந்து கிடக்கும் சூழலில் மிக்க நம்பிக்கையுடன் நடத்தப்படும் உருப்படியான இணையதளம் அது. நன்றி
சந்திரகலா
அன்புள்ள சந்திரா
உண்மை. இளங்கோவனின் பாசாங்கற்ற தமிழ்ப்பற்றும் அதை செயல்மூலம் வெளிப்படுத்தும் பாங்கும் மிக முக்கியமானவை. இங்கே தமிழ்ப்பற்று என்றாலே பிடிக்காத கொஞ்சபேரை தமிழ்ப்பகைவர் எறு வசைபாடுவதாக பொருள் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் வசைபாடாத ஒரு தமிழியதளம் என்பது மிக ஆச்சரியமும் உவகையும் அளிக்கிறது
ஜெ