சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

கீழ்க்கண்ட விஷயத்தை கூகிளில் தேடிக் கண்டடைந்தேன்

1) http://www.chennaimuseum.org/draft/history/hist9.htm

மணல் வீச்சு முறை கோயில் கற்பரப்புகளில் உள்ள எண்ணை மற்றும் அழுக்குகளைச் சுத்தபப்டுத்தப் பயன்படுத்தப்படும்போது சிற்பங்களின் நுட்பங்கள் இல்லமலாவதோடு கல்வெட்டுகளும் அழிகின்றன. சிற்ப அமைப்பேகூட சிதைகிறது. தொல்லியல் துறையின் முயற்சியால் 2002 முதல் இம்முறை தடைசெய்யப்பட்டுள்ளது. பாதிப்பில்லாத இயற்கையான ரசாயனங்கள் மூலம் கோயில்கலையும் சிற்பங்களையும் சுத்தம்செய்வதற்கான பயிற்சியானது இந்து அறநிலையத்துறை, ரயில்வே துறை, காவல்துறை போன்றவற்றின் ஊழியர்கள் உட்பட பல்வேறு அரசு ஊழியர்களுக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது நமது பண்பாட்டு பாரம்பரியத்தை தீவிரமான அழிவுகளிலிருந்து பாதுகாக்க உதவியாக அமையும்.

2) http://www.thehindu.com/mag/2008/02/10/stories/2008021050210700.htm

உதாரணமாக நான் திருவாரூரில் பணியாற்றினேன். முசுகுந்த சக்ரவர்த்தியைப் பற்றிய பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகான புகழ்பெற்ற ஓவியங்கள் தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தின் தேவாசிரிய மண்டபத்தின் மேற்கூரையில் உள்ளன. பொதுமக்களுக்கும் கலையறிஞர்களுக்கும் நன்கு அறிமுகமானவை இவ்வோவியங்கள். இவை இன்று மிக வருந்தத்தக்க நிலைமையில் உள்ளன. தமிழ் சைவ வரலாற்றில் இந்த மண்டபத்துக்கு ஒரு தனி இடம் உள்ளது.இங்குதான் அறுபத்துமூன்று நாயன்மார்களைக் கண்டதாகச் சொல்லப்படுகிறது. இன்று இது ஒரு சரக்கு அறையாக பயன்படுத்தப்படுகிறது. இதில் பலவகையான வீண்பொருட்கள் உடைந்த குச்சிகள் துருவேறிய ஆணிகள் போன்றவை குவிக்கப்பட்டுள்ளன. பயங்கரமான நிலைமை

இந்த பதினேழாம்நூற்றாண்டு பெரும்படைப்புகள் வெட்கப்படும்படியான புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த ஓவியங்களை பாதுகாக்க INTACH (the Indian National Trust for Art and Cultural Heritage) அமைப்பு முன்வந்திருப்பது ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது
*
நன்றி

ஹேமா நாராயணஸ்வாமி

******

திரு ஜெயமோகன் பார்வைக்கு,

கோயில்கள் அழிவதைப்பற்றிய உமது இந்துத்துவப் புலம்பலை உமது இணையதளத்தில் கண்டேன். கோயில்கள் அழிவது இயற்கை. மட்டுமல்ல இன்றியமையாத தேவையும்கூட. ‘சீரங்க நாதனையும் சிதம்பரம் நடராசனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ!’ என்றுதான் பாவேந்தர் பாடினார். இந்த உதவாத கட்டிடங்கள் இடிந்து அழிவதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் குடிசையில் வாழும்போது வவ்வால்கள் வாழ்வதற்கு எதற்கு கோயில்கள்? திருவாரூர் தியாகேசனுக்கு தேர் ஒரு கேடா என்று கலைஞர் இதைப்பற்றி பாடினார். கோயில் சிற்பங்கள் எனப்படுபவை மூடநம்பிக்கையையும் பார்ப்பனியத்தையும் பரப்பக் கூடியவை. அவற்றுக்கு எந்தவிதமான தேவையும் இல்லை.

‘கருணை’ சுப்ரமணியம்

****

முதல்கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கடிதம் தமிங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது. இரு கோணங்கள். கோயில்களை பீரங்கி வைத்து தகர்க்கும் செயலையே நமது கும்பாபிஷேகப்பிரியர்களும் பக்தர்களும் அர்ச்சகர்களும் சேர்ந்து செய்கிறார்கள் என்று படுகிறது.

மணல்வீச்சுமுறை தடைசெய்யப்பட்டுள்ளது என்றால் 2007 ல் எப்படி தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவட்டார் ஆலயத்தில் அது பயன்படுத்தப்பட்டது? இப்போதும் பல ஆலயங்களில் பயன்படுத்தப்படுகிறது? இதற்கு ஏதாவது கண்காணிப்பு அமைப்புகள் உண்டா என்ன?

முந்தைய கட்டுரைஒரு கனவின் கதை
அடுத்த கட்டுரைபி.பி.ராமச்சந்திரன் இரு கவிதைகள்