விரல்நுனி வண்ணத்துப்பூச்சி

நண்பர்களே,

இந்த அவையில் நான் மிக மதிக்கும் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எப்போதும் சொல்லிவரும் நிகழ்வொன்றுண்டு. கொற்றவை என்ற நாவலை நான் எழுதும்போது எனக்கு உந்துதலாக இருந்தது ஒரு பாட்டு. ‘கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்’ என்ற இளையராஜாப்பாடல். எப்படியோ அந்தப்பாடல் அந்நாவலுக்குரியதாக ஆகிவிட்டது. ஒவ்வொருநாளும் அந்தப்பாடலை பலமுறை கேட்பேன். அது உருவாக்கும் வெறும் மனச்சித்திரங்கள் வழியாக கொற்றவைக்குள் சென்று விடுவேன். இப்படி மாதக்கணக்கில். நூற்றுக்கணக்கான முறை. அந்நாவல் முடியும்வரை பேய்போல அப்பாடல் என்னை பீடித்திருந்தது. நாவல் முடிந்ததும் பாடலும் விட்டுச்சென்றது.

இசை எனக்கு காட்சிகளாகவே கண்ணுக்குத்தெரிகிறது. நான் கனவில் மிதந்துசெல்ல அது காற்றாக உதவுகிறது. என்னை கனவில் ஆழ்த்திய பல அற்புதமான பாடல்கள் இளையராஜா அவர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த அவையில் அவர் இருப்பதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அளிக்கிறேன்.

இந்த இலக்கியவிருது உண்மையில் நண்பர்களால் ஏற்படுத்தப்பட்டது. அவர்களின் உழைப்பாலும் உற்சாகத்தாலும் நிகழ்த்தப்படுவது. அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த மேடையில் என் நண்பர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே, இந்தமேடையில் எனக்கு பால் சகரியா மலையாளத்தில் எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சொற்கம் தேடிச்சென்ற மூன்று குழந்தைகளின் கதை. கதைகளிலும் புராணங்களிலும் பார்ப்பதுபோல இருக்கவில்லை சொர்க்கம். அது ஒரு பெரும் பூந்தோட்டமாக இருந்தது. அதன் நடுவே ஒரு வெண்மணல்பாதை. அதில் மூன்றுகுழந்தைகளும் நடந்தன

‘நீ எப்படி இறந்தாய் ?’ என்று முதல் குழந்தை கேட்டது. ‘நான் சோமாலியாவின் பஞ்சத்தில் உணவில்லாமல் இறந்தேன்’ என்றது அக்குழந்தை. ‘நான் அரேபியாவின் மதக்கலவரத்தில் இறந்தேன்’ என்றது இரண்டாவது குழந்தை. அவர்களின் பெற்றோர் முன்னரே இறந்துவிட்டிருந்தனர் மூன்றாவது குழந்தை சொன்னது. ‘நான் அமெரிக்கக் குழந்தை. நான் பிறக்கவே இல்லை. என் அம்மா என்னை நான்குமாதத்திலேயே கருக்கலைப்பு செய்துவிட்டாள்’

அவர்கள் தோட்டத்துக்குள் சென்றனர். முதல்குழந்தையின் பெற்றோர் வந்து அக்குழந்தையை அள்ளி எடுத்து அணைத்து முத்தமிட்டு கொண்டுசென்றார்கள். அதன்பின்னர் இரண்டாவது குழந்தையின் பெற்றோர் வந்தார்கள். அவர்கள் அக்குழந்தையை அணைத்துக்கொண்டு சென்றார்கள்.

மூன்றாவது குழந்தை அங்கேயே தயங்கி நின்றது. அப்போது ஒருவர் அவளை நோக்கி வந்தார். முழங்கால் வரை தாடி நீண்ட முதியவர். கனிந்த கண்களுடன் அவர் அக்குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டார். ‘என் அம்மா அப்பா எங்கே?’ என்று அக்குழந்தை கேட்டாள். ‘அம்மா அப்பா இல்லாத குழந்தைகளுக்கு இங்கே நான் தான் அம்மாவும் அப்பாவும்’ என்று சொல்லி முத்தமிட்டு அக்குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார் அவர்.

கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, யாருமற்ற குரல்களை கவிதை அடையாளம் கண்டுகொள்கிறது. தன் கையில் அது அவற்றை எடுத்துக்கொள்கிறது. கவிதையின் பெருங்கருணை எப்போதும் விரித்த கரங்களுடன் பேசபப்டாதவற்றை தொட்டுக்கொண்டிருக்கிறது. இந்த மேடையில் நான் தேவதேவனை அத்தகைய பெருங்கவிக்குரல்களில் ஒன்றாக முன்வைக்கிறேன்.

நண்பர்களே, ஏ.கே.ராமானுஜனின் அழகிய கவிதை ஒன்றுண்டு. காட்டில் ஓர் அங்குலப்புழு இருந்தது. அது தன்னை ஓர் அளவுகோலாகவே ஆண்டவன் படைத்துவிட்டான் என்ற கர்வம் கொண்டிருந்தது. இந்தக்காட்டில் நான் எதையும் அளப்பேன் என அறைகூவியது. இலைகளை செடிகளை அது அளந்தது. மயிலின் கழுத்தைந் ஆரையின் அலகை கொக்கின் கால்களை அது அளந்தது.

என் பாட்டை அளப்பாயா என்று குயில் அதனிடம் கேட்டது. அங்குலப்புழு அளக்க குயில்பாட ஆரம்பித்தது. நெளிந்து வளைந்து துடித்து துவண்டு அங்குலப்புழு இறந்தபின்னரும் குயில்பாடிக்கொண்டே இருந்தது. அளக்கமுடியாமைகளுக்கு முன்னால் துடித்து இறப்பதும் கவிதை. உலகியலால் அளக்கமுடியாததும் கவிதை.

இனிய, மெல்லிய தொடுகையே கவிதை. நான் ஒரு திருமண வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே என் பெரியம்மாவைப்பார்த்தேன், பேசிவிடைபெறும்நேரம் பெரியம்மாவின் தோளில் மெல்ல தொட்டேன். அதுவரை இயல்பாக பேசிக்கொண்டிருந்த பெரியம்மா தேம்பியழ ஆரம்பித்தார்கள். ‘போய்விட்டு வா கண்ணே’ என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது. தொடுகைதான் அந்த கண்ணீரை உருவாக்கியதா?

உடனே உள்ளே சென்று அத்தனை பாட்டிகளையும் தொட்டுப்பார்த்தேன். அத்தனைபேரும் நான் தொட்டதுமே கண்ணீர்மல்கினார்கள். ஆம், அவர்கள் அனைவரும் தொடுகைக்கு ஏங்கியவர்களாக இருந்தார்கள். குழந்தையாக சிறுமியாக காதலியராக மனைவியராக அன்னையராக தொட்டுக்கொஞ்சப்பட்ட அவர்கள் எப்போதோ ஒரு கட்டத்தில் தொடப்படாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். தொடுகைக்காக அவர்களுக்குள் உள்ள குழந்தை ஏங்கிக்கொண்டே இருந்திருக்கிறது.

நமக்குள் உள்ள குழந்தையை தீண்டுவதே நல்ல கவிதை என்பேன். தேவதேவனின் கவிதைகள் என் அகத்தை தீண்டிக்கொண்டிருப்பவை. அதனூடாக என்னை குழந்தையாக மீட்டு எடுப்பவை. அவர் கவிதைகள் வழியாக என்னை நான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன்

எப்படிப்பார்த்தேன் இந்த மனிதரை? 1985ல். குற்றாலத்தில் கலாப்ரியா ஒரு கவிதையரங்கை நடத்தினார். பதிவுகள். அதற்காக நான் காசர்கோட்டிலிருந்து வந்திருந்தேன். அன்றுதான் என் தோழனான யுவன் சந்திரசேகரை சந்தித்தேன். பிரமிளை, வண்ணதாசனை எல்லாம் அறிமுகம் செய்துகொண்டது அப்போதுதான். அந்த விவாத அரங்கில் தோளில் ஒருபையும் மெல்லிய தாடியும் தயங்கிய நடையும் வெட்கிய சிரிப்புமாக தேவதேவனைப் பார்த்தேன்

அந்த அரங்கில் தேவதேவனின் ஒரு கவிதை விவாதிக்கப்பட்டது

நீர்ப்பரப்பில் ஒரு மீன்
துள்ளிவிழுகையில் கண்டதோ சுடும்பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை

அந்தக்கவிதை என்னை அசைத்தது. அளக்கமுடியாமைகள் முன் நிற்கும் அளக்கமுடியாமையான கவிதை அது. என் அகத்தை தீண்டிய கவிதை அது. வாழ்க்கையின் பெருநாடகத்தைச் சொல்கிறதா? இல்லை, இருத்தல் என்ற மாபெரும் அபத்தத்தைச் சொல்கிறதா? இல்லை என் முன்னோர் காலந்தோறும் சொல்லிவந்த அந்த மீட்பின், எய்தலின், அடைதலின் முழுமையைப்பற்றிச் சொல்கிறதா?

வானத்தை விரும்பித்தானே துள்ளிக்கொண்டிருக்கிறது மீன்? பறக்க ஏங்கித்தானே எம்புகிறது அது? மரித்துப் பறவையாக ஆவதென்பது அதன் ஈடேற்றம் அல்லவா? அன்று அந்த மேடையில் அக்கவிதையைப்பற்றி பலவாறாகப் பேசப்பட்டது. தேவதேவன் எங்கோ தாடியை தடவியபடி அமர்ந்திருந்தார். கடைசியாக எந்த வகையான ஒழுங்கும் இல்லாத சொற்களில் தட்டுத்தடுமாறி எதையோ சொன்னார். அது எவருக்கும் புரியவில்லை.

தேவதேவன் சொன்னார். என் கவிதைகள் மரங்களைப்போல. நீங்கள் கிளைகளைப்பார்க்கிறீர்கள். அக்கிளைகள் விரிந்திருக்கும் திசைக்கு நேர் எதிர்த்திசையில் அதன் வேர்கள் மண்ணுக்குள் சென்றிருக்கின்றன. அந்தவேர்களும் சேர்ந்த ஒரு முழுமைதான் என் கவிதை. அந்தச் சொற்கள் எங்கோ ஓரிடத்தில் எனக்கு மட்டுமே சொல்லப்படுபவையாக ஆயின. எனக்குப்புரிய ஆரம்பித்தன. உதிர்ந்த ஒவ்வொரு இலைக்கும் மரத்திடம் கணக்கு இருக்கும். மரம் என்பது முளைக்கும் இலைகளாலானது மட்டும் அல்ல உதிரும் இலைகளாலும் ஆனதுதான். தேவதேவன் சொன்னார்

அன்றுகண்டுகொண்டேன் என் ஆன்மாவின் விளையாட்டுத்தோழரை. அன்றுமுதல் இன்று வரை தேவதேவனின் கவிதை ஒவ்வொரு நாளும் என்னுடன் இருக்கிறது. அவர் இந்த உலகில் இல்லை. இந்தப்போட்டிகளில், இந்த உணர்வுகளில், இந்த அரசியலில் இல்லை. மண்ணுக்கு மேலே மரத்திலிருக்கும் குருவிக்கூட்டில் இருந்து கீழே நோக்கும் இளங்குஞ்சு போலிருக்கிறார் அவர். சலிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர்தான் தமிழில் மிக அதிகமாக எழுதிய நவீனக்கவிஞர்.

தீராத குழந்தைத்தனத்தால் ஆனவர் தேவதேவன். ஒருமுறை நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். வடசேரி பேருந்துநிலையத்தில் இறங்கி என்னை தொலைபேசியில் அழைத்தார். ’சார் அங்கே நில்லுங்கள். நான் வருகிறேன். எங்கே நிற்கிறீர்கள் என அடையாளம் சொல்லுங்கள்’ என்றேன்.ரிலையன்ஸ் செல்பேசி விளம்பரத்துக்கு அருகே நிற்பதாகச் சொன்னார்

நானும் மகனும் வடசேரி சென்றோம். அங்கே அந்த விளம்பரத்தின் அடியில் தேவதேவன் இல்லை. அந்த பகுதியிலேயே இல்லை. தேடித்தேடிப்பார்த்தோம். நேர் எதிரில் ஒரு பெஞ்சில் நிம்மதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ‘என்ன சார் இப்டி அடையாளம் சொல்றீங்க?’ என்றேன். அவர் இருந்த திசைக்கு நேர் எதிரில் அவரது பார்வைக்கு தெரியும்படி இருந்த விளம்பரத்தட்டியை சுட்டிக்காட்டி ‘அதோ வெளம்பரம் இருக்கே’ என்றார்.

குழந்தையின் தீராவியப்பு கொண்ட உலகம் அவருடையது. சின்னவயதில் சைதன்யா அரை அங்குல அட்டைப்பூச்சியை ரயில் என்பாள். ஒருநாள் ஒரு பிரம்மாண்டமான டாங்கர்லாரி சென்றது. சர்வ சாதாரணமாக ‘பாத்தியா மாத்திரை’ என்று சொன்னாள். பெரிது சிறிதாக சிறிதி பெரிதாக எந்த தடையும் இல்லாத மாய உலகம் குழந்தையினுடையது. அந்த மாய உலகத்தில் வாழும் கவிஞர் தேவதேவன்.

ஓர் இலையைக்கொண்டு ஒரு காட்டைப்படைத்துக்கொள்கிறேன் என ஒருமுறை தேவதேவன் எழுதினார். ஒரு மணலைக்கொண்டு ஒரு பாலைவனத்தையும் அவரால் படைத்துவிடமுடியும். தேவதேவனின் உலகின் மகத்துவம் அந்த களங்கமின்மையே. களங்கமின்மையெனும் சாவியால் மட்டுமே திறக்கக்கூடிய ஒரு வாசல்!

அவர் கவிதைகள் ஓயாமல் அந்த பொன்வாசலில் முட்டிக்கொண்டிருக்கின்றன. வேறெங்கும் அவை முயல்வதில்லை. வேறெதையும் இலக்காக்குவதில்லை. சிலசமயம் திறந்து உள்ளே சென்றுவிடுகின்றன. பலசமயம் செத்து உதிர்கின்றன. அந்த உதிர்தல்கூட மகத்தானதேயாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் தேவதேவனுக்கு தூத்துக்குடியில் ஓரு விருது அளிக்கப்பட்டது. நான் அந்த விழாவுக்குச் சென்று உரையாற்றினேன். அப்போது சொன்னேன். ’இங்கே நாம் காணும் ஒவ்வொன்றும் தடமின்றி அழியும். நாம் அனைவரும் நினைவுகளில்கூட இல்லாமல் அழிவோம். நாம் அறிந்தவற்றின் அடையாளமாக நான்கு வரிகள் எஞ்சியிருக்குமென்றால் அவை தேவதேவனால் எழுதப்பட்டவையாக இருக்கும்’

நம் காலகட்டத்தின் மகாகவிஞன் என்று தேவதேவனைச் சொல்வதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. எளிய வாசகனாக அல்ல. இக்காலகட்டத்தின் முதன்மையான இலக்கியவாதியாக, விமர்சகனாக இந்த மேடையில் உங்கள் முன் நின்று இதைச் சொல்கிறேன்

தேவதேவன் அந்த மேடையிலே சொன்னார். சிறுவயதில் வண்ணத்துப்பூச்சிகளைப்பிடிப்போம். கையில் மெல்லிய வண்ணங்கள் மட்டுமே வீட்டுக்கு வருகையில் எஞ்சியிருக்கும். நாங்கள் பிடிக்க முனைந்தது வண்ணத்துப்பூச்சிகளை அல்ல. சிறகுகளை அல்ல. வண்ணங்களையும் அல்ல. பறத்தலை. அதன் அடையாளமாக எஞ்சுவது மெல்லிய வண்ணத்தீற்றல்கள் மட்டுமே

என் கவிதைகள் அந்த வண்ணங்கள்தான். அவை வண்ணங்கள் அல்ல, பறத்தல் என்றார் தேவதேவன். பறத்தலின் வண்ணங்களை நிகழ்த்தும் கவிதைக்கும் கவிஞனுக்கும் சிரம்பணிகிறேன்.

[22-12-20012ல் கோவையில் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட விழாவில் ஆற்றிய உரை]

படங்கள்

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Dec 28, 2012 

பழைய கட்டுரைகள் இணைப்புகள்

தேவதேவனுக்கு ஓர் இணையதளம்
தேவதேவனின் கவிதையுலகம்
தேவதேவனின் வீடு:ஒரு குறிப்பு
கவிதையின் அரசியல்– தேவதேவன்
மார்கழியில் தேவதேவன்
தேவதேவன் கருத்தரங்கம்
உதிர்சருகின் முழுமை
தேவதேவனும் நானும்
நல்முத்து
மாசு
உறவுகளின் ஆடல்
நிழலில்லாத மனிதன்
தேவதேவனும் நானும்-கடிதம்
தேவதேவனின் பரிணாமம்
திருப்பரப்பு
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனின் கவித்தரிசனம்
தேவதேவனை தவிர்ப்பது…
தேன்மலர்
விரல்நுனி வண்ணத்துப்பூச்சி
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…
தேவதேவனைப்பற்றி…
கவிஞர்களின் முன் விமர்சனம்
பாலையின் மலர்மரம்
தேவதேவனின் மரங்கள்
இலக்கியவாதி வளர்கிறானா?
தேவதேவனின் அருகே…
அட்டைப்படங்களின் வரலாறு
தேவதேவனின் கவிமொழி
தேவதேவன் -தக்காளி
தேவதேவன் – கடிதம்
தேவதேவன் கவிதை -கடிதங்கள்
தேவதேவன் கவி
தேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்
தைகள் முகப்படங்கள்
தேவதேவன் – கடிதங்கள்
தேவதேவன் கடிதம்
தேவதேவன் ஒரு பேட்டி
அசோகமித்திரன், தேவதேவன்- கடிதங்கள்
தேவதேவன் மகள் திருமணம்
நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு
தேவதேவன்-கடிதம்

தேவதேவன் கவிதைகளின் இணைப்புகள்
 
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30208255&format=print&edition_id=20020825
http://www.thinnai.com/ar0812023.htm
வீடு http://www.thinnai.com/pm0812024.html
மரம் http://www.thinnai.com/pm0819028.html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=302090912&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60208254&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30208255&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60208193&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30208198&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30209241&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30209029&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=30208124&format=html
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60208123&format=html
 
முந்தைய கட்டுரைநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்
அடுத்த கட்டுரைசெந்நா வேங்கை