இணையம் ஓர் எழுத்தாளனாக எனக்கு அற்புதமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. என்னுடைய நூல்கள் வழியாக மட்டுமல்லாமல் நேரடியாகவே என் வாசகர்களுடன் பேசமுடிகிறது. ஒவ்வொருநாளும் நான் வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இணையம் வந்தபின் சென்ற ஐந்தாண்டுக்காலத்தில் என் அன்றாட வாழ்க்கை முழுக்கவே இணையத்தில் பதிவாகியிருக்கிறது. என் பயணங்கள். என்னுடைய அன்றாட வேடிக்கைகள் வருத்தங்கள் எல்லாமே…
இந்தக்குறிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம்? இவை எழுத்தாளனால் எழுதப்பட்டவை. எழுத்தாளன் என்பவை எதையும் மொழியினூடாக இலக்கியமாக ஆக்கத்துடிப்பவன். ஆகவே இலக்கியத்தின் ஒரு வகைமையாகவே இது தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. நேரடி அனுபவம் அதன் வடிவ ஒருமைக்காக மட்டும் கொஞ்சம் புனைவைச் சேர்த்துக்கொண்டு இந்த இலக்கியவடிவத்தை உருவாக்கியிருக்கிறது எனலாம்
ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மையான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித்தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் அவ்வகையில் வாசகன் எளிதில் தொட்டறியக்கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத்தருணங்கள் அளவுக்கே இந்த அனுவத்தருணங்களும் கலைத்தன்மையை அடைவது இப்படித்தான்.
இந்நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்
இந்நூலை வெளியிடும் சரவணனுக்கு என் நன்றி. என் இணையதளத்தை தங்கள் பொறுப்பில் நடத்திக்கொண்டிருக்கும் சிறில் அலெக்ஸ்,ஆனந்தக்கோனார், ராம், அரங்கசாமி, எம்.ஏ.சுசீலா, ஆகியோருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும். இணையதளத்தில் எழுத ஆரம்பித்தது என் வாழ்க்கையின் திருப்புமுனைத் தருணம்.
இந்த நூலை என்னுடைய நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்
[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நாளும் பொழுதும் நூலுக்கான முன்னுரை]